Thursday, April 24, 2008

கிராமத்து மீசை


Photo Courtesy: ta.wikipedia.org

முகவாயின் மேலிருந்து
அருவியெனச் சரிந்து
ஆறாய் ஓடும் மீசை.

உருளும் ஐயனாரின்
விழியென விரிந்து
மிரட்டும் முரட்டு மீசை.

முத்தமிடும் சிறுபிள்ளை
குத்துதெனச் சத்தமிடும்
முள்ளுக் கம்பி மீசை.

விரலால் திருகி ஏற்றி,
கடு கடுக் கண்ணோடு
கம்பீரம் காட்டும்‌ மீசை.

கருப்பு வெள்ளைப் புற்க‌ளாய்
காது ம‌ட‌ல் தொட்டிடும்
கூர் அரிவாள் மீசை.

அண்டை அசலார்
கொண்ட பயம் கண்டு
கர்வம் கொள் மீசை.

வெடித்த பருத்தியென
படர்ந்து பொதிந்திருக்கும்
புசுபுசு வெள்ளை மீசை.

உதட்டின் ஈரம் காக்க‌
வேய்ந்த கூரை யென‌
சரிந்து நிற்கும் மீசை.

துன்பம் வரும் நேரத்திலும்
துவளாத மனம் கொண்டு
தளரா திருக்கும் மீசை.

செயல் ஒன்றைச் சாதிக்க‌,
புறங்கை வருடி
பெருமை கொள் மீசை.

பலரின் பெயராய்
பரிகசித்தோ, பாசத்தோடோ
அழைக்கப் படும் மீசை !

ஏப்ரல் 04, 2009 யூத்ஃபுல் விகடனில்

8 மறுமொழி(கள்):

வல்லிசிம்ஹன்said...

மீசையும் நல்லா இருக்கு.
பாட்டும் நல்லா இருக்கு.
உதட்டின் ஈரம் காக்க
வேய்ந்த கூரையா!!!
இப்படி ஒரு பிரயோசனம் இருக்கா:))

நாகு (Nagu)said...

அருமை...

என்னைக் கவர்ந்த வரிகள்:

//முகவாயின் மேலிருந்து
அருவியெனச் சரிந்து
ஆறாய் ஓடும் மீசை.//


நிஜமாலுமே ரூம் போட்டுதான் யோசிக்கிறீங்க...

//வெடித்த பருத்தியென
படர்ந்து பொதிந்திருக்கும்
புசுபுசு வெள்ளை மீசை.
//

ஊரில் நிறைய பேரை ஞாபகத்துக்கு கொண்டுவருது இந்த வரிகள்.


//உதட்டின் ஈரம் காக்க‌
வேய்ந்த கூரை யென‌
சரிந்து நிற்கும் மீசை.//

கண்டிப்பா ரூம்தான் :-)


//பலரின் பெயராய்
பரிகசித்தோ, பாசத்தோடோ
அழைக்கப் படும் மீசை !//

என் அப்பாதான் ஞாபகத்துக்கு வருகிறார். கொஞ்சம் பெரிய மீசை இருக்கிறவர்களுக்கு எல்லாம் பெயர் 'மீசைக்காரர்'. நாங்கள் தெருப்பெயரை சேர்த்துக்க சொல்லி கிண்டல் செய்வோம்.

கவிநயாsaid...

////வெடித்த பருத்தியென
படர்ந்து பொதிந்திருக்கும்
புசுபுசு வெள்ளை மீசை.
//

நல்லாருக்கு சதங்கா. உங்களோட பாடுபொருளெல்லாம் பார்த்தா, நாகு சொல்றாப்ல ரூம் போட்டுதான் யோசிப்பீங்க போல :)

சதங்கா (Sathanga)said...

டீச்சர்,

//மீசையும் நல்லா இருக்கு.
பாட்டும் நல்லா இருக்கு.
//

பாராட்டுக்கு மிக்க நன்றி.

//உதட்டின் ஈரம் காக்க
வேய்ந்த கூரையா!!!
இப்படி ஒரு பிரயோசனம் இருக்கா:))//

உங்கள் ரசிப்புக்கு நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

நாகு,

வரிக்கு வரி நீங்கள் ரசித்த விதம் குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் தந்தையின் ஞாபகம் வந்ததாகச் சொன்னது இந்தக் கவிதைக்கு கிடைத்த வெற்றியாய் நான் எடுத்துக் கொள்கிறேன் :)

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//நல்லாருக்கு சதங்கா. உங்களோட பாடுபொருளெல்லாம் பார்த்தா, நாகு சொல்றாப்ல ரூம் போட்டுதான் யோசிப்பீங்க போல :)//

மிக்க நன்றி. ரூம் எல்லாம் இல்லைங்க. அடுத்து என்ன பதியலாம் என்ற உந்துதல் தான். மனதின் ஆழத்தில் எங்கேயாவது, எப்போதாவது (வி)தைத்த ஒன்றின் வெளிப்பாடு தான் :) இவை எல்லாம் !

பித்தன் பெருமான்said...

சதங்கா,

என்னது இது 'ஒரு சில வார்த்தை, நல்லதா சொல்லிட்டுப் போங்க' ன்னு எழுதிட்டீங்க. நாங்க நல்லதா மட்டும்தான் சொல்லனுமா. அப்படியே இருந்தாலும், மீசை சூப்பர்தான். அதிலும் கமலின் படமும் கலக்கல்.

/முத்தமிடும் சிறுபிள்ளை
குத்துதெனச் சத்தமிடும்
முள்ளுக் கம்பி மீசை./

இந்த வரிகளைப் படிக்கும் போது இந்தியன் படத்தில் தந்தை கமல் மகன் கமலைக் கொலை செய்ய எத்தனிக்கும் போது, மனீஷா கொய்ராலாவிடம் இதே காரணத்தை சொல்லுவார், அன்னிக்கு மகனுக்காக மீசையை இழந்த நான், இன்னிக்கு அவனையே இழக்க தயார்ன்னு சொல்லுவார், அது அப்படியே கண் முன் வந்தது.

நமது 23ம் புலிகேசியின் மீசையை விட்டு விட்டீர்களே.

இரு புறமும் பூவோடு
வான் நோக்கி மிடுக்கோடு
கூரான சிரிப்பு மீசை

இது எப்படி இருக்கு? நல்லா வேணும், ஒழுங்கா எனக்கு கவிதை எழுத க்ளாஸ் எடுக்கலை இல்ல அதுக்குதான் இது.

ரசிக்கும் படியான பதிவு.

பித்தன்.

சதங்கா (Sathanga)said...

பித்தன்,

//அப்படியே இருந்தாலும், மீசை சூப்பர்தான். அதிலும் கமலின் படமும் கலக்கல்.
//

மிக்க நன்றி.

//இரு புறமும் பூவோடு
வான் நோக்கி மிடுக்கோடு
கூரான சிரிப்பு மீசை//

இவ்வளவு அட்டகாசமா எழுதற உங்களுக்கு எப்படி வகுப்பு எடுக்க முடியும் ?!!! சூப்பரா எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் !

Post a Comment

Please share your thoughts, if you like this post !