உலுக்கும் உறுமி மேளம்
கோவில் திருவிழாக்கள்
குலதெய்வ வழிபாடு,
எங்கிலும் ஒலித்தாலும்
இங்கு வலி(மை) அதிகம் !
உறுமல் ஒலி எழுப்பும்
இடிபடும் உறுமியோடு,
சுருண்டு படுத்துறங்கும்
இடுப்பில் கைக் குழந்தை.
தம் வாழ்வின் தேவைகளை
தலையில் வைத்த கனம்,
உற்றவன் பக்கம் வர
உறுமி அடித்திடுவாள்.
கூடும் கூட்டத்திலே
ஆட்டம் பாட்டமுண்டு,
சாட்டை சுழன்றாட
சதைகிழியும் காட்சியுண்டு.
கரணம் தப்பாது
மரணம் ஜெயித்து,
சாகசங்கள் பல புரியும்
யாசகம் வேண்டும் பிள்ளைகள்.
கோடிகளில் அடித்து
குளித்து மகிழ்பவரில், தெருக்
கோடியில் அடிபடும்
இவர்கள் மேல்.
அடிமேல் அடிவைக்க
அதிருது சதங்கை,
வேர்த்த உடம்பிலே
உதிருது உதிரம்.
உறுமி மேளச் சத்தம்
உலுக்கும் அடி வயிற்றை,
சேகரிக்கும் சில்லரைகள்
நிரப்பும் அவர் வயிற்றை.
வளைந்த குச்சியாய்
வாழ்வும் கேள்விக்குறி,
தொடரும் பயணத்தில்
தினமும் எழுப்பும் ஒலி.
என்றோ கேட்ட ஒலி
இன்றும் சுழல்கிறது,
அன்று பார்த்த வலி
இன்றும் (மனம்) கனக்கிறது.
14 மறுமொழி(கள்):
//"உலுக்கும் உறுமி மேளம்"//
ஆம் உலுக்கியேதான் விட்டது உங்கள் ’உறுமி மேளம்’.
//உறுமி மேளச் சத்தம்
உலுக்கும் அடி வயிற்றை,
சேகரிக்கும் சில்லறைகள்
நிரப்பும் அவர் வயிற்றை.//
வரிகள் உண்மையின் ஆழத்தில் அதிருகின்றன.
//வளைந்த குச்சியாய்
வாழ்வும் கேள்விக்குறி,//
உண்மைதான்:(!
உலுக்க மட்டுமல்ல மனதை உருகவும் வைத்து விட்டது.
வாழ்த்துக்கள் சதங்கா.
நல்ல கவிதை.. அடித்தள மக்களின் கஷ்டத்தை சொல்லுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..
//வேர்த்த உடம்பிலே
உதிருது உதிரம்.//
மிகவும் மனமுருக்கும் கவிதை.
நல்லா வந்திருக்கு சதங்கா
ராமலக்ஷ்மி said...
//உலுக்க மட்டுமல்ல மனதை உருகவும் வைத்து விட்டது.//
வரிகளின் ரசிப்புக்கும்
வலிகளின் உணர்வுக்கும்
நன்றிகள் பல.
கார்த்திகைப் பாண்டியன் said...
// அடித்தள மக்களின் கஷ்டத்தை சொல்லுகிறீர்கள்.. //
ஆமாங்க. இருபது ஆண்டுகள் முன் கண்களில் கண்டதை, கருத்தில் பதிந்து கொள்வோம் என்ற எண்ணம் தான். இந்த நிலை இன்றைக்கும் இருக்கிறது என்று பார்க்கும் போது வேதனையே !!!!
மின்னல் said...
//மிகவும் மனமுருக்கும் கவிதை.//
ஆமாங்க லாவண்யா. எப்பவோ பார்த்த காட்சிகள், இன்னிக்கும் கண் முன் நிற்கிறது !!!!
இதை நானும் கவனித்திருக்கிறேன் நண்பரே! அந்த வலியில்தான் அவர்களின் வாழ்க்கைக்கான வழி இருக்கிறது!! இதை கிராமிய, பாரம்பரிய கூத்துக்களாகச் சொன்னாலும், அவர்களின் பின்புலத்தைக் கவனிக்கையில் நம்மிடையே எழும் பரிதாபத்தையும், மனம் கனத்தலையும் தவிர்க்கமுடியாது!!!
சிறப்பான சமூக நோக்குள்ள கவிதை....
எனது ஓட்டு உண்டு!!!
ஆதவா said...
// அந்த வலியில்தான் அவர்களின் வாழ்க்கைக்கான வழி இருக்கிறது!! //
அருமையா சொல்லியிருக்கீங்க. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.
இன்றைய யூத்ஃபுல் விகடன்[http://youthful.vikatan.com/youth/index.asp] ‘குட் Blogs'-ல் இடம் பெற்றிருக்கிறது, இப்பதிவு. மகிழ்வாக உணர்கிறேன். தொடர்ந்து இது போன்ற நல்ல படைப்புகள் தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சதங்கா.
//வளைந்த குச்சியாய்
வாழ்வும் கேள்விக்குறி
//
சரியான வார்த்தைப் பிரயோகம்
மனம் அதிருகிறது உங்கள் உலுக்கும் கவிதையால்..
ராமலக்ஷ்மி said...
//இன்றைய யூத்ஃபுல் விகடன்[http://youthful.vikatan.com/youth/index.asp] ‘குட் Blogs'-ல் இடம் பெற்றிருக்கிறது, இப்பதிவு.//
அதை சரியாகக் கண்டு, மகிழ்ச்சியாக பின்னூட்டி, எங்களைவிட நீங்கள் சந்தோசம் அடைந்ததைப் பார்க்கிற போது ... வார்த்தைகள் வரவில்லை.
உலுக்கியது உறுமி மேளம்
சிலிர்த்தது சிந்தை - இதற்கு
நான் யாரைப் பார்த்து உறும?
Poornima Saravana kumar said...
//மனம் அதிருகிறது உங்கள் உலுக்கும் கவிதையால்..//
ஆமாங்க. உண்மை கண்ட போது இருந்த அதே மனநிலை பல ஆண்டுகள் ஆன பின்னும் உலுக்குகிறது நம்மை எல்லாம் !!!!
Post a Comment
Please share your thoughts, if you like this post !