Tuesday, January 20, 2009

துளித் துளியாய்: 5 - கலையாக கோலங்கள்


Photo: webshots.com

விடிந்தும் விடியாத
கருக்கல் வேளையிலே,
வளைந்தும் நெளிந்தும்
வரிவரியாய் கோலங்கள்.

தள்ளித் தள்ளி வைத்து
புள்ளிகளை இடிக்காமல்,
அள்ளி அள்ளி தொடர
பிறந்திடும் அற்புதங்கள்.

சுவாசத்தின் ஊடே
எண்ணத்தில் முளைத்து,
வாசலை நிறைக்கும்
வண்ணப் பூக்கள்.

மாக்கோலக் வரிசையிலே
எறும்புகளின் அணிவகுப்பு,
பூக்கோல வரிசையிலே
வண்டுக்களின் ஏமாற்றம் !

புள்ளி வைத்துக் கோலமிட
சொல்லி வைத்தார் போல்,
கச்சிதமாய் எப்புறமும்
கலையாக(க்) கோலங்கள்.

அச்சம் தவிர்த்து, தெருவில்
ஆட்களை புறம்தள்ளி,
கூச்சமும் தவிர்த்து, பெண்களை
மகிழ்விக்கும் கோலங்கள்.

அனுதினம் காலையில்
அலங்கரித்த கோலங்கள் அன்று,
பண்டிகை நாள்மட்டும்
பிறந்திடும் கோலங்கள் இன்று !!!

10 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

கவிதை நன்று.
ஒவ்வொரு எழுத்தும் புள்ளியாக, ஒவ்வொரு வார்த்தைகளும் கோடுகளாகத் தொடர்ந்து கவிதையே ஒரு கோலமாகவே விரிந்த விந்தையில் சிந்தை மகிழ்ந்தேன்.


கண் கண்டதை கை செய்யும் என்பார்கள். அப்படி ஒரு கலையாக பிரத்தியேகமாய் கற்றுக் கொள்ளாமலே காலங்காலமாய் அடுத்தடுத்த தலைமுறை வசம் வந்து சேர்ந்த கோலங்கள இன்று நீங்கள் சொன்ன மாதிரி பண்டிகைக் காலங்களில் மட்டுமே மலர்கின்றன!

Kavinayasaid...

//மாக்கோலக் வரிசையிலே
எறும்புகளின் அணிவகுப்பு,
பூக்கோல வரிசையிலே
வண்டுக்களின் ஏமாற்றம் !//

எனக்குப் பிடித்த வரிகள். அழகான கவிதை. மறை(ற)ந்து கொண்டிருக்கும் அழகான விஷயங்களில் இதுவும் ஒன்று :(

உயிரோடைsaid...

//அச்சம் தவிர்த்து, தெருவில்
ஆட்களை புறம்தள்ளி,
கூச்சமும் தவிர்த்து
மகிழ்விக்கும் கோலங்கள்.//

இந்த வரிகளில் வரும் அச்சம் தவிர், ஆட்கள் புறம்தள்ளல், கூச்சம் தவிர்தல் இதெல்லாம் கோலம் எப்படி செய்யும் என்று கேட்க தோணுது.

கவிநயா சொன்ன வரிகள் எனக்கும் பிடித்தது.

கவிதை நன்று

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// தொடர்ந்து கவிதையே ஒரு கோலமாகவே விரிந்த விந்தையில் சிந்தை மகிழ்ந்தேன்.//

மிக்க மகிழ்ச்சி. அடுத்த படைப்பை சீக்கிரம் பதிடா என வழக்கம் போல யோசிக்கவைக்கும் வரிகள்.

//கண் கண்டதை கை செய்யும் என்பார்கள். அப்படி ஒரு கலையாக பிரத்தியேகமாய் கற்றுக் கொள்ளாமலே காலங்காலமாய் அடுத்தடுத்த தலைமுறை வசம் வந்து சேர்ந்த கோலங்கள இன்று நீங்கள் சொன்ன மாதிரி பண்டிகைக் காலங்களில் மட்டுமே மலர்கின்றன!//

ஆமால்ல. அருமையா சொன்னீங்க. எந்த பிரத்தியேக வகுப்புமில்லாமல், ஆசிரியருமில்லாமல் காலம் காலமாக வந்ததல்லவா !!!!

சதங்கா (Sathanga)said...

கவிநயாsaid...

//எனக்குப் பிடித்த வரிகள். அழகான கவிதை. மறை(ற)ந்து கொண்டிருக்கும் அழகான விஷயங்களில் இதுவும் ஒன்று :(//

ரசனைக்கு நன்றிங்க. ஆமால்ல, 'ஒரு காலத்தில தினம் கோலமிட்டோம்' அப்படினு சொல்ற அளவுக்கு ஆனதே வருத்தமா தான் இருக்கு. அதுவுமில்லாமல் நம்ம ஊர்களில் நிறைய அடுக்குமாடி வீடுகளாய் போனதால், இதெல்லாம் சாத்தியமும் இல்லை :((( 'காலத்தின் கோலம்' என்று தான் சொல்லணும் :))

சதங்கா (Sathanga)said...

மின்னல் said...
//
//அச்சம் தவிர்த்து, தெருவில்
ஆட்களை புறம்தள்ளி,
கூச்சமும் தவிர்த்து
மகிழ்விக்கும் கோலங்கள்.//

இந்த வரிகளில் வரும் அச்சம் தவிர், ஆட்கள் புறம்தள்ளல், கூச்சம் தவிர்தல் இதெல்லாம் கோலம் எப்படி செய்யும் என்று கேட்க தோணுது.//

லாங்க் லாங்க் எகோ, ஸோ லாங் எகோ ... பெண்கள் நாணம் மிக்கவர்களாக இருந்த (இருக்க வைக்கப்பட்ட) காலத்தில், அவர்கள் வெளி உலகம் வந்து, எல்லாரையும் புறம் தள்ளி, தங்கள் திறமையை கோலத்தில் காட்டி மகிழ்ந்தனர் என்று சொல்ல நினைத்தேன்.

உங்கள் கேள்வி நியாமானதே, 'பெண்களை' என இவ்வரிகளில் சேர்த்திருக்கிறேன்.

// கவிநயா சொன்ன வரிகள் எனக்கும் பிடித்தது.

கவிதை நன்று //

ரசனைக்கு நன்றிகள் பல.

cheena (சீனா)said...

ம்ம்ம்ம் சதங்கா - கோலம் போடும் கலையை ஆண்களும் பெண்களும் கற்றிருக்கிறார்கள். மறைந்த, மறந்த கலையாய்ப் போய் விடாது. தினந்தினம் சின்னஞ்சிறு கோலமாக இருப்பது விழாக்காலங்களில் பெரிதாகிறது. மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது.

நிற்க, கவிதை அருமை. படமும் அருமை. நச்சென்ற முடிவான வரிகள். நல்வாழ்த்துகள் சதங்கா

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா)said...

//மறைந்த, மறந்த கலையாய்ப் போய் விடாது. //

அந்த நம்பிக்கை தான் கவிதை எழுதத் தூண்டியது.

// நிற்க, கவிதை அருமை. படமும் அருமை. நச்சென்ற முடிவான வரிகள். நல்வாழ்த்துகள் சதங்கா//

மிக்க நன்றி.

Anonymoussaid...

பண்டிகை காலங்களில் தெருவையே அடைத்தபடி பெரிதாய் கோலமிடுவார்கள் எங்கள் தெருவில். ஒவ்வொன்றும் கண்ணைப் பறிக்கும்.. கோலங்கள் அவ்வளவு அழகாக இருக்கும்...

அப்படிப்பட்ட கோலத்திற்கென ஒரு கவிதை நான் படித்ததும் இல்லை. படைத்ததும் இல்லை...

முதன் முதலாய் படிக்கிறேன்.. ரொம்பவே நல்லாருக்குங்க...

வாழ்த்துக்கள்!

மாதேவிsaid...

"அனுதினம் காலையில்
அலங்கரித்த கோலங்கள் அன்று,
பண்டிகை நாள்மட்டும்
பிறந்திடும் கோலங்கள் இன்று !!!" உண்மைதான்.கவிதை நன்று.

Post a Comment

Please share your thoughts, if you like this post !