தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்
ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிகழ்ச்சி பற்றி சில விமர்சனங்களும், எனது எண்ணங்களும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
"தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"
'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க.
"ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ, அல்லது ஒரு நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவோ பயன்படுகிறது" என ஸ்மார்டாக ஏதாவது சொல்வார்கள் என எதிர்பார்த்தால். ஜூஸ் கடையிலும், போக்குவரத்துப் போலீஸிடமும், கிராமத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பயன்படுகிறது என்று சொல்லி, யானை போல தம் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டனர்.
ஒரு ஆன்ட்டி சொன்னார், "இங்க்லீஷ் இஸ் எ வெப்பன். ஒரு போலீஸ்காரர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் என்னை நிறுத்தினால், வெப்பனைப் பயன்படுத்தி தப்பிப்பேன்" என்றார்.
அதற்கேற்ற ஒரு கேள்வியை அந்த ஆன்ட்டியிடம் கோபிநாத் கேட்க, அவர் முகத்தில் ஆங்கிலம்... மன்னிக்கவும், ஈ ஆடவில்லை :) 'நாங்களும் ரெவுடி தான்' மாதிரி இல்லாமல் ஒரு நிஜ ரவுடி இதே போல போலீஸிடம் மாட்டி, அவரது டீஃபால்ட் வெப்பன் அரிவாளைக் காண்பித்து எஸ் ஆகிறார் என்பது மாதிரி சொல்லி, "அவரும் நீங்களும் ஒன்றா ?" என்றார்.
"உங்களுக்கு என்னென்ன ஆங்கில வார்த்தைகள் கடினமாக இருந்தது ?" என்ற கேள்விக்கு, தமிழ் அணியினர் பலரும் தங்களுக்கு வராத வார்த்தைகளைக் கூற, எதிர் அணியில் ஆளாளுக்கு ஆங்கில வாத்தியார்கள் ஆகி, வாய்க்கு வந்த உச்சரிப்புகளை அள்ளித் தெளிக்க அரங்கமே காமெடி ஸீனாக ஆனது. இங்கு ஒரு கேள்வி நமக்கு எழுகிறது.
நமக்கென்று ஒரு ஆங்கில பாணி இருக்கிறதா ? நார்த் எல்லாம் போனால், ஹிந்தி பேசுகிறார்களா, ஆங்கிலம் பேசுகிறார்களா என்றே புரியாது பலநேரங்களில்.
ஒரு அம்மணி சொன்னார் "சென்னை அமெரிக்கனைஸ்ட் ஆகிட்டு இருக்கிறது" என்று. ஆனால் உச்சரிப்புகளை சொன்ன வாத்தியார்களிடம் அப்படி எதுவும் தென்படவில்லை. இங்கிலாந்து ஆங்கிலத்தையும், தமிழையும் (இவர்களின் இன்னொரு கூற்று: எதிர் அணியில், தமிழைக் கலந்து ஆங்கிலத்தை தமிழ் போலவே பேசுகிறார்கள் என்று), ஹிந்தியையும், இன்னபிற இந்திய மொழிகளையும் கலந்து பேசுவது போலவே இருந்தது எங்களுக்கு.
தமிழ் அணியில் இருந்து தடாலடியாக ஒருவர் புரியாத வார்தை ஒன்றை சொன்னார். இங்கு எழுதலாம் எனப்பார்த்தால், இப்பக்கூட நினைவில் இல்லையே.
வாத்தியார்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, 'போலீஸிடம் எஸ்ஸாவேன்' என்று சொன்ன ஆன்ட்டி, "அப்படி எல்லாம் வார்த்தை இல்லிங்க. பையன் தெரியாம வந்து உளர்றான்" என்று சொல்லி அரங்கத்தையே அதிரவைத்தார்.
பையன் ரூம் போட்டு டிக்ஸ்னரி புரட்டிருப்பாரு போல. உண்மையிலேயே அப்படி ஒரு வார்த்தை இருக்காம். அதற்கு அர்த்தம் இது தான் என்றெல்லாம் கெஸ்டாக வந்த நரசைய்யா சொல்ல, ஆங்கிலம் தடுமாறித் தான் போனது.
"சரி, நம்மூரில் ஆங்கிலத்தில் புகழ்பெற்ற ஐந்து எழுத்தாளர்களைச் சொல்ல முடியுமா ?" என்ற கேள்விக்கு, இப்படியா ஃபெவிக்கால் மௌத் ஆவார்கள். ஒருவர் கூட ஒரு எழுத்தாளரைக்கூட சொல்லவில்லை. அப்ப இவர்களின் ஆங்கிலம் "வீண் ஜம்பம்" தானா ?
பிறப்பால் தெலுங்கரான நரசைய்யா, அதிகம் எழுதுவது தமிழில். சமீபகாலமாகத் தான் சென்னையில் வசிக்கிறாராம். இவரின் இரண்டு வாக்கியங்கள் நினைவில் நிற்பவை.
1. Colonial left over: ரெண்டாயிரம் வருடம் நாம பண்ணாதத முன்னூறு வருடத்தில் பிரிட்டிஷ்காரன் செஞ்சுகொடுத்துட்டுப் போயிட்டான்.
2. Language is a vehicle: பயணிக்க தான் மொழி பயன்படனும். ஒரு இடத்திற்கு செல்ல பேருந்தில் பயணித்து, செல்லும் இடம் வந்தவுடன் இறங்கிக் கொள்ளணும். புடிச்சுத் தொங்காதீங்க....னு சொல்லாமச் சொல்லிட்டார் :)
உலகம் சுற்றி வந்த அவர் மேலும் சொன்னது, "ஆங்கில மோகம் அதிகம் இருக்கும் இடங்களில் தமிழகமும் ஒன்று" என்று. அப்ப, தமிழை அழிக்கிறோமா நாம் ? தமிழ் அழிந்துவிடுமே என ஆளும் அரசு ஆங்கிலத்திற்கு தான் தார் பூசுமா ?
நாம ஆங்கிலத்தை இந்த அளவிற்கு நேசித்தால், தமிழ் எப்பொழுதோ அழிந்து போயிருக்கணுமே ? வாழும் தமிழை வாழ வைப்பவர் தான் யார் ?
நிகழ்ச்சியின் மற்றொரு கெஸ்ட், "டால்டன்" என நினைக்கிறேன். வேற்று மாநிலத்துக்காரரான இவர், சென்னை வந்தபோது தமிழ் கற்றுகொள்ள ரொம்பவே ஆசைப்பட்டிருக்கிறார். "யூ நோ வேர் த லேங்குவேஜ் லிவ்ஸ் ?" என்று அவர் விவரித்த விதம் அருமையாக இருந்தது. ஆட்டோ ட்ரைவர்களிடமும், ரிக்ஷாகாரர்களிடமும் தேநீர் கடைகளில், பேப்பர் படிப்பது போல அமர்ந்து, தமிழ் படித்திருக்கிறார். வெவரமான ஆளு தான் :) வீட்டிற்கு வந்து "என்ன மச்சி", "போடீ" என்று தான் கற்றதை தன் மனைவியிடம் பயன்படுத்தியதையும் ரசிக்கும்படி சொன்னார்.
அரசியல் ஆதாயத்துக்காக ஹிந்தியை எதிர்த்தோம். தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் ஹிந்தி பேசுகிறார்கள். ஆனாலும் அவர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் தங்கள் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று தார் பூசினோம். ஆனால் இரு தமிழர்கள் பேசுவது ?