Saturday, November 24, 2007

பதநீர் குடிக்க வாரீயளா ?


Image Courtesy pbase.com

காலை வேளையிலே
கால் கடுக்க நடக்குமவள்

மனச்சுமை கீழிறக்க
தலைச் சுமை ஏற்றிடுவாள்.

பனையில் கள்ளிறக்கி
சுண்ணாம்பு சிறிது சேர்த்து

வெள்ளை நிறத்துக்
கள்ளினைத் திரிக்க

பானையில் அதைக்கலக்கி
வீதிமுனை வந்து நிற்பாள்.

பனைஓலை தனைக்குவித்து
முனை மடக்கிக் குழியாக்கி

ஆழாக்கு எடுத்தே
ஆள் ஆளுக்கு அளந்திடுவாள்.

இருகைப் பிடித்து
இமை மூடிப் பருகிட

தேனான பதநீர்
தித்திப்பாய் உள் இறங்கும்.

தெவிட்டாத நீரதனால், பதநீர்
நம் உடலுக்கு என்றும் இதநீர் !

-----

பதநீர் குடிப்பது போல படம் போடலாம் என்று, வழக்கம் போல கூகிளாரிடம் முறையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் பனை ஓலை :))

Tuesday, November 20, 2007

இலையுதிர் காலம்



பூ மாறி ! பொழியும்
பலவண்ண இலைப்படுகை

இங்கும் அங்குமாய் ஆடி
இறகெனப் பறந்து

பூமிதனில் படர்ந்து விழும்
மனம்பரப்பா மலர்த்தூவல்.

மஞ்சளாகி, சிவப்புமாகி, சருகாகி
மறைகின்ற பசுமை.

உதிரும் இலைகளில்
உயிர் தான் இருக்குமோ ?

உறைபனி வருமுன்
உடை களையுதே மரம் !

ஆடை களைந்தே மொட்டையாய்
வாடையில் வாடுமே !

சிலிர்க்காமல் உதிர்த்து
சில்லென்ற குளிர்தாங்கி

இளந்தளிர் துளிர்க்கக் காத்திருந்து
எத்துன்பமும் தாங்கிடுமோ ?

பச்சிலைப் படரலை எண்ணி
புத்துயிர்தான் கொள்ளுமோ !

Thursday, November 15, 2007

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு



அமெரிக்கால பொறந்தாலும்
ஆப்பிரிக்கால பொறந்தாலும்,

விடுப்பு எடுக்கையில
ஓடிப்போய் கிராமத்தில்,

ஊருசனம் பார்த்துபுட்டு
உறவுகளைச் சேர்த்துக்கிட்டு,

காரு, வேன்எடுத்து
கல்லுமுள்ளுப் பாதைதாண்டி,

சென்று சேருமிடம்
குலதெய்வச் சாமிகோவில்.

மண்குதிரை அணிவகுக்க
மலைக்கும் வரவேற்பு,

மஞ்சள் ஆடைஅணிந்த
மரக்கிளைகள் ஏராளம்.

படர்ந்த மரநிழலில்
உதறிப் பாய்விரித்து,

சின்னஞ்சிறு கதைகள்
சிரிப்புக் கும்மாளங்களில்,

சிலுசிலுக்கும் மரஇலைகள்
படபடக்கும் பட்சினங்கள்.

சண்டைகொண்டு விளையாடும்
சளைக்காத சிறுவர்கூட்டம்.

பொங்கலிட்டுக் குலவையிட
சங்கமிக்கும் பெண்டிர்.

சந்தனம் பொட்டிட்டு
விழிதெரியும் குலதெய்வம்.

உறவுகள் கூடிநிற்க
படபடப்பு ஆரம்பம் ...

மாமன் மடிஅமர்த்தி
மருளும் குழந்தைக்கு,

முடியிறக்கிக் காதுகுத்த
விக்கி விக்கிஅழும்.

தேம்பி அழும்செல்லம்
தேற்றிட திராணியற்று,

பெற்றோர் மருகியதில்
உற்றார் உருகிடுவர்.

இன்றுவரை நடைமுறை,
நாளை எப்படியோ ?

Wednesday, November 14, 2007

மயில் - குழந்தைகள் கவிதை


Image Credit: Andrew Rader Studios/Biology4Kids.com

அழகுக் கொண்டை மயில்
பளபளக்கும் கண்ணு மயில்

நீளக் கழுத்து மயில்
நீண்ட தோகை மயில்

கொத்தி உண்ணும் மயில்
கத்தி உலாவும் மயில்

தத்தி நடக்கும் மயில்
தாவிப் பறக்கும் மயில் !

-----

நண்பர் ஜீவா வெங்கட்ராமன் அவர்கள் பின்னூட்டத்தில் இட்ட கவிதை. அருமையாய் எழுதியிருக்கிறார்.



நீல நிற மயிலே
நீள தோகை மயிலே

அகவல் ஓசை கேட்க
அசைந்து ஆடி வந்தேன்

தாவி தாவி வந்து
தோகை விரித்து ஆடு

மேகம் கறுத்து வருது
மேனி சிலிர்த்து ஆடு

ஆடும் அழகில் மழையோ?
மழை அழகில் ஆட்டமோ?

மழையில் நனைய வேண்டாம்
மறைய இங்கே வந்திடு.

Friday, November 9, 2007

புகைப் படப் போட்டி - November-07 - 2

இதுவும் post-production செய்யப்பட்டது. வார நாட்களில், தினமும் காலையில் இந்த சாலையில் பயணிக்காமல் இருக்க முடிவதில்லை. புரிஞ்சு போச்சா உங்களுக்கு. அதே தாங்க, அலுவலகத்திற்கு செல்லும் சாலை.



இப்படி இருந்தது முன்னர்

புகைப் படப் போட்டி - November-07 - 1

நீங்க சாலை என்று தலைப்புக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள், ஆள் நடமாட்டமில்லாத சாலைகளைத் தேடுவது அறிதாக ஆகிவிட்டது. இந்த முறை கொஞ்சம் post-production செய்து களம் இறங்கியிருக்கிறேன்.

இது போட்டிக்கான முதல் படம். இங்கே ரிச்மண்டில் உள்ள ஜேம்ஸ் நதி ஓடும் இடம். குறிப்பா இந்த இடத்தை Bells Isle / Browns Isle என்று அழைக்கிறார்கள். வலதுபுறம் கீழே நதி ஓட்டத்தைப் பாருங்கள். அடிச்சிபிடிச்சு சண்டை கொள்ளும் நண்பர்களோ, காதலர்களோ, குடும்பத்தார்களோ ... இங்கு ஒரு நடை போனால், மனது இலகுவாகுவது நிச்சயம்.



இப்படி இருந்தது முன்னர்

Tuesday, November 6, 2007

குறுகும் உண்மைகளும் தழைக்கும் பொய்களும்



உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இது தான்டா,

உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரி தான்டா,

தெள்ளத் தெளிவாத் தன்பாட்டிலே சொன்னான்
பட்டுக் கோட்டை யடா,

கள்ளம் கபடம் எங்கு தேடினும்
வெள்ளைப் பொய் களடா,

கிள்ளப் படாக்கொடி முளைவிட்டு கிளைவிட்டு
காடாய்ப் போகு மடா,

துள்ளத் துடிப்பாய் அதைச்சீர் செய்தாலே
சிறு தோட்டமாய் ஆகுமடா,

பள்ளத்தில் விழும்நீர் நாளொரு வடிவம்
பெற்றே மறையு மடா,

உள்ளத்தில் எழும்சொல் வேகமாய் இருந்தால்
வெள்ளமாய் மாறு மடா,

தள்ளப் பார்க்கும் உலகை நினைத்தால்
வேதனை பொங்கு தடா,

அள்ளக் குறையா உண்மை உரைத்தால்
வாழ்வு கடலாய் நிலையுமடா.

Monday, November 5, 2007

வாஷிங்டன் வீதி உலா

சில வாரங்கள் முன்பு பயணம் சென்ற இடம், உலகப் புகழ் பெற்ற அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன். செல்வதற்கு முன்னால் சில நண்பர்களிடம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தபோது, அனைவரும் சொன்னது இது தான். என்ன இதப் போய் இவ்ளோ டீட்டெய்லா கேக்கறீங்க. இணையத்தில கிடைக்காத தகவல்களா என்றனர்.

சரி, ஏகப்பட்ட இணைய தளங்கள், ஏகப்பட்ட தகவல்கள். முக்கியமான இடங்கள சுருக்கா ஒரு நாள்ல சுத்திப் பாக்கற மாதிரி எப்படித் தகவல் சேகரிக்கிறது. யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் விபரமாச் சொன்னார். அதன்படி சென்று முக்கியமான இடங்களை ஒரு நாளில் பார்த்து, நான் பார்த்ததை எளிமையான கவிதை வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதையில் ஆங்காங்கே அடைப்புக்களில் இட்ட எண்களுக்கான படங்கள் பதிவின் கீழே.

-----

தலைநகர் வாஷிங்டன்
அடைந்த வேளையிலே

விரைந்து செல்லமுடியாமல்
வீதிமுழுதும் வாகனங்கள்

யூனியன் ரயில்நிலையம்
உள்ளே மேல்தளம்

வாகனத்தை நிறுத்த
வழிதேடி, பின்நிறுத்தி

விமான நிலையமென
வியப்பளித்த அதனைவிட்டு

வெளியேறி, தெருவை
வேகமாய்க் கடக்கையில்

கண்ணில் எதிரே, தி
கேபிடோல் ஹவுஸ் (1)

மரங்களின் ஊடே
தெரியுது அழகாய்.

அங்கிருந்து சிலதூரம்
அதன்பின் செல்லுகையில்

கண்கவர் கலை, அறிவியல்
வான்வெளி, இயற்கையென (2)

வழிநெடுகிலும் கூடங்கள்
வேண்டியன பார்த்தபின்

வானளாவி உயர்ந்த
வாஷிங்டன் மானுமென்ட்

ஐம்பது கொடிகள்
அதனைச் சுற்றி (3)

ஐம்பது மாநிலம்
அரசைச் சுற்றி

உலகப் போர்
நினைவுத் திடல் (4)

பிரதிபலிக்கும் ஏரியில்
லிங்கனின் நினைவுக்கூடம்

அதன் பிம்பம்
அதில் மிதந்து

மனதை இலகுவாக்கும்
மந்தாரக் காட்சி (5)

எதிரில்வந்து சிலதூரம்
தெருக்கடைகள் பலகடந்து

தூண்களென அணிவகுக்கும்
வானுயர்ந்த கட்டிடங்கள்

துப்பாக்கி ஏந்திய
தற்காப்புக் காவலர்கள்

இதோ அருகினில்
இருக்குது இங்கே (சத்தமின்றி !)

அனைவரும் அறிந்த
வெள்ளை மாளிகை (6)

அதன் எதிரே,
எதன் விளம்பரம் ? (7)

நின் தைரியம்
வந்தனை செய்து

ரயில் பிடித்தேன்
ரயில்நிலையம் செல்ல !

-----

படங்கள் :

படம் 1: தி கேபிடோல் ஹவுஸ்


படம் 2: இயற்கை கலைக்கூடம்


படம் 3: வாஷிங்டன் மானுமென்ட்


படம் 4: உலகப்போர் நினைவுத்திடல்


படம் 5: லிங்கன் நினைவுக்கூடம்


படம் 6: வெள்ளை மாளிகை


படம் 7: விளம்பரம்