Thursday, April 24, 2008

கிராமத்து மீசை


Photo Courtesy: ta.wikipedia.org

முகவாயின் மேலிருந்து
அருவியெனச் சரிந்து
ஆறாய் ஓடும் மீசை.

உருளும் ஐயனாரின்
விழியென விரிந்து
மிரட்டும் முரட்டு மீசை.

முத்தமிடும் சிறுபிள்ளை
குத்துதெனச் சத்தமிடும்
முள்ளுக் கம்பி மீசை.

விரலால் திருகி ஏற்றி,
கடு கடுக் கண்ணோடு
கம்பீரம் காட்டும்‌ மீசை.

கருப்பு வெள்ளைப் புற்க‌ளாய்
காது ம‌ட‌ல் தொட்டிடும்
கூர் அரிவாள் மீசை.

அண்டை அசலார்
கொண்ட பயம் கண்டு
கர்வம் கொள் மீசை.

வெடித்த பருத்தியென
படர்ந்து பொதிந்திருக்கும்
புசுபுசு வெள்ளை மீசை.

உதட்டின் ஈரம் காக்க‌
வேய்ந்த கூரை யென‌
சரிந்து நிற்கும் மீசை.

துன்பம் வரும் நேரத்திலும்
துவளாத மனம் கொண்டு
தளரா திருக்கும் மீசை.

செயல் ஒன்றைச் சாதிக்க‌,
புறங்கை வருடி
பெருமை கொள் மீசை.

பலரின் பெயராய்
பரிகசித்தோ, பாசத்தோடோ
அழைக்கப் படும் மீசை !

ஏப்ரல் 04, 2009 யூத்ஃபுல் விகடனில்

Friday, April 18, 2008

அய‌ல்நாட்டுக் கணிப்பொறியாளன் க(வி)தை



விசைப்பலகை கிடுகிடுக்க‌
விரலாடும் நடனம்,
ஓசையோடு இழுபடும்
உள்ளங்கை எலி.

எட்டுமுத‌ல் ஐந்துவ‌ரை
என்ப‌து பேருக்கே,
பொழுதுங் க‌ழிந்துபோகும்
சிற்சிறிய‌ பிழைதேடி !

கிடைக்கும் நேர‌த்தில்
மிடுக்காய் உடைய‌ணிந்து,
துடிப்பாய் திரிகின்றார்
த‌னித்து வாழ்கின்றார்.

வெட்டி ஒட்டுத‌லில்
வாழ்க்கை ந‌கர்த்தி,
ஒட்டு உறவுகளை
விட்டு விலகுகிறார்.

ஆங்கில‌த்தில் குழந்தைக‌ள்
அள‌வ‌ளாவும் அழ‌கினிலே,
தாய்மொழி ம‌ற‌க்கின்றார்
த‌ற்பெருமை கொள்கின்றார்.

சொந்த‌ ம‌ண்நோக்கி
செல்ல‌ நினைத்திடவே,
சுட்டிப் பிள்ளைக‌ளுக்கோ
ந‌ம்நாடு வெளிநாடாம் !

அய‌ல்நாட்டில் த‌னித்து
ஆண்டுக‌ள் ப‌லசென்று,
தாய்நாட்டில் உலவினாலும்
தனியனாய் தெரிகின்றார்.

பிறந்த மண்
வளர்ந்த ஊர்,
பக்கம் செல்வ‌தெல்லாம்
ப‌டிப்ப‌டியாய் குறைத்து,

இர‌ண்ட‌டுக்கு வீடும‌னை
ஒன்றுக்குமேல் வாக‌ன‌ங்க‌ள்,
லட்சங்களில் ‌வ‌ருவாய்
ப‌ட்ச‌ணம்போல் கரைக்கின்றார்.

பரதேச வாழ்வுதனில்
பம்பரமாய் சுழன்று,
பலசுகங்கள் இழக்கின்றார்
ப‌க‌ட்டாய் வாழ்கின்றார் !

Monday, April 14, 2008

எதிலும் உன் நினைவாய் !



வெற்றிலை இதழ் சிவப்பும்,
மருதாணி நகச் சிவப்பும்,
முன்கோப முகச் சிவப்பும்,

மெல்லிய இடைச் சிவப்பும்,
உள்ளங் கைச் சிவப்பும்,
உன்பாத விரல் சிவப்பும்,

உள்ளத் துள் கரைந்து
உருகும் இரும் பென‌
உன்நினைவால் நான் சிவந்தேன்.

பச்சரிசிப் பல் சிரிப்பும்,
எளிற்தெரியும் வெளிர் சிரிப்பும்,
நகக்கீற்றுப் புன் சிரிப்பும்,

மயக்கும் மன்மதச் சிரிப்பும்,
மணக்கும் மல்லிகைச் சிரிப்பும்,
கலகலக்கும் வெண்கலச் சிரிப்பும்,

உள்ளத் துள் நிறைந்து
சலசலக்கும் அருவி யென‌
உன்நினைவால் நான் சிரித்தேன்.

உருகும் மனச் சிறப்பும்,
உதவும் குணச் சிறப்பும்,
மிதமான மொழிச் சிறப்பும்,

நேர்கொண்ட நடைச் சிறப்பும்,
கண்பேசும் காந்தச் சிறப்பும்,
விண்போற்றும் மதிச் சிறப்பும்,

எதிலும் உன் நினைவாய்
இதயம் சிந்திக்க‌,
உன்நினைவால் நான் சிறந்தேன் !

Monday, April 7, 2008

தத்தி நடை பழகி


(Photo courtesy: shareadventures.net)

உன் பாதம்
தரையில் விழ‌
என் கரங்கள்
அதைத் தாங்கும்.

