Thursday, November 27, 2008

அடிச்சா.....ச்சு நூறு !



மில்லி இல்லீங்கோ :))

சின்னச் சின்னத் துளிகள்
எல்லாம் சேர்த்து வைத்தேனே
நாள் செல்லச் செல்ல‌
பதிவுகளாய்ப் பதிந்தும் வந்தேனே
எண்ணிக்கையில் ... நூறைத் தொட‌ ...
எகிறி குதித்தேன் வானம் இடிந்தது !!!

ஆயிரக்கணக்கில் பதிவுகள் போட்டு, அமைதியா பதிவர்கள் இருக்கும்போது, இது கொஞ்சம் ஓவரா இருக்குல்ல. என்ன செய்றது. ரத்னபாலா, பாலமித்ராக்களுக்கு, மாஞ்சு மாஞ்சு, சோறு தண்ணியில்லாம வரைஞ்சு அனுப்பி. அப்புறம் தேவுடு காத்து, ஒன்னுமே வரமா நொந்து நூலானது மனது. பிற்பாடு குமுதம், விகடனுக்கும் படைப்புக்கள் அனுப்பி, காத்திருந்தது தான் மிச்சம். இந்த கால கட்டத்தில் இப்படி நெனச்சவுடன் பதிந்து, நண்பர்கள் வந்து வாசித்து திட்டியோ, பாராட்டியோ ... எல்லாம் சில நொடிகளில் எனும்போது சந்தோசம் பெறுகத் தான் செய்கிறது.

துளித் துளியாய் ஆரம்பித்து, முதலில் கொஞ்சம் பதிவுகள் போட்ட பிறகு, சிறு இடைவெளி. எல்லோரும் நினைப்பது போலவே, 'நமக்கும் சரக்கு தீர்ந்து போச்சா' என்ற எண்ணம் அடிக்கடி வந்து தொல்லை தந்தது. 'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற கவியரசரின் பாடல் வரிகள் தரும் ஊக்கம், 'பதிய நினைத்தால் பதியலாம்' என்று மாற்றி யோசிக்க வைத்தது. என்ன, நேரம் ஒத்துழைக்கணும் !!

நமக்கு இந்த அரசியல், ஆன்மிகம் ரெண்டுமே ரொம்ம்ம்ம்ம்ப தூரம். முக்கியமா சென்ஸிடிவ் சண்டைகள் இந்த இரண்டிலுமே அதிகம். மதம், ஜாதி எல்லாம் வேறு சேர்ந்து ஆட்டி படைக்கும் களங்கள். அப்படியே ஒரு பை, ரெண்டுக்கும் சேர்த்து தான் :)) பிற‌கு எதைத் தான் எழுத‌லாம் என்று யோசிக்கையில், சாதார‌ண‌ ம‌னித(ர்களின்) அன்றாட வாழ்வைப் ப‌ற்றி எழுத‌லாமே என‌ ... இன்றுவ‌ரை தொட‌ர்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன் :))

கொஞ்சம் கதை, நிறைய கவிதைகள் என எழுதி வந்த போது, ஒரு பெரீய்ய்ய்ய எழுத்தாளருக்கு என் படைப்புக்களை வாசிக்குமாறு மடல் அனுப்பினேன். எங்கே வாசிக்கப் போறார் எனப் பார்த்தால், ஓரிரு நாட்கள் கழித்து அவரிடம் இருந்து பதில் மடல்.

சாட்டையில் அடித்த‌து போல‌ இருந்த‌து, எனது க‌விதைக‌ளைப் ப‌ற்றி அவ‌ர் எழுதியிருந்த‌து. ப‌ள்ளிச் சிறுவ‌ர்க‌ள் தேவ‌லை என்று சொல்லாம‌ல் சொல்லிவிட்டார் :(( ஒரு புறம் வருத்தம். அதே அவ‌ர், க‌தைக‌ளை சிலாகித்துப் புக‌ழ்ந்திருந்தார். குறிப்பிட்ட‌ க‌தைக‌ள், சொல்லிய‌ வித‌ம், பாத்திரங்கள், காட்சி விவ‌ரிப்பு என‌ நுணுக்க‌மாய் அவ‌ர் எழுதிய‌து க‌ண்டு ம‌றுபுற‌ம் ம‌கிழ்ச்சி.

நல்லா இருக்கோ, இல்லையோ ... என்ன‌ தான் எழுதினாலும், ஒருவ‌ர் வ‌ந்து, லேசா பாராட்டினா போதும், உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை குளிர்ந்து போகும். இந்த‌ ம‌னித‌ இய‌ல்புக்கு யாவரும் உட்பட்டவர்கள் தான் இல்லையா ?!

திரும‌ண‌மாகி ப‌த்தாண்டுக‌ள், இருப‌து, முப்ப‌து ... எத்த‌னை ஆண்டுக‌ள் ஆனாலும், சாப்பிடும்போது க‌ண‌வ‌ர் ம‌னைவியிட‌ம் "இன்னிக்கு சாம்பார் அற்புத‌ம்" என்று ஓரிரு வார்த்தைக‌ள் சொன்னால் போதும். ச‌ந்தோஷ‌ப்ப‌டாத‌ ம‌னைவிமார்க‌ள் உண்டா ?!!! வைஸ் வெர்ஸா, கணவன்மார்கள் தான் உண்டா ?!!! :))

ஆங் ம‌ற‌க்க‌ற‌துக்கு முன்னால் ... என்னுடைய‌ தொல்லைக‌ளைப் பொறுத்துக் கொண்டு, வீட்டு வேலையைப் பார்த்து, குழ‌ந்தைக‌ளை க‌வ‌னித்து, ப‌திவுகளையும் ப‌டித்து க‌ருத்துக்க‌ள் கூறும் என‌து ம‌றுபாதி த‌ங்க‌ஸுக்கு முத‌ல் ந‌ன்றி.

எழுத்தாளர் கதை சொன்னேனே, அங்கு விழுந்த‌து க‌விதைக்கு ஆப்பு, இல்லை இல்லை கேப்பு. "ந‌ல்லா இருக்கு, இல்லை எனப் பிறர் சொல்வ‌தெல்லாம் அப்ப‌டியே எடுத்துக் கொள்ளாதீர்க‌ள். எல்லாம் அவரவர் ரிலேடிவ் க‌ருத்துக்க‌ள். தொட‌ர்ந்து எழுதுங்கள்" என்று சொன்ன‌வ‌ர்க‌ள் இருவ‌ர். சீனா ஐயா, ராம‌ல‌ஷ்மி மேட‌ம்.

அறிமுகமான பதிவிலிருந்து இன்று வ‌ரை தொட‌ர்ந்து அனைத்து ப‌திவிற்கும் வ‌ந்து, பிழைக‌ள் திருத்தி, பாராட்டி, 'அடுத்து என்ன எழுதப் போறீங்க' என்று ந‌ம‌க்கும் ஆவ‌லைத் தூண்டும் சகோதரி ராமலஷ்மி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல..

வ‌லைச்ச‌ர‌த்தின் ஆசிய‌ராக‌ இருந்த‌ போது ஆரம்பித்த சேட்டிங்க் இன்றும் தொடர்கிறது. எனது எழுத்துக்களுக்கு கிடைத்த முத‌ல் வெற்றி அது. (அப்ப ரெண்டாவது, மூனாவது ... என்றெல்லாம் டீடெய்ல் கேக்கப்படாது :))))) இன்றும் பதிவுகளுக்கு வந்து முழுமையாய் வாசித்து மறுமொழியிடும் சீனா ஐயா, செல்வி அம்மா அவ‌ர்க‌ளுக்கும் இந்த‌ நேர‌த்தில் ந‌ன்றி சொல்லிக்க‌றேன்.

முன்னெல்லாம் ஆஸ்தான‌ ஸ்பெல் செக்க‌ராய் இருந்த‌வ‌ர் ந‌ண்ப‌ர் நாகு. நிறைய பேரு இவரை, ஸ்பெல் செக் ப‌ண்ணி குடுங்க‌ என்று தொல்லை ப‌ண்ண‌, ந‌ம்ம‌ ப‌திவுக‌ளுக்கு அப்ப‌ப்ப வ‌ருவ‌தோடு நிறுத்திக் கொண்டார் :))) அவங்கள்லாம் ரிச்மண்டில் இருப்பதாய் கேள்வி !!! நாகுவின் ம‌னைவி ல‌தா. மின்ன‌ஞ்ச‌ல் ஆக‌ட்டும், தொலைபேசி ஆக‌ட்டும் ... புக‌ழ்ந்து த‌ள்ளிவிடுவார். இவர்கள் இருவ‌ருக்கும் ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

கதைகளுக்கு என்று ஸ்பெஷலாக கமெண்ட் போட, இவருக்காகவே அடுத்தடுத்த பாகங்கள் விறுவிறு என தட்டச்சிட்டுப் பதிந்ததும் உண்டு. இப்ப கொஞ்சம் நாட்களாகக் காணோம். தங்கச்சி ரம்யா படிப்பில் பிஸியாக இருக்கிறார் போல.

அப்ப‌ப்ப‌ ந‌ம்ம‌ இன்விடேஷ‌ன் ஏற்று அல்லது தமிழ்மணத்தில் பார்த்து வ‌ரும் அன்பு உள்ளங்க‌ள் வ‌ல்லிம்மா, துள‌சி டீச்ச‌ர், நானானிம்மா, க‌விநயா, ஜெய், முரளி, பித்தன், அப்புற‌ம் முக்கிய‌மா நீங்க‌ ... உங்க‌ எல்லோருக்கும் கோடி கோடி ந‌ன்றிக‌ள்.

ந‌ம்மை எல்லாம் இணைக்கும் ஒரு குழுவிற்கு ந‌ன்றி சொல்ல‌வில்லை என்றால் எப்ப‌டி, அத‌னால‌ ...

வ‌ர‌ம் த‌ந்த‌ சாமிக்கு
ப‌த‌மான‌ லாலி
க‌ள‌ம் த‌ந்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ...
கனிவான நன்றி !!!

டிஸ்கி : இன்னிக்கு "தேங்க்ஸ்கிவிங் டே" வாம்ல‌. அதான் எல்லாருக்கும் நன்றி சொல்வோம் என்று இந்த‌ சிற‌ப்புப் ப‌திவு.

Sunday, November 23, 2008

அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்


Photo: indiaeducation.ernet.in

நீண்டு அக‌ன்ற‌ அந்த‌ அடுக்குமாடிக் குடியிருப்பு ப‌ருத்த‌ ஆல‌ம‌ர‌ம் போல‌ ப‌ர‌ந்து விரிந்து காட்சிய‌ளித்த‌து. ப‌ல்வ‌கைப் ப‌ற‌வைக‌ள் அதில் வாச‌ம் செய்த‌ன‌. ம‌ன்னிக்க‌ணும், ப‌ல்வ‌கை ம‌னித‌ர்க‌ள் அதில் வ‌சித்து வ‌ந்தார்க‌ள்.

முறையே ப‌ணி செய்து, போதுமென‌ ஓய்வு பெற்று, அறுப‌தைக் க‌ட‌ந்த‌ ஜெகந்நாதனும், ராம‌சாமியும் அங்கு வ‌ந்த‌திலிருந்து ந‌ண்ப‌ர்க‌ளும் ஆனார்க‌ள்.'ப்லாக் ஈ'இல் நாலாவ‌து மாடியில் ராம‌சாமியின் வீடு. சில ப்லாக் தள்ளி 'ஐ'இல் கீழ் தளத்தில் ஜெக‌ன் வீடு. தின‌ம் மாலை ஒருவ‌ர் வீடு மாறி ஒருவ‌ர் வ‌ந்து, சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் அர‌ட்டை அடித்து விட்டு செல்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

"வாங்க‌ ஜெக‌ன். என்ன‌ இன்னிக்கு கொஞ்ச‌ம் லேட்டு" என்று ந‌ண்ப‌ரை வ‌ர‌வேற்றார் ராம‌சாமி.

"என்ன தான் தினம் வந்தாலும், சில முறை தவறுதலாய்ப் போயிடுது. இப்ப கூட பாருங்க, ப்லாக் எஃப் போய் கதவ தட்ட, ஒரு பாயம்மா கதவத் தெறக்கறாங்க ! நீங்க அப்படி எல்லாம் இல்லையேனு யோசிச்சா, அப்ப தான் புரியுது ப்லாக் மாத்தி வ‌ந்திருக்கேன் என்று" என்று சொல்லி இடி இடி எனச் சிரித்தார் ஜெக‌ன்.

"குசும்பு புடிச்ச‌ கிழ‌வ‌ரையா நீர். பாய‌ம்மாவ‌ பாக்கறதுக்காகவே போயிட்டு, என் மேல‌ ப‌ழிய‌ போட‌றீர்" என்று சின‌ம் கொள்வ‌து போல‌ ந‌டித்தார் ராம‌சாமி.

"நான் பாய‌ம்மாவ‌ பாக்க‌ப் போன‌து இருக்க‌ட்டும். இந்த‌க் க‌தையையும் கேளும். என் நண்ப‌னின் ம‌க‌ன் ஒருவ‌ன் பாலாஜி என்ஜினிய‌ரிங் க‌ல்லூரியில் பேராசிரிய‌ரா சேர்ந்திருக்கான். ஆர‌ம்ப‌ நாட்க‌ளில் சில‌ வார‌ங்க‌ள் க‌வ‌னித்திருக்கிறான், மாண‌வ‌ர்க‌ளில் சில‌ர் காணாம‌ல் போவ‌தும், புதுமுக‌ங்க‌ள் வ‌ருவ‌தையும்."

"நீர் என்ன‌ சொல்ல‌ப் போறீர் என்று புரிந்து விட்ட‌து. என்ன‌ வ‌குப்பு மாறி வ‌ந்து போனார்க‌ள் ... ச‌ரியா ... க‌ண்டுபிடிச்சிட்டேன் பாரும்" என்று பெருமித‌ம் கொண்டார் ராம‌சாமி.

"வ‌ய‌சுக்கேத்த‌ பொறுமை எப்ப‌ தான் வ‌ர‌ப்போகுதோ உம‌க்கு. இப்ப‌டி குறுக்கே பேச‌க்கூடாது, அப்புற‌ம் சுவார‌ஸ்ய‌ம் கொறஞ்சு போயிடும், பொறுமையா கேளும்" என்று தொட‌ர்ந்தார் ஜெக‌ன்.

ஒரு நாள், புதுசா வ‌ந்த‌ சில‌ முக‌ங்க‌ளை, 'எங்கே இவ்வ‌ள‌வு நாட்க‌ள் காண‌லை, இப்ப‌ தான் உங்க‌ளைப் பார்க்கிறேன்' என்று கேட்டிருக்கிறான். ஒருவ‌ன், 'நான் இந்த ப‌க்க‌த்தில் இருக்கும் வெங்க‌டேஸ்வ‌ரா என்ஜினிய‌ரிங் க‌ல்லூரிய‌ ந‌ம்ம‌ க‌ல்லூரினு நென‌ச்சுப் போயிட்டேன்' என்றானாம். ம‌ற்ற‌வ‌ளோ, நான் அந்த‌ப் ப‌க்க‌ம் இருக்கும் மேரிமாதா என்ஜினிய‌ரிங் க‌ல்லூரிக்குப் போயிட்டேன் என்றிருக்கிறாள்.

இவ‌னுக்கோ ஆச்ச‌ரிய‌ம் தாங்க‌லை. 'அப்ப‌ காணாமப் போன‌வ‌ங்க‌ ??!!' என்று வியந்து கேட்க, 'அவ‌ங்க‌ எல்லோருமே, இதே போல‌ அதே தெருவில் வருசையாய் இருக்கும், ராஜு என்ஜினிய‌ரிங் கல்லூரி, விக்ர‌ம் என்ஜினிய‌ரிங் க‌ல்லூரி, ஜ‌லால் என்ஜினிய‌ரிங் க‌ல்லூரி என்று ஏதாவ‌து ஒன்றைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாய் இருப்பார்க‌ள்' என்றிருக்கின்ற‌ன‌ர் கோர‌ஸாய்.
உடனே, தான் சரியான கல்லூரியில் தான் இருக்கிறோமா என ஒருமுறை வெளியே வந்து தகர போர்டைப் பார்த்து உறுதி செய்திருக்கிறான்." என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, இடி முழக்கச் சிரிப்பைத் தொடர்ந்தார் ஜெகன்.




ஏப்ரல் 08, 2009 யூத்ஃபுல் விகடனில்

Friday, November 21, 2008

துளித் துளியாய்: 2 - காதல்


Photo: cringel.com

அமிழ்தாய் பொழியும்
அன்புத் துளிக‌ள்
அர‌ணாய்க் காக்கும்
அன்புக் க‌ர‌ங்க‌ள்
சாய‌த் துடிக்கும்
அக‌ன்ற‌ தோள்க‌ள்
ம‌ண்ணில் விழும்
ம‌ழைத் துளியைப் போலே
உன்னில் எனையே
ஒளித்துக் கொள்வாயா ?!!

***

மகிழ்ச்சி தரும்
மழையின் சுவாசம்
உருக்கும் குளிராய்
உந்த‌ன் நேசம்
பால் நில‌வின்
குளிர்ந்த‌ இர‌வில்
க‌ம்ப‌ளி உன‌க்காய்
காத்திடும் என்மனம்

***

தூவானத் தீண்ட‌லில்
திடுக்கிட்டேன்
பெரு ம‌ழையாய்ப்
பேரிறைச்ச‌லோடு
சுழ‌லும் சூறாவ‌ளியாய்
சுழ‌ன்றாடும் என்னை
அமைதியாய் ஆட்கொண்டு
அன்பினால் க‌ட்டிய‌ணைத்தாய்
தூவான‌த் தீண்ட‌லில்
திடுக்கிட்டேன்.

***

விண் அதிர‌
மின்ன‌ல் விளக்கெரிய
காற்றில் மிதந்து
மண் ந‌னைத்தாய்
குமுறி அழுவ‌தாய்
கொள்ள‌வில்லை என் ம‌ன‌ம்
கூடும் வெற்றித‌னில்
ஆன‌ந்த‌க் க‌ண்ணீர் தானோ !?

***

Wednesday, November 19, 2008

பச்சை குத்திப் பேரெழுதி



பச்சை குத்திப் பேரெழுதி
இச்சை கொள்ளும் மாந்த‌ருண்டு

இடக்கையோ வலக்கையோ
இழுத்து நீண்ட பெயருமுண்டு.

புருஷ‌ன் பேர் சொல்லாத‌
பொக்கை வாய் பாட்டி

பிற‌ர் கேட்க‌ கைநீட்டி
நாய‌க‌ன் பேர் காட்டிடுவாள்.

நாகரீக வளர்ச்சியிலே
நாட்டுப்புற பச்சை எல்லாம்

நங்கையரின் மேனி எங்கும்
நழுவிக் கிடக்குதிங்கே.

தேளென்ன பாம்பென்ன‌
தேடும் இடுப்பினிலும்

முள் வேலி போட்ட‌
முழ‌ங்கால் க‌ணுக்கால்க‌ள்.

ப‌ச்சை ம‌ட்டுமில்லை
ப‌ல‌ வ‌ண்ணமும் க‌ல‌ந்து

பாரே பார்க்க‌ வைக்கும்
வ‌டிவ‌ங்க‌ள் ப‌ல‌வுண்டு.

ந‌ங்கைய‌ருக்குப் போட்டியாய்
நாய‌க‌ரும் ச‌ளைத்தாரில்லை

நாக்கினிலும் கூட‌
நான்கைந்து படங்கள் கொண்டு !!!

Tuesday, November 18, 2008

துளித் துளியாய்: 1 - ம‌ழை


Photo: icons-pe.wunderground.com


தள்ளித் தள்ளி விழும்
புள்ளிப் புள்ளித் துளியே
வ‌றண்ட‌ பூமி நனைப்பாய்
விழும் சில‌ நொடியே.

இலையில் த‌ங்கி
கிளையில் ப‌துங்கி
ம‌லையில் விழுந்து
ம‌ழையாய்ப் பொழிவாய்.

தெருக்க‌ள் ஓடி
குள‌ங்க‌ள் நிறைத்து
ஏரி ஆறுக‌ளில்
ஏறி விளையாடி
ந‌திக‌ள் ஓடி
க‌டலாய்க் கரைவாய்.

***

துள்ளி விழும்
துளியின் ந‌ட‌ன‌ம்

சிலிர்க்க‌ வைக்கும்
வாடைக் காற்று

காற்றில் ப‌ர‌வும்
ம‌ண்(ணின்) வாச‌ம்

மனதை மயக்கும்
மழைத் துளிகள்.

***

சிற் சில துளிகள்
சேர்ந்து விழ‌
ஆற்றில் வெள்ள
நீர் ஓட்டம்.

போற்றும் அன்பைப்
பொழிந்திட‌வே
மாற்றம் இல்லை
மகிழ்ச்சி தளைத்தோங்கும்.

***

Friday, November 14, 2008

கிராமத்தில் மழையும், மின்வெட்டும்.


Photo: SpraguePhoto.com

சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின் ப‌ள‌ப‌ள‌ப்பில் நில‌ம் மின்னிய‌து.

"ஏலேய், சின்னச்சாமி ... தூத்த பெரிசா ஆரம்பிச்சிருச்சு, ஆட்டப் புடிச்சி கட்டுடா" என்று குர‌ல் விடுத்து, அங்குமிங்கும் திரிந்த கோழிகளை, ஒன்று திரட்டி கூடையிட்டு மூடினாள் கருப்பாயி.

கொல்லையில், நான்கு கல்தூண்களின் மேலே, வைக்கப் படப்பின் கீழ், ஆடுகளைக் கட்டினான் சின்னச்சாமி. ஆடுகள் சிலுப்பிக் கொண்டன.

"இந்தா, கோழி கூடைய‌ அப்ப‌டியே ந‌க‌ர்த்தி, வைக்க‌ப் ப‌ட‌ப்பு கீழ‌ வையி"

"எலேய் ... எலேய் .. அங்க‌ பாரு, அந்த‌ சீம‌க் கன்னுக்குட்டி வெளிய‌ திரியுது. புடிச்சு கொட்டாயில‌ அடை."

"ஏ ஆத்தா, உன‌க்கு கையி காலு ந‌ல்லாத் தானே இருக்கு. எல்லாம் நீ பாக்கலாம்ல‌. ஏன் என்னை போட்டு ப‌டுத்த‌றே. நாளைக்கு வேற‌ என‌க்கு பரிச்ச‌ இருக்கு" என்று ம‌ழையை விட‌ ச‌ட‌ச‌ட‌வென‌ விழுந்தான் பாட்டியிட‌ம்.

"பொல்லாத படிப்பு படிச்சு, நாட்டக் காக்கப் போறாரு தொர. மொதல்ல வீட்டப் பாருடா ... அப்புறம் நாட்டப் பார்க்கலாம்" என்று திட்டுவ‌து போல‌ பாவ‌னை செய்தாள் கிழ‌வி.

"ப‌டிப்பு ப‌டிச்சு தான் நாட்ட‌க் காக்க‌ முடியமா என்ன‌ ?!! காம‌ராஜ‌ர் கால‌த்தில‌ இருந்து, இன்னிக்கு வ‌ரைக்கும் யாரு ப‌டிச்சுப்புட்டு நாட்ட‌க் காக்குறாக‌, ஏதோ அன்னிக்காவ‌து ம‌னுச‌த்த‌ன்மை கொஞ்ச‌ம் இருந்துச்சு, இன்னிக்கு அதுவுமில்ல சுத்த‌மா இல்ல‌. இதெல்லாம் நீ சொல்லித் தான எனக்கே தெரியும். நீ என்ன‌டானா ..."

"ச‌ரி, ச‌ரி நின்னு பேசிக்கிட்டு இருக்காம‌, கன்னுக்குட்டிய‌ப் பாரு" என்று பேர‌னை விர‌ட்டினாள்.

அங்கிருந்து கன்று பல அடிகள் தள்ளி இருக்க, வைக்கோல் பிரித்து சிலவற்றை அள்ளி, தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, ஓட்ட‌மாய், ஹேய் ஹேய், உள்ளே போ, போ என்று க‌த்தி ஓ(ட்)டினான்.

மழையை ரசித்த கன்று, கொட்டாயினுள் செல்ல மறுத்து, கேள்விக் குறி போல வாலை வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் துள்ளிக் குதித்து ஓடியது.

'இப்படியே போனால் இன்னும் சில நேரத்தில் இருட்டி விடும், எப்படி பரிட்சைக்குப் படிப்பது' என்று மனம் கேள்வியில் நனைய, உடல் மழையில் மொத்தமாய் நனைந்து போனது.

'இந்த‌க் கிழ‌வியோட‌ பெரிய‌ ரோத‌னையாப் போச்சு, ஒரு நா தானே, வெளிச்சத்தில‌ ப‌டிக்க‌ விடுதா. ராத்திரில‌ விள‌க்கு வைக்க‌ ம‌ண்ணெண்ணை கூட‌ இல்லை, ரேஷ‌ன்ல‌யே ஒழுங்கா த‌ர‌மாட்டேன்கிறான், கேட்டா எங்க‌ளுக்கே ஒழுங்கா வ‌ர்ற‌தில்லைங்க‌றான். பாஸ் மார்க்காவது வாங்கணுமே !' என‌ச் சிந்த‌னையில் ந‌னைந்தான் சின்ன‌ச்சாமி.

வீட்டின் முன், வேலியோடு இருந்த பின்ன‌ல் க‌த‌வை திற‌ந்து உள்ளே நுழைந்தார் ம‌ருத‌ப்ப‌ன். அவ‌ர் வ‌ய‌தோடு ஒத்த‌ சைக்கிளை, கூரையின் கீழ் நிறுத்தி, 'எலேய் சின்ன‌ச்சாமி, இந்தா பரிச்சைக்கு படிக்கணும்னியே " என்று தான் வேலை செய்யும் மில்லில் இருந்து, சில லிட்டர் க‌ட‌னாய் வாங்கிய‌ ம‌ண்ணெண்ணை த‌க‌ர‌த்தை ம‌க‌னிட‌ம் நீட்டினார்.

த‌லையில் இருந்த‌ கோணியை எடுத்து வேலியில் மாட்டினார். 'ஆத்தா, சோற‌ப் போடு ப‌சிக்குது' என்று வானொலியைத் த‌ட்டினார். 'செய்திக‌ள் வாசிப்ப‌து ...' என்று கர கரவென ஆர‌ம்பித்த‌து வானொலி.

என்றும் போல் வெளியில் இல்லாம‌ல், இன்று ம‌ண்ணெண்ணை விள‌க்கொளியில் வீட்டினுள் உண‌வை முடித்தார். ப‌டிக்கும் ம‌க‌னை சில‌ நொடிக‌ள் பார்த்து ம‌கிழ்ந்தார். ம‌க‌னின் முக‌ம் பிர‌காச‌மாய்த் தெரிந்த‌து அவ‌ருக்கு.

வானொலிச் செய்தியின் இடையே, "தமிழகத்தில் தொடரும் கன மழையால், மேலும் மின்வெட்டு தொடரும் என அரசு தெரிவித்துள்ளது" என்ற‌ செய்தி இவ‌ர்களை(போன்றவர்களை) சிறிதும் பாதிக்க‌வில்லை.

ஏப்ரல் 16, 2009 யூத்ஃபுல் விகடனில்