Friday, November 14, 2008

கிராமத்தில் மழையும், மின்வெட்டும்.


Photo: SpraguePhoto.com

சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின் ப‌ள‌ப‌ள‌ப்பில் நில‌ம் மின்னிய‌து.

"ஏலேய், சின்னச்சாமி ... தூத்த பெரிசா ஆரம்பிச்சிருச்சு, ஆட்டப் புடிச்சி கட்டுடா" என்று குர‌ல் விடுத்து, அங்குமிங்கும் திரிந்த கோழிகளை, ஒன்று திரட்டி கூடையிட்டு மூடினாள் கருப்பாயி.

கொல்லையில், நான்கு கல்தூண்களின் மேலே, வைக்கப் படப்பின் கீழ், ஆடுகளைக் கட்டினான் சின்னச்சாமி. ஆடுகள் சிலுப்பிக் கொண்டன.

"இந்தா, கோழி கூடைய‌ அப்ப‌டியே ந‌க‌ர்த்தி, வைக்க‌ப் ப‌ட‌ப்பு கீழ‌ வையி"

"எலேய் ... எலேய் .. அங்க‌ பாரு, அந்த‌ சீம‌க் கன்னுக்குட்டி வெளிய‌ திரியுது. புடிச்சு கொட்டாயில‌ அடை."

"ஏ ஆத்தா, உன‌க்கு கையி காலு ந‌ல்லாத் தானே இருக்கு. எல்லாம் நீ பாக்கலாம்ல‌. ஏன் என்னை போட்டு ப‌டுத்த‌றே. நாளைக்கு வேற‌ என‌க்கு பரிச்ச‌ இருக்கு" என்று ம‌ழையை விட‌ ச‌ட‌ச‌ட‌வென‌ விழுந்தான் பாட்டியிட‌ம்.

"பொல்லாத படிப்பு படிச்சு, நாட்டக் காக்கப் போறாரு தொர. மொதல்ல வீட்டப் பாருடா ... அப்புறம் நாட்டப் பார்க்கலாம்" என்று திட்டுவ‌து போல‌ பாவ‌னை செய்தாள் கிழ‌வி.

"ப‌டிப்பு ப‌டிச்சு தான் நாட்ட‌க் காக்க‌ முடியமா என்ன‌ ?!! காம‌ராஜ‌ர் கால‌த்தில‌ இருந்து, இன்னிக்கு வ‌ரைக்கும் யாரு ப‌டிச்சுப்புட்டு நாட்ட‌க் காக்குறாக‌, ஏதோ அன்னிக்காவ‌து ம‌னுச‌த்த‌ன்மை கொஞ்ச‌ம் இருந்துச்சு, இன்னிக்கு அதுவுமில்ல சுத்த‌மா இல்ல‌. இதெல்லாம் நீ சொல்லித் தான எனக்கே தெரியும். நீ என்ன‌டானா ..."

"ச‌ரி, ச‌ரி நின்னு பேசிக்கிட்டு இருக்காம‌, கன்னுக்குட்டிய‌ப் பாரு" என்று பேர‌னை விர‌ட்டினாள்.

அங்கிருந்து கன்று பல அடிகள் தள்ளி இருக்க, வைக்கோல் பிரித்து சிலவற்றை அள்ளி, தலைக்கு மேல் வைத்துக் கொண்டு, ஓட்ட‌மாய், ஹேய் ஹேய், உள்ளே போ, போ என்று க‌த்தி ஓ(ட்)டினான்.

மழையை ரசித்த கன்று, கொட்டாயினுள் செல்ல மறுத்து, கேள்விக் குறி போல வாலை வைத்துக் கொண்டு, அங்கும் இங்கும் துள்ளிக் குதித்து ஓடியது.

'இப்படியே போனால் இன்னும் சில நேரத்தில் இருட்டி விடும், எப்படி பரிட்சைக்குப் படிப்பது' என்று மனம் கேள்வியில் நனைய, உடல் மழையில் மொத்தமாய் நனைந்து போனது.

'இந்த‌க் கிழ‌வியோட‌ பெரிய‌ ரோத‌னையாப் போச்சு, ஒரு நா தானே, வெளிச்சத்தில‌ ப‌டிக்க‌ விடுதா. ராத்திரில‌ விள‌க்கு வைக்க‌ ம‌ண்ணெண்ணை கூட‌ இல்லை, ரேஷ‌ன்ல‌யே ஒழுங்கா த‌ர‌மாட்டேன்கிறான், கேட்டா எங்க‌ளுக்கே ஒழுங்கா வ‌ர்ற‌தில்லைங்க‌றான். பாஸ் மார்க்காவது வாங்கணுமே !' என‌ச் சிந்த‌னையில் ந‌னைந்தான் சின்ன‌ச்சாமி.

வீட்டின் முன், வேலியோடு இருந்த பின்ன‌ல் க‌த‌வை திற‌ந்து உள்ளே நுழைந்தார் ம‌ருத‌ப்ப‌ன். அவ‌ர் வ‌ய‌தோடு ஒத்த‌ சைக்கிளை, கூரையின் கீழ் நிறுத்தி, 'எலேய் சின்ன‌ச்சாமி, இந்தா பரிச்சைக்கு படிக்கணும்னியே " என்று தான் வேலை செய்யும் மில்லில் இருந்து, சில லிட்டர் க‌ட‌னாய் வாங்கிய‌ ம‌ண்ணெண்ணை த‌க‌ர‌த்தை ம‌க‌னிட‌ம் நீட்டினார்.

த‌லையில் இருந்த‌ கோணியை எடுத்து வேலியில் மாட்டினார். 'ஆத்தா, சோற‌ப் போடு ப‌சிக்குது' என்று வானொலியைத் த‌ட்டினார். 'செய்திக‌ள் வாசிப்ப‌து ...' என்று கர கரவென ஆர‌ம்பித்த‌து வானொலி.

என்றும் போல் வெளியில் இல்லாம‌ல், இன்று ம‌ண்ணெண்ணை விள‌க்கொளியில் வீட்டினுள் உண‌வை முடித்தார். ப‌டிக்கும் ம‌க‌னை சில‌ நொடிக‌ள் பார்த்து ம‌கிழ்ந்தார். ம‌க‌னின் முக‌ம் பிர‌காச‌மாய்த் தெரிந்த‌து அவ‌ருக்கு.

வானொலிச் செய்தியின் இடையே, "தமிழகத்தில் தொடரும் கன மழையால், மேலும் மின்வெட்டு தொடரும் என அரசு தெரிவித்துள்ளது" என்ற‌ செய்தி இவ‌ர்களை(போன்றவர்களை) சிறிதும் பாதிக்க‌வில்லை.

ஏப்ரல் 16, 2009 யூத்ஃபுல் விகடனில்

28 மறுமொழி(கள்):

cheena (சீனா)said...

என்ன ஆயிற்று - அருமையான மறுமொழி ஒன்று இட்டேனே ?

cheena (சீனா)said...

வெள்ளைக் காக்காய் திரிகிறதா - இங்கும் - மறுமொழிகளைக் கொத்திக் கொண்டு போகிறதா

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//என்ன ஆயிற்று - அருமையான மறுமொழி ஒன்று இட்டேனே ?//

ஒன்றும் வரலையே ! ஒரு வேலை ப்லாகர் தான் வெள்ளைக் காக்காயோ !! அதில் இருக்கும் ப்ரச்சினை தான் என நினைக்கிறேன், முதலில் ப்ரொஃபைலை செலெக்ட் செய்து, அப்புறம் மறுமொழி தட்டச்சிட்டு அனுப்பினால் சரியாக வருமோ.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

கமென்ட் பொட்டிய மாத்தியாச்சு. இனி வெள்ளைக் காக்காய் வேலையைக் காண்பிக்காது என நினைக்கிறேன் :)) உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

சதங்கா (Sathanga)said...

Tulsi Gopal
to me

show details 3:47 PM (2 hours ago)


உங்க பதிவில் பின்னூட்டம் இட முடியலை.

கதை ,சிம்பிளா நல்லாவே வந்துருக்கு.

குறள்= குரல்

கண்று = கன்று

தட்டச்சுப்பிழையைச் சரி செய்யுங்க.

டீச்சராக இருப்பது கடினம்:-))))

ராமலக்ஷ்மிsaid...

நாடு எத்தனைதான் முன்னேறியிருந்தாலும் அடிப்படை வசதிகள் கடைசிக் குடிமகன் வரை போய் சேராத வரை ‘வளர்ச்சி’ என்பதெல்லாம் வாய்ச் பேச்சு வரையில்தான் என்பதை முகத்தில் அறைந்தாற் போல் சொல்கிறது கதை. பாராட்டுக்கள் சதங்கா.

ராமலக்ஷ்மிsaid...

சம்பாஷைணையில் வட்டார வழக்கைக் கையாண்டிருப்பது கூடுதல் சிறப்பு.

[ரொம்பச் சரி. ப்ளாகரின் டெக்னிகல் ப்ராப்ளம்தான் வெள்ளைக் காக்காய்:))]

நாகு (Nagu)said...

நன்றாக யதார்த்தமாக இருக்கிறது. குடிசையில் ஒலிக்கும் வானொலிதான் கொஞ்சம் இடிக்கிறது. டிரான்ஸிஸ்டரோ?

காமராஜர் குறித்து சொல்வதை பெரியவர்கள் சொல்வது போல எழுதினால் பொருந்தும். பெரியவர்களுக்கே மறந்துபோன கடமைவீரரை சிறுவர்களுக்கு எங்கே தெரியும்? ஏனோ தெரியவில்லை... எனக்கு அவர் பெயரை எங்கு படித்தாலும் கேட்டாலும் இப்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன.

மகன் படிப்பதை பெருமையோடு பார்க்கும் தகப்பன்... ரொம்ப அருமையாக முடித்திருக்கிறீர்கள்.

அத்திரிsaid...

//என்றும் போல் வெளியில் இல்லாம‌ல், இன்று ம‌ண்ணெண்ணை விள‌க்கொளியில் வீட்டினுள் உண‌வை முடித்தார். ப‌டிக்கும் ம‌க‌னை சில‌ நொடிக‌ள் பார்த்து ம‌கிழ்ந்தார். ம‌க‌னின் முக‌ம் பிர‌காச‌மாய்த் தெரிந்த‌து அவ‌ருக்கு.//

//வானொலிச் செய்தியின் இடையே, "தமிழகத்தில் தொடரும் கன மழையால், மேலும் மின்வெட்டு தொடரும் என அரசு தெரிவித்துள்ளது" என்ற‌ செய்தி இவ‌ர்களை(போன்றவர்களை) சிறிதும் பாதிக்க‌வில்லை.//


அருமையான வரிகள்.

இன்றைய மின் வெட்டு நிலையை கதையோடு அழகாகதொகுத்துள்ளீர்கள்.

சதங்கா (Sathanga)said...

டீச்சர்,

//உங்க பதிவில் பின்னூட்டம் இட முடியலை.//

பின்னூட்டப் பெட்டியை பழைய முறைக்கே மாற்றியிருக்கிறேன். இனி சரியா வரும் என்று நினைக்கிறேன்.

//கதை ,சிம்பிளா நல்லாவே வந்துருக்கு//

ரொம்ப நன்றி டீச்சர்

//தட்டச்சுப்பிழையைச் சரி செய்யுங்க.//

செஞ்சிட்டேன்.

//டீச்சராக இருப்பது கடினம்:-))))//

பல rகளும், lகளும், nகளும் இருக்காதல தான. ஆமா.ஆமா :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//நாடு எத்தனைதான் முன்னேறியிருந்தாலும் அடிப்படை வசதிகள் கடைசிக் குடிமகன் வரை போய் சேராத வரை ‘வளர்ச்சி’ என்பதெல்லாம் வாய்ச் பேச்சு வரையில்தான் என்பதை முகத்தில் அறைந்தாற் போல் சொல்கிறது கதை. பாராட்டுக்கள் சதங்கா.//

நான் சொன்னது மிக மிகக் குறைவான செய்தியே. இது போல எத்தனை எத்தனை கிராமங்கள். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ....

கதையின் நோக்கத்தை அழகாக எடுத்து சொல்லி, பாராட்டியதற்கும் நன்றிகள் பல.

//சம்பாஷைணையில் வட்டார வழக்கைக் கையாண்டிருப்பது கூடுதல் சிறப்பு.//

ரொம்ப சந்தோஷம். சரியா வருமோ, வராதோ என்று நினைத்தேன். உங்கள் வரிகள் தெம்பளிக்கின்றன.

//[ரொம்பச் சரி. ப்ளாகரின் டெக்னிகல் ப்ராப்ளம்தான் வெள்ளைக் காக்காய்:))]//

ஆமா. இனி வெள்ளைக் காக்காய் இங்கு மல்லாக்கப் பறக்காது. இல்லை, இல்லை ... பின்னூட்டத்தைப் பறிக்காது :))

நானானிsaid...

சித்துச்சிறுக்குன்னு நறுக்குன்னு இருக்கு கதை! மழையை ரசிக்கும் கோழிகளும் துள்ளிக் குதிக்கும் கன்னுக்குட்டியும்..படிக்க ஏங்கும் சிறுவனுமாக கிராமீய மணம் மணக்குது. இப்படி படித்து நகரத்துக்கு வருபவர்களை நார்நாராக கிழிக்கும் 'நேற்றைய நாகரீகத்தை'(சட்டக்கல்லூரி)நினைத்தால் கனக்குது மனம்.
சதங்கா! 'கத நல்லாருக்கு வே!'

Unknownsaid...

சதங்கா,
கதை நல்லா இருக்கு.

//வானொலிச் செய்தியின்// இந்த பாரா தேவையில்லை.மைய உணர்வு
பையனின் படிப்பு ஆர்வம்.

ஏன் நிங்க உள்ள வந்து மைக் பிடிக்கிறீர்கள்? இயல்பு போய்விடுகிறது.

சுஜாதா சொன்னது:

ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை.

.”இதோ பார் வாழ்வின் அபத்தம் ” இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” கதைக்கு உள்ளே வந்து “மைக்” பிடித்தால். கதை Documentary ஆகி விடும்.”வாசகனே உணர வேண்டும்.

Kavinayasaid...

கதையின் கருத்தும் சொன்ன விதமும் நல்லாருக்கு சதங்கா.

பின்னூட்டப் பெட்டியை மாத்தினதுக்கு நன்றி.

ஆயில்யன்said...

பதிவினை படித்து முடித்தப்போது,என் பள்ளிக்காலத்தில் கடும் புயல் மழையால் ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில் மண்ணெண்ணை விளக்கில் படித்த நாட்கள் வந்து சென்றது!

கிராமப்புறங்களின் நிலை இன்றும் கூட இதுதான்!

சதங்கா (Sathanga)said...

நாகு,

//நன்றாக யதார்த்தமாக இருக்கிறது. குடிசையில் ஒலிக்கும் வானொலிதான் கொஞ்சம் இடிக்கிறது. டிரான்ஸிஸ்டரோ?//

ஆமா, ட்ரான்ஸிஸ்டர் தான்.

//காமராஜர் குறித்து சொல்வதை பெரியவர்கள் சொல்வது போல எழுதினால் பொருந்தும். பெரியவர்களுக்கே மறந்துபோன கடமைவீரரை சிறுவர்களுக்கு எங்கே தெரியும்? //

மாற்றிவிட்டேன்.

//ஏனோ தெரியவில்லை... எனக்கு அவர் பெயரை எங்கு படித்தாலும் கேட்டாலும் இப்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன.//

படிக்காத மேதை அல்லவா. பிறரைப் படிக்க வைத்துப் பார்க்க நினைத்த நல்ல மனமும் கூட. அதான்.

//மகன் படிப்பதை பெருமையோடு பார்க்கும் தகப்பன்... ரொம்ப அருமையாக முடித்திருக்கிறீர்கள்.//

நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

அத்திரி,

//இன்றைய மின் வெட்டு நிலையை கதையோடு அழகாகதொகுத்துள்ளீர்கள்.//

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

நானானிம்மா,

//சித்துச்சிறுக்குன்னு நறுக்குன்னு இருக்கு கதை! //
சதங்கா! 'கத நல்லாருக்கு வே!'//

அழகாக ரசிக்க வைக்கும் மறுமொழிக்கு நன்றிகள் பல.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

சென்ற மறுமொழி மறந்து விட்டது
கிராமப்புறங்களில் இன்றும் மின் வெட்டு மக்களைப் பாதிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப் படவில்லை.

அருமையான கரு - அழகான இயல்பான நடை. சின்னச்சாமி, தந்தை, தாய் கருப்பாயி, பாட்டி எனப் பல கதா பாத்திரங்கள் இச்சிறு கதையில். அனைவருமே ஜொலிக்கின்றனர் தங்கள் பேச்சுகளிலும் செயல்களிலும்.

அவரவர்கள் மனநிலை, குணங்கள் இவை இரண்டும் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது.

யதார்த்தம் - இது தான்

கிராமிய சூழ்நிலை விவரிக்கும் விதம் - கதாசிரியரின் கண்டவுடன் கிரகிக்கும் திறமையைக் காட்டுகிறது.

மொத்தத்தில் அருமையான சிறுகதை

நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்said...

வெகு அழகான கிராமக்கதை. ஏனோ அந்த வீட்டுக்குள் போய் உட்கார ஆசையாக இருக்கிறது. மழையினூடே தெரியும் பாசம், ஆதங்கம்,எதிர்காலம்
எல்லாமே அருமை. அசல் பாட்டி, அசல் பேரன்.
வண்ணச்சித்திரம் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் சதங்கா.
நன்றி.

தமிழன்-கறுப்பி...said...

உண்மைதான் இவர்களைப் பாதிப்பதில்லை மின்வெட்டுகள்...
மின்வெட்டுகள் மட்டுமல்ல!

சதங்கா (Sathanga)said...

ரவிசங்கர்,

//கதை நல்லா இருக்கு.

மிக்க நன்றி.

//சுஜாதா சொன்னது:

ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது ...

.”இதோ பார் வாழ்வின் அபத்தம் ”//

ஆம். சுஜாதா வாழ்வில் பல நிலைகளில் உயர்ந்தவர். சாதரண குழாய் சண்டையில் (!!) அவரும் பங்கு பெற்றிருந்தால் அபத்தம் எது, அன்றாட வாழ்வுக்கு தேவை எது என்று அனுபவித்திருப்பார்.

இல்லாதவன், இல்லாமலேயே இருந்துட்டு போகட்டும் என்ற மனப்பாங்கு தான் வெளித் தெரிகிறது.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//கதையின் கருத்தும் சொன்ன விதமும் நல்லாருக்கு சதங்கா.//

மகிழ்ச்சி கலந்த நன்றிங்க.

//பின்னூட்டப் பெட்டியை மாத்தினதுக்கு நன்றி.//

நீங்க ஆரம்பிச்சு வைக்க, சீனா ஐயா, துள்சி டீச்சர் எல்லாம் கொடி பிடிக்க, ஒருவழியாய் பழைய நிலைக்கு மாத்தியாச்சு :)))

சதங்கா (Sathanga)said...

ஆயில்யன்,

//பதிவினை படித்து முடித்தப்போது,என் பள்ளிக்காலத்தில் கடும் புயல் மழையால் ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில் மண்ணெண்ணை விளக்கில் படித்த நாட்கள் வந்து சென்றது!//

இப்போது சுகமாய் அனுபவித்திருப்பீர்கள் அந்நாட்களை.

நீங்கள் சொல்வது போல ...

//கிராமப்புறங்களின் நிலை இன்றும் கூட இதுதான்!//

ஆம், நிறைய கிராமப்புறங்கள் இன்றும் இப்படித் தான் இருக்கின்றன. இன்னும் தெரு விளைக்கில் படிக்கும் சிறுவர்களைப் பார்க்க முடிகிறது கிராமங்களில்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//மொத்தத்தில் அருமையான சிறுகதை//

அழைப்பினை ஏற்று மீண்டும் வந்து, கதை முழுதும் எடுத்து சொல்லி பாராட்டி, மறுமொழியிட்டதற்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//வண்ணச்சித்திரம் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள் சதங்கா.//

அனுபவித்து பாராட்டியதற்கு மனம் திறந்த நன்றி.

சதங்கா (Sathanga)said...

தமிழன்‍கறுப்பி,

//மின்வெட்டுகள் மட்டுமல்ல!//

ஆம் உண்மை தான்.

Unknownsaid...

சதங்கா,

நிங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை

//சாதாரண குழாய்ச் சண்டையை //

எந்த விஷயத்தையும் கதையாக சொன்னாலும் என்பதற்கு சுஜாதா "குழாய்ச் சண்டையைச் சொன்னாலும் " என்ற தொனியில் சொல்கிறார்..

நீங்கள் குழாய்ச் சண்டையை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்கிறீர்கள் .

அவர் எழுதிய "நகரம்" மதுரை ஹாஸ்பிடல் லஞ்சம் (20 வருடம் முன்பு எழுதியது ).
படித்துள்ளீர்களா ? இது மாதிரி நெறைய இருக்கிறது

நம் மாதிரி .எழுத்தாளர்கள் தான் விலகி நின்று எல்லா இடத்திலும் நடக்கும் கதைகளை தள்ளி நின்று கவனித்து உள் வாங்குகிறோம் வெளிப்படுவதில்தான் வித்தியாசப்படுகிறோம் ..

உங்கள் கதையில் ரொம்ப யதார்த்தமாக எல்லா அவலங்களும் கதா பாத்தரங்களின் உரையாடல் மூலம் வருகிறது . எல்லா மறுமொழிகளும் அதையே சொல்கிறது .ஆனால்
கடைசியில்

//செய்தி இவ‌ர்களை(போன்றவர்களை) சிறிதும் பாதிக்க‌வில்லை.//
என்பதைத்தான் நான் மைக் என்று சொன்னேன்.

கடைசியில் கூட இப்படி வைத்திருக்கலாம் " அட இங்க மின்சாரமே காணூம் .இவனுங்க
மின் வெட்டுஇன்னு வெட்ட வரனுங்க .வெட்டி பசங்க ". இதற்க்கு வீரியம் கூட .


காதல் பாடங்களில் தி.ராஜேந்தர் " .டேய .காதல்ன அது ஒரு ரோஜடா " தோளில் ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு(தாடியோடு) அடிக்கடி மரத்திற்கு பின் இருந்து தோன்றுவார். நமக்கு பிடிப்பதில்லை.

நன்றி.

.

Post a Comment

Please share your thoughts, if you like this post !