Monday, April 7, 2008

தத்தி நடை பழகி


(Photo courtesy: shareadventures.net)

உன் பாதம்
தரையில் விழ‌
என் கரங்கள்
அதைத் தாங்கும்.

பிஞ்சு விரல்
கை பிடித்து
பஞ்சு போல‌
நடை போடும்.

இரண்டடி எடுத்து
இடறி விழுந்து
சிரித்துக் கண்சிமிட்டி
கையூன்றி எழுந்திடுவாய்.

தத்தி நடை பழகி
தாவி மார் ஏறி
தாத்தாவின் மேலாடை
நனைப்பதெல்லாம் நினைவுகளில் !

உன் தந்தை விளையாட‌
என் தந்தை சேர்ந்தாட‌
தெருவெலாம் குதூகலம்
பெருநாளாம் எந்நாளும் !

அன்றைய வேடிக்கை
இன்றும் தொடர்ந்திருக்க‌
பேரப் பிள்ளை விளையாட்டை
குறும்படத்தில் காணுகின்றேன் !

தொலை பேசியின் வழி
மழலைச் சொல் கேட்கின்றேன்
புகைப் படத்தின் ஊடே
உன் வளர்ச்சி காண்கின்றேன் !

வேடிக்கை நிறைந்த‌
வேகமான இவ்வாழ்வில்
வேதனை களைந்திட‌
விரைந்து வாராயோ ?

தத்தி நடை பழகி
தாவி மார் ஏறி
பிஞ்சுக் கரம் தொட
கெஞ்சுகிற தென் மனம் !

-----

தங்கள் பேரன், பேத்திகளுடன் விளையாட முடியவில்லையே என ஏக்கத்துடன் இந்தியாவில் வசிக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் இக்கவிதை காணிக்கை, எனது பெற்றோர்களுக்கும் சேர்த்து !

10 மறுமொழி(கள்):

பித்தன் பெருமான்said...

சதங்கா,

கவிதை நடை குழந்தையின் நடையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

கவிதை, ஒன்றுக்கு மேற்பட்டோர் பார்வையில் பயணிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

உ-ம்:
தத்தி நடை பழகி...

உன் தந்தை விளையாட‌...

இரு சந்தங்களும் ஒருவருடைய பார்வையில் இருக்க,

அன்றைய வேடிக்கை...
தொலை பேசியின் வழி...
வேடிக்கை நிறைந்த‌...
தத்தி நடை பழகி...

இந்தச் சந்தங்கள் ஒரு தாத்தா அல்லது பாட்டியின் பார்வையில் பதிவாகியிருக்கிறது.

வேடிக்கை நிறைந்த‌
வேகமான இவ்வாழ்வில்
வேதனை களைந்திட‌
விரைந்து வாராயோ? என்ற சந்தத்தை

விரைந்து நீ வாராயோ?

என்று முடித்தால் அதிக கனம் சேருவது போல இருக்கிறது.

அருமையான முயற்சி.

பித்தன்.

ஜீவிsaid...

அருமையான நினைவுகளை மீட்டி, மீண்டும் நினைக்கவைத்தக் கவிதை.
மிக்க நன்றி, சதங்கா!

சதங்கா (Sathanga)said...

பித்தன்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

கவிதை, தாத்தாவின் பார்வையில் பேரனைப் பற்றி தான் முழுவதும் சொல்லியிருக்கிறேன். ஒருவேளை 'டிஸ்கி'யில் பெற்றோர் என்று போட்டது குழப்பிவிட்டதோ என்னவோ. மன்னிக்கவும்.

ஒரு சிறு திருத்தம், 'எல்லாம் நினைவுகளில்' என்று செய்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

உங்கள மனம்திறந்த கருத்துக்களுக்கு நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

மிக்க நன்றி ஜீவி. இந்த தாக்கம் ஒவ்வொரு முறை ஊருக்கு தொலை பேசும் போதும் அனுபவித்தது. உங்கள் நினைவுகளை மீட்டி அனுபவித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

கவிநயாsaid...

//என் தந்தை சேர்ந்தாட‌//

தாத்தாவின் பார்வைன்னு சொல்லும்போது இந்த வரிதான் புரியல. கொள்ளுத்தாத்தாவையும் சேர்த்துக்கிட்டீங்க போல! கவிதை நல்லாருக்கு.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள் பல. ஆமாங்க, நாலு தலைமுறையை கவிதையில் இணைத்தாச்சு :)

cheena (சீனா)said...

சதங்கா,

படம் அருமை - மனமகிழ்கிறது. படத்துக்குப் போடப்பட்ட கவிதை எனக் கூறலாம்.

காலத்தின் கட்டாயம் அயலகத்தில் அன்புப்பிள்ளைகள் அருமைப்பெயரன் பெயர்த்திகள். இங்கு மூத்த தலைமுறை புகைப்படங்களிலும், இணையத்தொடர்பினுலும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையப் பேச்சினிலும் பொழுதைக் கழித்து இன்பம் காண வேண்டிய சூழ்நிலை. கூட்டுக் குடும்பம் என்னும் சொல்லே மறந்து போனதே ! இங்கும் இந்தியாவிலும் பல்வெறு நகரங்களில் தலைமுறைகள் சிதறுகின்றன.

என்ன செய்வது

இணையத்திற்கு நன்றி .

//இரண்டடி எடுத்து
இடறி விழுந்து
சிரித்துக் கண்சிமிட்டி
கையூன்றி எழுந்திடுவாய்.//

இக்காட்சிகள் நினைவுகளைத் தூண்டுகின்றன. பதறும் நெஞ்சத்துடன் தூக்கி விட ஓடும் போது கையூன்றி எழுந்து சிரித்துக் கண் சிமிட்டும் மழலை - அடடா அடடா - வாழ்க்கையின் பல பொன்னான தருணங்கள் நழுவிப் போய் விடுகின்றன.

நல் வாழ்த்துகள் - நல்ல கவிதை - தொடர்க

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

விரிவான பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

//கூட்டுக் குடும்பம் என்னும் சொல்லே மறந்து போனதே ! இங்கும் இந்தியாவிலும் பல்வெறு நகரங்களில் தலைமுறைகள் சிதறுகின்றன. //

பெருமூச்சு விட வைக்கிற விசயம். இது எங்கே போய் முடியும் என்று எண்ணுகையில் வியப்புத் தான் மிஞ்சுகிறது.

//இக்காட்சிகள் நினைவுகளைத் தூண்டுகின்றன. பதறும் நெஞ்சத்துடன் தூக்கி விட ஓடும் போது கையூன்றி எழுந்து சிரித்துக் கண் சிமிட்டும் மழலை - அடடா அடடா - வாழ்க்கையின் பல பொன்னான தருணங்கள் நழுவிப் போய் விடுகின்றன.//

மழலை நடக்க ஆரம்பிக்கிற நேரம் அற்புதம் என்பதை நன்கு அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள்.

//நல் வாழ்த்துகள் - நல்ல கவிதை - தொடர்க//

நன்றிகள் பல பல.

வல்லிசிம்ஹன்said...

காலத்தின் கட்டாயம் அயலகத்தில் அன்புப்பிள்ளைகள் அருமைப்பெயரன் பெயர்த்திகள். இங்கு மூத்த தலைமுறை புகைப்படங்களிலும், இணையத்தொடர்பினுலும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையப் பேச்சினிலும் பொழுதைக் கழித்து இன்பம் காண வேண்டிய சூழ்நிலை. கூட்டுக் குடும்பம் என்னும் சொல்லே மறந்து போனதே ! இங்கும் இந்தியாவிலும் பல்வெறு நகரங்களில் தலைமுறைகள் //

உண்மை.
வாழ்த்துகள். காலம் மாறலாம். விட்டதைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் வாழுகிறோம் நாங்கள்.

சதங்கா (Sathanga)said...

வாங்க டீச்சர் அம்மா,

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. ஆமாம் நம்பிக்கையில் தானே அனைவரின் வாழ்வும் நகர்கிறது. நன்றாகச் சொன்னீர்கள்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !