பதநீர் குடிக்க வாரீயளா ?
காலை வேளையிலே
கால் கடுக்க நடக்குமவள்
மனச்சுமை கீழிறக்க
தலைச் சுமை ஏற்றிடுவாள்.
பனையில் கள்ளிறக்கி
சுண்ணாம்பு சிறிது சேர்த்து
வெள்ளை நிறத்துக்
கள்ளினைத் திரிக்க
பானையில் அதைக்கலக்கி
வீதிமுனை வந்து நிற்பாள்.
பனைஓலை தனைக்குவித்து
முனை மடக்கிக் குழியாக்கி
ஆழாக்கு எடுத்தே
ஆள் ஆளுக்கு அளந்திடுவாள்.
இருகைப் பிடித்து
இமை மூடிப் பருகிட
தேனான பதநீர்
தித்திப்பாய் உள் இறங்கும்.
தெவிட்டாத நீரதனால், பதநீர்
நம் உடலுக்கு என்றும் இதநீர் !
-----
பதநீர் குடிப்பது போல படம் போடலாம் என்று, வழக்கம் போல கூகிளாரிடம் முறையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் பனை ஓலை :))