Wednesday, March 18, 2009

சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும் ...


Photo: wikimedia.org

எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதங்களே ஆன செல்லமுத்து வாழ்வில் இப்படி ஒரு ஏகாந்தம் அடிக்கும் என அவனும் எதிர்பார்க்கவில்லை !!!

அவனுடன் வேலை செய்வோருக்கோ, 'இவனுக்கே வா !!! மச்சக்காரன் தான்' என்று உள்ளுக்குள் புலம்பல் எண்ணம்.

சொல்லாமலேயே புரிந்திருக்குமே ... ஆம், அவனது வாழ்வில் தென்றலாய் வீச ஆரம்பித்தாள் ரேணுகா.

நடை, உடை, பாவனை அனைத்திலும் அச்சுவார்த்த சென்னை பெண். எதிராஜில் புரண்ட நுனி நாக்கு ஆங்கிலம். 'அப்படி அவ நடந்து வந்தாலே, அந்த ஏரியாவே ஒரு கணம் நினைவிழக்கும்'. இது அந்த அலுவலகத்தில் சொல்லப்படாத தாரக மந்திரம்.

'அவனவன் அப்ளிகேஷன் போட்டு ஆண்டாண்டு காலமா காத்திகிட்டு இருக்கான், தோடா ... நேத்திக்கு வந்த செல்லம், அநியாயத்துக்கு செல்லத்த தட்டிட்டுப் போயிடுச்சே' என்ற பேச்சு செல்லமுத்து இல்லாத போது அவன் குழுவினர் ஆற்றும் தலையாய தலைப்பு.

நுங்கம்பாக்கம் பாம்குரோவ் எதிரில் அந்த சிறு கணினி அலுவலகம். ஒரு செல்போன் அடிச்சாலே அத்தனை பேருக்கும் கேட்கும். அப்படியிருக்க, தினம் ரேணுகாவும் செல்லமுத்துவும் ஒன்றாகப் போவதும், வருவதும் அநேகத்துக்கு எரிமலை ஆக்கியிருந்தது அனைவரையும்.

எல்லோருடைய வயிற்றெரிச்சலை மேலும் அதிகரிக்கும் வண்ணம் சமீபகாலமாக, செல்லமுத்துவுக்கு தனது வண்டியில் லிஃப்ட் தர ஆரம்பித்திருந்தாள் ரேணுகா.

'முத்து பட்டணத்துக்குப் போறே, பாத்து நடந்துக்க. முழிச்சிருக்கும் போதே ஆள ஏமாத்திட்டு போயிருவாங்க. சாக்கிரதையா இருந்துக்க‌ !!!' பாட்டி, தாய், தந்தை என பட்டாளமே சொல்லி அனுப்பினாலும் ...

"மச்சான், சென்னைக்குப் போறீக. அங்க எல்லாரையும் ஈஸியா நம்பிராதீக. முக்கியமா பொண்ணுங்கள. ஆங் ... என்னைய மறந்திர மாட்டீகளே !!! என்னைக்கு இருந்தாலும் நான் தான் உங்க பொஞ்சாதி, ஆமா ... சொல்லிப்புட்டேன்." மரகதத்தின் குரல் கேட்க, 'இவ ஒருத்தி ...'

'ஏன் எல்லோரும் இப்படி சொல்றாங்க ? சென்னைக்காரங்க என்றாலே மோசமானவங்கனு. ரேணுகா ஒரு உதாரணம் போதுமே. நம்ம மேல என்ன ஒரு பாசமா இருக்கா. இந்த பசங்க தான் மோசமா இருக்கானுங்க. ஆண்டவா ஏதாவது குழப்பத்த உண்டு பண்ணி எங்களப் பிரிக்காம இருக்கணுமே' என எண்ண‌ அலைக‌ளில் மித‌ந்திருந்தான்.

"செல்ல‌ம் ... இன்னும் ஆபீஸ்ல‌ இருக்காப்ல‌ ! ஏன் ? இன்னிக்கு ரொமான்டிக் லிஃப்ட் கிடைக்க‌லையா" கேட்டுக் கொண்டே வ‌ட்ட‌மிட்ட‌ன‌ர் அவ‌ன‌து குழு உறுப்பின‌ர்க‌ள்.

முர‌ட்டுத் த‌ன‌மாக‌ இருந்த‌ ம‌கேஷ் அங்கிருந்த சுழலும் நாற்காலி ஒன்றை இழுத்து, முதுகைச் சாய்த்து அம‌ரும் இட‌த்தில், மார்பை சாய்த்து அம‌ர்ந்து, "டேய் விட்டிருடா, ப்ளீஸ் இங்க‌ பாரு அவ‌ன‌வ‌னும் ரொட்டித்துண்டுக்கு அலைய‌ற‌ .... வேணாம், இதுக்கு மேல‌ ஒன்னும் சொல்ற‌துக்கில்ல‌" என்று நிறுத்தினான்.

"அவ‌ள‌ போய் கேளுங்க‌. நானா அவ‌ பின்னால‌ அலைய‌றேன்" என்றான் செல்ல‌முத்து.

"தோடா... ராம‌ராஜ‌ன் க‌ல‌ர்ல‌ ட்ரெஸ்ஸு போட்டா, உட‌னே ஹீரோனு நினைப்பா ?" வெறுப்பின் உச்சியில் இருந்தான் ம‌கேஷ்.

"அவ‌ளே கூப்பிட்டாலும், நீ முடியாதுனு சொல்ல‌ வேண்டிய‌து தானே பாஸூ" என்று வ‌ம்பிழுத்தான் சுரேஷ்.

ப‌டாரென‌ க‌ண்ணாடிக் க‌த‌வைத் திற‌ந்து உள்ளே வந்த ரேணுகா, "ஹேய் என்ன‌து ... ராகிங் இங்கயும் ஆர‌ம்பிச்சிட்டீங்க‌ளா. வாய் பேசாத ஆள் கிடைச்சிட்டா போதுமே. உங்க வீரத்த எல்லாம் இப்படித்தான காட்டுவீங்க‌" என‌க் க‌டிந்து கொண்டாள்.

'மானத்த வாங்கிட்டானே மக்கா' என அங்கிருந்து நகர்ந்தனர் மகேஷ் குழுவினர்.

'என்ன ஒரு தைரியம். எப்படி எல்லார் முன்னாடியும் வீராப்பா நின்னு பேசறா. மரகதமும் இருக்காளே ... ஒரு கடைக்குப் போயி ஏதாவது வாங்கிட்டு வான்னா கூட ரொம்ப யோசிப்பாளே பேசறதுக்கு'

"பசங்க ரொம்ப டீஸ் பண்ணிட்டாங்கனு எல்லாம் ஃபீல் பண்ணாத. இன்னிக்கு நடக்கறத நாளைக்கு மறந்திருவாங்க. டேக் இட் ஈ.ஸி." என்ற ரேணுகாவின் குரலில் மீண்டும் நினைவுக்கு வந்தான்.

'எவ்வளவு அக்கறையா பேசறா, நம்ம மேல ஒரு இது இல்லாம இதெல்லாம் ஏன் பண்ணனும், இன்னிக்கு சொல்லிட வேண்டியது தான்'. ரொம்ப நாட்களாகவே யோசித்து வைத்திருந்ததை இன்று சொல்லிவிட முடிவு செய்தான் செல்லமுத்து.

"மறந்தே போயிட்டேன். முக்கியமா எதுக்கு திரும்பி வந்தேன்னா, இன்னிக்கு ஒரு இடத்துக்குப் போறோம். அங்க உனக்கு ஒரு சர்ப்ப்ரைஸ் காத்திருக்கு. சரி சரி கிளம்பு நேரம் ஆச்சு" என அவசரப்படுத்தினாள் ரேணுகா.

மனம் ஜிவ்வென்று ஐஸாகி நடுக்க ஆரம்பித்தது. 'நம்ம எங்கடா சொல்லலாம்னு பார்த்தால், இவளே இடமெல்லாம் செலக்ட் செய்து வைத்திருக்கிறாளே. ம்ம்ம்ம் செம வேகம். சென்னைப் பொண்ணுங்க சென்னை பொண்ணுங்க தான்'. மனதுள் மகிழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தான்.

நுங்கம்பாக்கம் பீஸா ஹட். "ஹேய் அர்விந்த். இவன் தான் செல்லா, மை பெஸ்ட் ஃப்ரெண்ட் இன் ஆஃபீஸ்" ... "செல்லா, திஸ் இஸ் அர்விந்த், மை ஃபியான்சி" என அறிமுகம் செய்து வைத்தாள்.

அவர்கள் இருவரின் ஐஸ்க்ரீம் உறுக, செல்லமுத்துவின் ஐஸ்க்ரீம் அவனது மனம் போலவே இறுக ஆரம்பித்திருந்தது.

"என்னோட அத்தை பையன் தான். டெல்லில பிறந்து வளர்ந்து அங்கேயே செட்டில் ஆனவங்க. எனக்காக இவன் மட்டும் கிளம்பிவந்திட்டான் இங்க. நேத்து தான் வந்தான் ... உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் நேத்தே சொல்லலை"

இதெல்லாம் செல்லமுத்துவின் காதுகளில் விழுந்தாலும், பட்டினத்துக்காரங்க மோசமானவங்க என்று அவனும் அர்த்தம் கொள்ள ஆரம்பித்திருந்தான் !!!

Sunday, March 8, 2009

கருப்பு வெள்ளை நினைவலைகள் ...


Photo courtesy: Muthukumar's Picassa album

கருப்பு வெள்ளை
புகைப் படத்தில்,
இருக்கும் சுகம்
என்றும் நிஜம் !

காலத்தின் மாற்றங்களை
கருப்பு வெள்ளை மங்காமல்,
ஆளில்லா ஊர்த்தெருவை
அழகாய் காட்டி நிற்கும் !

வீட்டுச் சுவற்றினிலோ
உத்திரத்து உச்சியிலோ,
பாலகத்துப் பெரியோரை
பாந்தமாய் தாங்கி நிற்கும் !

கண்டாங்கி சேலைகட்டி
கழுத்துநிறை நகைபோட்டு,
புஸ்ஸென்ற‌ ர‌விக்கையிலே
புன்ன‌கைக்கும் ந‌ம் பாட்டி !

கம்பீரம் குறையாத‌
கர்ஜிக்கும் சிங்கமென‌,
வெள்ளை உடுப்பினிலே
வீற்றிருக்கும் நம் தாத்தா !

காசி ராமேஸ்வரம்
கால்வலிக்க நடந்ததையும்,
கழுதைமேல் பயணித்து
பனிலிங்கம் பார்த்ததையும் !

ஒற்றைப் படத்தில்
ஓராயிரம் கதை படிக்க,
உற்று நோக்காமலே, மனதில்
ஒட்டிக் கொள்ளும் !

க‌ல்யாண‌ வைப‌வ‌ங்க‌ள்
புழுதிக் கை கால்கள்,
சின்னஞ் சிறுவயது
அப்பா அம்மாக்கள் !

அங்கொன்றும் இங்கொன்றும்
அளந்தெடுத்த படங்கள்,
இன்றும் நம்நெஞ்சில்
ஏகாந்த நினைவலைகள் !

படமெடுத்தால் ஆயுசு
பட்டென்று குறையுமென,
படப்பெட்டி முன்நிற்க
பயந்த கதை கேட்டிருப்போம் !

காலங்கள் உருள
நாகரீகம் வளர, வண்ணப்
படங்களுக்குக் குறைவில்லை
மனதில் இருத்த நேரமில்லை !

ஆயிரம் படங்கள்
அடுக்கடுக்கா எடுக்கின்றோம்,
அத்தனையும் மனதில் நிற்க
எத்தனை நாள் ஆகிடுமோ !

மார்ச் 12, 2009 யூத்ஃபுல் விகடனில்

Monday, February 23, 2009

பிடித்ததும் பிடிக்காததும்



'நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க' என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன்.

அந்த அறையில் ஒரு பத்து பதினைந்துபேர், இழுத்து விட்ட மெத்தையில் அமர்ந்து ஆளுக்கு ஒரு தலைகாணி போன்ற முன்டில் சாய்ந்தோ, விழுந்தோ அமர்ந்திருந்தனர். சங்க இலக்கியம், மார்க்ஸியம், அம்பேத்கார்,புதுக்கவிதை,ஹைகூ,திரைத்துறை என பாகுபாடின்றி அவர்கள் உரையாடல் இருந்தது.

சற்று நேரத்தில் இனிமைவேந்தன் அருகில் அமர்ந்திருந்த வயதான எழுத்தாளர் ஒருவர், 'எங்கே உன் படைப்புக்களை கொடு' என்று என்னிடம் இருந்த பைலை நோக்கினார்.

"ஏம்பா, என்ன சொல்ல வர்றே ? கதையை எழுதி, துண்டு துண்டா வெட்டினா மாதிரி இருக்கு. இதைக் கவிதை என்று வேறு சொல்கிறாயே !!!" என்றவுடன், அந்த அறையில் சிதறிய சில்லரைகளாய் சிரிப்பொலி.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், சோமேஷ் !!!

-----

"வாங்கம்மா !", எழுந்து இருகரம் கூப்பி வரவேற்றார் தலைமை ஆசிரியர் வேதசகாயம்.

என்னிடம் இருந்து சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை வாங்கி புரட்டினார். ம்ம்ம்ம்ம். பி.காம் முடிச்சு, எம்.ஸி.ஏ பண்ணியிருக்கீங்க. இரண்டொரு மார்க் வித்தியாசத்தில், தங்கபதக்கத்தை இழந்திருக்கிறீர்கள்.

பட்டென்று கோப்பை மூடி, "ஏம்மா, தெரியாம தான் கேக்கறேன், அவனவன் இந்த காலத்தில கண்டதையும் படிச்சிட்டு, கடல் கடந்து போறான், கை நிறைய சம்பளம் வாங்கறான். நீ என்னடான்னா, இந்த கிராமத்து பள்ளிகூடத்தில வேலை செய்றேன்னு சொல்றியே !!! பேசாம அமெரிக்கா, ஐரோப்பானு போயி சந்தோசமா இரு" என என்னை வழி அனுப்புதலில் ஆர்வலரானார் வேதசகாயம்.

"சொன்னா கேட்டா தானே !! என்னமோ படிச்ச பள்ளிகூடத்துக்கு விசுவாசமா இருப்பேனு சபதம் மாதிரியில்ல போட்டு கிராமத்துக்கு போனே ! இப்ப என்ன ஆச்சு!!", வெளியில் கோபம் கொண்டவராகவும், உள்ளில் ஆனந்த நிலையிலும் இருந்தார் என் தாய் ரேவதி.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், தமிழ்செல்வி !!!

-----

தமிழகத்தின் தலைசிறந்த கணபதி ஸ்தபதி அவர்களைப் பார்க்கப்போகிறேன். எனது கல்வி சான்றிதழ்களுடன் நான் வரைந்த படங்கள் சிலவற்றையும் எடுத்து சென்றேன்.

"வாப்பா அம்பி... ம்ம்ம் படங்கள் எல்லாம் வெகு ஜோர். நல்லா வரைஞ்சிருக்கியே." என வெகுவாக என்னைப் பாராட்டினார்.

"சரி நான் என்ன பண்ணட்டும்" என்பது போல் என்னைப் பார்த்தார்.

"காசியில் அப்பா உங்களை சந்திச்சாங்களாம். இப்ப தான் எம்.எஸ்.ஸி கணினி முடிச்சிருக்கேன். உங்கள் நண்பர் அலுவலத்தில் வேலை கிடைக்க சிபாரிசு செய்வதா சொன்னிங்களாம் ..." என இழுத்தேன்.

"நமக்கெதற்கு கணிப்பொறி எல்லாம் ?!! அதை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு வா. தமிழில் குறும்படம் ஒன்று வரைபடத்தில் செய்யலாம் என இருக்கிறேன். எங்கள் கலைக் குழுவில் இணைத்துக் கொள்கிறேன். உனக்கு பேரும் புகழும் கிடைப்பது நிச்சயம்" என்றார்.

ஒரு கனம் ஆனந்தத்தில் திகைத்தாலும், குடும்ப சூழல் இதற்கு இடம் தரவில்லை.

'பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்ச உடனே வரைகலையில உன்னை சேர்த்திருப்போமே !! இதுக்கு எம்.எஸ்.ஸி வரைக்கும் படித்து, நேரத்தையும் காலத்தையும் வீணடித்திருக்க வேண்டாமே ?!!' பெற்றோரின் குரல் தீர்கமாய்.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், ஜெயபிரகாஷ் !!!

-----

"டேய், மச்சா உனக்கு என்ன தான் ஆச்சு ! அல்ட்ரா மாடர்ன் பையனா சென்னையில வளர்ந்திட்டு, கிராமத்தில போய் விவசாயம் பண்றேன்னு சொல்றே!", நிஜமாவே அதிர்ந்து போனார்கள் என் நண்பர்கள்.

"எனக்கென்னமோ படிச்சிட்டு நாலு சுவத்துக்குள்ள உக்கார்ந்து, கண்டதையும் பேசி, காலம் தள்ளுவதில் இஷ்டம் இல்லை. அதான் இயற்கையோட ஒன்றி என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப தான், விவசாயம் சரினு பட்டுச்சு" என நான் சொல்வதை, ஆர்வத்துடன் ஏதோ கதை சொல்வது போல கேட்டுக் கொண்டிருந்தனர்.

"சாரி மை டியர் சன், உனக்கு அதான் இஷ்டம் என்றால், எங்களுக்கு அதான் கஷ்டம்". வழக்கம் போல ஆணித்தரமாக அப்பாவின் வாக்கியம். சொல்லிவிட்டு விறுவிறு என அங்கிருந்து நகன்றார்.

நினைவுகளில் மூழ்கி நிகழ்வுகள் மறந்த நான், நகுலன் !!!

-----

"பசங்களா என்ன எல்லோரும் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீங்க. புரியுது ! புரியுது !! இன்னிக்கு அலுவலகத்தில் ஆட்குறைப்பு, அதானே பலத்த யோசனை !!! கவலையே படாதீங்க. நம்மை எல்லாம் அலுவலகத்தில் இருந்து தூக்கட்டும். இப்ப வெளியில் வேலை கிடைப்பதும் பெரும் பாடு தான். புதுசா வந்த பிரெஸிடென்ட் ஐயா வேற, விசா கோட்டா எல்லாம் ரெண்டு வருசத்துக்கு இல்லைனு சொல்லிட்டாரு. இதெல்லாம் நம்ம பெத்தவங்களுக்கு எடுத்து சொல்லி நமக்குப் பிடிச்ச துறையில போய் சேர்ந்துப்போம்" என சரமாய் தொடுத்தான் விஸ்வேஷ்.

அவனது யோசனை எல்லோருக்கும் பிடித்துப் போக, துள்ளி எழுந்தனர்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரம். தொலைபேசிக்கு பெயர் பெற்ற அலுவலகத்தில் ஆட்குறைப்பு அறிவிப்பிற்கு பதில், "இன்னும் நிறைய இடங்கள் காலியாக இருக்கிறது, அதனால் எங்கள் அலுவலகத்தில் ஆள் நிறைப்பு செய்கிறோம்" என்றனர்.

'பிடிக்காத வேலையை தொடருணுமே' என பொத்தென்று விழுந்து மீண்டும் நினைவுகளில் மூழ்கினர் அனைவரும் !!!

பெப்ரவரி 27, 2009 யூத்ஃபுல் விகடனில்

Saturday, February 14, 2009

உலுக்கும் உறுமி மேளம்

கோவில் திருவிழாக்கள்
குலதெய்வ வழிபாடு,
எங்கிலும் ஒலித்தாலும்
இங்கு வலி(மை) அதிகம் !

உறுமல் ஒலி எழுப்பும்
இடிபடும் உறுமியோடு,
சுருண்டு படுத்துறங்கும்
இடுப்பில் கைக் குழந்தை.

த‌ம் வாழ்வின் தேவைகளை
தலையில் வைத்த கனம்,
உற்ற‌வ‌ன் ப‌க்க‌ம் வ‌ர‌
உறுமி அடித்திடுவாள்.

கூடும் கூட்டத்திலே
ஆட்டம் பாட்டமுண்டு,
சாட்டை சுழன்றாட
சதைகிழியும் காட்சியுண்டு.

கரணம் தப்பாது
மரணம் ஜெயித்து,
சாகசங்கள் பல புரியும்
யாசகம் வேண்டும் பிள்ளைகள்.

கோடிகளில் அடித்து
குளித்து மகிழ்பவரில், தெருக்
கோடியில் அடிபடும்
இவ‌ர்க‌ள் மேல்.

அடிமேல் அடிவைக்க‌
அதிருது சதங்கை,
வேர்த்த உடம்பிலே
உதிருது உதிரம்.

உறுமி மேளச் சத்தம்
உலுக்கும் அடி வயிற்றை,
சேகரிக்கும் சில்லரைகள்
நிரப்பும் அவர் வயிற்றை.

வளைந்த குச்சியாய்
வாழ்வும் கேள்விக்குறி,
தொடரும் பயணத்தில்
தினமும் எழுப்பும் ஒலி.

என்றோ கேட்ட‌ ஒலி
இன்றும் சுழ‌ல்கிற‌து,
அன்று பார்த்த‌ வ‌லி
இன்றும் (மனம்) க‌ன‌க்கிற‌து.

Wednesday, January 28, 2009

பெய்யெனப் பெய்யும் (ஆலங்கட்டி) மழையும், கொசுவர்த்தி சுருளும் ...


Photo: hodgman.org.jpg

மேற்கிலிருந்து கிழக்குவரை, அமெரிக்கா முழுதும் இப்ப ஹீரோ 'ஐஸ் ஸ்ட்ராம்' ஆலங்கட்டி அவர்கள் தான் !!!

திங்கள் மதியத்திலிருந்து ஆரம்பித்து, செவ்வாய் இரவு வரை ஆலங்கட்டியின் ஆதிக்கம், இன்று மென்பனியாய் (snow தாங்க) மாறி இன்னும் கொட்டுவதை செய்திகளில் பார்த்தால் எண்ணில் அடங்காது.

பாலம் பாலமாக, வீட்டுக் கூரையிலிருந்து, மரக் கிளைகள் படர்ந்து, தரையில் உதிர்ந்து, வெண் தார்ச் சாலை நிரப்பி ... (படங்கள் இங்கே)

வீட்டில் இணையம் வேலை செய்யாததால், இன்று ஆணிபுடுங்க அலுவலகத்துக்கு வரும்படி ஆகிவிட்டது. வழியெல்லாம் வெண்மை. 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' பாடல் தான் மனசுக்குள் மத்தாப்பாய். மெதுவே வண்டியை கராஜிலிருந்து எடுத்து, பின் ஐஸ்கட்டியிலேயே பயணித்து, பத்து பதினைந்துக்கு மேல் ஓட்ட முடியவில்லை. ஒரு சாலை விளக்கு நிறுத்தத்தில் எதிரே வந்த ஜீப், ப்ரேக் பிடிக்க, அப்படியே வழுக்கியதை பார்த்தபோது நமக்கு நெஞ்சம் உறைந்து போனது .... நல்ல வேளைக்கு ஒன்றும் ஆகவில்லை.

ரெண்டு நாளா வெளியில் எங்கும் போக முடியவில்லை (அலுவல் தவிர). வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. பத்தாதற்கு பவர் கட் வேற. முதல் வார்த்தை தங்க்ஸ் சொன்னது "ஐயோ ஃப்ரீஸர்ல‌ இருக்கதெல்லாம் என்னாகுமோ ?!!!" என :))) 'எதுக்குக் கவலைப் படறே, ஃப்ரிட்ஜை விட வெளியில் எடுத்துப் போட்டா இன்னும் பத்திரமா இருக்கும்' என்றேன். அந்த அளவிற்கு ஐஸ் வெளியே !!!!

'பட்டால் தான் தெரியும் பகலவனுக்கும் சூடு' என்பது போல். 'பவர் கெட்டால் தான் தெரியும் முன்னேற்பாடு' என்கிற மாதிரி (இதெல்லாம் யாரு சொன்னாங்கனு கேக்கக்கூடாது), நேற்றிரவு ஒரு மெழுகுவர்த்தி கூட சட்டுனு கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை :(((

வொய்ங் வொய்ங் வொய்ங் (டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள்கிறது) ...

ஊரில் ஹரிக்கன் விளக்கு இருக்கும். பாட்டி துடைச்சு துடைச்சு வைத்திருப்பார். தங்கம் போல் மினுமினுக்கும். கோடைகாலங்களில் (அப்ப இருந்தே) கரண்ட் போயிடும் என்று, சாயந்திரம் வெளிச்சம் குறையும் நேரத்தில் ஒரு நாலஞ்சு விளக்கு ஏற்றி, அங்கங்க‌ வைப்பார் தினம். காலை வரை எரியும் அவை.

சளைக்காம ஏத்தறாங்களே என்று பார்த்தால், பின்னர் புரிந்தது அவர்கள் காலத்தில் தான் தீப்பந்த விளக்குகளில் இருந்து மின்சார விளக்குகளுக்கு ட்ரான்ஸிசன் ஆனார்கள் என‌. அதனால் விளக்கு ஏற்றுவது அன்றாட வேலைகளில் ஒன்றாக இருந்திருக்கிற‌து அவர்களுக்கு.

எங்க‌ள் ஊர் வீடுக‌ளில், உள் வாச‌ல் ந‌டுவில், ஒரு சிறு க‌ல்தூண் இருக்கும். மேலே சிறு குழியும் இருக்கும். ம‌ழைகால‌ங்க‌ளில் நீர் நிறைந்தும் இருக்கும். ப‌ள்ளி கால விடுமுறையில் ஊருக்கு போகும்போதெல்லாம், விளையாட்டில் அந்தத் தூணைச் சுற்றி சுற்றி வ‌ருவோம். அது ஏன் அங்க‌ நிற்கிற‌து என்றெல்லாம் தெரியாது.

அந்த‌கால‌த்து செய‌ல்க‌ளுக்கு எந்த‌கால‌த்திலும் ஒரு கார‌ண‌ காரிய‌ம் மெய்பிக்க‌லாம். ஆன்மிக‌ம் இதில் அடங்குமா என‌த் தெரிய‌வில்லை. அந்த‌ அள‌விற்கு எனக்கு இன்னும் வ‌ய‌தாக‌வில்லை :))) ஆனா இந்த‌ கால‌த்து செயல்க‌ளுக்கு ஒரே வார்த்தை, 'ஃபேஷ‌ன்' :)) ஏன், எதுக்கு எல்லாம் சுத்தமாத் தெரியாது.

'இது ஒவ்வொரு வீடுக‌ளுக்கு உள்ளும் உள்ள‌ விள‌க்குத் தூண்' என்று தாத்தா சொல்வார்க‌ள். மின்சாரம் வருவதற்கும் முன், பெட்ட‌ர்மாக்ஸ் விள‌க்கெல்லாம் வ‌ருமுன்னே, க‌ண்ணாடிக் குடுவையுள் விள‌க்கேற்றி, அதை இந்த‌த் தூணில், அந்தச் சிறு குழியில் நிறுத்தி விட்டால், வாச‌ல் முழுதும் இரவு பிர‌காசிக்குமாம்.

மின்சார விளக்குகளின் ஆதிக்கம் வந்த பின்னாளில், இத் தூண்க‌ள் துணி உல‌ர்த்தும் கொடி க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌ட்ட‌து, ப‌டுகிற‌து :)))

பெரிய‌வ‌ர்க‌ளிட‌ம் ப‌ழ‌ங்க‌தைக‌ள் கேட்க‌ அப்பொழுது பொறுமையும் இல்லை, ஒரே இட‌த்தில் உட்கார்ந்திருக்க‌ வ‌ய‌தும் இல்லை. எப்ப‌ ந‌ம்மைப் பிடித்து உட்கார‌ வைத்தாலும், சில‌ நொடிக‌ளில் விடு ஜூட் தான். இருந்தாலும், பிடிக்குதோ இல்லையோ, நிறைய‌ சொல்லியிருக்கிறார்க‌ள். இன்று அவர்கள் உயிருடன் இல்லை, இருந்திருந்தால் ...

சின்னஞ் சிறுக‌தைக‌ள் பேசி
சிரித்து உற‌வாடி,
அன்பின் பெருக்கத்தில்
அரவணைக்கப் பெற்று,
சிந்தை ம‌கிழ்ந்து
செழிப்புற் றிருப்போம் ...

இந்த‌ ஒரு நெருக்க‌ம் அப்பா, அம்மாவிட‌ம் இல்லாதது இன்ற‌ள‌வும் ஆச்ச‌ரிய‌மே !!!!

Tuesday, January 27, 2009

எனையே நான் தொலைத்தேன் !!!

காதல் கவிதை எழுதி எம்புட்டு நாளாச்சு. அப்பாடா, இன்னிக்கு ஒரு நல்ல மாலை நேர இனிய மனநிலையில், கவியரசரின் 'தேன்' பாடல் ஞாபகம் வர, கூடவே காதலும் பிறக்க, இதோ கவிதை (?!!) ...

---


Photo: wikimedia.org

உலகத்து அழகெலாம்
ஒன்றாய் அணிசேர்த்து,
ஓவியமாய் உலாவரும்
உனைக் கண்டு மலைத்தேன்.

மீன்களெனக் கண்கள்
மிதக்கின்ற குளத்தில்,
தூண்டிலே போடாமல்
துள்ளி நான் விழுந்தேன்.

ஈர்க்கும் காந்தமதில்
இழுபடும் இரும்பாய்,
உருக்கும் உன் இதழில்
மெல்ல நான் தவழ்ந்தேன்.

இடறி உள்விழுந்து
இம்மியும் பிசிறில்லா(த),
வெண்கலக் குரலில்
வெல்லமாய்க் கரைந்தேன்.

விழி வாசல் மூடி
உன் சுவாசம் புகுந்து,
இதயத்துக் கதகதப்பில்
எகிறி நான் குதித்தேன்.

காண்கின்ற அனைத்திலும்
வான் வரை சென்று,
கன்னி உனைக் காண
எ(ன்)னையே நான் தொலைத்தேன் !!!

Sunday, January 25, 2009

எங்கள் ஊர்ப் பொங்கல் விழா

சென்றவார இறுதியில் எங்க ஊரில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுவா நம் நாட்டில்/ஊர்களில் இது போல கலைநிகழ்ச்சிகள் வைப்பது இல்லை. பண்டிகை நாட்களே விழாக்கள் போல இருப்பதால் தானோ ?!!!

இதுபோல விழாக்கள் எடுத்து சிறப்பாக நடத்தும் தமிழ்சங்க குழுவினருக்கு முதற்கண் பாராட்டுக்கள் !!!

ரூத் பார்கர் நடுநிலைப் பள்ளியின் கேஃபடேரியா, பொங்கல் விழாக் களமாக மாறியது. மேடையில் சின்ன அலங்கரிப்பு. பொங்கல் பானை, கரும்பு, மாடு என கலக்கியிருந்தார்கள்.

பதினோறு மணிக்கு விழா ஆரம்பம் என்றால், வழ‌க்க‌ம் போல‌ ந‌ம்ம‌ ஆட்க‌ள் சாவ‌காச‌மாக‌வே வ‌ந்தார்க‌ள். எங்கே போனாலும் இந்திய முத்திரை ப‌திப்போம்ல‌ :))

மக்கள் ஒவ்வொருவராக, குடும்பமாக வந்து சேர, ச‌ள‌ச‌ள‌வென‌ ஒரே பேச்சுக் குர‌ல்க‌ள்.

பதினொன்று முதல் ஒரு மணி வரை மதிய உணவு. பின் ஒன்றிலிருந்து நான்கு வரை கலைநிகழ்ச்சிகள். முடிந்தவர்கள் ஏதாவது சமைத்து எடுத்து வரலாம் என்றிருந்தார்கள். இட்லி, பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ப்ரைட் ரைஸ், தயிர் சாதம், சட்னி, சாம்பார் என ஏகப்பட்ட வெரைட்டிகள். குட்டீஸுக்கு பீட்சா. பல வகை சோடாக்கள்.

உண்ட மயக்கத்தில் நாங்களெல்லாம் உரையாடிக் கொண்டிருக்க விழாத்த‌லைவ‌ர் பேச‌ ஆர‌ம்பித்தார், ம‌க்க‌ளும் பேச்சை நிறுத்துவ‌து போல் தெரிய‌வில்லை. அப்படி என்னத்த தான் சளசளனு பேசுவாங்களோ என நினைத்துக் கொண்டேன்.

க‌ரெக்டா ப‌தினோறு ம‌ணிக்கு போனாலும், ப‌ள்ளிக‌ளில் க‌டைசி பெஞ்ச் மாதிரி, இங்கும் க‌டைசி வ‌ரிசையில் ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அம‌ர்ந்தோம். இரண்டு மூன்று குடும்பங்களாக அமர்ந்திருந்தோம்.

எங்களுடன் மேசையில் அமர்ந்திருந்தவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம். அட, மதுரைக்காரங்க .... அப்புறம் அவங்க சைடு தங்ஸும் எங்க தங்ஸும் நான்‍-ஸ்டாப். 'ச‌ள‌ச‌ள‌'விற்கு அர்த்த‌ம் புரிந்த‌து இப்போது :)))

நிறைய செய்திகள், படங்கள் சேகரித்து, பொங்கல் பற்றி ஒரு ஆவனப் படம் காட்டினார்கள். வெளிநாட்டினர் பார்த்து அறிந்து கொள்கிறார்களோ இல்லையோ, நம் அடுத்த சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் இது போன்ற காட்சிப் படைப்புக்கள்.



முத‌லில் குழ‌ந்தைக‌ள் மாறுவேட‌ நிக‌ழ்ச்சி. வ‌ரிசையா வ‌ர்றாங்க‌ ... ல‌ஷ்மி, ச‌ர‌ஸ்வ‌தி, பார‌தியார் என்று. வ‌ழ‌க்க‌ம்போல‌ தான் என்றாலும், குழ‌ந்தைக‌ள் என்றைக்கும் தெய்வ‌ங்க‌ள் தானே !



எங்க‌ளுட‌ன் மேசையில் இருந்த மதுரைக்கார ந‌ண்ப‌ர் 'குமரேஷ்' குழந்தைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வ‌ழங்கினார். "ஃபேய‌ட்வில், பென்ட‌ன்வில், ராஜ‌ர் ... போன்ற‌ ப‌தினெட்டுப் ப‌ட்டிக்குமான‌ நாட்டாமை வ‌ர்றார்" என்று அறிவித்த‌வுடன் அரங்கில் ஒரே க‌ர‌கோஷ‌ம். குட்டி நாட்டாமை வ‌ந்து க‌ல‌க்கிவிட்டார். அது வேறு யாருமல்ல, நண்பரின் மகன் தான்.

அடுத்து குட்டீஸின் டான்ஸ். நம் எதிர்பார்ப்பையும் மீறி அசத்திவிட்டனர். 'வில்லேய்ய் வில்லேய்ய்ய்'னு வந்து, குட்டி விஜய் மாதிரியே (அதே மானரிஸம்) ஆடி, பலத்த கரகோஷம் பெற்றான் சிறுவன் ஒருவன்.

ஆடலாகட்டும், பாடலாகட்டும் ... 'அவன மாதிரியே அசத்தறான் பையன் பாரு' என்று நாம சொல்வதற்கு, சினிமாக்காரர்களின் அவசியத்தை, இது போன்ற கலைநிகழ்சிகளில் உணரமுடிகிறது :)

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை உயர் நிலைப் பள்ளி மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தொகுத்து வழங்கினர். நாம அடிக்கிறோமே ஏ-கலப்பையில், அது மாதிரி ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு, தமிழில் பேசினர். த‌மிழில் பேசிய‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ளைப் பாராட்டியே ஆக‌வேண்டும்.

கொஞ்சம் பெரிய பசங்க எல்லாம் கீ‍போர்ட், கிடாரில் நம்ம ஊரு திரைப்படப் பாடல்களை வாசித்தனர். பெரியவர்களின் பாடல்கள், நாடகம், பட்டிமன்றம் என வரிசை கட்டி நிற்பதாக‌ நண்பர்கள் சொன்னார்கள்.

நேரம் ஆக ஆக‌, நம்ம வீட்டு குட்டீஸ் பொறுமை இழக்க, அதனால் நாமும் பொறுமை இழக்கும் முன்னால், அங்கிருந்து வீட்டுக்குக் ஜூட்.