Saturday, February 23, 2008

உயிர் காக்க உதவுங்கள்

எனது நண்பருடைய (நாகு) நண்பர் ராஜேஷ். சிலகாலம் வரை நம்மைப் போன்று இயல்பாய், இரு பிள்ளைகளோடும், மனைவியோடும், வயதான தந்தையோடும் வாழ்ந்து வந்தவர். மிகச் சுறு சுறுப்பாய் சுழன்று, படிக்கும் காலத்திலும், பின்னர் பணி புரிந்த காலத்திலும் மற்றவர்களுக்கு ஓயாத உதவி செய்தும் இருந்தவர்.

திடீரென லுகேமியா தாக்கவே, இவரது சராசரிக் குடும்பம் இடிந்து நின்றது. இந்த மாதிரி நேரங்களில், நண்பர்கள் எவ்வளவு உதவியாக இருப்பார்கள் என்பது கண்கூடு. ராஜேஷின் நண்பர்களும் அவ்வாறே. அவருக்கு வேண்டிய சின்னஞ்சிறு உதவி செய்து கொண்டேயிருக்க‌, இது "யானை வாயில் போட்ட சோளப் பொரி" போல விழுங்கிக் கொண்டேயிருந்தது. பல லகரங்களில் பணமும், பொருளாய் எலும்பு மஜ்ஜையும் தேவைப் படவே, இணையத்தை நாடினர்.

எனக்குத் தெரிந்து ரிச்மண்டில் வாழும் அவருடைய நண்பர்களின் பங்களிப்பு சொல்லில் அடங்காது. நண்பனின் உயிர் காக்க, பணம் வசூலிப்பிலும், எலும்பு மஜ்ஜை தானம் செய்யச் சொல்லி, பல விழாக்களில், பொதுமக்களிடம் படிவம் பூர்த்தி செய்வதும், அவ்வப்பொழுது இணையத்தில் ராஜேஷ் பற்றி எழுதுவதும் எனத் தொடர்ந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது ராஜேஷின் ரிச்மண்ட்வாழ் நண்பர்களின் மனைவிமார்கள் விழாக்களுக்கு சமைத்து கொடுத்து பணம் சேகரித்து வருகிறார்களாம். அவர்களின் உன்னதமான சேவைக்கு எனது வாழ்த்துக்கள்.

சவுதி, ஆசிய நாடுகள், மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா இங்கிருந்தெல்லாம் பல நல்ல உள்ளங்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் மனதாற நன்றிகள் பல. அது நின்றபாடில்லை, மேலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

பணமோ, பொருளோ உங்களால் ஆன மட்டும் உதவி செய்வீர் எனச் சொல்லி, ராஜேஷ் அவர்கள் எல்லா நலனும் பெற்று, தீர்க்காயுசுடன் வாழ, அந்த ஆண்டவனை மனமாற வேண்டிக்கொள்கிறேன். ராஜேஷிற்காக உங்கள் உதவி கோரி ஒரு சிறு கவிதை:


முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி,
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன், என்று
வள்ளல் பெருமக்கள் வாரி வ‌ழ‌ங்கிய‌தை
வாழ் நாளில் படிக்கின்றோம்.

இலாதார்க்கு ஈவதை இன்முகமாய் நம்முன்னோர்
இன்புற்று செய்தனரே, நாமும் அவ‌ர் வ‌ழி,
கோடிக‌ள் என்றில்லை ல‌க‌ர‌ங்க‌ளும் என்றில்லை
சிற்சிறுதுளி தந்து பெருந்துயர் போக்கிடுவோம்.

ச‌ம்ப‌ள‌ம் கூடுவ‌தும், விலைவாசி ஏறுவ‌தும்
ச‌க‌ஜ‌மான‌ இவ்வாழ்வில், வ‌ருமான‌ம் போதாமல்,
வ‌ருத்தும் லுகேமியாவோடு, வாழ்வை ந‌க‌ர்த்தும்,
வாலிப‌ர் ராஜேஷுக்கு உத‌விடுவீர்.

ஊருக்கு உதவி, த‌ன்க‌வ‌லை த‌னைமற‌ந்து,
பேரிட‌ர் நேர்கையில், மௌன‌மே சாட்சியாக‌,
ஓடியாடி உழைக்க விரும்பியும், விரும்பாத
ஓய்வெடுக்கும் ராஜேஷுக்கு உத‌விடுவீர்.

நம்மில் பலரும் நலமாய் இருந்திட‌
நாளும் பொழுதும் நன்கு கழிந்திட‌
வாழும் வரையில் பிறர்க்கு உதவிட‌
வழி வகுத்து வாழ்ந்திடுவோமே !


*****

விவரங்களுக்கு:
ராஜேஷுக்கு உதவ நண்பர்கள் அமைத்திருக்கும் வலைத்தளம் (http://www.helprajesh.com )
எலும்பு மஞ்சை தானம் குறித்து
KRS அவர்களின் பதிவு
விக்கி பசங்க பதிவு

6 மறுமொழி(கள்):

சேதுக்கரசிsaid...

ராஜேஷுக்கு விரைவில் match கிடைத்து, பூரண நலம்பெற வாழ்த்துக்கள்.

cheena (சீனா)said...

நண்பர் ராஜேஷ் பூரண நலம் பெற்று நல் வாழ்வு வாழ - எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய - உளமாற பிரார்த்திக்கிறோம்.

சதங்கா (Sathanga)said...

சேதுக்கரசி, சீனா ஐயா,

உங்கள் பிரார்த்தனைகள் நிச்சயமாக‌ ராஜேஷ் அவர்களுக்கு உதவும்.

cheena (சீனா)said...

நண்ப, இன்றைய தினம் சிறு உதவியாக - மழைத்துளியாக - ஒரு வங்கி வரைவோலை வேலூர் வங்கிக்கு அனுப்பி இருக்கிறேன்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

மிக்க மகிழ்ச்சி தங்களின் உதவிக்கு. நிச்சயம் சிறு துளி பெரு வெள்ளத்திற்கு வலு சேர்க்கும்.

நாகு (Nagu)said...

சதங்கா, சீனா, சேதுக்கரசி - ராஜேஷின் சார்பாக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !