Monday, February 18, 2008

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" மற்றும் போட்டிகள் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்

ஒரு போட்டி அறிவிக்கப்பட்டவுடன் எல்லோரும் கவிதை, கதை எல்லாம் எழுதி அசத்த ஆரம்பிப்பார்கள். போட்டி நாள் முடியும் வரை, குறைந்தது இருபத்தி ஐந்திலிருந்து ஐம்பது பதிவாவது வரும். பின்னர் முடிவு அறிவிக்கப்பட்டு, பரிசு பெற்றவருக்குப் பின்னூட்டங்கள் போட்டு, அக்கடானு அடுத்ததுக்கு போய்கிட்டே இருப்போம் !

வெற்றியாளர் தவிர்த்து மற்றவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இதில் எனக்குச் சிறு மன வருத்தம் இன்றளவும் உண்டு. (நான் மட்டுமா, இல்லை என் போன்று சிலரும் இருக்கிறார்களா ? தெரியவில்லை !!)

போட்டி என்று வரும்போது, எல்லோரும் நேரம் செலவிட்டு, ஆர்வத்தோடு கலந்துக்கிறோம். பரிசு கிடைக்கணும் என்பது இல்லை. நாம் எழுதுவதையும், ஒரு நாலு பேர் படித்து, ஒரு வரியாவது (நிறையோ, குறையோ) சொல்ல மாட்டாங்களா என்ற எண்ணம் தான்.

போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் சமயத்தில், கலந்து கொண்ட அனைவரது படைப்புக்களையும் பற்றி ஓரிரு வரிகள் எழுதி, அதை ஒரு பதிவாய்ப் பதிந்தால், அனைவரையும் கௌரவித்தது போல இருக்கும். பரிசு பெற்றவருக்கும் பெருமிதமாக இருக்கும். போட்டி நடத்துபவர்கள் இது போலச் செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும். உதாரணத்திற்கு சீனா ஐயாவின் இந்த விமர்சனப் பதிவு.

அந்த ஒரு வரி, படைப்பாளியின் அடுத்த படைப்பிற்கு உரமாக ஆகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதைத் தான் சீனா ஐயா செம்மையாக செய்து வருகிறார். போட்டி முடிந்தாலும், அனைவரது படைப்புக்களையும் வாசித்து, உள்வாங்கி, ஒரு சில வரிகள், அவர்களது படைப்பு பற்றி விமரிசித்து, அனைத்திற்கும் மேலாக, நம்மையும் படிக்கும் படி செய்து, படைப்பாளர்களை வாழ்த்தச் சொல்லி .... இப்படி நீள்கிறது பட்டியல் .... இதற்கெல்லாம் அவரது வயதும், அனுபவமும், ஈடுபாடுமே மூலதனம் என்றால், அதில் ஐயப்பாடு துளியும் இல்லை. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

*****

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" பற்றி ...

நண்பர் சிறில் அலெக்ஸ் அறிவித்த "பூக்களில் உறங்கும் மௌனங்கள்" போட்டி, தமிழ்மணம் வாசிப்போர் அனேகரும் அறிந்ததே. நான் கூட தலைப்பைப் பார்த்த அன்று, சரி ஏதோ வித்தியாசமான தலைப்பு என்று மட்டும் எண்ணி விட்டுவிட்டேன். கவிதை எழுதணும், போட்டியில கலந்துக்கணும் என்று முன் இருந்த ஆர்வம் குறைந்ததால் கூட இருக்கலாம் !

சில நாட்கள் முன்பு, தற்செயலாய் வலைச்சரம் மூலம், சீனா ஐயா அவர்களின் பதிவை வாசிக்க நேர்ந்த போது, அடுத்தடுத்துப் பல ஆச்சரியங்கள்.

போட்டியாளரே ஒரு கவிதையும் எழுதித் துவக்கி வைத்தது துணிச்சலான ஆச்சரியம்.

மேலே கூறிய (மற்றவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை) கூற்றை உடைத்து, அனைவரது படைப்பையும் வாசித்து, ஓரிரு வரிகள் எழுதி, சுட்டியும் தந்தது சீனா ஐயாவின் உழைப்பின் ஆச்சரியம்.

