Tuesday, September 15, 2009

ஐ.டி. ப்ரோக்ராமரும் ~ படிக்காசுப் புலவரும் ...



ச‌மீப‌கால‌மாக‌ ஐ.டி.துறை ப‌ற்றி வ‌ருந்த‌த்த‌க்க‌ ப‌திவுக‌ள் வ‌‌ருகின்ற‌ன‌. 'பணம் அதிகமா சம்பாதிக்கிறாங்க' என்று பல வருடங்களாக குற்றசாட்டு. போக, 'ஒரு ப்ராஜ‌க்ட் எடுத்து, எப்ப‌டி எல்லாம் போக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள்' என்று ஒரு பதிவு ப‌டித்த‌ போது ம‌ன‌ம் வெம்பித் தான் போன‌து. என்ன‌ தான் க‌ட்டுரையாள‌ர் ந‌கைச்சுவை(க்காக) க‌ல‌ந்து எழுதியிருந்தாலும், ம‌றுபுற‌ம் ஐ.டி.ப‌ற்றி அவ‌தூறான‌ எண்ண‌த்தை ம‌க்க‌ளிட‌ம் விதைப்ப‌தாகவே ஆகிற‌து.

எந்த‌த் துறையில் இல்லை கேவ‌ல‌ம் ? ஐ.டி.யிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ இருக்க‌லாம். அதற்காக மொத்தத் துறையையும் எப்ப‌டி குறை சொல்ல‌லாம் ?

சினிமாத் துறையில் ரஜினி கோடிகளில் சம்பாதிக்கிறார் என்பதற்காக, கோடியில் நிற்கும் லைட்மேனைக் குறை சொல்லலாமா ? ஐ.டி.யும் அப்ப‌டித்தானே. எத்த‌னை பேரு ச‌ந்தோஷ‌மா வேலைக்கு போறாங்க தினமும் ? எத்த‌னை பேர் கோடிக‌ளில் புர‌ளுகிறார்க‌ள் ?

அப்ப‌டியே க்ளைய‌ண்ட்டை இழுத்த‌டித்து வேலை வாங்கினாலும், எத்த‌னை கால‌ம் சந்தையில் வியாபார‌ம் ப‌ண்ண‌முடியும் அந்த ஐ.டி. கம்பெனி ? இதென்ன‌ திருவிழா கால‌ங்க‌ளில் போட‌ப்ப‌டும் க‌டையா ? 'வந்தவரைக்கும் லாபம்' என ப‌த்துநாளில் ப‌ண‌த்தை வாரிகிட்டு பொட்டி க‌ட்டி கெள‌ம்ப‌ ?

'ப‌ட்ட‌ர் அடிச்சு ப்ரெட் சாப்பிடும் ஆட்க‌ள்' இருக்க‌த்தான் செய்கிறார்க‌ள். ஆனால், விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், ஆணிபுடுங்கி அசந்து கிடக்கும் ப்ரோக்ராமர்கள் தான் எங்கிலும் அதிக‌ம். ஊண் உற‌க்க‌ம் இன்றி வற்றிய க‌ன்ன‌ங்க‌ளுடன், பாவம் ஓயாது உழைக்கும் வ‌ர்க்க‌ம். 'நீங்க என்ன செஞ்சாலும் சரி, நாங்க உழைக்கத் தயார். எங்களை ஆன்ஷோர் அனுப்புங்க' என்று க்யூ கட்டி 'தவமாய் தவமிருக்கும்' செய்திகளும் ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் தெரிகிறோம்.

"என்ன‌ய்யா தூங்கி மூனு நாள் தானே ஆச்சு. 'மூ....னு நாள்'னு இழுக்கறே. என்ன மசமசனு நின்னுகிட்டு இருக்கே. போ, போ, போயி கோட் அடி" என்று துர‌த்தும் ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர் முத‌ல், "டெஸ்ட் கேஸ்ல‌ புள்ளி இருக்கு. ஆனா, டெஸ்ட் ரிச‌ல்ட்ல‌ புள்ளி இல்ல. ப‌ஃக் ஃபிக்ஸ் ப‌ண்ணு ராசா" என 'கோடில் புள்ளி' வைக்கும் டெஸ்ட‌ர் வ‌ரை, அவ‌ர்த‌ம் பாடு அட‌ அடா ....

ந‌ம்ம‌ ஊர்ல‌ சின்ன‌ச்சின்ன‌ அலுவ‌ல‌க‌ங்க‌ளில் பார்த்தால், அக்க‌வுண்ட‌ன்ட் என்று ஒருவ‌ர் இருப்பார், அவ‌ருக்குக் கீழே நாலைந்து பேர் இருப்பர். ஒருவ‌ர் லெட்ஜ‌ர் எழுதுவார், ஒருவ‌ர் பெட்டி கேஷ், ஒருவ‌ர் ஜெர்ன‌ல் என்ட்ரி, ஒருவ‌ர் பி.அன்ட்.எல். இப்ப‌டி ஒவ்வொருவ‌ரும் ஒரு வேலையைச் செய்வார்க‌ள். ஆனால் சின்ன ஐ.டி.க‌ம்பெனியிலோ, அத்த‌னையும் ஒருவ‌ர் தான். UNIX, Windows, Networking, Java, .Net, 4gl, Oracle, Informix, db2 ..... இப்ப‌டி அத்த‌னையும் சும்மாடு வைக்காம‌லேயே ஒருவ‌ர் த‌லையில் ஏறி, அவர் த‌லை கன‌‌க்கும். இதைத்தான் த‌லைக்க‌ன‌ம் என்று த‌வ‌றாக‌ப் புரிந்துகொண்டோமோ ?

ரெண்டு நாள் ட்ரெய்னிங், மூனு வார கோர்ஸ் என்று இப்படி ஆறுமாச‌த்துக்கு ஒரு த‌ர‌ம் அறிவை அப்டேட் ப‌ண்ணியே ஆக‌ணும். இல்லை எனில் 'சர்வைவ‌ல் ஆஃப் த‌ ஃபிட்ட‌ஸ்ட்' கேமில் கால் பதிக்கும் முன்னே க‌ரைந்து போகும் நிலை.

இப்ப‌டி இந்த‌க்கால‌த்தில் ஐ.டி. ப‌டித்துவிட்டு அல்லோலகல்லோலப்படும் ம‌க்க‌ள் போல‌ அந்த‌க்கால‌த்தில் த‌மிழ் ப‌டித்துவிட்டு த‌வித்திருக்கிறார்க‌ள் போல‌. த‌மிழால் பிர‌ப‌ல‌மடைந்தவர்கள் சிலர் தானோ ? (வள்ளுவருக்கே, மதுரை தமிழ் சங்கத்தில் ஔவை சிபாரிசு செய்தார் என்பதாகப் படிக்கின்றோம்). பலரது படைப்புகள் பலரைச் சென்றடையாமலும் போனதுவோ ? அவ‌ர்க‌ளில் சில‌ர் த‌ங்க‌ள‌து ஆற்றாமையை வெளிப்ப‌டுத்தியும் சென்றிருக்கிறார்க‌ள்.

த‌னிப்பாட‌லில் 'ப‌டிக்காசுப் புல‌வ‌ர்' இவ்வாறு புல‌ம்புகிறார்:

அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக்கல்வி
   அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக்கூத்தாடச்
   செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோமில்லைத்

தடமுலைவே சையராகப் பிறந்தோமில்லைச்
   சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் !
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை
   என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின்றோமோ ?


எந்த‌ அள‌விற்கு ப‌டித்துவிட்டோம் என நொந்திருக்கிறார் ம‌னுஷ‌ன். ப்ரோக்ராமர் மாதிரியே புலம்பியிருக்காருல்ல ?

ஏதாவது ஒரு இலக்கண முறைக்குட்பட்டு தான் இப்பாடல் எழுதியிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில பெயர்களை பயண்படுத்திக்கொள்கிறேன். தமிழார்வலர்கள் மன்னிக்க.

இதே புலவர் (ப்ரோக்ராமர்) 'நிலைமண்டில ஆசிரியப்பா'வில் (கணினி மொழிகள்) பாடல் (சுயபுராணம்) எழுதி மன்னரிடம் (கார்ப்பரேட் நேர்முகம்) பரிசில் (வேலை) பெறச் சென்றால், அங்கே இருக்கும் மந்திரி (ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்) "எண்சீர் விருத்தத்தில் இல்லையா ?" (வேறு கணினி மொழிகள்) என்பார்.

"இது நிலைம‌ண்டில‌ ஆசிரிய‌ப்பானு எப்ப‌டிச் சொல்கிறீர்க‌ள் ?" என்று குறுக்கு விசார‌ணை செய்வார் ந‌க்கீர‌ன் (டெக் லீட்).

"எங்கள் மன்னவரின் ஆட்சி பற்றி (கம்பெனி பற்றி) ஒரு பாடல் பாடுங்கள் (என்ன நினைக்கிறீர்கள் ?)" என்பார் அரசியார் (ஹெச்.ஆர்)

பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் விளக்கி, நஞ்சு தொஞ்சு (நாலைந்து நேர்முகங்கள்), கடைசியில் அரசி கிட்ட பேரம் பேசி தான் பரிசில் பெறமுடியும்.

இப்படி பீஸ் பீஸா பிஞ்ச பஞ்சுகளை லூஸ்ல விடுங்க பாஸ் :)))

2 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

மொத்த துறையையும் குற்றம் சொல்லும் பாங்கை நிறுத்தவே முடியாதுதான் போல. எல்லாத் துறைகளிலும் போலவே இருக்கக் கூடிய மைனஸ்கள் சந்தோஷமாய் பூதக் கண்ணாடிகள் கொண்டு பார்க்கப் படுகின்றன. உங்கள் ஆதங்கத்தை அழகாய் வடித்து, வைத்தும் இருக்கிறீர்கள் முத்தாய்ப்பாய் ஒரு கோரிக்கை! பார்க்கலாம் செவிமடுக்கிறார்களா என்று:)!

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//மொத்த துறையையும் குற்றம் சொல்லும் பாங்கை நிறுத்தவே முடியாதுதான் போல. //

ஆம் நடைமுறை வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

//எல்லாத் துறைகளிலும் போலவே இருக்கக் கூடிய மைனஸ்கள் சந்தோஷமாய் பூதக் கண்ணாடிகள் கொண்டு பார்க்கப் படுகின்றன.//

அருமையான வரிகள்.

// உங்கள் ஆதங்கத்தை அழகாய் வடித்து, வைத்தும் இருக்கிறீர்கள் முத்தாய்ப்பாய் ஒரு கோரிக்கை! பார்க்கலாம் செவிமடுக்கிறார்களா என்று:)!//

அவதூறுகள் முழுவதும் குறையுமா எனத் தெரியவில்லை. குறைந்தால் அதுவே ஆனந்தமே.

Post a Comment

Please share your thoughts, if you like this post !