Tuesday, June 9, 2009

கோழித் திருடன்



மெல்ல அடிமேல் அடிவைத்து முன்னேறி, தலையில் இருந்த துண்டால், லபக்கென்று அந்தக் கோழியின் தலையில் போட்டு அமுக்கிப் பிடித்தான் மாயாண்டி.

கோழியைத் தூக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். 'நல்ல வேளை யாரும் பார்க்கலை' என்று திரும்பு முன், அவன் தலையைச் சுற்றி இறுக்கியது ஒரு துண்டு. அவன் கைபிடி நழுவ, பக் பக் என்று விழுந்து பறந்தது கோழி.

"அடியேய்ய்ய்.. ராக்காயீ, மூக்காயி, கருப்பாயீ, வெள்ளையம்மா ... எல்லாரும் ஓடியாங்கடியோய் ... ரொம்ப நாளா நம்ம ஊர்ல கோழி திருடிகிட்டிருந்த திருடன் மாட்டிக்கிட்டான்" என்று செவந்தி கூவிய கூவலில் ஊரே திரண்டது.

முதலில் திமிறினாலும், சனங்களின் முனகலில், ஊரே திரண்டதை அறிந்து உறைந்தான் மாயாண்டி. 'வ‌ச‌மா மாட்டிக்கிட்ட‌மே இப்ப‌டி ! கொஞ்ச‌ம் கூட‌ த‌ப்பிக்க‌ முடியாது போல‌வே' என்று சிந்தித்த‌வ‌னை, பக்கத்தில் இருந்த ஆலமரத்தில் கட்டினர், வாட்ட‌சாட்ட‌மாக‌ இருந்த‌ இர‌ண்டு இளைஞ‌ர்க‌ள்.

"வெத்தியூருக்கு வாக்க‌ப்ப‌ட்டு போயி, ரெண்டாம் வ‌ருச‌மே திரும்பி வ‌ந்தாளே ம‌ர‌க‌தம்..... அவ‌ ம‌க‌ந்தாம்லா கோழித் திருடனாம் !!! நாமெல்லாம் புதுசா வந்த சோசியக்காரன்னுல நெனச்சுகிட்டு இருந்தோம் ! மாயாண்டிய புடிச்சு ம‌ர‌த்துல‌ க‌ட்டிவ‌ச்சிருக்காக‌லாம். வா, ஒரு எட்டு போயி பாத்துட்டு வ‌ர‌லாம்" என‌க் கிள‌ம்பின‌ர் கிழ‌விய‌ர் இருவ‌ர்.

"பண்ணையாரு வரட்டும். அவரு ஊட்டுல வேல பாக்குறாங்கறதுக்காக சும்மா விட்டாலும் விட்டிருவாரு. இந்த மாதிரி பசங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கச் சொல்லணும். இனி ஒரு பய உன்ன மாதிரி ஊருக்குள்ள திறியப்படாது" என்று காரி உமிழ்ந்தார் பெரியவர் ஒருவர்.

வயல் வேலைக்கும், வீட்டு வேலைக்கும் மரகதம் செல்ல, கவனிப்பாரற்று வளர்ந்த மாயாண்டி... படிப்பும் ஏறாமல், பட்டி தொட்டி எங்கும் சுற்றித் திரிந்தவனைத் தன்னுடன் சேர்த்து, தனக்கு உதவியாக தன் வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டார் பண்ணையார்.

யேசுபிரானைப் போல ஒரு பக்கம் தலை சாய்த்து, கன்னங்கள் வீங்கி, கை கால்கள் எல்லாம் சிராய்த்துச் சோர்ந்திருந்தான் மாயாண்டி.

"ப‌ண்ணையாரு ஊட்டுல‌ வேலைக்கு இருந்துகிட்டே இத்த‌ன‌ ப‌ண்ணியிருக்கியா ? உன‌க்கு இதுவும் வேணும், இன்ன‌மும் வேணுன்டா" என்று, இர‌ண்டு போடு போட்டு ஒதுங்கி நின்றான், அந்த‌ப் ப‌க்க‌ம் சைக்கிளில் வ‌ந்த‌ ஒருவ‌ன்.

நைந்த‌ நூலாய்த் தொய்ந்து போனான் மாயாண்டி. 'ஒரு கோழிக்கு இத்தன ரகளை பண்றானுங்களே ! தெரிஞ்சிருந்தா கை வைச்சிருக்க மாட்டேனே ! எல்லாம் இப்ப யோச்சிச்சு என்ன பண்றது !!' என்று சிந்தனைச் சிதறல்கள் அவனுள்.

"ஏலேய். வெல‌கு வெல‌கு. ப‌ண்ணையாரு வாராரு" என்று ஆளாளுக்குச் சொல்லி வ‌ழிவிட்ட‌ன‌ர்.

"அடப் பாவ‌மே ! நான் வ‌ர்ற‌துக்குள்ள‌ இத்த‌ன‌ ப‌ண்ணிட்டீங்க‌ளா ? மொத‌ல்ல‌ க‌ட்ட‌ அவுத்து விடுங்கையா" என்றார் ப‌ண்ணையார்.

வார்த்தைக‌ளில் வ‌ழிந்த‌ க‌னிவு, முத‌ன் முறையாய் அவ‌னுள் குளிர்ச்சியூட்டிய‌து. கூட்டத்திடம் இருந்து மெல்ல‌ ப‌ய‌ம் வில‌கியிருந்த‌து.

"ஏன்டா, கேட்டிருந்தா நம்ம ஊட்டு கோழி ரெண்ட அடிச்சு சாப்பிடச் சொல்லிருப்பேன்ல. என்னத்துக்கு ஊராம்வீட்டுல கைய வைக்கிறே ? சரி, சரி. இன்னும் ப‌தின‌ஞ்சு நாளைக்குள்ள நூத்திஓரு ரூபா அப‌ராத‌ம் க‌ட்டிரு. இல்ல‌ ஊரார் கால்ல அம்பத்தோரு முறை விழுந்து எந்திரி. என்னையா, ச‌ரி தான ?" என்று கூட்ட‌த்தாரைப் பார்த்தார் ப‌ண்ணையார்.

ஒருவ‌ரும் எதிர்த்துப் பேச‌வில்லை.

'திருட்டுக் கோழியத் தெரக்கித் தின்னா ... ஆயுசு கெட்டியாகும், ஆன்ம பலம் பெருகும், வீடு வாசல் விருத்தி அடையும் !' என்ற ஜோசியக்காரனுக்கும், மாயாண்டிக்கும் மட்டுமே தெரியும் யார் உண்மையான திருடன் என்று !!!

ஜூன் 13, 2009 யூத்ஃபுல் விகடனில்

11 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை சரியா காட்டுகிறது வசணங்கள்

(சோஸ்சிய காரவோ தேன் பண்ணைக்கு ஐடியா கொடுத்திருப்பவோ, அதெ செய்யத்தேன் மாயாண்டி வந்து புட்டவளோ)

நட்புடன் ஜமால்said...

அடியேய்ய்ய்.. ராக்காயீ, மூக்காயி, கருப்பாயீ\\

16 வயதினிலே/அன்னக்கிளி

பாடல் ஒன்று நினைவில் வந்தது

ராமலக்ஷ்மிsaid...

அரசியல்வாதிகள் முதல் ஆருடம் பார்க்கும் பண்ணையார் வரை அறியா மக்களை பயன்படுத்தியபடிதான் இருக்கிறார்கள் பகடைக்காயாக:(!

நல்ல கதை சதங்கா!

அன்புடன் அருணாsaid...

அடப் பாவமே!! இப்படித்தானே பழி ஓரிடம் பாவம் ஓரிடமாக உலகம் முழுதும்!!!

நானானிsaid...

நச்சுன்னு இருக்கு. மாயாண்டியை இன்னும் தோண்டினால் என்னவெல்லாம் கிடைக்குமோ?

சதங்கா (Sathanga)said...

ஜமால், ராமலஷ்மி அக்கா, அருணா, நானானிம்மா,

அனைவரின் வருகைக்கும், ஆர்வத்துடன் பின்னூட்டி உரமிட்டதற்கும் நன்றிகள் பல.

Kavinayasaid...

//நச்சுன்னு இருக்கு.//

ரிப்பீட்டேய்...!

உயிரோடைsaid...

கதை நல்லா இருக்குங்க ஆனா எப்போ நம்ம கடைக்கு கதை எழுத போறீங்க

cheena (சீனா)said...

நல்லாருக்கு சதங்கா - எளிய நடை - கிராமிய நடை - கோழி திருடி எனக் கட்டி வைத்து அடித்து ...... ம்ம்ம்

பாவம் மாயாண்டி - பழி ஓரிடம் .....

வல்லிசிம்ஹன்said...

கிராமம் என்கிற மாயையே என்னை விட்டு விட்டது. இவ்வளவு அக்கிரமமா நடக்கும்!
பாவம் மாயாண்டி:(.

சதங்கா (Sathanga)said...

கவிநயா, லாவண்யா, சீனா ஐயா, வல்லிம்மா ...

அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !