Friday, April 18, 2008

அய‌ல்நாட்டுக் கணிப்பொறியாளன் க(வி)தை



விசைப்பலகை கிடுகிடுக்க‌
விரலாடும் நடனம்,
ஓசையோடு இழுபடும்
உள்ளங்கை எலி.

எட்டுமுத‌ல் ஐந்துவ‌ரை
என்ப‌து பேருக்கே,
பொழுதுங் க‌ழிந்துபோகும்
சிற்சிறிய‌ பிழைதேடி !

கிடைக்கும் நேர‌த்தில்
மிடுக்காய் உடைய‌ணிந்து,
துடிப்பாய் திரிகின்றார்
த‌னித்து வாழ்கின்றார்.

வெட்டி ஒட்டுத‌லில்
வாழ்க்கை ந‌கர்த்தி,
ஒட்டு உறவுகளை
விட்டு விலகுகிறார்.

ஆங்கில‌த்தில் குழந்தைக‌ள்
அள‌வ‌ளாவும் அழ‌கினிலே,
தாய்மொழி ம‌ற‌க்கின்றார்
த‌ற்பெருமை கொள்கின்றார்.

சொந்த‌ ம‌ண்நோக்கி
செல்ல‌ நினைத்திடவே,
சுட்டிப் பிள்ளைக‌ளுக்கோ
ந‌ம்நாடு வெளிநாடாம் !

அய‌ல்நாட்டில் த‌னித்து
ஆண்டுக‌ள் ப‌லசென்று,
தாய்நாட்டில் உலவினாலும்
தனியனாய் தெரிகின்றார்.

பிறந்த மண்
வளர்ந்த ஊர்,
பக்கம் செல்வ‌தெல்லாம்
ப‌டிப்ப‌டியாய் குறைத்து,

இர‌ண்ட‌டுக்கு வீடும‌னை
ஒன்றுக்குமேல் வாக‌ன‌ங்க‌ள்,
லட்சங்களில் ‌வ‌ருவாய்
ப‌ட்ச‌ணம்போல் கரைக்கின்றார்.

பரதேச வாழ்வுதனில்
பம்பரமாய் சுழன்று,
பலசுகங்கள் இழக்கின்றார்
ப‌க‌ட்டாய் வாழ்கின்றார் !

20 மறுமொழி(கள்):

அத்திவெட்டி ஜோதிபாரதிsaid...

உண்மைக் கவிதையும் அழகுதான்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

நாகு (Nagu)said...

என்னைப் பற்றி எழுத வேண்டாமென்று எத்தனை முறை சொல்வது உங்களுக்கு :-)

ஆணி பிடுங்குவதையும் கவிதையில் அழகாக வடித்திருக்கிறீர்கள்.

சதங்கா (Sathanga)said...

ஜோதிபாரதி,

உண்மை கசக்கும் என்பார்கள். கண்டு கொண்டு பாராட்டியமைக்கு நன்றி.

சதங்கா (Sathanga)said...

//என்னைப் பற்றி எழுத வேண்டாமென்று எத்தனை முறை சொல்வது உங்களுக்கு :-)//

மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ கம்ப சூத்திரத்தை வெளியிட்டதைப் போல் ஆவேசப் படாதீர்கள். நாம் எல்லாம் ஒரே படகில் பயணிப்பவர் தாமே ! ;)

Kavinayasaid...

//அய‌ல்நாட்டில் த‌னித்து
ஆண்டுக‌ள் ப‌லசென்று,
தாய்நாட்டில் உலவினாலும்
தனியனாய் தெரிகின்றார்.//

உண்மை. இங்கேயும் தனிதான்; அங்கேயும் தனிதான்.

Anonymoussaid...

அழகாக சொல்லிவிட்டீர்கள்
அயல் நாட்டினரின்.... வாழ்க்கையை....

கவிதைகள் அருமை, வாழ்த்துக்கள்...

manjoorrajasaid...

இன்றைய நிலையை அருமையாக எடுத்தாண்டுள்ளீர்கள்.
சமீபத்தில் படித்த காசி ஆனந்தனின் “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற கவிதை நினைவிற்கு வந்ததது.

கவிதையின் சாரம் கருதி முத்தமிழ் கூகுள் குழுமத்தில் மீள்பதிவு செய்துள்ளேன். நன்றி.

http://groups.google.com/group/muththamiz/browse_frm/thread/a36d5b63b3df2829#

சதங்கா (Sathanga)said...

கவிநயா,
//
உண்மை. இங்கேயும் தனிதான்; அங்கேயும் தனிதான்.
//

வாசித்தலுக்கும், ஒரே கருத்துக்கள் கொண்ட மனதிற்கும் மிக்க நன்றி.

-----

அதிரை அபூபக்கர்,

//
அழகாக சொல்லிவிட்டீர்கள்
அயல் நாட்டினரின்.... வாழ்க்கையை....
//

மிக்க நன்றி அபூபக்கர்.

-----

மஞ்சூர் ராசா,

//
இன்றைய நிலையை அருமையாக எடுத்தாண்டுள்ளீர்கள்.
//

மிக்க நன்றி மஞ்சூர் ராசா. முத்தமிழிலில் மீள்பதிவு செய்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன்said...

சொந்த‌ ம‌ண்நோக்கி
செல்ல‌ நினைத்திடவே,
சுட்டிப் பிள்ளைக‌ளுக்கோ
ந‌ம்நாடு வெளிநாடாம் !//
இதுதான் மிக்க சோகம்.

சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை...இந்தப் பாட்டு நினைவுக்கு வருகிறது.
வாடுவது யார் என்றும் தோன்றுகிறது. நல்லதொரு கவிதை.நன்றி சதங்கா.

Jayakanthan - ஜெயகாந்தன்said...

//இர‌ண்ட‌டுக்கு வீடும‌னை
ஒன்றுக்குமேல் வாக‌ன‌ங்க‌ள்,
லட்சங்களில் ‌வ‌ருவாய்//

இப்பல்லாம் இந்தியால வேலை செஞ்சாத்தான் இதெ பத்தி யோசிக்க முடியும். எங்க ஊர்ல 2 படுக்கயறை கொண்ட சுமாரான அபார்ட்மெண்ட் 60-75 லகரம்!! சதங்கா நம்மூர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கிறேன்!

சதங்கா (Sathanga)said...

டீச்சர் அம்மா,

//சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை...இந்தப் பாட்டு நினைவுக்கு வருகிறது.
வாடுவது யார் என்றும் தோன்றுகிறது. நல்லதொரு கவிதை.நன்றி சதங்கா.//

கவிதையை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

வாங்க ஜெய்,

நம்மூர்ல விலை ஏகத்துக்கும் ஏறிப்போச்சு என்பதை நல்லாச் சொல்லியிருக்கிறீர்கள். ஹும் ... என்னத்தச் சொல்றது. உள்ளூர் கணிப்பொறியான் கவிதை என்று ஒன்று எழுதிவிடுவோம் :)

Agathiyan John Benedictsaid...

உண்மையை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள். இதுபோன்று நான்கூட ஒன்று கிறுக்கி இருக்கிறேன். படித்துப் பாருங்கள். நன்றி.

சதங்கா (Sathanga)said...

ஜான்,

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

உங்கள் கிறுக்கலைப் பார்த்து அதிசயித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்.

ஜீவிsaid...

//விசைப்பலகை கிடுகிடுக்க‌
விரலாடும் நடனம்,
ஓசையோடு இழுபடும்
உள்ளங்கை எலி.//

ஆரம்பமே அட்டகாசம், சதங்கா!

ஆனால் பிறந்த நாட்டுக்கு வந்து நிலைபெற வேண்டுமென்கிற தேவையின் அடிப்படையிலான எண்ணம் கூட ஏதோ யோசனையின் அடிப்படையிலேயே ஒத்திப்போடப்படுகிறது.
இங்கிருப்பவர்கள் அறியாத அதை அங்கிருப்பவர்கள் தாம் சொல்லவேண்டும்.

சதங்கா (Sathanga)said...

ஜீவி,

//ஆரம்பமே அட்டகாசம், சதங்கா!//

மிக்க நன்றி.

//ஆனால் பிறந்த நாட்டுக்கு வந்து நிலைபெற வேண்டுமென்கிற தேவையின் அடிப்படையிலான எண்ணம் கூட ஏதோ யோசனையின் அடிப்படையிலேயே ஒத்திப்போடப்படுகிறது.
இங்கிருப்பவர்கள் அறியாத அதை அங்கிருப்பவர்கள் தாம் சொல்லவேண்டும்.//

ஒரு gap விழுந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். நிறைய காரணங்கள் சொன்னாலும், முதன் முதலாய் இருப்பது, "நாம் வளர்ந்த ஊரில் நாம் போய் இருக்க நினைப்பது போல, இங்கு வளரும் நம் குழந்தைகள் இங்கு இருக்கவே விரும்புகிறார்கள்". இதை விரிவாக இன்னும் யாராவது எழுதினால் நன்றாக இருக்கும் :))

வல்லிசிம்ஹன்said...

சதங்கா, நான் டீச்சர் இல்லைப்பா.

வெறும் பாட்டி.
பெற்ற பிள்ளைகள் வெளியூர்களில் இருப்பதால் அவர்களையே நினைக்கும்,
எண்ணிக்கைகளில் ஆயிரங்களைத் தொட்ட பல பெற்றோர்களில் நானும் ஒருத்தி.:))வல்லிம்மா,.

சதங்கா (Sathanga)said...

வல்லி அம்மா,

மன்னிக்கவும். சில பதிவுகளில் உங்களை சிலர் அப்படி அழைத்ததைப் பார்த்து, நீங்கள் டீச்சர் தான் என்று நினைத்துவிட்டேன்.

பாட்டிமா என்றாலும் பலருக்கும் ஏதாவது யோசனை சொல்லிக் கொண்டிருப்பதனால், நீங்களும் டீச்சர் தானே !!! விழுந்தாலும் 'மீசை'யில் மண் ஒட்டிருக்குனா சொல்லுவோம் ;)

வல்லிசிம்ஹன்said...

ஆஹா எனக்கும் டீச்சராய் கையில ஸ்கேல் வச்சிக்க ஆசைதான்:)

ஏற்கனவே துளசி கோபாலும், கண்மணியும் வரலாற்றுப் புகழ் நிறைந்த டீச்சரா இருக்காங்க:)
அதனால் நான் ஒண்ணாப்பு டீச்சரா வேணா இருக்கேன்.ஓஹோ, உங்களுக்கும் மீசை உண்டா!!!!
சொல்லவே இல்லையே.:)

சதங்கா (Sathanga)said...

இனிமேல் என்ன இருக்கு. நீங்க டீச்சராவே ஆகிட்டீங்க :)

//ஆஹா எனக்கும் டீச்சராய் கையில ஸ்கேல் வச்சிக்க ஆசைதான்:)//

நீங்க கையில மௌஸ் வச்சிருக்கற டீச்சர். யாராவது சொல்ற பேச்சுக் கேக்கலன்னா, வாலப் புடிச்சு இழுத்து சாத்தலாம் இல்லையா ?!!!

//ஏற்கனவே துளசி கோபாலும், கண்மணியும் வரலாற்றுப் புகழ் நிறைந்த டீச்சரா இருக்காங்க:)//

அவங்க புகழ் நாம சொல்லியா வலையுலகம் அறியும். அவங்க தான் புகழின் உச்சியில் தினம் தினம் கலக்கிக் கொண்டிருக்கிறார்களே.

//அதனால் நான் ஒண்ணாப்பு டீச்சரா வேணா இருக்கேன்.//

என்ன இப்படிச் சொல்லிப்புட்டீங்க ? அப்ப நாங்கள்லாம் ஒண்ணாப்பு ஸ்டூடன்ஸ்-ஆ ;) !!

//ஓஹோ, உங்களுக்கும் மீசை உண்டா!!!!
சொல்லவே இல்லையே.:)//

ஆஹா, என்ன கேள்வி இது. அதான் ஆசை மீசைக்கு ஒரு பதிவே போட்டாச்சே, இன்னுமா சந்தேகம் !!!

Post a Comment

Please share your thoughts, if you like this post !