Monday, August 24, 2009

யு.எஸ். சாலையில் புதிதாய் வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ?


Photo Credit: www.textually.org

யு.எஸ். சாலையில் புதிதாய் வாகனம் ஓட்டுபவரா நீங்கள் ?

உங்களுக்காக சில டிப்ஸ் ...

'ஆளில்லாத ஹைவே. ஹையா ஜாலி'னு மிதி மிதினு மிதிச்சிறாதீங்க. இப்படித்தான் ஒரு ராத்திரி எங்க மாப்பு ஒருத்தருக்கு காப்பு வச்சாரு ஆப்பு. எங்கேயோ ஊர் சுத்திட்டு வ‌ந்திருக்காப்ல‌. ரோட்டுல‌ ஒரு ப‌ய‌ புள்ள, ம‌ன்னிக்க‌வும் காரு வேனு இல்ல‌. பகலில் கூட்டத்திலேயே ஓட்டி பழகினவர். இப்ப‌டி ஒரு சான்ஸ் இனி கிடைக்குமானு மிதிச்ச‌வரு தான். 'பதுங்கி இருந்துட்டு எங்குட்டு கூடி வ‌ந்தான்னே தெரிய‌ல‌ மாப்ள‌. ஓங்கு தாங்கா வ‌ந்து சீட்டுக் கொடுத்திட்டு போயிட்டான் !' என்று இன்றும் புல‌ம்புவார். (புலி ப‌துங்குவ‌து பயத்தினால் அல்ல‌ !)

"நான் இன்டியால‌யே காரு ஓட்டிருக்கேனாக்கும் !" என்று செஸ்ட்பீட் ப‌ண்ற‌ குரூப்பு தான் நிறைய‌ சாலை விதிக‌ளை புற‌க்கணிக்கின்ற‌னராம். விளைவு ப‌க்க‌த்தில் வ‌ருப‌வ‌ரை ஆலிவ்ம‌ர‌த்தில் (இங்க எங்க இருக்கு புளியமரம் :)) மோத‌வைத்துவிட்டு தேமே என‌ விழிப்ப‌து. இந்த‌ அல‌ப்ப‌ரைக‌ளுக்கு ந‌டுவில், 'டேய் அப்ப‌ப்ப‌ ரைட் ஹேன்ட் ட்ரைவிங்னு ஞாப‌க‌ப்ப‌டுத்திக்கிட்டே இரு'னு ந‌ம‌க்கு இன்ஸ்ட்ர‌க்ஷ‌ன் வேற. அருகில் அமர்ந்து வரும் நமக்கு இதக் கேட்டு தூக்கி வாரிப் போட்டாலும், வேற வழி இல்ல. என்ன தான் ஸீட்பெல்ட் போட்டிருந்தாலும் கேரண்டி கிடையாது :) (நிறைகுடம் தழும்பும் !)

ஸ்டாப் சைன் பார்த்தா, 'க‌ம்ப்ளீட் ஸ்டாப்'ன்ற‌த 'ஸ்டாப் ப‌ண்ண‌து போதும் கெள‌ம்புனு' த‌ப்பா புரிஞ்சிகிட்டு அழுத்தி என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் போல‌ மாட்டிக்காதீங்க‌. ப‌ச‌ங்க‌ளுக்கு ஏதோ க்ளாசுக்கு நேர‌ம் ஆச்சு. தென‌ம் பாக்குற‌ ஸ்டாப் சைன் தான‌. ஸ்டாப் பண்ணதெல்லாம் போதும் என்று ஒரு நாள் அழுத்தியிருக்கார் ம‌னுஷ‌ன். 'எத்த‌ன பேருடா கெள‌ம்பிருக்கீங்க‌ ?'ங்க‌ற‌ மாதிரி காருக்குப் பின்னாடியே ஒளிவ‌ட்ட‌ம். கட்டு மஸ்தா வந்த காவலர் கிட்ட, பிள்ளைக‌ளைக் காட்டி பாவ்லா காண்பித்தால் விட்டுருவாருனு நென‌ச்சு, ஸ்கூல் பைய‌னாட்ட‌ம் கெஞ்ச‌... "நான் கூட‌ வார்ன் ப‌ண்ணி அனுப்ப‌லாம்னு நென‌ச்சு தான் வ‌ந்தேன். பசங்கள வைத்துக் கொண்டே இப்படிப் போறியா, 'இந்தா பிடி' என்று சீட்டுக் கிழிக்க‌, கோர்ட் வ‌ரை சென்று வ‌ந்தார் ந‌ண்ப‌ர். (யானைக்கும் அடி ச‌றுக்கும் !)

இந்த‌ வெள்ளைக்கார‌ய்ங்க‌ளுக்கு இன்னும் ந‌ம்ம‌ள‌ப் ப‌த்தி நிறைய விசயங்கள் புதிராவே இருக்கு ! அதில‌ ஒன்னு தான் "இந்த‌ ட்ரைவிங் ஸ்கூல்" ப‌க்க‌ம் போகாம‌லேயே வ‌ண்டி ஓட்டி லைசென்ஸ் வாங்க‌ற‌து. அதுக்கு ஏக‌ப்ப‌ட்ட‌ கார‌ண‌ங்க‌ள் இருக்க‌லாம். என் ந‌ண்ப‌ர் ஒருவருக்கு அமைந்த நிக‌ழ்ச்சி, இன்னிக்கு நினைத்தாலும் சிரிப்பு தாங்க‌முடியாது. நீங்க‌ளும் கேளுங்க‌. 'ந‌ம்மால் ந‌ம்ம‌ பொண்டாட்டிக்கு ட்ரைவிங் சொல்லித் த‌ர‌முடியாது. வீட்டுல‌ க‌த்துற‌து ப‌த்தாதுனு ரோட்டுல‌யும் க‌த்து வாங்கி மான‌ம் போற‌துக்கு, ட்ரைவிங் ஸ்கூல் பெட்டர்'னு சேர்த்திருக்காரு. அம்ம‌ணி ந‌ல்லா ட்ரைவிங் எல்லாம் முடிச்சு, முதல் டேக்கிலேயே லைசென்ஸ்ஸும் வாங்கிட்டாங்க‌. குஷியில 'ப்ரீவேல‌ தான் முத‌லில் ஓட்டுவேன்'னு அட‌ம்பிடிச்சு போயிருக்காங்க‌. ம‌ந்திரிச்சு விட்ட‌ கோழியாட்ட‌ம் ந‌ம்ம‌ ஆளு ப‌க்க‌த்தில‌ உக்கார்ந்திருக்காரு. என்ன‌து ரொம்ப நேரமா ஒரு வ‌ண்டிய‌கூட‌ பின்னாடி காணோம்னு பார்த்தா, எதிர்க்க‌ தூர‌த்தில் வ‌ண்டிக‌ள். அப்ப‌தான் புரிஞ்சிருக்கு, ராங் வேயில் ஃப்ரீவே எடுத்திருக்கிறார்க‌ள் என‌. அம்மணி கொஞ்சம் கூட அசந்த மாதிரி தெரியல. ந‌ம்ம‌ ஆள‌ பார்த்து, யோவ் என்ன‌ கிலி பிடிச்ச‌ மாதிரி இருக்க, உன்கிட்ட இருக்க ப்ரேக்க‌ அமுக்குய்யானு அத‌ட்ட‌ல் (ட்ரைவிங் ஸ்கூல் கார் நினைப்பிலேயே) வேற :))) ஒரு வழியா அந்த‌க் குடும்ப‌ம் பொழ‌ச்சு வ‌ந்த‌தே பெரிய‌ விச‌ய‌ம். (நாங்களும் ட்ரைவர் தேன் !)

வீட்டுக்காரர் மாதிரியோ, நண்பர்கள் மாதிரியோ ஓட்டி ஒரு காம்ப்ளக்ஸ்குள்ள போயி அப்படியே முதல்வரிசையில் சருக்கென்று பார்க் பண்ணி மாட்டிக் கொள்ளாதீர்கள். என் நண்பரின் மனைவி ஒருவர், இப்படித் தான் போயி மாட்டிக்கிட்டு, காரை ரிவர்ஸ் எடுத்து பின்னங்காரில் இடித்து, அச்சச்சோ போச்சே என சுழற்றி பக்கத்துக் காரையும் பதம் பார்த்து, பதறி அடித்து ஒடித்ததில், மின்கம்பத்தில் மோதி என ஒரு சில நொடிக்களுக்குள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டார். அதனால், காத தூரம் நடந்தாலும் பரவாயில்லை, ஒரு கார் கூட கிட்ட வராத, யாருமில்லாத எல்லையில் பார்க்கிங்கை ஆரம்பியுங்கள். (பார்க்கிங் படுத்தும் பாடு !)

சில நேரம் ஆளில்லாத சிங்கில் லேன் ரோட்டில் கூட, நாப்பத்தி அஞ்சு லிமிட் என்றால் நாற்பதில் நமக்கு முன் சென்று, நம் பொறுமையை சோதிப்பர் சில முதியோர். செம டென்சனாகி, திட்டி கொட்டி, ஏதாவது டாட்டட் லைனில் அவர்களைக் கடந்து செல்லும்போது தான் தெரியும், 'அச்சோ பாட்டீ ! கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே. இவங்களப் போயி திட்டிட்டோமே' என்று. இந்தப் பொறுமை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னு தான். டி.வி.சீரியல் பார்க்க (இதுவரைக்கும் பழக்கம் இல்லை என்றாலும் கூட) கத்துக்கங்க. தினம் ஒரு சில மணி நேரங்கள் பயிற்சி எடுத்தால், எந்த யோகா க்ளாஸுக்கும் போக வேண்டாம். உங்களைப் போல சாது எவரும் இருக்கமுடியாது. (சர்வம் சீரியலார்ப்பணம் !)

'எதுக்கும் ஒரு ஆறு மாசத்துக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் கொஞ்சம் அதிகமாவே எடுத்துக்குங்க. தெனாவெட்டா இருந்திறாதீங்கப்பூ.' நான் ட்ரைவிங் கத்துக்கும்போது ட்ரைவர் சொன்ன வாசகங்கள். ஒரு கதையும் சொன்னார் அவர். நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார், அதில் இது கொஞ்சம் சுவாரஸ்யமானது. நம்ம ஊரு ஆளு ஒருத்தர் மனைவி இவரிடம் தான் ட்ரைவிங் கற்றிருக்கிறார். தம்பதியர் வசிப்பதோ கிராமம் போன்ற பகுதி. என்ன வந்திரப்போகுது என இன்ஸூரன்ஸில் மனைவியின் பெயரை சேர்ப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் செய்திருக்கிறார் கணவர். சொல்லி வைத்தது போல ஒரு நாள் ஒரு திருப்பத்தில் ஒரு காரை இடித்துவிட்டார் அம்மணி. காரை ஓட்டி வந்தது ஆறடிக்கும் மேல பீன்ஸ் கொடி போல நெடு நெடுனு இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். நம்ம ஊரு சினிமா வில்லன் பானியில, 'போலீஸுக்கு போனா, கோர்ட் கேஸுனு அலைக்கழிச்சிருவாய்ங்க. நமக்குள்ள டீல் பண்ணிகிட்டா உனக்கு தான் நல்லது. அப்புறம் உன் இஷ்டம்' என்றெல்லாம் டயலாக் சொல்லி, முடிந்த வரைக்கும் இரண்டாயிரம் டாலர் வரை கறந்து சென்றாராம். அவர் கிட்டயும் இன்ஸுரன்ஸ் இல்லை என்பது தனி கதையாம். (கிராமமானாலும் இன்ஸூரன்ஸ் வேண்டும் !)

நீங்க என்ன தான் காரியத்தில் கண்ணனாகவோ,கண்ணகியாகவோ இருந்தாலும் சில நேரம் சில காட்சிகள் தவிர்க்கமுடியாததாகிவிடும். இப்படித்தான் ஒரு வெள்ளைக்காரம்மா மேக்கப் போட்டுக்கிடே வண்டி ஓட்ட, 'இதென்ன கொடுமை சரவணா'னு பராக் பார்த்த ஒருத்தர் ரோட்ட விட்டு பள்ளத்தில் இறங்கி, தேங்கிய நீரில் படகு சவாரி செய்தார். மேக்கப் அம்மணியோ அசராது தொடர்ந்து கொண்டிருந்தார். (ஆரியக் கூத்தாடினாலும் ...)

ஃப்ரீவேயில் போகும் போது, புயலாய் பறக்கும் கறுப்புக் குதிரைகளைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் புண்ணியம் கிட்டவில்லை எனில் கிழக்கு மாகான‌ங்களுக்குப் போகவும். அப்படி சர்ரு சர்ருனு லேன் மாத்தி மாத்தி, ஓவர் டேக் என்ன ஓவர் டேக், அதுக்கு மேல டேக் எல்லாம் எடுத்து பின்னிப் பெடலெடுக்குங்க. அதைப் பார்த்து உற்சாகமாகி நீங்களும் ஆரம்பித்தால் அதோ கதி தான். தாவாங்கட்டையில் கைய வச்சு 'ட்ரிப்பிள் ஏ' கூப்பிட்டுக் காத்திருக்கணும். (முடியுது ஓட்டறா ! நமக்கேன் ?)

பைக்காரர்களைக் கண்டால் சகலபுலண்களையும் திறந்து வையுங்கள். சமயத்தில் பைத்தியக்காரர்களாக்கிவிடுவார்கள் நம்மை. ஹாய்னு அவங்களப் பார்த்துப் பரவசமாகியோ, இல்ல அங்க தான வர்றான், அதற்குள் நாம வளைந்து நெளிந்து லேன் மாறி போய்விடுவோம் என்று யோசித்தாலோ ஃபன் அவனுக்கு மட்டும் இல்ல நமக்கும் தான் :) (உருவத்தைப் பார்த்து எடை போடாதே !)

இன்னும் 'யீல்ட் ஆன் க்ரீன்' கதை எல்லாம் இருக்கு. அனுமார் வால் போல் பதிவு நீள்வதால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

14 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

யூ - எஸ்

நட்புடன் ஜமால்said...

மீ - எஸ்ஸு

சிவக்குமரன்said...

சுவாரசியம்

Vinosaid...

pls continue looking for subsequent posts.. needless to say m a new driver . :D

துளசி கோபால்said...

ஹைய்யோ ஹைய்யோ.....
அடைப்புக்குள்ளில்தான் எல்லாமே இருக்கு. பொன் மொழின்னா இது:-)))

ஒன்னு ரெண்டு எழுத்துப்பிழையை ஓவர்டேக்..... இல்லை ஓவர்லுக் பண்ணிட்டேன்;-)

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால் said...

//யூ - எஸ்

மீ - எஸ்ஸு
//

இதுக்கு போயி எது எஸ்ஸாயிகிட்டு. புகுந்து புறப்படாமல் ... :))

சதங்கா (Sathanga)said...

இரா.சிவக்குமரன் said...

//சுவாரசியம்//

ரசிப்புக்கும் மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

Vino said...

//pls continue looking for subsequent posts.. needless to say m a new driver . :D//

நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுகிறேன். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

//ஹைய்யோ ஹைய்யோ.....
அடைப்புக்குள்ளில்தான் எல்லாமே இருக்கு. பொன் மொழின்னா இது:-)))//

ஹையா ஜாலி
! ஜாலி !!

//ஒன்னு ரெண்டு எழுத்துப்பிழையை ஓவர்டேக்..... இல்லை ஓவர்லுக் பண்ணிட்டேன்;-)//

அப்பாடா நல்ல எஸ்கேப் டீச்சர் கிட்ட இருந்து :)))

Meena Sankaransaid...

அடைப்புக்குள்ள இருக்கும் உங்க அனுபவ பொன்மொழிகள் ஆனாலும் ரொம்பவே தான் அசத்துது.

Anonymoussaid...

என்னோட அனுபவங்கள் எல்லாத்தையும் சொன்ன மாதிரி இருந்துது. பஞ்ச் வரிகள் சூப்பர்.

சதங்கா (Sathanga)said...

Meenakshi Sankaran said...

//அடைப்புக்குள்ள இருக்கும் உங்க அனுபவ பொன்மொழிகள் ஆனாலும் ரொம்பவே தான் அசத்துது.//

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

சின்ன அம்மிணிsaid...

//என்னோட அனுபவங்கள் எல்லாத்தையும் சொன்ன மாதிரி இருந்துது. பஞ்ச் வரிகள் சூப்பர்.
//

ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க. நலம் தானே ? உங்கள் அனுபவப் பகிர்வுக்கும், ரசிப்புக்கும் நன்றிங்க.

நாகு (Nagu)said...

படத்துக்காக பதிவா? :-)

Post a Comment

Please share your thoughts, if you like this post !