பிஞ்சு விரல்
கை பிடித்து
பஞ்சு போல‌
நடை போடும்.

இரண்டடி எடுத்து
இடறி விழுந்து
சிரித்துக் கண்சிமிட்டி
கையூன்றி எழுந்திடுவாய்.

தத்தி நடை பழகி
தாவி மார் ஏறி
தாத்தாவின் மேலாடை
நனைப்பதெல்லாம் நினைவுகளில் !

உன் தந்தை விளையாட‌
என் தந்தை சேர்ந்தாட‌
தெருவெலாம் குதூகலம்
பெருநாளாம் எந்நாளும் !

அன்றைய வேடிக்கை
இன்றும் தொடர்ந்திருக்க‌
பேரப் பிள்ளை விளையாட்டை
குறும்படத்தில் காணுகின்றேன் !

தொலை பேசியின் வழி
மழலைச் சொல் கேட்கின்றேன்
புகைப் படத்தின் ஊடே
உன் வளர்ச்சி காண்கின்றேன் !

வேடிக்கை நிறைந்த‌
வேகமான இவ்வாழ்வில்
வேதனை களைந்திட‌
விரைந்து வாராயோ ?

தத்தி நடை பழகி
தாவி மார் ஏறி
பிஞ்சுக் கரம் தொட
கெஞ்சுகிற தென் மனம் !

-----

தங்கள் பேரன், பேத்திகளுடன் விளையாட முடியவில்லையே என ஏக்கத்துடன் இந்தியாவில் வசிக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் இக்கவிதை காணிக்கை, எனது பெற்றோர்களுக்கும் சேர்த்து !

Thursday, April 3, 2008

எண்ணும் எழுத்தும் - பதினொன்றாம் வாய்ப்பாடு

சொற்களை மாற்றி அமைத்து எப்படி கவிதை, கதை அமைக்கிறோமோ, அது போல எண்களையும் மாற்றிப் போட்டு பல அதிசயங்கள் நாம் நம் நண்பர்களுக்கு செய்து காண்பித்திருப்போம், அல்லது நண்பர்கள் நமக்கு கற்றுத் தந்திருப்பார்கள்.

அப்படி ஒன்று, எளிதான பதினொன்றாம் வாய்ப்பாடு. சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர், எந்த ஒரு இரண்டு இலக்க எண்ணையும் பதினொன்றால் பெருக்கினால் வரும் விடையை, சில நொடிகளில் தங்கு தடையின்றி சொல்லி அசத்தினார்.

சில உதாரணங்கள்:
(i) 45ஐ பதினொன்றால் பெருக்கினால், 495.
(ii) 87ஐ பெருக்கினால், 957.
(iii) 99 = 1089.

இதுல ஏதோ விசயம் இருக்கிறதென்று அவரைத் துறுவியதில், சிதறிய துளிகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க.

நான்கு படிகளில் விடையைச் சொல்லலாம் என்றார்.

முதல் படி: இரு எண்களையும் பிரித்துக் கொள்ளுங்கள்
இரண்டாம் படி: அதைக் கூட்டிவைத்துக் கொள்ளுங்கள்
மூன்றாம் படி: இரு எண்களுக்கும் நடுவில் கூட்டிய விடையை பொருத்துங்கள்
நான்காம் படி: கூட்டுத் தொகை இரு இலக்கமாக இருக்கும் பட்சத்தில், இரண்டாம் இலக்க எண்ணை, பிரித்த எண்களின் நடுவில் சேர்த்து, முதல் இலக்க எண்ணை இடது புறம் இருக்கும் எண்ணோடு கூட்டிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான், இந்த நான்கு படிகளையும் சில முறை ஏறி இறங்கினால், பதினொன்றாம் வாய்ப்பாடு என்றும் நம் சிந்தனையில் என்றார்.

அருமையா இருக்கே யோசனை ...

எவ்வாறு என்று மேற்சொன்ன உதாரணங்களைக் கூறுபோடலாமா ?

உதாரணம் 1: 45ஐ பதினொன்றால் பெருக்க:

முதல் படி: இரண்டு எண்களயும் பிரிக்க வேண்டும்
4 5
இரண்டாம் படி: அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
9
மூன்றாம் படி: கூட்டுத் தொகையை நடுவில் பொருத்த வேண்டும்
விடை: 495
நான்காம் படி: கூட்டுத் தொகை இரண்டு இலக்கமாக இருக்கும் பட்சத்தில். இந்த உதாரணத்தில் ஒர் இலக்கம், அதனால் இந்தப் படியை தாண்டி விடலாம்.

-----

உதாரணம் 2: 87ஐ பதினொன்றால் பெருக்கினால்,

முதல் படி: இரண்டு எண்களயும் பிரிக்க வேண்டும்
8 7
இரண்டாம் படி: அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
15
மூன்றாம் படி: கூட்டுத் தொகையை நடுவில் பொருத்த வேண்டும், ஆனால்
கூட்டுத் தொகை இரண்டு இலக்கம், அடுத்த படிக்குச் செல்லுங்கள்.
நான்காம் படி: கூட்டுத் தொகையின் இரண்டாம் இலக்க எண்ணை (5) நடுவில் பொருத்தி, முதல் இலக்க எண்ணை (1) இடது புறம் இருக்கும் எண்ணோடு (8) கூட்டிக் கொள்ளவும்.
விடை:957

இந்த எளிய முறை குட்டீஸுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். நமக்கும் தான் !!!

மீண்டும் சந்திப்போம்.