Friday, February 22, 2008

சதுர தர்பூசணியும் சில படிப்பினைகளும்

ஜப்பான் எப்பவும், எதிலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு குட்டி நாடு. வேகமான‌ எந்திரமாகட்டும், விளையும் பொருட்களாகட்டும், தங்களுக்கென்று ஒரு தனித்தன்மை கொண்ட நாடு. உழைப்பிற்குப் பேர் பெற்றதும் இந்நாடே !

மிக வித்தியாசமாக, கற்பனைக்கு அப்பாற்பட்டு (!), செயல் வடிவம் தந்து, சதுர தர்பூசணி விளைவித்திருக்கிறார்கள் ! என்னது சதுர தர்பூசணியா, எப்படி சாத்தியம், சும்மா விளையாட்டாய் இருக்கும் என்று தான் நாம் எண்ணுவோம். மேலும் வாசியுங்கள்.உருவில் பெரிதாய் உருண்டு வளர்ந்து நிறைய வெத்து இடங்களை இவை ஆக்கிரமித்து, விற்பனை அங்காடிகளில் இடப் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கென்ன செய்ய முடியும், அவை அப்படித் தான் விளையும் என்று நாம் விட்டுவிடுவோம். ஆனால் ஜப்பானிய‌ விவசாயிகள் ... அதை சதுரவடிவில் அங்காடிக்காரர்கள் விரும்பினால், நம்மால் எப்படி விளைவிக்க முடியும் என்று சிந்தித்து, செயல் படுத்தியும் காண்பித்திருக்கிறார்கள்.

எப்படி அவர்களுக்கு அது சாத்தியமாயிற்று ?! இதெல்லாம் கடின‌ம், முடியாது என்று நினைக்காமல், எப்படி முடியும் என்று அவர்கள் எண்ணியது முதல் படி. சதுர வடிவிலான பெட்டிகளில் அவற்றை வளர்க்கலாம் என ஜப்பானிய மூளைகளில் பொறி தட்டியது இரண்டாவது படி.இப்படி சதுர வடிவில் விளைவித்த தர்பூசணிகளைக் கண்டு அங்காடிக்காரர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சேமிக்கும் இடமாகட்டும், செலுத்தும் வாகனமாகட்டும், முன்பை விட நிறைய பழங்களை ஏற்ற முடிந்ததில், இது மூன்றாவது படி. வாடிக்கையாளர்களுக்கும் இது ஆனந்தத்தை அளித்தது. குளிர்சாதனப் பெட்டியில், பெட்டி போல‌ அமர்ந்து கொள்வதில். இது நமக்குக் கிடைத்த‌து நல்லபடி.இதிலிருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா ? சில படிப்பினைகள் நிச்சயம் நமக்குப் பேருதவியாக இருக்கும். சிலவற்றைப் பார்போம்:

இது இப்படித் தான் என்று முடிவு கட்டாதீர்கள்: நாம் எப்போதுமே பெரிதாய் உருண்டு வளர்ந்த தர்பூசணிகளைப் பார்த்து வளர்ந்து, மிகத் தற்செயலாகவே, "சதுர வடிவிலா ? இது சாத்தியமே இல்லை" என்று, கேள்விக்கு முன்னேயே பதிலுரைப்போம். வாழ்வு முழுதும் பழக்கப்பட்ட காரணம் கூட, சில விநாடிகள் இது பற்றி நம்மைச் சிந்திக்க விடாமல் செய்யலாம். இதைத் தகர்த்து, இது இப்படித் தான் என்றில்லாமல், சில நொடிகள் வேறு எப்படிச் செய்யலாம் என்று சிந்தித்தால் மேலும் சிறப்புற வாழலாம். இது எளியதன்று, கடினம் தான். ஆனால் எப்படி வெளி வருவது, யோசியுங்கள். சில வேளைகளில் செய்யலாம் என்று தோன்றினாலும், நாம் செய்து முடிப்பதில்லை. அதனால், இதை எவ்வாறு செய்து முடிப்பேன் என்று தொடர்ந்து உங்களுள் கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள்.

