Thursday, September 3, 2009

அந்த ஃபாரினர் தான் !


Photo Credit: olx.in

"சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல‌ எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க....." என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி.

"ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப வாங்கின ?" என்று கேட்டுக் கொண்டிருந்த சக டெவலப்பர் யாழினியிடம், "கொஞ்சம் பொறு, அச்சச்சோ குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, இரு, அதுக்கு தீனி போட்டுட்டு வர்றேன்" என்று ஓடினாள் அருள்மொழி.

"இன்னும் கொஞ்ச நேரத்தில க்ளையன்ட் ஆன்லைனில் வந்திருவான். அதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணுங்க. இந்த நேரத்தில டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் செக் பண்ணி... என்ன வர்ஷினி, கமான், பீ மோர் ப்ரொடக்டிவ்..." என்று வர்ஷினிக்கு அருள்பாலித்துக்கொண்டிருந்தான் ப்ராஜக்ட் லீட் செழியன்.

ர‌யில் நின்ற‌தொரு நிலைய‌த்தின் ப‌ர‌ப‌ர‌ப்பில் இருந்த‌து அந்த மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு கிளை அலுவ‌ல‌க‌ம். சர் சர்ரென்று கார்களும் வேன்களும் செல்லும் பெரு நகரத்தின் பிரதான தெருவில் இருந்தது. அலுவலகத்தினுள் ஆங்காங்கே இடுப்புய‌ர தடுப்புகளில், ஆறுக்கு ஆறில், ஆளாளுக்கு இட‌ம். எல் வ‌டிவ‌ மேசைக‌ள். வெண்திரைக் க‌ணிணிக‌ள், கிறுக்கிப் ப‌ர‌ப்பிய‌ வெள்ளைத் தாள்க‌ள், சித‌றி கிட‌க்கும் பேனாக்க‌ள், தொலைபேசி, ஆங்காங்கே இருவர் மூவராய் நின்று உரையாடல், தளத்திற்கு ஒரு காஃபி ஏரியா, ரெஸ்ட்ரூம்ஸ் என‌ ச‌ர்வ‌தேச தரத்திற்கு இருந்த‌து.

"இந்தாங்க சார் நீங்க கேட்ட ஃபோட்டோ காப்பி" என்று திலீபன் நீட்டிய காகிதங்களை வாங்கிப் பார்த்தான் செழியன்.

"க்ரேட்... இந்தாங்க கலைச்செல்வி, இவர் இன்னிக்கு இன்டர்வியூவிற்கு வருகிறார். ரெஸ்யூம ஏற்கனவே ஈமெயில் உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறேன். எதுக்கும் கையில் காப்பி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்ப நேரம் இருக்கோ, அவருக்கு கால் பண்ணி அப்ப வரச் சொல்லுங்க. இஃப் ஹி இஸ் டெக்னிக்க‌லி ஸ்கில்ட், லெட் மீ நோ" என்றுவிட்டு அடுத்த‌ ப்ராஜ‌க்ட் டீமுட‌ன் ஐக்கிய‌மானான் செழிய‌ன்.

"எப்ப‌வும் செழிய‌ன் தானே இன்ட‌ர்வியூ ப‌ண்ணுவார். இன்னிக்கு என்ன‌ க‌லைச்செல்வி ?!" என்று கேள்விக‌ள் சில‌ர் ம‌ன‌ங்க‌ளில் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்த‌து.

ப்ராஜ‌க்ட் ஸ்டேட்ட‌ஸ், டெய்லி மீட்டிங், வீக்லி மீட்டிங், ரிசோர்ஸ் அஸைன்மென்ட், க்ளைய‌ன்ட் மீட்டிங், மேனேஜ்மென்ட் அப்டேட்ஸ் என்று ச‌தா சுழ‌லும் செழிய‌ன், அந்த‌ கார்ப்ப‌ரேட் அலுவ‌ல‌க‌த்தின் ஒரு உய‌ர் ப‌த‌வியில் இருந்தான்.

இந்த‌ நேர‌த்தில் செழிய‌னுக்கு இணையாக‌ வேறு ஒருவ‌ர் இன்ட‌ர்வியூவிற்கு வ‌ரும் செய்தி, அதுவும் ஒரு வெள்ளைக்கார‌ர் வ‌ருகிறார் என்ற செய்தி, ஏஸி குளிராய் அலுவ‌ல‌க‌த்திற்குள் ப‌ர‌விய‌து.

சாம்பார் சாதம், ரசம், ஃப்ரைட் ரைஸ், லெமன் ரைஸ் என்று கதம்ப மனம் கூடத்தில் மிதக்க, கூட்டாஞ்சோற்றை நினைவூட்டும் ம‌திய‌ உண‌வில், ஆளாளுக்கு இதே அர‌ட்டைக் க‌ச்சேரி தான்.

"மாப்ள, செழியன வேற இடத்துக்கு மாற்றபோறாங்களாம். அதுல கொஞ்சம் அப்செட் ஆகி, 'க‌டுமையா உழைச்சதுக்கு இந்த பலன் போதும், கொஞ்ச‌ நாள் ரெஸ்ட் எடுக்க‌ப் போறன்'னு க்ளோஸா இருக்கவங்க கிட்ட சொல்றாராம்." என்றான் ர‌வி.

"அதெல்லாம் இருக்காதுடா, ஏதாவது மேனேஜ்மென்ட் ப்ராப்ளம் இருக்கும்." என்றாள் த‌மிழ‌ர‌சி.

"வர்றவன் எப்படிப்பட்டவனோ ?" என்று க‌வ‌லை கொண்டாள் ச‌ங்கீதா.

"யாரு வ‌ந்தா என்னா. நாம‌ வேலைய‌ செய்ய‌ப் போறோம், ச‌ம்ப‌ள‌த்த‌ வாங்க‌ப் போறோம். எதுக்கு க‌வ‌லைப்ப‌ட்டுகிட்டு" என்று வாயில் வ‌ழிந்த‌ ர‌ச‌த்தை உறிஞ்சிக் கொண்டே சொன்னான் ஆறுமுக‌ம்.

"என்னது செழியன் வேலைய விடப்போறாரா ? அவர் அளவிற்கு அடுத்து யாரு தான் இங்க இருக்கா ?" என்றான் வழக்கம் போல லேட்டா அலுவலகம் வந்து அரட்டையில் கலந்து கொண்ட ப‌ழ‌னி.

"அதான் இன்னிக்கு ஒருத்தர காலையில இன்டர்வியூ பண்ணாங்களே, ந் ஃபாரிர் தான் !" என்றாள் ம‌னோன்ம‌ணி சற்றும் யோசிக்காமல்.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் இருந்த அந்த அலுவலகத்தில் ஒருவ‌ர் முக‌த்தை ஒருவ‌ர் பார்த்துக் கொண்ட‌ன‌ர். ச‌ற்றைக்கெல்லாம் நிலைமை உண‌ர்ந்து, அனைவரும் சிரித்த‌ சிரிப்பொலி அத்த‌ள‌த்தையே உலுக்கிய‌து.

4 மறுமொழி(கள்):

Anonymoussaid...

நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். மென்பொருளில் மேலோங்கியிருப்பது தமிழர்களே !!!

சதங்கா (Sathanga)said...

சின்ன அம்மிணி said...

//நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். மென்பொருளில் மேலோங்கியிருப்பது தமிழர்களே !!!//

நிச்சயமா. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

நட்புடன் ஜமால்said...

சாம்பார் சாதம், ரசம், ஃப்ரைட் ரைஸ், லெமன் ரைஸ் என்று கதம்ப மனம் கூடத்தில் மிதக்க, கூட்டாஞ்சோற்றை நினைவூட்டும் ம‌திய‌ உண‌வில், ஆளாளுக்கு இதே அர‌ட்டைக் க‌ச்சேரி தான்.]]

நல்ல இரசனை.

நாகு (Nagu)said...

ந்ன்றாக விறுவிறுப்பாகப் போகிறது கதை. கடைசியில் வேறு எங்கோ போய் விட்டீர்கள்... அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

சக ஊழியர்களை 'டா' போடும் பெண்கள், 'டி' போட்டால் ஒத்துக் கொள்வார்களா?

//நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். மென்பொருளில் மேலோங்கியிருப்பது தமிழர்களே !!!//

எந்த ஊரில்? :-)

சீட்லோ நிலபடி சுட்டி ஒக சாரி சூடன்டி!

Post a Comment

Please share your thoughts, if you like this post !