பெய்யெனப் பெய்யும் (ஆலங்கட்டி) மழையும், கொசுவர்த்தி சுருளும் ...
Photo: hodgman.org.jpg
மேற்கிலிருந்து கிழக்குவரை, அமெரிக்கா முழுதும் இப்ப ஹீரோ 'ஐஸ் ஸ்ட்ராம்' ஆலங்கட்டி அவர்கள் தான் !!!
திங்கள் மதியத்திலிருந்து ஆரம்பித்து, செவ்வாய் இரவு வரை ஆலங்கட்டியின் ஆதிக்கம், இன்று மென்பனியாய் (snow தாங்க) மாறி இன்னும் கொட்டுவதை செய்திகளில் பார்த்தால் எண்ணில் அடங்காது.
பாலம் பாலமாக, வீட்டுக் கூரையிலிருந்து, மரக் கிளைகள் படர்ந்து, தரையில் உதிர்ந்து, வெண் தார்ச் சாலை நிரப்பி ... (படங்கள் இங்கே)
வீட்டில் இணையம் வேலை செய்யாததால், இன்று ஆணிபுடுங்க அலுவலகத்துக்கு வரும்படி ஆகிவிட்டது. வழியெல்லாம் வெண்மை. 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' பாடல் தான் மனசுக்குள் மத்தாப்பாய். மெதுவே வண்டியை கராஜிலிருந்து எடுத்து, பின் ஐஸ்கட்டியிலேயே பயணித்து, பத்து பதினைந்துக்கு மேல் ஓட்ட முடியவில்லை. ஒரு சாலை விளக்கு நிறுத்தத்தில் எதிரே வந்த ஜீப், ப்ரேக் பிடிக்க, அப்படியே வழுக்கியதை பார்த்தபோது நமக்கு நெஞ்சம் உறைந்து போனது .... நல்ல வேளைக்கு ஒன்றும் ஆகவில்லை.
ரெண்டு நாளா வெளியில் எங்கும் போக முடியவில்லை (அலுவல் தவிர). வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. பத்தாதற்கு பவர் கட் வேற. முதல் வார்த்தை தங்க்ஸ் சொன்னது "ஐயோ ஃப்ரீஸர்ல இருக்கதெல்லாம் என்னாகுமோ ?!!!" என :))) 'எதுக்குக் கவலைப் படறே, ஃப்ரிட்ஜை விட வெளியில் எடுத்துப் போட்டா இன்னும் பத்திரமா இருக்கும்' என்றேன். அந்த அளவிற்கு ஐஸ் வெளியே !!!!
'பட்டால் தான் தெரியும் பகலவனுக்கும் சூடு' என்பது போல். 'பவர் கெட்டால் தான் தெரியும் முன்னேற்பாடு' என்கிற மாதிரி (இதெல்லாம் யாரு சொன்னாங்கனு கேக்கக்கூடாது), நேற்றிரவு ஒரு மெழுகுவர்த்தி கூட சட்டுனு கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை :(((
வொய்ங் வொய்ங் வொய்ங் (டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள்கிறது) ...
ஊரில் ஹரிக்கன் விளக்கு இருக்கும். பாட்டி துடைச்சு துடைச்சு வைத்திருப்பார். தங்கம் போல் மினுமினுக்கும். கோடைகாலங்களில் (அப்ப இருந்தே) கரண்ட் போயிடும் என்று, சாயந்திரம் வெளிச்சம் குறையும் நேரத்தில் ஒரு நாலஞ்சு விளக்கு ஏற்றி, அங்கங்க வைப்பார் தினம். காலை வரை எரியும் அவை.
சளைக்காம ஏத்தறாங்களே என்று பார்த்தால், பின்னர் புரிந்தது அவர்கள் காலத்தில் தான் தீப்பந்த விளக்குகளில் இருந்து மின்சார விளக்குகளுக்கு ட்ரான்ஸிசன் ஆனார்கள் என. அதனால் விளக்கு ஏற்றுவது அன்றாட வேலைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது அவர்களுக்கு.
எங்கள் ஊர் வீடுகளில், உள் வாசல் நடுவில், ஒரு சிறு கல்தூண் இருக்கும். மேலே சிறு குழியும் இருக்கும். மழைகாலங்களில் நீர் நிறைந்தும் இருக்கும். பள்ளி கால விடுமுறையில் ஊருக்கு போகும்போதெல்லாம், விளையாட்டில் அந்தத் தூணைச் சுற்றி சுற்றி வருவோம். அது ஏன் அங்க நிற்கிறது என்றெல்லாம் தெரியாது.
அந்தகாலத்து செயல்களுக்கு எந்தகாலத்திலும் ஒரு காரண காரியம் மெய்பிக்கலாம். ஆன்மிகம் இதில் அடங்குமா எனத் தெரியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு இன்னும் வயதாகவில்லை :))) ஆனா இந்த காலத்து செயல்களுக்கு ஒரே வார்த்தை, 'ஃபேஷன்' :)) ஏன், எதுக்கு எல்லாம் சுத்தமாத் தெரியாது.
'இது ஒவ்வொரு வீடுகளுக்கு உள்ளும் உள்ள விளக்குத் தூண்' என்று தாத்தா சொல்வார்கள். மின்சாரம் வருவதற்கும் முன், பெட்டர்மாக்ஸ் விளக்கெல்லாம் வருமுன்னே, கண்ணாடிக் குடுவையுள் விளக்கேற்றி, அதை இந்தத் தூணில், அந்தச் சிறு குழியில் நிறுத்தி விட்டால், வாசல் முழுதும் இரவு பிரகாசிக்குமாம்.
மின்சார விளக்குகளின் ஆதிக்கம் வந்த பின்னாளில், இத் தூண்கள் துணி உலர்த்தும் கொடி கட்ட பயன்பட்டது, படுகிறது :)))
பெரியவர்களிடம் பழங்கதைகள் கேட்க அப்பொழுது பொறுமையும் இல்லை, ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வயதும் இல்லை. எப்ப நம்மைப் பிடித்து உட்கார வைத்தாலும், சில நொடிகளில் விடு ஜூட் தான். இருந்தாலும், பிடிக்குதோ இல்லையோ, நிறைய சொல்லியிருக்கிறார்கள். இன்று அவர்கள் உயிருடன் இல்லை, இருந்திருந்தால் ...
சின்னஞ் சிறுகதைகள் பேசி
சிரித்து உறவாடி,
அன்பின் பெருக்கத்தில்
அரவணைக்கப் பெற்று,
சிந்தை மகிழ்ந்து
செழிப்புற் றிருப்போம் ...
இந்த ஒரு நெருக்கம் அப்பா, அம்மாவிடம் இல்லாதது இன்றளவும் ஆச்சரியமே !!!!
9 மறுமொழி(கள்):
நல்லா சொல்லியிருக்கீங்க.
உங்கள் சந்ததியிடம் அந்த ‘ஆச்சர்யம்’ வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
நல்ல கொசுவர்த்தி. சின்ன வயதில் கரெண்ட் போனால் இப்படி அரிக்கேன் விளக்குகள் தயாரா இருக்கும். முற்றத்தில் அதை வைத்து முன்னால் நின்று சுமார் 20 அடி உயரத்துக்கு நிழல் விழுமாறு நாட்டியங்கள் நடக்கும் சமயத்தில். மீண்டும் பவர் வந்ததும் ’ஹேய்’ என ஒவ்வொரு வீட்டிலுள்ள குழந்தைகளும் ஒரே நேரத்தில் போடும் கூச்சலில் தெருவே அதிரும்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தூணுக்குள் சின்ன மாடப் பிறை போலிருக்கும் என நினைக்கிறேன்.
அனுபவத்தையும் அது கிளப்பிய நினைவுகளைப் பகிர்ந்திட்ட விதமும் அருமை.
நட்புடன் ஜமால் said...
// நல்லா சொல்லியிருக்கீங்க.//
மிக்க நன்றி.
// உங்கள் சந்ததியிடம் அந்த ‘ஆச்சர்யம்’ வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்//
இவங்கள கேட்டால், அப்பா அம்மாகிட்ட இருக்க நெருக்கம் தாத்தா பாட்டி கிட்ட இல்லனு சொல்றாங்க ...
ராமலக்ஷ்மி said...
//முற்றத்தில் அதை வைத்து முன்னால் நின்று சுமார் 20 அடி உயரத்துக்கு நிழல் விழுமாறு நாட்டியங்கள் நடக்கும்//
கண் முன்னே காட்சியாய் உங்கள் வரிகள்.
//சமயத்தில். மீண்டும் பவர் வந்ததும் ’ஹேய்’ என ஒவ்வொரு வீட்டிலுள்ள குழந்தைகளும் ஒரே நேரத்தில் போடும் கூச்சலில் தெருவே அதிரும்.//
நினைத்தாலே இனிக்கும் ...
// நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தூணுக்குள் சின்ன மாடப் பிறை போலிருக்கும் என நினைக்கிறேன்.//
தூணுக்கு மேலே, அந்த காலத்து ஒற்றை ரூபாய் வட்டத்தில், அதன் தலையில் இருக்கும், குழி. விளக்கை அதன் மேலே செருகி வைப்பார்களாம்.
//தூணுக்கு மேலே, அந்த காலத்து ஒற்றை ரூபாய் வட்டத்தில், அதன் தலையில் இருக்கும், குழி. விளக்கை அதன் மேலே செருகி வைப்பார்களாம்.//
புரிந்தது:)!
அழகிய மலரும் நினைவுகள்....
அன்புடன் அருணா
சதங்கா - பெய்யெனப் பெய்த பனி மழையில் பணியின் காரணமாக அலுவலுக்குச் சென்று - செல்லும்போதே கொசுவத்தியும் சுத்தி - எங்கள் வீட்டிலும் இருந்த கல் தூணை நினைவூட்டி - தாத்தா பாட்டி அப்பா அம்மா மழலைகள் நெருக்கமில்லா நெருக்கத்தினை கனவு கண்டு .......... அடடா அடடா
படங்கள் அத்தனையும் அழகு
நல்வாழ்த்துகள் சதங்கா
அன்புடன் அருணா said...
//அழகிய மலரும் நினைவுகள்....
அன்புடன் அருணா//
ஆமாங்க. நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் அவை.
cheena (சீனா) said...
// கொசுவத்தியும் சுத்தி - எங்கள் வீட்டிலும் இருந்த கல் தூணை நினைவூட்டி - தாத்தா பாட்டி அப்பா அம்மா மழலைகள் நெருக்கமில்லா நெருக்கத்தினை கனவு கண்டு .......... அடடா அடடா//
ஆமா, உள்ள தூங்கிக் கொண்டிருந்த நினைவுகளை கிளப்பிவிட்டது இந்த மழை நாட்கள்.
//படங்கள் அத்தனையும் அழகு
நல்வாழ்த்துகள் சதங்கா//
எல்லாம் உங்களுக்காகவே. ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.
Post a Comment
Please share your thoughts, if you like this post !