Sunday, January 25, 2009

எங்கள் ஊர்ப் பொங்கல் விழா

சென்றவார இறுதியில் எங்க ஊரில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுவா நம் நாட்டில்/ஊர்களில் இது போல கலைநிகழ்ச்சிகள் வைப்பது இல்லை. பண்டிகை நாட்களே விழாக்கள் போல இருப்பதால் தானோ ?!!!

இதுபோல விழாக்கள் எடுத்து சிறப்பாக நடத்தும் தமிழ்சங்க குழுவினருக்கு முதற்கண் பாராட்டுக்கள் !!!

ரூத் பார்கர் நடுநிலைப் பள்ளியின் கேஃபடேரியா, பொங்கல் விழாக் களமாக மாறியது. மேடையில் சின்ன அலங்கரிப்பு. பொங்கல் பானை, கரும்பு, மாடு என கலக்கியிருந்தார்கள்.

பதினோறு மணிக்கு விழா ஆரம்பம் என்றால், வழ‌க்க‌ம் போல‌ ந‌ம்ம‌ ஆட்க‌ள் சாவ‌காச‌மாக‌வே வ‌ந்தார்க‌ள். எங்கே போனாலும் இந்திய முத்திரை ப‌திப்போம்ல‌ :))

மக்கள் ஒவ்வொருவராக, குடும்பமாக வந்து சேர, ச‌ள‌ச‌ள‌வென‌ ஒரே பேச்சுக் குர‌ல்க‌ள்.

பதினொன்று முதல் ஒரு மணி வரை மதிய உணவு. பின் ஒன்றிலிருந்து நான்கு வரை கலைநிகழ்ச்சிகள். முடிந்தவர்கள் ஏதாவது சமைத்து எடுத்து வரலாம் என்றிருந்தார்கள். இட்லி, பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ப்ரைட் ரைஸ், தயிர் சாதம், சட்னி, சாம்பார் என ஏகப்பட்ட வெரைட்டிகள். குட்டீஸுக்கு பீட்சா. பல வகை சோடாக்கள்.

உண்ட மயக்கத்தில் நாங்களெல்லாம் உரையாடிக் கொண்டிருக்க விழாத்த‌லைவ‌ர் பேச‌ ஆர‌ம்பித்தார், ம‌க்க‌ளும் பேச்சை நிறுத்துவ‌து போல் தெரிய‌வில்லை. அப்படி என்னத்த தான் சளசளனு பேசுவாங்களோ என நினைத்துக் கொண்டேன்.

க‌ரெக்டா ப‌தினோறு ம‌ணிக்கு போனாலும், ப‌ள்ளிக‌ளில் க‌டைசி பெஞ்ச் மாதிரி, இங்கும் க‌டைசி வ‌ரிசையில் ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து அம‌ர்ந்தோம். இரண்டு மூன்று குடும்பங்களாக அமர்ந்திருந்தோம்.

எங்களுடன் மேசையில் அமர்ந்திருந்தவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம். அட, மதுரைக்காரங்க .... அப்புறம் அவங்க சைடு தங்ஸும் எங்க தங்ஸும் நான்‍-ஸ்டாப். 'ச‌ள‌ச‌ள‌'விற்கு அர்த்த‌ம் புரிந்த‌து இப்போது :)))

நிறைய செய்திகள், படங்கள் சேகரித்து, பொங்கல் பற்றி ஒரு ஆவனப் படம் காட்டினார்கள். வெளிநாட்டினர் பார்த்து அறிந்து கொள்கிறார்களோ இல்லையோ, நம் அடுத்த சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் இது போன்ற காட்சிப் படைப்புக்கள்.



முத‌லில் குழ‌ந்தைக‌ள் மாறுவேட‌ நிக‌ழ்ச்சி. வ‌ரிசையா வ‌ர்றாங்க‌ ... ல‌ஷ்மி, ச‌ர‌ஸ்வ‌தி, பார‌தியார் என்று. வ‌ழ‌க்க‌ம்போல‌ தான் என்றாலும், குழ‌ந்தைக‌ள் என்றைக்கும் தெய்வ‌ங்க‌ள் தானே !



எங்க‌ளுட‌ன் மேசையில் இருந்த மதுரைக்கார ந‌ண்ப‌ர் 'குமரேஷ்' குழந்தைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வ‌ழங்கினார். "ஃபேய‌ட்வில், பென்ட‌ன்வில், ராஜ‌ர் ... போன்ற‌ ப‌தினெட்டுப் ப‌ட்டிக்குமான‌ நாட்டாமை வ‌ர்றார்" என்று அறிவித்த‌வுடன் அரங்கில் ஒரே க‌ர‌கோஷ‌ம். குட்டி நாட்டாமை வ‌ந்து க‌ல‌க்கிவிட்டார். அது வேறு யாருமல்ல, நண்பரின் மகன் தான்.

அடுத்து குட்டீஸின் டான்ஸ். நம் எதிர்பார்ப்பையும் மீறி அசத்திவிட்டனர். 'வில்லேய்ய் வில்லேய்ய்ய்'னு வந்து, குட்டி விஜய் மாதிரியே (அதே மானரிஸம்) ஆடி, பலத்த கரகோஷம் பெற்றான் சிறுவன் ஒருவன்.

ஆடலாகட்டும், பாடலாகட்டும் ... 'அவன மாதிரியே அசத்தறான் பையன் பாரு' என்று நாம சொல்வதற்கு, சினிமாக்காரர்களின் அவசியத்தை, இது போன்ற கலைநிகழ்சிகளில் உணரமுடிகிறது :)

அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை உயர் நிலைப் பள்ளி மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தொகுத்து வழங்கினர். நாம அடிக்கிறோமே ஏ-கலப்பையில், அது மாதிரி ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு, தமிழில் பேசினர். த‌மிழில் பேசிய‌த‌ற்காக‌ அவ‌ர்க‌ளைப் பாராட்டியே ஆக‌வேண்டும்.

கொஞ்சம் பெரிய பசங்க எல்லாம் கீ‍போர்ட், கிடாரில் நம்ம ஊரு திரைப்படப் பாடல்களை வாசித்தனர். பெரியவர்களின் பாடல்கள், நாடகம், பட்டிமன்றம் என வரிசை கட்டி நிற்பதாக‌ நண்பர்கள் சொன்னார்கள்.

நேரம் ஆக ஆக‌, நம்ம வீட்டு குட்டீஸ் பொறுமை இழக்க, அதனால் நாமும் பொறுமை இழக்கும் முன்னால், அங்கிருந்து வீட்டுக்குக் ஜூட்.

10 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

சீக்கிரம் ஜுட் உட்ட மாதிரி இருக்கு

ராமலக்ஷ்மிsaid...

//நம் அடுத்த சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் இது போன்ற காட்சிப் படைப்புக்கள்.//

காட்சிப் படைப்புகள் மட்டுமல்ல, இது போன்ற விழாக்களும்தான் இல்லையா?

//நாம அடிக்கிறோமே ஏ-கலப்பையில்,//

:)!

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால்said...

// சீக்கிரம் ஜுட் உட்ட மாதிரி இருக்கு//

உட்கார்ந்து பார்க்க ஆசை. அப்படினு சொல்லிக்கவேண்டியது தான் :))) 'பட்டிமன்றத்தில நீங்க அவசியம் பேசணும்', அப்படினு சொல்லிட்டாங்கனா, ரிஸ்க் இல்லியா, அதான் :)))

---

ராமலக்ஷ்மி said...

////நம் அடுத்த சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் இது போன்ற காட்சிப் படைப்புக்கள்.//

காட்சிப் படைப்புகள் மட்டுமல்ல, இது போன்ற விழாக்களும்தான் இல்லையா?//

நிச்சயமா. நாமாவது தாத்தா, பாட்டி கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டோம். இவங்களுக்கு எல்லாமே இனி டிஜிட்டல் தான் :)))

!!! ஓம் டிஜிடலாய நமஹா !!!

ராமலக்ஷ்மிsaid...

// //நாம அடிக்கிறோமே ஏ-கலப்பையில்,//

:)!//

பொங்கல் பதிவுக்குள் ஒருவாறாகக் கலப்பையை இழுத்து வந்து விட்டீர்கள்.
உழவருக்கு மரியாதை:)!

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மிsaid...

// // //நாம அடிக்கிறோமே ஏ-கலப்பையில்,//

:)!//

பொங்கல் பதிவுக்குள் ஒருவாறாகக் கலப்பையை இழுத்து வந்து விட்டீர்கள்.
உழவருக்கு மரியாதை:)!//

ஹையோ ... இயல்பாய் நடந்ததை, இன்புற எடுத்துக்காட்டி, அசத்திவிட்டீர்கள் :)))

'மனசுக்குள்ள இருக்க நெனப்புத் தானே வெளிய வரும்'னு சொன்னா, அதிகப்பிரசங்கித் தனம் ஆகிடுமோ ??? :))

ராமலக்ஷ்மிsaid...

அடடா, மேடையில் வைக்கப் பட்டிருந்த பானை கரும்பு மாடு ஆகியவற்றோடு வைத்து விட்டீர்கள் கலப்பையையும் என்கிற மாதிரிதான் சொல்ல வந்தேன்:(, நம்புங்க:)!

cheena (சீனா)said...

பட்டி மன்றத்தில் பேச சதங்காவிற்கு என்ன தயக்கம் ? தங்க்ஸ் அனுமதி கொடுக்கவில்லையா ? நல்லாருக்கு அமெரிக்கப் பொங்கல் விழா ....

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மிsaid...

// அடடா, மேடையில் வைக்கப் பட்டிருந்த பானை கரும்பு மாடு ஆகியவற்றோடு வைத்து விட்டீர்கள் கலப்பையையும் என்கிற மாதிரிதான் சொல்ல வந்தேன்:(, நம்புங்க:)!//

கூராக ஏரைக் கவனித்து
கருத்திட்டதற்கு ...

நம்பிட்டோம்ல :))))

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

// பட்டி மன்றத்தில் பேச சதங்காவிற்கு என்ன தயக்கம் ? தங்க்ஸ் அனுமதி கொடுக்கவில்லையா ? //

பாவம் தங்க்ஸ் ... நமக்கு சும்மாவே பேச வராது. பட்டிமன்றத்தில என்றால், காத்து தேன் வரும் :)))

குமரன் (Kumaran)said...

இப்போது பனி மழை எப்படி இருக்கிறது?

நேற்று தான் நண்பர் குமரேஷ் உங்கள் ஊர் பொங்கல் விழாவைப் பற்றியும் உங்கள் இடுகையைப் பற்றியும் சொன்னார். குமரேஷையும் நாட்டாமை வேதீஷையும் பார்த்து மகிழ்ந்தேன். :-)

Post a Comment

Please share your thoughts, if you like this post !