Friday, September 18, 2009

சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள் vs. அயர்ன் செஃப் அமெரிக்கா



vs.



The Battle begins ...

நீங்க சாப்பாட்டுப் பிரியரா (ராமர் இல்லை) ? 'ஃபுட் நெட்வொர்க்' ரசிகரா ? அப்ப, உங்களுக்கு நிச்சயம் 'அயர்ன் செஃப் அமெரிக்கா' நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும். அல்லது நண்பர்களோ, உறவினர்களோ இந்நிகழ்ச்சி பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்.

நிகழ்ச்சியின் அந்த ஒரு மணி நேரமும், நம் காலில் சக்கரம் கட்டாத குறை தான். படம் பிடிக்கும் கேமிராக்களுக்கே பசி எடுக்கும் போல ! அப்பப்ப 'க்ளோஸ் அப்'பில் சென்றுவிடும். சமையல் செய்பவர், அவர் தம் கூட்டாளிகள், நடுவர்கள், தள மேலாளர்கள் இப்படி எல்லோரும் சமையல் சார்ந்து இருக்க, நிகழ்ச்சியின் சேர்மன் மட்டும் சற்று வித்தியாசமான களத்தில் இருந்து வந்திருக்கிறார்.

மார்க் டகாஸ்கோஸ் (MARK DACASCOS), பேருக்கேத்த மாதிரி ஏதோ டகால்டி செய்கிற மாதிரி தான் இருக்கு அவரது என்ட்ரி. ஆனா, ஆளு பலே ஆளாம். அதாங்க பலசாலி ! அடிப்படையில் குங்ஃபூ (குஷ்பூனு நீங்க படிச்சா நான் பொறுப்பு கிடையாது :)) மாஸ்டராம்.


Photo Credit: foodnetwork.com

அப்படியே ஒரு பத்தாயிரம் மைல் பயணித்து நம்ம ஊருக்குப் போனால், சட்டு புட்டுனு செட்டுப் போட்டு ஒரு பேரும் வச்சிட்டாங்க 'சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள்'னு.

நம்ம ஊருக்கேத்த மாதிரி கொஞ்சம் (நிறையவேயா ? சரி !) மாற்றி, இந்நிகழ்ச்சியை தமிழ்படுத்தித் தருகிறார்கள் விஜய் டி.வி.யில்.

அங்கே மார்க்கஸ் 'சம்மர் சால்ட்' அடித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, இங்கே 'கேட் வாக்'கில் பிரியதர்ஷினி அக்காவும், தேவதர்ஷினி அக்காவும் ஸ்டைலா நடந்து வந்து கடைய நடத்துறாங்க.

புதிய சமையல்காரர் ஏற்கனவே இருக்கும் 'அயர்ன் செஃப்' நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க, அவர்கள் இருவரின் அறிமுகத்திற்குப்பின், 'உங்களின் ஒரு மணி நேரம் ஆரம்பிக்கிறது, உங்களுக்கான சீக்ரெட் இன்கிரீடியன்ட் இஸ்'னு குங்ஃபூ ஸ்டைலில் பறந்து வானளவு மூடி திறக்கிறார்.

மட்டை அடித்து முட்டி வலிக்கிற மாதிரி தரையில் அமர்ந்திருக்கும் பிரியதர்ஷினி அக்காவைத் தலையில் தட்டி, 'ஏய் எழுந்திருடி, கமர்ஷியல் முடிஞ்சு காமெரா ஸ்டார்ட் ஆகிடுச்சு பாரு' என்று அதட்டுகிறார் தேவதர்ஷினி. அரக்கபரக்க இருவரும் டீம் ஏ, டீம் பி பற்றி உரையாற்றி விட்டு, 'உங்கள் அரை மணி நேரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அஞ்சு நிமிஷம் டைம் தர்றோம், அதுக்கும் முன் உங்க சீக்ரெட் இன்க்ரீடியன்ட் இஸ்'னு இட்லி சட்டி மூடி போல் இருக்கும் ஒன்றைத் திறக்கிறார்கள்.

ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு கோழியோ, பன்றியோ, ச்சீஸோ, மீனோ, ஏதோ ஒன்று குவிந்து கிடக்கிறது. கையில் அகப்பட்டதை அள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கும் சமையல்காரர்கள்.

'டீம் ஏ'வும் 'பி'யும் திருதிரு என்று விழிக்கிறார்கள் திறந்த மூடி கண்டு. உள்ளே என்ன இருக்கு ? எங்கே இருக்கு ? என்பது போல ஏதோ இருக்க. 'ஹையா சிக்கன்' என்று பள்ளிச்சிறுமிகள் போல பூரிக்கும் அக்காக்கள்.

முட்டை ஒரு பக்கம் உடைத்து, ச்சீஸ் ஒரு பக்கம் துருவி, அவனில் ஒரு பக்கம், ப்லெண்டரில் கொஞ்ச நேரம், கூட்டாளிகளுக்கு அவ்வப்போது கட்டளைகள் என்று செய்தித்தாள் அலுவலகம் போன்றதொரு பரபரப்பில் சமையல் வல்லுநர்கள். தள மேலாளர் கேட்கும் சமையல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு, சமையலில் பரபரப்பாகவும், மைக்கில் நிதானமாகவும், சுவையாகவும் பேசி சுழலுன்றபடி இருக்கிறார்கள்.

முதல் ஐந்து நிமிடத்தில் ஆர அமர, லிஸ்ட் போட்டு தேவையான சாமான்கள் அள்ளி வந்து, அலுக்காமல் சமைக்கும் செலிபிரிட்டீக்கள் (??) நடிகையாக இருந்தால், முடியை பின் தள்ளி விடுவதும், உடையை சரி செய்வதிலும், அக்காக்கள் கேட்கும் சினிமா கேள்விகளுக்கு அள்ளித் தெளிக்கும் அட்டகாசங்களும். அவர்கள் அம்மாவோ, அக்காவோ, நண்பியோ தேமே என சமைத்துக் கொண்டிருப்பார். செலிபிரிட்டாவாக ('டி' க்கு ஆப்போஸிட் 'டா' தானே ?) இருந்தால், எங்கவீட்டில் சமையல்கட்டு எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாது என்று சொல்லி வெகு அழகாகக் காய் அறிந்து கொடுப்பார் துணைவிக்கு.

கமர்ஷியல்ஸ் அதிகம் தான். இருப்பினும் சமையலில் யாரும் குறுக்கே புகுந்து எதையும் குதறுவது இல்லை.

நடுவால 'செஃப் ஸ்பெஷல்', 'நொடியில் ரெடி'னு புதுமை(யா ?) பண்ணியிருக்காங்க. 'சிரிப்பு போலீஸ்' மாதிரி ஒரு 'சிரிப்பு செஃப்'. ஏதோ ட்ராமாவில் இருந்து இழுத்து வந்தவர் போலவே இருக்கும் அவர் நடையும் உடையும். அள்ளிப்போட்டு சமைப்பதும், அதற்கோர் பேர் சொல்வதும், ஏதோ சின்னபுள்ளத்தனமா தான் இருக்கும்.

நாலைந்து டிஷ்கள் செய்து, வேர்த்து விறுவிறுத்து, ப்ளேட்டிங்க் செய்து, ஒரு மணி நேரத்திற்குப்பின், பவ்வியமாக பறிமாறும் போது தான் அப்பாடா என்று நிற்கிறார்கள் சமையல்காரர்கள்.

ஓடி ஆடி சமைத்த களைப்பில் தனி அறையில் ஜாலியா உட்கார்ந்திருக்காங்க இங்க. அவர்களை விடாது, 'சொல்லுங்க நீங்க டென்ஷனா தான இருக்கீங்க ?, ப்ளீஸ் சொல்லுங்க, டென்ஷனா இருக்கேன்னாவது சொல்லுங்க ப்ளீஸ்' என்று கெஞ்சும் ப்ரியதர்ஷினி.

சமையல்காரர் ஒவ்வொரு உணவாக சிறு குறிப்பு தந்து பாறிமாற, தாங்கள் ரசித்து ருசிக்கும் அனுபவங்களை, உணவு போலவே புட்டுப் புட்டு வைக்கின்றனர் நடுவர்கள். தலையாட்டிக் கேட்டுக் கொள்கின்றனர் சமையல்காரர்கள்.

தேவதர்ஷினி அக்கா சொல்ல சொல்ல, ஒரு சின்ன ஸ்பூன் எடுத்து, அதிலும் நுனியில், 'டீம் ஏ'யின் உணவு கொஞ்சம் எடுத்து, லைட்டா சரக்கு அடிக்கும்போது ஊறுகாய் தொட்டுக்கற மாதிரி சாப்பிடுகிறார் நம்ம ஊர் (செஃப்) நடுவர். நம்ம ஊரு டச் கொடுக்கலேன்னா எப்படி ? அந்த ஸ்பூனை அங்கிருக்கும் ஒரு கண்ணாடி டம்ளர் நீரில், அப்படி ஒரு சுழற்று சுழற்றி விட்டு, 'டீம் பி' உணவை மேற்சொன்னது போலவே சுவைக்கிறார்.

'அன்ட் த வின்னர் இஸ்'னு மார்க்கஸ் கதற, நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.

அதே 'அன்ட் த வின்னர் இஸ்'னு தேவதர்ஷினி அக்கா சொல்ல, அதே நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.

நொடியில் ரெடி மாதிரி இதுல ஏதாவது புதுமை பண்ணியிருக்கலாமே ?!

"நான் நல்லாத் தான் சமைத்தேன். இதுல காரம் இவ்வளவு தான் போடணும். அந்த டிஷ் நார்த்ல இப்படித் தான் பண்ணுவாங்க. குழந்தைகள் உணவுங்கறதால ஸ்பைஸஸ் கம்மியாத் தான் போடணும். தெரியாமச் சொல்றாரு."

இதெல்லாம் நம் நடுவர் குறித்து ரன்னர் அப் டீமின் கருத்துக்கள். சமீபத்தில் ஒரு மாமி, 'எந்த அடிப்படையில் எங்க உணவைத் தேர்ந்தெடுக்கலே'னு கேட்டு ஒரு நிமிடம் நடுவரை கிலிபிடிக்க வைத்துவிட்டார்.

'செய்வன திருந்தச் செய்'னு சொல்லியிருப்பதை சினிமாக்காரர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர் :))

---

இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. முழுக்க நகைச்சுவைக்காவே.

8 மறுமொழி(கள்):

Meena Sankaransaid...

சூப்பர் சதங்கா. ரொம்ப சுவையா விவரித்திருக்கீங்க இந்த விஜய் டிவி நிகழ்ச்சியை. இதுவரைக்கும் பார்த்தே இல்லாத போதும் கால் நீட்டி உக்காந்து பார்த்து சிரிச்சா மாதிரி ஒரு உணர்வு இப்போது.

ராமலக்ஷ்மிsaid...

இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிற பொறுமையே இருப்பதில்லை. இதைப் படித்தபின், நீங்கள் எழுதியிருப்பதை நினைத்துப் பார்த்து சிரிக்கவாவது ஒரு தடவை பார்த்து விடுகிறேன்:)!

வல்லிசிம்ஹன்said...

கிச்சன் கில்லாடிகள் பார்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை சதங்கா. ரொம்ப செயற்கையா இருக்கும். ஆனால் நீங்க இந்த மாதிரி தொடர் எழுதலாம். :))

மாதேவிsaid...

நன்கு ரசித்து சிரிக்கக் கூடியதாக எழுதியுள்ளீர்கள்.

பார்ப்பதற்கு பொறுமை நிறைய வேண்டும் போல் இருக்கிறதே.

சதங்கா (Sathanga)said...

Meenakshi Sankaran said...

//சூப்பர் சதங்கா. ரொம்ப சுவையா விவரித்திருக்கீங்க இந்த விஜய் டிவி நிகழ்ச்சியை. இதுவரைக்கும் பார்த்தே இல்லாத போதும் கால் நீட்டி உக்காந்து பார்த்து சிரிச்சா மாதிரி ஒரு உணர்வு இப்போது.//

மனதை நிறைக்கும் மகிழ்ச்சி தரும் வரிகள். நமக்கு இன்டர்நேஷன்ல் சேனல் ஒன்று விஜய் அல்லது சன் டிவி. பின்னது ஏற்கனவே பார்த்து பயந்துட்டதால, விஜய்க்கு மாறினோம். இதில் நிகழ்சிகள் கொஞ்சம் காமெடியா இருக்கதால தொடருகிறோம் :)

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிற பொறுமையே இருப்பதில்லை. இதைப் படித்தபின், நீங்கள் எழுதியிருப்பதை நினைத்துப் பார்த்து சிரிக்கவாவது ஒரு தடவை பார்த்து விடுகிறேன்:)!//

பொறுமை வ‌ள‌ர்த்துக்க‌ற‌துக்காக‌வே நான் பார்க்க‌ ஆர‌ம்பிச்சுருக்கேன் :)) ப‌ல‌ நேர‌ங்க‌ளில் வாய்விட்டு சிரித்து ம‌கிழ‌லாம் நிகழ்ச்சி நடத்துபவர்களின் செயல்களால். நிச்ச‌ய‌ம் பாருங்க‌ :))

சதங்கா (Sathanga)said...

வல்லிசிம்ஹன் said...

//கிச்சன் கில்லாடிகள் பார்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை சதங்கா. //

சும்மா ஜாலிக்கு பார்க்கலாம் :))

//ரொம்ப செயற்கையா இருக்கும். //

அதென்னவோ உண்மை.

//ஆனால் நீங்க இந்த மாதிரி தொடர் எழுதலாம். :))//

ஹா ஹா. செய்யறேன்.

சதங்கா (Sathanga)said...

மாதேவிsaid...

//நன்கு ரசித்து சிரிக்கக் கூடியதாக எழுதியுள்ளீர்கள். //

மிக்க நன்றிங்க.

//பார்ப்பதற்கு பொறுமை நிறைய வேண்டும் போல் இருக்கிறதே.//

பொறுமையா இருக்க கத்துக்கணும் என்றாலும் பார்க்கலாம் (என்னைப் போல) :)))

Post a Comment

Please share your thoughts, if you like this post !