உங்கள் நடத்தைகளைப் பற்றி உங்களுள் கேள்வி எழுப்புங்கள்: எதையாவது சாத்தியமாக்க முடியாது என்று மனம் சொன்னாலும், புத்தி என்ன சொல்கிறது என்று கேள்வி எழுப்புங்கள். நம் நடத்தைகளை பற்றி கேள்வி எழுப்பக் கற்றுக் கொண்டோமானால், நம்மை செம்மை படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். சிறப்பான சில நன்னடத்தைகள் நம்க்குக் கற்பிக்கப் படுகிறது, சில நாம் வாழிவில் காண்போரை, நமக்கு பிடித்திருக்கும் விசயங்களை, நாமாகக் கற்றுக் கொள்கிறோம். "கற்பது கடைசி வரை" என்பது எழுதப் படாத நியதி. அதனால், நான் இப்படித் தான், எனக்கு இவ்வளவு தான் தெரியும் என்று ஒரு சிறு வட்டதிற்குள் இருந்து விடாதீர்கள்.

படைப்பாளராக இருங்கள்: பிரச்சனைகளைச் சந்திக்கும்போது நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று, எப்படித் தீர்வு காணலாம் என்பதே அன்றி, "அச்சச்சோ, இப்படி வந்திருச்சே ! நான் என்ன பண்ணப் போறேனோ ?" என்று எண்ணாதிருப்பது. "இந்தச் சதுர தர்பூசணி விளைவிக்க வேண்டும், என்ன பண்ணுவீர்கள்" என்று நம்மில் பலரிடம் கேட்டால், இதெல்லாம் ஆகிற காரியம் இல்லை என்றும், அநேகர், இதை மரபு வழியாக எப்படி பண்ணலாம் என்று மேலும் கடின‌மாகச் சிந்திப்போம். அந்தக் கேள்வியை சற்று வேறு கோணத்தில், ஜப்பானிய விவசாயிகளைப் போலச் சிந்தித்தால், இந்தக் கடினமான கேள்விக்கு, எளிதான விடை கிடைக்கும் என்பது நிச்சயம்.

செம்மையாகச் செய்வது பற்றி யோசியுங்கள்: அங்காடிகள் சதுர வடிவில் தர்பூசணி கேட்டவுடன், உடனே பதிலைச் சொன்னால், அது முடியாது என்று தான் முதன் முதலில் வரும். பல முறை இந்தக் கேள்வியை நம்முள் கேட்டுக் கொண்டு, கிடைக்கும் விடைகளை ஒரு தாளில் குறித்துக் கொண்டேயிருங்கள். இது நல்ல குறிப்பாக பின்னாளில் வேறு பிரச்சனைகளுக்குக் கூட தீர்வாக அமையும். இதை விட என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று தொடர்ந்து உங்களை கேட்டுக் கொண்டேயிருங்கள். நிச்சயம் நம்மால் முடியும்.

முடியாததென்பது எதுவுமில்லை. நாம் பார்க்கும் விதங்களும், அனுகும் முறைகளும், செயல்படுத்தும் விதமுமே நம்மைச் செம்மையாய் வாழ வகுக்கும்.

*****

இதெல்லாம் எனது சொந்தக் கருத்து இல்லை. ஒரு ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். இன்று வந்த ஒரு மென்மடலில் (மின் அஞ்சல் என்று எத்தனை நாள் தான் சொல்றது, கொஞ்சம் வித்தியாசமா யோசிப்போமே !!!! :)) மேற்கண்ட கட்டுரை வந்திருந்தது. படித்து ஒரு கணம் திகைத்துத் தான் போனேன். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியதன் விளைவு மொழி பெயர்ப்பு. கூகிளாரிடம் முறையிட்டதில் தான் தெரிந்தது, செய்தி 2001 ஆண்டுப் பழையது என்று. பழசா இருந்தா என்ன, இது வரை தெரியாதவங்க இப்ப தெரிஞ்சிக்கட்டும் :)

மேலும் தகவலுக்கு சில சுட்டிகள்:

http://archives.cnn.com/2001/WORLD/asiapcf/east/06/15/square.watermelon/index.html
http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/1390088.stm
http://square-watermelons.com/

11 மறுமொழி(கள்):

பாச மலர்said...

பகிர்ந்தமைக்கு நன்றி..என்னென்னவோ நடக்கிறது...

பிரேம்ஜிsaid...

மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி

ஜீவா (Jeeva Venkataraman)said...

வாவ், முயன்றால் முடியாதது இல்லை என நிரூபிக்கிறது.
தருவித்தமைக்கு நன்றிகள்.

சதங்கா (Sathanga)said...

பாச மலர்,

வருகைக்கும், வாசித்தலுக்கும் நன்றி.

//என்னென்னவோ நடக்கிறது...//

நல்லா நடந்தா நல்லது தாங்க.

சதங்கா (Sathanga)said...

பிரேம்ஜி,

வருகைக்கும், வாசித்தலுக்கும் நன்றி.

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

// வாவ், முயன்றால் முடியாதது இல்லை என நிரூபிக்கிறது.
தருவித்தமைக்கு நன்றிகள். //

இதே எண்ணம் தான் முதலில் எனக்கும் தோன்றியது. மிக்க மகிழ்ச்சி.

நாகு (Nagu)said...

இயற்கையாக வளர்வதை கட்டுப்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜப்பானியர்கள். அடுக்குவதற்கு வசதிதான். அதற்காக?

பள்ளிக்கூடத்தில் இடம் குறைச்சல் என்றால் குழந்தைகள் சைஸைக் குறைப்பதுபோல் இருக்கிறது இது.

கொடுமையான போன்ஸாய் கலையை நமக்கு கொண்டுவந்தது இவர்கள்தானே. போன்ஸாயில் என்ன கொடுமை என்பவர்களுக்கு - தேவைக்கு குறைவான தண்ணீர், வெளிச்சம், உணவு கொடுத்து மரங்களின் இயற்கையான வளர்ச்சியை கட்டுப்படுத்தி (வேர்களை வெட்டி வெட்டி..) அழகுப்பார்க்கும் கலை இது.

http://en.wikipedia.org/wiki/Bonsai

நானானிsaid...

nothing is impossible-என்ற என் ஆசிரியரின் வாக்கை மெய்ப்பித்திருக்கிறார்கள், ஜப்பானியர்கள்!! அவர்களால் எதுவும் முடியும். அணுகுண்டு சாம்பலிலிருந்து மீண்டு வந்த பீனிக்ஸ் பறவைகள் அல்லவா?!
தர்பீஸ் பிடிக்கும் என்போன்றோர்க்கு இது சுவையான தகவல்...பழம் போலவே..சதங்கா!!!

எம்.ரிஷான் ஷெரீப்said...

மிக அருமை சதங்கா...:)
ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க.
வாழ்த்துக்கள் நண்பரே !

நிஜமா நல்லவன்said...

மொழிபெயர்ப்பே ஆனாலும் மிக நல்ல பதிவு. பகிர்தலுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

நாகு,

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். போன்சாய் பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம். என்ன இருந்தாலும் ஜப்பானியர்கள் பாராட்டுதலுக்குறியவர்கள் தான். இதை மறுக்க முடியுமா ?

-----

நானானி மேடம்,

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். வந்து வாசித்து, ஊக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

-----

ரிஷான்,

வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி.

-----

நி.ந,

நீங்க நிஜமாலுமே நல்லவன் தான் :) உங்கள் பின்னூட்டம் குறித்து மிக்க மகிழ்ச்சி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !