Monday, February 25, 2008

கிராமத்து ஊருணி

வெளியில் சுட்டு
உள்ளுள் குளிர்ந்து
ஊருக்கு உதவிடும்
ஊரணிக்கோர் கவிதை.

நாற்புறம் குவிந்து
நடுவில் நீர்திரண்டு
சரிந்து கீழிறங்கும்
செம் மணற்பாதை.

கரையில் பிறந்து
காற்றில் தவழ்ந்து
மறுகரைக்கு உருளும்
நீரலை அடுக்குகள்.

தரைபரவி புற்கள்
கரைமுழுதும் மரங்கள்
காற்றின் வருகையிலே
கதைபேசும் இலைகள்.

உண்ட‌ புல்செறிக்க
ஊருணியின் உள்ளிரங்கும்
கரையோரம் புல்மேயும்
கால்நடைகள் ஏராளம்.

சளக்கென்று மீன்துள்ள‌
சத்தம் எதிரொலிக்கும்
மிதக்கும் நீர்த்தவளை
மருண்டு அடிபதுங்கும்.

குடத்தால் நீர்தள்ளி
குடத்தில் நீர்அள்ளி
கதைபேசி வம்பளந்து
நடைபோடும் இளம்பெண்கள்.

அடித்து மழைபெய்ய‌
ஆங்காங்கே அருவிபோல்
வழிப்பாதை நீர்வீழ்ச்சி
நல்வாழ்வும் நமக்காச்சு !

ஏப்ரல் 10, 2009 யூத்ஃபுல் விகடனில்

இந்தியா 1835 - Is this True ?

இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒன்றை கேள்விப்பட்டாலோ, வாசித்தாலோ இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்று தோன்றுகிறது.

அப்படி இன்று வந்த ஒரு மிகப் பழைய செய்தி. எனது சகோதரர் மென்மடலில் அனுப்பியிருந்தார். வாசித்து, இதுபற்றி அறிந்தவர்கள் மேலும் விளக்கம் தெரிவியுங்கள். நாம் எப்படி இருந்திருக்கிறோம் என்று நினைத்தாவது மகிழ்ச்சி கொள்வோம்.

செய்தி:

Saturday, February 23, 2008

பிரமிக்க வைக்கும் Tap Dance - Must see

சில மாதங்களாகவே, கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதும் youtube இணைய தளம் செல்வது வழக்கமாக ஆகிவிட்டது ;‍) எனக்கு மட்டும் தான் இப்படியா ? அப்படிச் செல்லும் போதெல்லாம் இந்த வீடியோ பல தடவை பார்த்திருக்கிறேன், பிரமித்திருக்கிறேன்.

எல்லோரும் ஆடுகின்றனரா, அல்லது எங்கேயாவது இசையைத் தட்டி விட்டு சும்மா, கையை ... மன்னிக்கவும், காலைத் தூக்குகிறார்களா என்று எண்ணினால், அட அடா. அற்புதம்.

இது டாப் டான்ஸ் (tap dance) என்று சிலரும், நதி நடனம் என்று சிலரும் விவாதித்து அங்கு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். எதுவா இருந்தா என்ன, மனதை மயங்க வைக்கும் எதுவும் அற்புதமே !!!!

தனியே ஆடிக்கொண்டிருக்கும் ஆடவர் சில நொடிகளில் அந்த இருள் படிகளில் ஏற‌, விளக்குகள் எறிய, அவ்வரிசையும், அதன் பின்னாலும் இருந்து பெண்களும், ஆண்களும் அணிவகுத்து, டப் டப் டப் என்று அனைவரும் கீழிறங்கி வந்து அமர்க்களப் படுத்த‌, வயலினின் இசை கசிவிலும், அதன் பின்னர் நடனம் முடியும் வரையிலும், மனம் நெகிழ்வது நிச்சயம்.

இந்த மாதிரி நல்ல விசயங்கள் ஏராளம் இவ்வுலகில் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் என்று இதோ வீடியோ. இசை ரசிகர்கள், கணினியின் ஒலி பெருக்கி அளவை முடிந்த மட்டும் உயர்த்தி வைத்து கேளுங்கள், வீடியோவையும் பார்த்து ரசியுங்கள்.

உயிர் காக்க உதவுங்கள்

எனது நண்பருடைய (நாகு) நண்பர் ராஜேஷ். சிலகாலம் வரை நம்மைப் போன்று இயல்பாய், இரு பிள்ளைகளோடும், மனைவியோடும், வயதான தந்தையோடும் வாழ்ந்து வந்தவர். மிகச் சுறு சுறுப்பாய் சுழன்று, படிக்கும் காலத்திலும், பின்னர் பணி புரிந்த காலத்திலும் மற்றவர்களுக்கு ஓயாத உதவி செய்தும் இருந்தவர்.

திடீரென லுகேமியா தாக்கவே, இவரது சராசரிக் குடும்பம் இடிந்து நின்றது. இந்த மாதிரி நேரங்களில், நண்பர்கள் எவ்வளவு உதவியாக இருப்பார்கள் என்பது கண்கூடு. ராஜேஷின் நண்பர்களும் அவ்வாறே. அவருக்கு வேண்டிய சின்னஞ்சிறு உதவி செய்து கொண்டேயிருக்க‌, இது "யானை வாயில் போட்ட சோளப் பொரி" போல விழுங்கிக் கொண்டேயிருந்தது. பல லகரங்களில் பணமும், பொருளாய் எலும்பு மஜ்ஜையும் தேவைப் படவே, இணையத்தை நாடினர்.

எனக்குத் தெரிந்து ரிச்மண்டில் வாழும் அவருடைய நண்பர்களின் பங்களிப்பு சொல்லில் அடங்காது. நண்பனின் உயிர் காக்க, பணம் வசூலிப்பிலும், எலும்பு மஜ்ஜை தானம் செய்யச் சொல்லி, பல விழாக்களில், பொதுமக்களிடம் படிவம் பூர்த்தி செய்வதும், அவ்வப்பொழுது இணையத்தில் ராஜேஷ் பற்றி எழுதுவதும் எனத் தொடர்ந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது ராஜேஷின் ரிச்மண்ட்வாழ் நண்பர்களின் மனைவிமார்கள் விழாக்களுக்கு சமைத்து கொடுத்து பணம் சேகரித்து வருகிறார்களாம். அவர்களின் உன்னதமான சேவைக்கு எனது வாழ்த்துக்கள்.

சவுதி, ஆசிய நாடுகள், மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா இங்கிருந்தெல்லாம் பல நல்ல உள்ளங்கள் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் மனதாற நன்றிகள் பல. அது நின்றபாடில்லை, மேலும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

பணமோ, பொருளோ உங்களால் ஆன மட்டும் உதவி செய்வீர் எனச் சொல்லி, ராஜேஷ் அவர்கள் எல்லா நலனும் பெற்று, தீர்க்காயுசுடன் வாழ, அந்த ஆண்டவனை மனமாற வேண்டிக்கொள்கிறேன். ராஜேஷிற்காக உங்கள் உதவி கோரி ஒரு சிறு கவிதை:


முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி,
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன், என்று
வள்ளல் பெருமக்கள் வாரி வ‌ழ‌ங்கிய‌தை
வாழ் நாளில் படிக்கின்றோம்.

இலாதார்க்கு ஈவதை இன்முகமாய் நம்முன்னோர்
இன்புற்று செய்தனரே, நாமும் அவ‌ர் வ‌ழி,
கோடிக‌ள் என்றில்லை ல‌க‌ர‌ங்க‌ளும் என்றில்லை
சிற்சிறுதுளி தந்து பெருந்துயர் போக்கிடுவோம்.

ச‌ம்ப‌ள‌ம் கூடுவ‌தும், விலைவாசி ஏறுவ‌தும்
ச‌க‌ஜ‌மான‌ இவ்வாழ்வில், வ‌ருமான‌ம் போதாமல்,
வ‌ருத்தும் லுகேமியாவோடு, வாழ்வை ந‌க‌ர்த்தும்,
வாலிப‌ர் ராஜேஷுக்கு உத‌விடுவீர்.

ஊருக்கு உதவி, த‌ன்க‌வ‌லை த‌னைமற‌ந்து,
பேரிட‌ர் நேர்கையில், மௌன‌மே சாட்சியாக‌,
ஓடியாடி உழைக்க விரும்பியும், விரும்பாத
ஓய்வெடுக்கும் ராஜேஷுக்கு உத‌விடுவீர்.

நம்மில் பலரும் நலமாய் இருந்திட‌
நாளும் பொழுதும் நன்கு கழிந்திட‌
வாழும் வரையில் பிறர்க்கு உதவிட‌
வழி வகுத்து வாழ்ந்திடுவோமே !


*****

விவரங்களுக்கு:
ராஜேஷுக்கு உதவ நண்பர்கள் அமைத்திருக்கும் வலைத்தளம் (http://www.helprajesh.com )
எலும்பு மஞ்சை தானம் குறித்து
KRS அவர்களின் பதிவு
விக்கி பசங்க பதிவு

Friday, February 22, 2008

சதுர தர்பூசணியும் சில படிப்பினைகளும்

ஜப்பான் எப்பவும், எதிலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு குட்டி நாடு. வேகமான‌ எந்திரமாகட்டும், விளையும் பொருட்களாகட்டும், தங்களுக்கென்று ஒரு தனித்தன்மை கொண்ட நாடு. உழைப்பிற்குப் பேர் பெற்றதும் இந்நாடே !

மிக வித்தியாசமாக, கற்பனைக்கு அப்பாற்பட்டு (!), செயல் வடிவம் தந்து, சதுர தர்பூசணி விளைவித்திருக்கிறார்கள் ! என்னது சதுர தர்பூசணியா, எப்படி சாத்தியம், சும்மா விளையாட்டாய் இருக்கும் என்று தான் நாம் எண்ணுவோம். மேலும் வாசியுங்கள்.



உருவில் பெரிதாய் உருண்டு வளர்ந்து நிறைய வெத்து இடங்களை இவை ஆக்கிரமித்து, விற்பனை அங்காடிகளில் இடப் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கென்ன செய்ய முடியும், அவை அப்படித் தான் விளையும் என்று நாம் விட்டுவிடுவோம். ஆனால் ஜப்பானிய‌ விவசாயிகள் ... அதை சதுரவடிவில் அங்காடிக்காரர்கள் விரும்பினால், நம்மால் எப்படி விளைவிக்க முடியும் என்று சிந்தித்து, செயல் படுத்தியும் காண்பித்திருக்கிறார்கள்.

எப்படி அவர்களுக்கு அது சாத்தியமாயிற்று ?! இதெல்லாம் கடின‌ம், முடியாது என்று நினைக்காமல், எப்படி முடியும் என்று அவர்கள் எண்ணியது முதல் படி. சதுர வடிவிலான பெட்டிகளில் அவற்றை வளர்க்கலாம் என ஜப்பானிய மூளைகளில் பொறி தட்டியது இரண்டாவது படி.



இப்படி சதுர வடிவில் விளைவித்த தர்பூசணிகளைக் கண்டு அங்காடிக்காரர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சேமிக்கும் இடமாகட்டும், செலுத்தும் வாகனமாகட்டும், முன்பை விட நிறைய பழங்களை ஏற்ற முடிந்ததில், இது மூன்றாவது படி. வாடிக்கையாளர்களுக்கும் இது ஆனந்தத்தை அளித்தது. குளிர்சாதனப் பெட்டியில், பெட்டி போல‌ அமர்ந்து கொள்வதில். இது நமக்குக் கிடைத்த‌து நல்லபடி.



இதிலிருந்து நாம் ஏதாவது கற்றுக் கொள்ள முடியுமா ? சில படிப்பினைகள் நிச்சயம் நமக்குப் பேருதவியாக இருக்கும். சிலவற்றைப் பார்போம்:

இது இப்படித் தான் என்று முடிவு கட்டாதீர்கள்: நாம் எப்போதுமே பெரிதாய் உருண்டு வளர்ந்த தர்பூசணிகளைப் பார்த்து வளர்ந்து, மிகத் தற்செயலாகவே, "சதுர வடிவிலா ? இது சாத்தியமே இல்லை" என்று, கேள்விக்கு முன்னேயே பதிலுரைப்போம். வாழ்வு முழுதும் பழக்கப்பட்ட காரணம் கூட, சில விநாடிகள் இது பற்றி நம்மைச் சிந்திக்க விடாமல் செய்யலாம். இதைத் தகர்த்து, இது இப்படித் தான் என்றில்லாமல், சில நொடிகள் வேறு எப்படிச் செய்யலாம் என்று சிந்தித்தால் மேலும் சிறப்புற வாழலாம். இது எளியதன்று, கடினம் தான். ஆனால் எப்படி வெளி வருவது, யோசியுங்கள். சில வேளைகளில் செய்யலாம் என்று தோன்றினாலும், நாம் செய்து முடிப்பதில்லை. அதனால், இதை எவ்வாறு செய்து முடிப்பேன் என்று தொடர்ந்து உங்களுள் கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள்.

உங்கள் நடத்தைகளைப் பற்றி உங்களுள் கேள்வி எழுப்புங்கள்: எதையாவது சாத்தியமாக்க முடியாது என்று மனம் சொன்னாலும், புத்தி என்ன சொல்கிறது என்று கேள்வி எழுப்புங்கள். நம் நடத்தைகளை பற்றி கேள்வி எழுப்பக் கற்றுக் கொண்டோமானால், நம்மை செம்மை படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். சிறப்பான சில நன்னடத்தைகள் நம்க்குக் கற்பிக்கப் படுகிறது, சில நாம் வாழிவில் காண்போரை, நமக்கு பிடித்திருக்கும் விசயங்களை, நாமாகக் கற்றுக் கொள்கிறோம். "கற்பது கடைசி வரை" என்பது எழுதப் படாத நியதி. அதனால், நான் இப்படித் தான், எனக்கு இவ்வளவு தான் தெரியும் என்று ஒரு சிறு வட்டதிற்குள் இருந்து விடாதீர்கள்.

படைப்பாளராக இருங்கள்: பிரச்சனைகளைச் சந்திக்கும்போது நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று, எப்படித் தீர்வு காணலாம் என்பதே அன்றி, "அச்சச்சோ, இப்படி வந்திருச்சே ! நான் என்ன பண்ணப் போறேனோ ?" என்று எண்ணாதிருப்பது. "இந்தச் சதுர தர்பூசணி விளைவிக்க வேண்டும், என்ன பண்ணுவீர்கள்" என்று நம்மில் பலரிடம் கேட்டால், இதெல்லாம் ஆகிற காரியம் இல்லை என்றும், அநேகர், இதை மரபு வழியாக எப்படி பண்ணலாம் என்று மேலும் கடின‌மாகச் சிந்திப்போம். அந்தக் கேள்வியை சற்று வேறு கோணத்தில், ஜப்பானிய விவசாயிகளைப் போலச் சிந்தித்தால், இந்தக் கடினமான கேள்விக்கு, எளிதான விடை கிடைக்கும் என்பது நிச்சயம்.

செம்மையாகச் செய்வது பற்றி யோசியுங்கள்: அங்காடிகள் சதுர வடிவில் தர்பூசணி கேட்டவுடன், உடனே பதிலைச் சொன்னால், அது முடியாது என்று தான் முதன் முதலில் வரும். பல முறை இந்தக் கேள்வியை நம்முள் கேட்டுக் கொண்டு, கிடைக்கும் விடைகளை ஒரு தாளில் குறித்துக் கொண்டேயிருங்கள். இது நல்ல குறிப்பாக பின்னாளில் வேறு பிரச்சனைகளுக்குக் கூட தீர்வாக அமையும். இதை விட என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று தொடர்ந்து உங்களை கேட்டுக் கொண்டேயிருங்கள். நிச்சயம் நம்மால் முடியும்.

முடியாததென்பது எதுவுமில்லை. நாம் பார்க்கும் விதங்களும், அனுகும் முறைகளும், செயல்படுத்தும் விதமுமே நம்மைச் செம்மையாய் வாழ வகுக்கும்.

*****

இதெல்லாம் எனது சொந்தக் கருத்து இல்லை. ஒரு ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். இன்று வந்த ஒரு மென்மடலில் (மின் அஞ்சல் என்று எத்தனை நாள் தான் சொல்றது, கொஞ்சம் வித்தியாசமா யோசிப்போமே !!!! :)) மேற்கண்ட கட்டுரை வந்திருந்தது. படித்து ஒரு கணம் திகைத்துத் தான் போனேன். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியதன் விளைவு மொழி பெயர்ப்பு. கூகிளாரிடம் முறையிட்டதில் தான் தெரிந்தது, செய்தி 2001 ஆண்டுப் பழையது என்று. பழசா இருந்தா என்ன, இது வரை தெரியாதவங்க இப்ப தெரிஞ்சிக்கட்டும் :)

மேலும் தகவலுக்கு சில சுட்டிகள்:

http://archives.cnn.com/2001/WORLD/asiapcf/east/06/15/square.watermelon/index.html
http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/1390088.stm
http://square-watermelons.com/

Monday, February 18, 2008

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" மற்றும் போட்டிகள் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்

ஒரு போட்டி அறிவிக்கப்பட்டவுடன் எல்லோரும் கவிதை, கதை எல்லாம் எழுதி அசத்த ஆரம்பிப்பார்கள். போட்டி நாள் முடியும் வரை, குறைந்தது இருபத்தி ஐந்திலிருந்து ஐம்பது பதிவாவது வரும். பின்னர் முடிவு அறிவிக்கப்பட்டு, பரிசு பெற்றவருக்குப் பின்னூட்டங்கள் போட்டு, அக்கடானு அடுத்ததுக்கு போய்கிட்டே இருப்போம் !

வெற்றியாளர் தவிர்த்து மற்றவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இதில் எனக்குச் சிறு மன வருத்தம் இன்றளவும் உண்டு. (நான் மட்டுமா, இல்லை என் போன்று சிலரும் இருக்கிறார்களா ? தெரியவில்லை !!)

போட்டி என்று வரும்போது, எல்லோரும் நேரம் செலவிட்டு, ஆர்வத்தோடு கலந்துக்கிறோம். பரிசு கிடைக்கணும் என்பது இல்லை. நாம் எழுதுவதையும், ஒரு நாலு பேர் படித்து, ஒரு வரியாவது (நிறையோ, குறையோ) சொல்ல மாட்டாங்களா என்ற எண்ணம் தான்.

போட்டி முடிந்து பரிசு அறிவிக்கும் சமயத்தில், கலந்து கொண்ட அனைவரது படைப்புக்களையும் பற்றி ஓரிரு வரிகள் எழுதி, அதை ஒரு பதிவாய்ப் பதிந்தால், அனைவரையும் கௌரவித்தது போல இருக்கும். பரிசு பெற்றவருக்கும் பெருமிதமாக இருக்கும். போட்டி நடத்துபவர்கள் இது போலச் செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும். உதாரணத்திற்கு சீனா ஐயாவின் இந்த விமர்சனப் பதிவு.

அந்த ஒரு வரி, படைப்பாளியின் அடுத்த படைப்பிற்கு உரமாக ஆகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதைத் தான் சீனா ஐயா செம்மையாக செய்து வருகிறார். போட்டி முடிந்தாலும், அனைவரது படைப்புக்களையும் வாசித்து, உள்வாங்கி, ஒரு சில வரிகள், அவர்களது படைப்பு பற்றி விமரிசித்து, அனைத்திற்கும் மேலாக, நம்மையும் படிக்கும் படி செய்து, படைப்பாளர்களை வாழ்த்தச் சொல்லி .... இப்படி நீள்கிறது பட்டியல் .... இதற்கெல்லாம் அவரது வயதும், அனுபவமும், ஈடுபாடுமே மூலதனம் என்றால், அதில் ஐயப்பாடு துளியும் இல்லை. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

*****

"பூக்களில் உறங்கும் மௌனங்கள்" பற்றி ...

நண்பர் சிறில் அலெக்ஸ் அறிவித்த "பூக்களில் உறங்கும் மௌனங்கள்" போட்டி, தமிழ்மணம் வாசிப்போர் அனேகரும் அறிந்ததே. நான் கூட தலைப்பைப் பார்த்த அன்று, சரி ஏதோ வித்தியாசமான தலைப்பு என்று மட்டும் எண்ணி விட்டுவிட்டேன். கவிதை எழுதணும், போட்டியில கலந்துக்கணும் என்று முன் இருந்த ஆர்வம் குறைந்ததால் கூட இருக்கலாம் !

சில நாட்கள் முன்பு, தற்செயலாய் வலைச்சரம் மூலம், சீனா ஐயா அவர்களின் பதிவை வாசிக்க நேர்ந்த போது, அடுத்தடுத்துப் பல ஆச்சரியங்கள்.

போட்டியாளரே ஒரு கவிதையும் எழுதித் துவக்கி வைத்தது துணிச்சலான ஆச்சரியம்.

மேலே கூறிய (மற்றவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை) கூற்றை உடைத்து, அனைவரது படைப்பையும் வாசித்து, ஓரிரு வரிகள் எழுதி, சுட்டியும் தந்தது சீனா ஐயாவின் உழைப்பின் ஆச்சரியம்.

ஒவ்வொரு படைப்பாளரும் சொல்லிய கருத்துக்கள் ... "எதிர்காலம், அனாதைப் பிஞ்சுக்களின் மனம், மழலையில்லாத் தனிமை, நிராகரிக்கப்படும் பெண், ஈழம், இருள்" ... இப்படி எல்லோருமே தங்கள் தனித் திறமையைக் காட்டியது ஆச்சரியம்.

இறுதியில் சரியான ஒரு கவிதையைத் தேர்வு செய்தது ஆச்சரியத்தின் உச்சம்.

*****

சரி, போட்டியில் தான் கலந்து கொள்ளவில்லை, சீனா ஐயாவின் பதிவில், "நீங்க படித்து இப்படி விமர்சனம் சொல்வீர்கள் என்று தெரிந்தால், நானும் ஒரு கவிதை எழுதியிருப்பேனே" என்றேன்.

சற்றும் தயங்காமல், இச் சிறியவனின் சொல்லுக்கு, "அதற்கென்ன, இங்க இப்ப எழுதுங்க, படித்து உடனே கருத்து சொல்கிறேன்" என்று பதில் தந்தது ஆச்சரியத்தின் எல்லை ! இது மேலும் சிந்திக்க வைத்து கவிதை மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாகவும் வடிவமைக்க வழி வகுத்தது. நன்றி சீனா ஐயா, இதோ என் எளிய‌ கவிதை ...

*****

சுடும் வெய்யில்,
இடி மழை,
கடும் பனி,

எத்துயர் வரினும்
புத்துயிரோடு புன்னகைத்து,
விசயங்கள் பல‌ பொதிந்த‌

எளியோரின் மனம்போல்
அழகாய் அடுக்கிய‌
பூக்களில் உறங்கும் மௌனங்கள் !

*****

Monday, February 11, 2008

அரிதாரத்தப் பூசிக் கொள்ள ஆசை



கருத்த மரக்கிளையும்
கருங்கூரை வீடுகளும்
கருந்தார்ச் சாலையும்
காய்ந்த புல்வெளியும்

இன்ன பிற ...

அசையாப் பொருட்களையும்
அரிதாரம் பூச வைக்கும்
வெள்ளைப் பூத் தூவலும்
வெண் மணற் சாறலும்.

நீண்ட கிளை விரித்து
மேனி முழுதும் வாரியிறைத்து
நாணி கோணி நிற்கும்
ஆடையில்லா மரம்,

பனிச்சறுக்கு விளையாட்டில்
பாத்திகட்டி விளையாடி
சிறுபிள்ளை செய்து கொண்ட‌
அரிதாரப் பூச்சு.

வெண் சேற்றில்
புதைந்து நிற்கும்
உயர்ந்த வீடுகளின்
பரந்த கூரை மேல்,

விழாமல் ஒட்டிய‌
வெண் பனித் தூவல்
அவசரத்தில் செய்து கொண்ட‌
அரிதாரப் பூச்சு.

நீளும் தார்ச்சாலை
நாளும் வாகன மேனி
நடுநிசிக் குளிரில்
வெண் கம்பளி போர்த்தி,

சற்றும் சளைக்காமல்
சேற்றுக் கலவையாய்
அடித்துச் சிதறிய‌
அரிதாரப் பூச்சு.

பரந்து விரிந்த வானத்தை
ஓரிடத்தில் முட்டும்
மேடு பள்ளம்
மிகுந்த புல்வெளி,

அளவாக அழகேற்றும்
அழகுப் பெண்கள் போல்
சீராகச் செய்து கொண்ட‌
அரிதாரப் பூச்சு.

Friday, February 1, 2008

மழையும், சிறுவர்களும், நானும் ...



மேகம் கருக்குது
மின்னல் வெளுக்குது
மழையே மழையே
பெய் பெய் பெய்

ஆடுது ஆட்டம்
சிறுவர்கள் கூட்டம்
மழையின் நீரில்
தை தை தை

வேர்களின் வாசனை
காற்றினில் பறக்குது
மண்ணில் கையை
வை வை வை

காற்றின் வேகம்
சீற்றம் கொண்டு
ஏற்படும் சத்தம்
உய் உய் உய்

அப்பாவின் அழைப்பில்
ஆட்டத்தைக் குறைத்து
நட்புக் கூட்டத்திற்கு
பை பை பை

அடுக்கு மாடியில்
அம்மா சுடும்
தோசையின் ஓசை
சொய் சொய் சொய்

தலையைத் துவட்டி
தாவிக் குதித்து
தட்டில் கைவைத்துப்
பிய் பிய் பிய்