Thursday, January 8, 2009

அஞ்சறைப் பெட்டியும் எம்மா பாட்டியும்



காலையில் கண் விழித்ததும், ஸ்டேசிக்கு நினைவுக்கு வந்தது மகனின் குரல்.

"அம்மா, இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த செமஸ்டருக்கான ஒரு பகுதி தொகையான பத்தாயிரம் டாலர் கட்ட வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் என் படிப்பு பாதியில் நின்று விடும் !!!"

இது ஸ்டேசிக்கும் தெரியாமலில்லை. "கல்லூரிக் கடன் எடுத்து படிக்க வை, அப்ப தான் இந்தக் கால பிள்ளைகளுக்கு பொறுப்பு வரும் ...". அக்கம் பக்கம் குடியிருப்போர் ஸ்டேசிக்கு சொல்லாமலும் இல்லை.

ஜேசனுடன் வாழ்ந்த வரையில் இது பற்றி கொஞ்சம் கூட யோசிக்க வில்லை ஸ்டேசி. நல்ல வேலை, இரு சம்பளங்கள், வீடு, கார்(கள்) எனத் துளியும் கவலை இன்றி சென்றன நாட்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் புரிந்து கொள்ளலில் இடைவெளி அதிகமாக, முறைப்படி பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. வீட்டை விற்று, அபார்ட்மென்ட் குடியேறி, வேலை பிடிக்காம‌ல் வேறு அலுவ‌ல‌க‌ம் மாறி, புதுக் கார்க‌ளை விற்று ... என்று ச‌ரிவில் ப‌ய‌ணித்த‌ ஸ்டேஸிக்கு ஒரே ஆறுத‌ல் ம‌க‌னின் ப‌ட்ட‌ப்ப‌டிப்பு.

அதுக்கும் இப்பொழுது முற்று புள்ளி வந்து விடுமோ என, தனித்து வாழும் வாழ்வைக் காட்டிலும், பயத்தை பன்மடங்கு அதிகரித்தது.

வீட்டை விற்று, கார்களை விற்று, எல்லாம் வக்கீல்களுக்கும், விவாகரத்துக்குமே செலவான நிலையில், கடன் அட்டைகளும் ‍ பணமாய் எடுத்தால் பல் இளிக்கும் வட்டி விகிதமும், மனதைப் பிசைத்தது.

தலைவலிப்பது போல் இருக்க, இரவு சாப்பிடாமல் படுத்ததும் நினைவுக்கு வந்தது. பல் துலக்கி, ஏதாவது சாப்பிடலாம் என ஓட்ஸ் டப்பாவை எடுத்துக் கொண்டு சுடுநீர் வைத்தாள் ஸ்டேசி.

-----

எம்மா பாட்டியின் சகோதரி எலிசபெத் பாட்டி. ஒரு நாள் எலீசா அதிகாலையே வந்து, எம்மாவின் வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். "நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எல்லா இடத்திலயும் பண முடக்கமா இருக்குதே. பெரிய பெரிய கம்பெனி எல்லாம் கூட‌ திவாலாகிட்டு இருக்கு. அரசாங்கம் வேற பில்லியன் கணக்கில் உதவி பண்றதா சொல்றாங்க‌." என பணத்தைப் பற்றியே அவர்கள் பேச்சு முழுதும் இருந்தது அன்று.

"ஓய்வுகால நிதி, மற்றும் வங்கிகளில் உள்ள சேமிப்புகள் எல்லாம் அப்பப்ப சரிபார்த்துக்க. நடக்க முடியல, வண்டி ஓட்ட முடியல என்று சாக்கெல்லாம் சொல்லாதே. ரொம்ப முடியவில்லை என்றால் என்னைக் கூப்பிடு, நான் வந்து மாதத்துக்கு இரண்டொரு முறை உன்னை அழைத்துப் போகிறேன்" என்றார் எலீசா பாட்டி தன் தமக்கையிடம்.

"ஹாய் எலீசா, ந‌லமா ?" என்ற‌வாரே வீட்டிற்குள் நுழைந்தார் ஸ்காட். க‌டைக்குச் சென்று வ‌ந்திருக்கிறார் என‌ அவ‌ர் கைக‌ளில் இருந்த‌ ப்ளாஸ்டிக் பைக‌ளே சொல்லிய‌து.

"சில பொருட்க‌ளை திருப்பி அனுப்ப‌, த‌னியே வைத்திருந்தேன். அவ‌ற்றையும் க‌டையில் கொடுத்துவிட்டீர்க‌ளா ஸ்காட் ?" என்று கேட்டார் எம்மா.

"நீ சொல்லி நான் செய்யாம‌ல் இருந்திருப்பேனா, இந்த‌ நாற்ப‌து ஆண்டு கால‌ வாழ்வில் ... நேற்றே திருப்பிவிட்டேன் அனைத்தையும்" என்று, மூக்குக் கண்ணாடியை சற்று கீழிறக்கி, மெலிதாய் சிரித்தார் எலீசாவைப் பார்த்து.

"கடவுளின் அன்பு உங்கள் இருவருக்கும் என்னிக்கும் இருக்கணும்" என்று வாழ்த்தி, "சரி நான் போய்ட்டு இன்னொரு நாள் வர்றேன்" என்று எழுந்தார் எலீசா.

"ஏதாவது சாப்பிட்டு போ" என்ற தமக்கைக்கு, சரி, என்று அம‌ர்ந்தார்.

"அட்டைப் பெட்டி உண‌வு தான், ச‌ரியா ?!!!" என்று கேட்ட‌வாறு ச‌மைய‌ல‌றையில், உண‌வ‌க‌ அல‌மாறிக் க‌த‌வைத் திற‌ந்த‌வ‌ருக்கு ச‌ட்டென‌ நினைவுக்கு வ‌ந்த‌து ஒரு விஷ‌ய‌ம். அதிர்ச்சியில் ம‌ய‌ங்கி விழுந்தார்.

-----

புதிய டப்பாவைப் பிரித்து, முதலில் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் போட்டுக் கொண்டவள், மூன்றாவது ஸ்பூன் எடுக்கையில் ஏதோ உள்ளே கெட்டியாக தட்டுப் பட்டது. ஓட்ஸ் கெட்டுவிட்டதா, என டப்பாவைத் திருப்பிப் பார்த்து இன்னும் நாட்கள் இருப்பதை உறுதி செய்து கொண்டாள் ஸ்டேசி.

நன்றாக குலுக்கி, சாய்த்துப் பார்க்கையில் கத்தையாக பேப்பர்கள். கைவிட்டு வெளியில் எடுத்தாள். அத்தனையும் மொட மொட வென நூறு டாலர் சலவைத் தாள்கள். நூறு நூறாய் ஐந்து கட்டுக்கள். அதிர்ச்சியில் மயங்கி விழாத குறையில் ஸ்டேசி இருந்தாள்.

'கடவுளே வந்து நம் கண்ணை திறந்து விட்டாரா ?!!! இல்லை, இது என் பணம் இல்லை. உரியவரிடம் சேர்க்கவேண்டும். இந்த பணத்திற்கு அவர் எவ்வளவு பாடு பட்டிருப்பார்.' என்று ஓட்ஸ் வாங்கிய கடையை தொலைபேசியில் அழைத்தாள்.

"அப்ப‌டியா, ஒரு நிமிட‌ம் இருங்க‌ ... அந்த‌ அட்டைப் பெட்டியில் இருக்கும் பார் கோட் எண் சொல்லுங்க"

...

"ம்ம்ம். இது கடைசியா ஒரு மாதம் முன்னர், போன‌ டெலிவ‌ரியில் வ‌ந்த‌து. கண்டு பிடிக்க ரொம்ப சிரமம் ஆச்சே. உற்பத்தி சாலைக்கு அழைத்து பேசும் முன்னால், இருங்க‌ ரிட்ட‌ர்ன்ஸ்ல‌ செக் பண்ணிக்க‌லாம்."

...

"க‌ண்டு பிடித்து விட்டோம், எம்மா என்ப‌வ‌ர் ரெண்டு வார‌ம் முன் வாங்கி இருக்கிறார். நேற்று திருப்பி இருக்கிறார். ஒன்னும் க‌வ‌லைப் படாதீங்க‌. அவ‌ர் ப‌ண‌த்தை அவ‌ரிட‌ம் சேர்த்து விட‌லாம். க‌ட‌வுளின் ஆசி உங்க‌ளுக்கு என்றும் உண்டு"

---

இங்கு சமீபத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை கற்பனை கலந்து எழுதியிருக்கிறேன். கதை மாந்தர்கள், கதைக் களம் அனைத்தும் கற்பனையே !!!

16 மறுமொழி(கள்):

பழமைபேசிsaid...

Gr8!

நசரேயன்said...

அருமை..ரெம்ப நல்லா இருக்கு

ராமலக்ஷ்மிsaid...

//க‌ட‌வுளின் ஆசி உங்க‌ளுக்கு என்றும் உண்டு"//

உண்மைதான், ஸ்டேசிக்கு அது கண்டிப்பாக கிடைத்தே தீரும். எல்லா பிரச்சனையும் தானே தீரும் அவர் அருளில்.

நடந்த சம்பவத்தைக் கொண்டு ஒரு மிக நல்ல கருத்தை கதையில் தந்த உங்களுக்கும் "கடவுளின் ஆசி என்றும் உண்டு." வாழ்த்துக்கள் சதங்கா!

துளசி கோபால்said...

அடுத்தவன் காசுக்கு ஆசைப்படாத மனசுக்குக் கடவுள் குறையொன்னும் வைக்கமாட்டார்.

எங்க கொள்ளுப் பாட்டிக்கு இப்படிக் காசை அங்கங்கே டப்பாவில் போட்டுவைக்கும் வழக்கம் இருந்துருக்கு. பாட்டி இப்போ உலகில் இல்லை. ஆனால் அந்தப் பழக்கம் மட்டும்......

நான் போனபிறகு கிச்சனை ஒழிக்கும்போது எல்லா டப்பாக்களையும் திறந்து பார்க்கச் சொல்லி இருக்கேன் கோபாலிடம்:-)

உயிரோடைsaid...

கதையும் நல்லா சொல்லி இருக்கீங்க சதங்கா. சகலகலா வல்லவரா இருக்கீங்களே எப்படி

Jayakanthan - ஜெயகாந்தன்said...

நல்ல கருத்து.. கதையும் நல்லா இருக்கு..

சதங்கா (Sathanga)said...

பழமைபேசிsaid...

// Gr8!//

அந்த செய்தியை வாசித்த போது, பணத்தை திருப்பித் தரணும் என்று நினைத்தவருக்கு மனதுள் நான் சொன்ன வார்த்தை. இங்கே உங்கள் பின்னூட்டமாய். :)))

சதங்கா (Sathanga)said...

நசரேயன்said...

// அருமை..ரெம்ப நல்லா இருக்கு//

மிக்க மகிழ்ச்சி, மற்றும் நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// உண்மைதான், ஸ்டேசிக்கு அது கண்டிப்பாக கிடைத்தே தீரும். எல்லா பிரச்சனையும் தானே தீரும் அவர் அருளில்.//

நிச்சயம்.

// நடந்த சம்பவத்தைக் கொண்டு ஒரு மிக நல்ல கருத்தை கதையில் தந்த உங்களுக்கும் "கடவுளின் ஆசி என்றும் உண்டு." வாழ்த்துக்கள் சதங்கா!//

மிக்க மகிழ்ச்சி. எல்லாம் அந்த பெண்மணியின் செயல் தான். பணத்தைப் பார்த்த சில நொடிகளிலேயே, அது தன் பணம் இல்லை, திருப்பித் தரணும் என்று சொன்னாரே, அந்த செயல் தான், அது நிச்சயம் அருள் தான். எத்தனை பேருக்கு அந்த எண்ணம் வரும் ?!!

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

//ஆனால் அந்தப் பழக்கம் மட்டும்......//

பாட்டி இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற அஞ்சறைப் பெட்டி சேமிப்பு தொடருகிறீர்களே, இனிமை.

//நான் போனபிறகு கிச்சனை ஒழிக்கும்போது எல்லா டப்பாக்களையும் திறந்து பார்க்கச் சொல்லி இருக்கேன் கோபாலிடம்:-)//

அதெப்படி எல்லா லேடிஸும், இந்த விசயத்திலும், நாங்க தான் முதலில் என்கிறீர்கள் :)))

சதங்கா (Sathanga)said...

மின்னல் said...

// கதையும் நல்லா சொல்லி இருக்கீங்க சதங்கா. சகலகலா வல்லவரா இருக்கீங்களே எப்படி//

மிக்க நன்றி. அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க. பாக்கறத, கேக்கறத எழுதுகிறேன். அவ்வளவு தான் :)))

சதங்கா (Sathanga)said...

Jayakanthan - ஜெயகாந்தன் said...

// நல்ல கருத்து.. கதையும் நல்லா இருக்கு..//

மிக்க நன்றி ஜெய்.

TamilBloggersUnitsaid...

அருமை..ரெம்ப நல்லா இருக்கு

Anonymoussaid...

கதை ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் சதங்கா !!

குமரேஷ்

சதங்கா (Sathanga)said...

TamilBloggersUnitsaid...

// அருமை..ரெம்ப நல்லா இருக்கு//

மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

Kumaresh said...

// கதை ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் சதங்கா !!//

மிக்க நன்றிங்க குமரேஷ் ...

Post a Comment

Please share your thoughts, if you like this post !