அகரம் என்றொரு (கையெழுத்துப்) பத்திரிகை
Photo: biotech.iitm.ac.in
அக்னி நட்சத்திரத்தின் பிரகாசமான ஒரு காலைப் பொழுது. ஆங்காங்கே, ஆடையின்றி எழுந்து நிற்கும் அழகிய செங்கற் கட்டிடங்கள் சில. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒவ்வொரு பெயர். அதில் வரிசையாய் அறைகள். தரைகளில் நாசி துளைக்கும் சிமெண்ட் வாசனையும், ஜன்னல்களில் மணக்கும் பெயிண்ட் வாசனையும், காற்றில் கலந்து புதுப் பள்ளியின் வரவை அக்கிராமத்துக்கும், சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் மணம் வீசி, பரப்பிக் கொண்டிருந்தது.
சரியாக மணி ஒன்பது நாற்பத்தைந்திற்கு உள்ளே நுழைந்தார் தமிழையா ராமலிங்கம். "ஏறிய நெற்றி, அதில் நிறைய நீர், இரு புறமும் நரை கூடிய கேசம், பட்டையான கண்ணாடி ..." என இருப்பாரோ என எண்ணாதீர்கள்.
எண்ணை விட்டு, வாரிச் சீவிய கறுகறு கேசமும், முறுக்கு மீசையும், நெடிது வளர்ந்த உருவமும், வெண் பருத்திச் சட்டையும், கருப்புக் கால்சட்டையுமாக நாற்பது அகவையை நெருங்கும் வாலிபர்.
இலைகளோடு போட்டியிட்ட பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவியரின் சளசளப்பு நின்று, மழை பெய்து ஓய்ந்த நிசப்தம் நிலவியது வகுப்பறையில். கையில் வைத்திருந்த ஓரிரு புத்தகங்களை மேசையில் வைத்துவிட்டு, "நேற்று பாடத்தை எங்கே நிறுத்தினோம்" எனப் பொதுவாகக் கேட்டார்.
"ஐயா ... " என்று எழுந்து நின்ற கதிவரன் இழுத்தான்.
"ம்... எங்கே விட்டோம் என்று சொல்லையா" என்றார் ராமலிங்கம்.
"அதில்லை ஐயா, வெகு நாட்களாகவே ஒரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கலாம் என்று சொன்னீர்களே".
"ஆமாம், ஆமாம். சரி இன்றே அது பற்றி பேசுவோம்". பாடத்தை அதன் பின் தொடருவோம் என்றார். அக்னி நட்சத்திரப் பிரகாசிப்பு மாணவ மணிகளின் முகத்தில் மலர்ந்தது.
"ஐயா, முருகன் நல்லா கதை எழுதுவான்யா" என்றான் கதிர்.
அவன் கதை நன்றாக அல்லவா விடுவான், எழுதவும் செய்வானா என்றார் ராமலிங்கம். மாணவியர் பக்கம் இருந்து சிரிப்பொலி எழுந்து மறைந்தது.
சிரிப்பா சிரிக்கற, மாட்டி விடறேன் பார் என்று, "மாலதி கவிதை அருமையாக எழுதுவாள் ஐயா" என்றான் முருகன்.
"இப்பொழுது தானே கூறினேன், நீ கதை நன்றாக அளப்பாய் என, அதை உடனே நீருபிக்க வேண்டுமா முருகா" என்றார் தமிழையா.
சிதறிய சில்லரைகளாய் சிரித்தது வகுப்பறை.
ஒருவர் மாற்றி ஒருவர், தங்கள் படைப்புத்திறன் குறித்து ஒரே அரட்டையும், கும்மாளமுமாக வழக்கத்தையும் விட கலகலப்பாக இருந்தது தமிழ் வகுப்பு.
எல்லாம் பேசி, தலைப்பும் 'அகரம்' என ஒரு மனதாக முடிவு செய்தனர்.
தாஜிதீன் கையெழுத்து நல்ல குண்டு குண்டாக இருக்கும். ஆனால் அடித்தும், திருத்தியும் எழுதும் பழக்கம் கொண்டவன்.
மல்லிகாவின் கையெழுத்து வளைந்து நெளிந்து ஒரு நானத்துடன் பெண்மையின் இலக்கணம் போல் இருக்கும். ஆங்காங்கே சேர்த்து எழுதும் பழக்கம் கொண்டவள்.
வையாபுரியின் கையெழுத்து முத்துப் போல் சீராக, மேலும் கீழும் அளவாக இடம் விட்டு அற்புதமாக இருக்கும்.
இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பத்திரிகைக்கு வரும் கதை, கவிதை, கட்டுரைகள், இன்ன பிற எல்லாவற்றையும் எழுதுவது என்றும் உறுதி செய்தனர்.
வாரப் பத்திரிகையா, மாதம் ஒன்றா அல்லது மூன்று மாதங்களுக்கு ஒன்றா என்ற கேள்விக்கு, ஆர்வம் கொண்டவர்கள் வாரம் ஒன்று என்றும், நடுநிலையாளர்கள் மாதம் ஒன்று என்றும், வேற வேலை இல்லை இவங்களுக்கு என்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒன்றும், என்று மாற்றி மாற்றி கூறிக் கொன்டிருந்தனர்.
சிறிய சர்ச்சைக்குப் பின், மாதம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் என்று முடிவானது.
அதிலிருந்து மாணவர்களின் குதூகலம் பன்மடங்கு அதிகரித்தது. வகுப்பிலும், வெளியிலும், உண்ணும்போதும், உறங்கும்போதும், அடுத்த மாதம் எப்ப வரும், முதல் பத்திரிகை எப்படி இருக்கும் என்பது பற்றியே அதிகம் பேசினர் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியர்.
இதற்கிடையே பள்ளியில் ஒரு நாள், பாரதி பிறந்த நாளை ஒட்டி, பேச்சுப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதற்கு தலைமை தாங்கியவர் இந்த ஊரைச் சேர்ந்த காசியப்பன். பக்கத்து ஊரில் படித்து வளர்ந்து, தற்போது அயல்நாட்டில் வசிக்கும் மனிதர்.
பேச்சுப் போட்டி எல்லாம் நல்ல விதமாக முடிந்து செல்கையில், பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜன், காசியப்பன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.
அண்ணாச்சி, இப்ப எல்லாம் கணினி யுகமா இருக்கு. உங்களுக்கு அத நான் சொல்லவும் அவசியம் இல்லை. உங்களால முடிஞ்சா ஒரு கணினி அன்பளிப்பா கொடுத்தீங்க என்றால், பள்ளிக்கு உபயோகமா இருக்கும், உங்களுக்கும் புண்ணியமா இருக்கும். கவர்மெண்ட் கிட்ட மனு போட்டு மாசக்கணக்கா ஆச்சு. இந்தா, அந்தா என்று ஒரே இழுவையா இருக்கு.
நானே உங்களிடம் ஏதாவது உதவி தேவையா என கேட்கலாம் என நினைத்தேன். உங்களிடம் எப்படி கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்லதாப் போச்சு என்றார் காசியப்பன்.
சில நாட்களில், ஒன்றுக்கு, ஆறாய் கணினியும், இரண்டு பிரிண்டர்களும் பள்ளிக்குத் தந்து பெருமைக்குரிய மனிதர் ஆனார். கணினி பயன்பாட்டு பயிற்சிக்கு, பெரு நகரங்களில் இருந்து வல்லுநர்களை அழைத்தும் வந்தார். பள்ளியில் இந்தப் பரபரப்பு வெகுநாட்கள் குறையவே இல்லை.
பதினொன்றாம், பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அதிக நேரம் கணினி பயிற்சி அளிக்கப் பட்டது. புதுசா வந்த மவுசில், மாணவ மணிகளின் மனதை விட்டு கையெழுத்துப் பத்திரிகை சற்றே விலகியிருந்தது.
இருபது இருபத்தைந்து நாட்கள் ஆன நிலையில், "என்னையா, கையெழுத்து பத்திரிகை வருமா, வராதா" என்று யதார்த்தமாக நினைவூட்டினார் தமிழையா வகுப்பறையில்.
ஞாபகம் இருக்கிறது ஐயா. ஒரு சின்ன மாற்றம் மட்டும் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்றியிருக்கிறது. புதிதாய் வந்திருக்கும் கணினி எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. கையெழுத்து பத்திரிகையை அழித்து, திருத்தி கைகளில் எழுதுவதை விட, கணினியில் தட்டச்சிட்டு, அழகாக பிரதிகள் எடுத்து விநியோகிக்கலாமே என்று யோசிக்கிறோம் என்றனர் ஒருமித்த குரலில் !!!