ஒவ்வொரு படைப்பாளரும் சொல்லிய கருத்துக்கள் ... "எதிர்காலம், அனாதைப் பிஞ்சுக்களின் மனம், மழலையில்லாத் தனிமை, நிராகரிக்கப்படும் பெண், ஈழம், இருள்" ... இப்படி எல்லோருமே தங்கள் தனித் திறமையைக் காட்டியது ஆச்சரியம்.

இறுதியில் சரியான ஒரு கவிதையைத் தேர்வு செய்தது ஆச்சரியத்தின் உச்சம்.

*****

சரி, போட்டியில் தான் கலந்து கொள்ளவில்லை, சீனா ஐயாவின் பதிவில், "நீங்க படித்து இப்படி விமர்சனம் சொல்வீர்கள் என்று தெரிந்தால், நானும் ஒரு கவிதை எழுதியிருப்பேனே" என்றேன்.

சற்றும் தயங்காமல், இச் சிறியவனின் சொல்லுக்கு, "அதற்கென்ன, இங்க இப்ப எழுதுங்க, படித்து உடனே கருத்து சொல்கிறேன்" என்று பதில் தந்தது ஆச்சரியத்தின் எல்லை ! இது மேலும் சிந்திக்க வைத்து கவிதை மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாகவும் வடிவமைக்க வழி வகுத்தது. நன்றி சீனா ஐயா, இதோ என் எளிய‌ கவிதை ...

*****

சுடும் வெய்யில்,
இடி மழை,
கடும் பனி,

எத்துயர் வரினும்
புத்துயிரோடு புன்னகைத்து,
விசயங்கள் பல‌ பொதிந்த‌

எளியோரின் மனம்போல்
அழகாய் அடுக்கிய‌
பூக்களில் உறங்கும் மௌனங்கள் !

*****

8 மறுமொழி(கள்):

cheena (சீனா)said...

சதங்கா,

கவிதை அருமை. பொருள் புதிது. நிறைகுடம் ததும்பாது - பெரியவர்கள் பேச மாட்டார்கள். மௌனம் ஆயிரம் கதை சொல்லும். இன்பமும் துன்பமும் ஒன்றே எனக் கொண்டவர்களிம் மௌனம் பாராட்டத்தக்கது. சிறு கவிதையின் கருத்துக்கு வாழ்த்துகள்.

கட்டுரை மன நெகிழ்வின் பிரதிபலிப்பு. சில நேரங்களில் சிலவற்றைப் படிக்கும்போது மனம் நெகிழும். ஏதேனும் செய்ய வேண்டும் எனத் தோன்றும். அப்பொழுது எழும் சிந்தனைகளுக்கு அணை கட்ட முடியாது.

//இறுதியில் சரியான ஒரு கவிதையைத் தேர்வு செய்தது ஆச்சரியத்தின் உயரம்.//

உயரம் என்ற சொல்லுக்குப் பதிலாக உச்சம் எனச் சொல்லலாமா ?

சதங்கா (Sathanga)said...

வாசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சீனா ஐயா.

பதிவு போட்டுட்டு, அப்படிப் போய் தங்கமணி கையால சாப்பிட்டுட்டு வந்து பார்த்தா, உங்க பின்னூட்டம் !!!

நீங்கள் கூறியது போல உச்சம் என்று மாற்றிவிட்டேன். இது நன்றாய் இருக்கிறது.

நாடோடி இலக்கியன்said...

அருமையான கற்பனை!
வாழ்த்துகள்!

பாச மலர் / Paasa Malarsaid...

எளிய அழகிய வரிகள்..அதிலும் அந்தக் கடைசி வரிகள்...

சிறில் அலெக்ஸ்said...

எளிமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

விசயங்கள் எனும் வார்த்தையில் ஒரு Break அடிக்கிறது.

சதங்கா (Sathanga)said...

நாடோடி இலக்கியன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

சதங்கா (Sathanga)said...

பாச மலர்,

// எளிய அழகிய வரிகள்..அதிலும் அந்தக் கடைசி வரிகள்...//

உங்கள் ரசனை கண்டு மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

சிறில் அலெக்ஸ்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

//விசயங்கள் எனும் வார்த்தையில் ஒரு Break அடிக்கிறது.//

எப்படி மாற்றலாம் என்றும் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பொருள் அது தான். சீனா ஐயாவின் விளக்கமான பின்னூட்டம் இதை தெளிவுபடுத்தும் என எண்ணுகிறேன். வேறு ஏதாவது பொருத்தமான வார்த்தை தோன்றினால் மாற்றுகிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !