Sunday, March 8, 2009

கருப்பு வெள்ளை நினைவலைகள் ...


Photo courtesy: Muthukumar's Picassa album

கருப்பு வெள்ளை
புகைப் படத்தில்,
இருக்கும் சுகம்
என்றும் நிஜம் !

காலத்தின் மாற்றங்களை
கருப்பு வெள்ளை மங்காமல்,
ஆளில்லா ஊர்த்தெருவை
அழகாய் காட்டி நிற்கும் !

வீட்டுச் சுவற்றினிலோ
உத்திரத்து உச்சியிலோ,
பாலகத்துப் பெரியோரை
பாந்தமாய் தாங்கி நிற்கும் !

கண்டாங்கி சேலைகட்டி
கழுத்துநிறை நகைபோட்டு,
புஸ்ஸென்ற‌ ர‌விக்கையிலே
புன்ன‌கைக்கும் ந‌ம் பாட்டி !

கம்பீரம் குறையாத‌
கர்ஜிக்கும் சிங்கமென‌,
வெள்ளை உடுப்பினிலே
வீற்றிருக்கும் நம் தாத்தா !

காசி ராமேஸ்வரம்
கால்வலிக்க நடந்ததையும்,
கழுதைமேல் பயணித்து
பனிலிங்கம் பார்த்ததையும் !

ஒற்றைப் படத்தில்
ஓராயிரம் கதை படிக்க,
உற்று நோக்காமலே, மனதில்
ஒட்டிக் கொள்ளும் !

க‌ல்யாண‌ வைப‌வ‌ங்க‌ள்
புழுதிக் கை கால்கள்,
சின்னஞ் சிறுவயது
அப்பா அம்மாக்கள் !

அங்கொன்றும் இங்கொன்றும்
அளந்தெடுத்த படங்கள்,
இன்றும் நம்நெஞ்சில்
ஏகாந்த நினைவலைகள் !

படமெடுத்தால் ஆயுசு
பட்டென்று குறையுமென,
படப்பெட்டி முன்நிற்க
பயந்த கதை கேட்டிருப்போம் !

காலங்கள் உருள
நாகரீகம் வளர, வண்ணப்
படங்களுக்குக் குறைவில்லை
மனதில் இருத்த நேரமில்லை !

ஆயிரம் படங்கள்
அடுக்கடுக்கா எடுக்கின்றோம்,
அத்தனையும் மனதில் நிற்க
எத்தனை நாள் ஆகிடுமோ !

மார்ச் 12, 2009 யூத்ஃபுல் விகடனில்

16 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

\\ஒற்றைப் படத்தில்
ஓராயிரம் கதை படிக்க,
உற்று நோக்காமலே, மனதில்
ஒட்டிக் கொள்ளும் !\\

மிக சரியே

ஆதவாsaid...

எப்போமே பழசு பழசுதாங்க..

நல்லா இருகுங்க நினைவலைகள்.

ராமலக்ஷ்மிsaid...

//ஒற்றைப் படத்தில்
ஓராயிரம் கதை படிக்க,
உற்று நோக்காமலே, மனதில்
ஒட்டிக் கொள்ளும் !//

எத்தனை உண்மை? சொன்ன விதம் அருமை.

//ஆயிரம் படங்கள்
அடுக்கடுக்கா எடுக்கின்றோம்,
அத்தனையும் மனதில் நிற்க
எத்தனை நாள் ஆகிடுமோ !//

அழகாய் சொல்லி விட்டிருக்கிறீர்கள் சதங்கா. என்றைக்கும் கருப்பு வெள்ளைப் படங்கள் மனதை விட்டு நீங்காத காவியங்கள்தான்!

[பிட் போட்டிக்குப் புறப்படப் போவதும் இந்தப் படம்தானா?]

Muruganandan M.K.said...

"படமெடுத்தால் ஆயுசு
பட்டென்று குறையுமென,
படப்பெட்டி முன்நிற்க
பயந்த கதை கேட்டிருப்போம்"
நாங்களும் சிறுவயதில் இந்த மூட நம்பிக்கையை கேட்டிருக்கிறோம்.
நல்ல பதிவு.

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால்said...

//
\\ஒற்றைப் படத்தில்
ஓராயிரம் கதை படிக்க,
உற்று நோக்காமலே, மனதில்
ஒட்டிக் கொள்ளும் !\\

மிக சரியே
//

பதிவிட்டு, சில நொடிகளிலேயே, வழக்கம் போல உங்கள் பின்னூட்டம். ஆச்சரியப்படுத்துகிறீர்கள். கருத்துக்கு நன்றிங்க.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

அக்கால - கறுப்பு வெள்ளைப் படங்கள் - அரிய பொக்கிஷம் - காணக் கண் கோடி வேண்டும் - நினைத்து மகிழ மனம் வேண்டும் - கதை சொல்ல பெரியவர்கள் வேண்டும் - இத்தனையும் இருந்தால் இன்பமயமான சொர்க்கம் அதுதான்.

கவிதை அருமை அருமை - சொற்கள் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டிருக்கின்றன.

நல்வாழ்த்துகள் சதங்கா - பாட்டி தாத்தா விவரித்த விதம் நன்று

சதங்கா (Sathanga)said...

ஆதவாsaid...

//எப்போமே பழசு பழசுதாங்க..

நல்லா இருகுங்க நினைவலைகள்.//

மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மிsaid...

//அழகாய் சொல்லி விட்டிருக்கிறீர்கள் சதங்கா. என்றைக்கும் கருப்பு வெள்ளைப் படங்கள் மனதை விட்டு நீங்காத காவியங்கள்தான்! //

ஆமா. வழக்கம் போல ரசித்து பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.

//[பிட் போட்டிக்குப் புறப்படப் போவதும் இந்தப் படம்தானா?]//

எனக்கும் ஆசை தான். ஆனா முத்துக்குமார் கோச்சுகுவார்.

நாகு (Nagu)said...

சதங்கா சதங்காதான்...

கண்டாங்கில ஆரம்பிச்சி, பாட்டில போயி முடிச்சி பில்ட்- அப்'ப புஸ்ஸுனு ஆக்கிட்டீஹ..

Kavinayasaid...

எனக்கும் கருப்பு வெள்ளை படங்கள் ரொம்ப பிடிக்கும். அழகான கவிதை. விகடனிலும் பார்த்தேன். வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga)said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்said...

//"படமெடுத்தால் ஆயுசு
பட்டென்று குறையுமென,
படப்பெட்டி முன்நிற்க
பயந்த கதை கேட்டிருப்போம்"
நாங்களும் சிறுவயதில் இந்த மூட நம்பிக்கையை கேட்டிருக்கிறோம்.
நல்ல பதிவு.//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி டாக்டர்.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//கவிதை அருமை அருமை - சொற்கள் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டிருக்கின்றன.

நல்வாழ்த்துகள் சதங்கா - பாட்டி தாத்தா விவரித்த விதம் நன்று//

வாழ்த்துக்களுக்கும், வாசித்து, ரசித்து, கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க நன்றி.

தமிழ்said...

வாழ்த்துகள்

அருமையான வரிகள்

சதங்கா (Sathanga)said...

நாகு (Nagu) said...

//கண்டாங்கில ஆரம்பிச்சி, பாட்டில போயி முடிச்சி பில்ட்- அப்'ப புஸ்ஸுனு ஆக்கிட்டீஹ..//

உங்களுக்குப் பிடிக்காது தான். அதுக்காக ப்ளாக் அன்ட் வௌய்ட்ல இந்தகாலத்து பொண்ணுங்கள சொல்லமுடியுமா என்ன :)))

சதங்கா (Sathanga)said...

கவிநயா said...

//எனக்கும் கருப்பு வெள்ளை படங்கள் ரொம்ப பிடிக்கும். அழகான கவிதை. விகடனிலும் பார்த்தேன். வாழ்த்துகள்.//

கருப்பு வெள்ளை எண்ண ஓட்டங்கள், உங்களுக்கும் பிடித்ததிலும், விகடனில் பார்த்து வாழ்தியதற்கு மனம் கனிந்த நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர்said...

//வாழ்த்துகள்

அருமையான வரிகள்//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.

Post a Comment

Please share your thoughts, if you like this post !