Thursday, September 27, 2007

Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ

நீங்கள் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்திருந்தாலும், இன்னோரு முறை பாருங்க. எத்தன தடவ பார்த்தாலும் ரசிப்பிங்க ... சிரிப்பிங்க ... உத்திரவாதம் !

'மிஸ் டீன் சௌத் கரொலினா' விடம் கேட்கப்பட்ட கேள்வி :

'அமெரிக்கா' வை உலக வரை படத்தில் காணவில்லை என்கிறார்கள் சிலர் ! அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

அதற்கு அவருடைய பதில், மற்றும் Jimmy Kimmel அவர்களின் தமாசான விளக்கங்கள், கீழே வீடியோவில் :

Saturday, September 22, 2007

டூரிங் டாக்கீஸ்



நாலு தெருவுக்கு
நாற்பது வீடுகள்
நடுவே எழும்பியது
நமது கலைக்கூடம்.

M.G.R., சிவாஜி
இவர்கள்போல் இன்னும் பலர்
உயிர் பெற்று இன்றைக்கும்
உலா வரும் நிழற்கூடம்.

புத்தம் புதுக் காப்பி
மெத்தப் பழைய படம்
நித்தம் வருகை தரும்
மொத்த ஊரு சனம்.

மின்னும் விளக் கொளியில்
மங்கல் மணல் வெளியில்
நரை குவியல் தலைகளோடு
தரை முழுதும் மக்கள்வெள்ளம்.

கயவாடும் வில்லனை
நயமாக வீழ்த்தி
நாயகியைக் கவரும்
நாயகனைக் காணுகையில்,

காதுகள் அடைபடக்
காற்றினில் விசில் பறக்கும்
காகிதங்கள் தூள் சிதறும்
காலமெல்லாம் அது நிலைக்கும் !

-----

Thursday, September 20, 2007

மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

அலை கடலெனக் கூட்டம் திரண்டு கலை கட்டுகிறது மாட்டுச் சந்தை. மக்களின் கூச்சலோடு, மாக்களின் கத்தலும் காதை அடைக்கிறது. கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் ... மன்னிக்கவும், கேட்டால், வனாந்திரத்தில் இருப்பது போன்ற உணர்வு.

"இந்தச் சந்தையிலயாவது நாம ஒன்னு ரெண்டு மாடாவது வாங்கிப்புடணும்ணே" என்று கூவிக் கொண்டு, அக்கூட்டத்திலும் செல்வராஜை விடாது பின் தொடர்ந்தான் வேலப்பன்.

தூரத்தே ராமதுரை இரு காங்கேயம் காளைகளுடன் நின்றிருந்தார். உழைத்துக் களைத்த மாடுகளாய் நின்று கொண்டிருந்தன அவை. ஏண்ணே, ஒழச்சதெல்லாம் பத்தாதுன்னு, விக்க வேற வந்திட்டிங்களா ? பாருங்க எவ்வளவு பாவமா நிக்குதுக ரெண்டும் என்று ஆரம்பித்தான் செல்வராஜ்.

அதற்கு ராமதுரை, "ஒனக்கு ஏன்டாப்பா இத்தன அக்கற ? இந்த வெரைட்டி ஒழைக்கறதுக்குனே பொறந்ததுகடா. மத்த ஜாதி மாதிரி இத்தன வருசமினு இல்ல, சாகறவரைக்கும் ஒழைக்குமாக்கும்" என்றார் பெருமிதத்துடன் !

"அப்புறம் எதுக்கு விக்கறீங்க" என்று கிடைத்த கேப்பில் சிந்து பாடினான் வேலப்பான்.

ராமண்ணே, எம்புட்டு போகுது என்று நடந்து கொண்டே கேட்டாள் சின்னத்தாயி. ஏத்தா, ஒங்க ஊட்டுல இல்லாத மாடுகளா, நீ என்னாத்துக்கு கேக்குற என்றார்.

அதானே, நாங்கள்லாம் அப்புறம் எப்ப....டி மாடு வாங்குறது என்று இழுத்தான் செல்வராஜ்.

எப்ப 'டி'யா ? சந்தைக்குள்ள வந்து என்ன இடிச்சி தொந்தரவு பண்றேனு ஒரு வார்த்த சொன்னப் போதும், என்ன நடக்குமினு தெரியுமில்ல ... என்று மிரட்டினாள். மாட்ட வாங்க வந்தமா, போனமானு இருக்கனும். சண்டை பிடிச்சிக்கிட்டு இருந்தா வேற எவனாவுது வாங்கிட்டு போய்டுவான், இது கூட தெரியாம ... அய்யே.... என்று இழுத்தாள் சின்னா.

அப்போது அங்கு வந்த கணேசன், ராமதுரையுடன் துண்டில் கை மறைத்து விலைபேசி முடித்துவிட்டார்.

-----

மேலே உள்ள கதையை இப்போதுள்ள நடைமுறை வாழ்வில் ஒரு துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறதா ?

உங்கள் ஒப்பிடுதலுடன் வந்த துறையுடன், கீழுள்ள வெண்பா (மாதிரி) பொருந்துகிறதா என்று பாருங்கள்.

பணம் பண்ணப் பணிந்து நல்ல
மனம் தன்னை இழந்து - கண்ட
காட்சி தனில் மிதந்து அன்பிலா
மாட்சியில் மறையுதே குணம்.

-----

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !

Monday, September 17, 2007

ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர் (Flashback)

'இது உண்மைக் கதை அல்ல' என்று தொடங்கியிருந்தாலும், அதன் பொருள் நாம் அனைவரும் அறிந்ததே ! திரைத்துறையில் சந்திக்கும் 'இருவர்', தம்தமது திறமைகளால் இவ்வையத்தை (தமிழகத்தை) ஆண்டிட எண்ணுகின்றனர்.

சினிமாவில் ஜொலிக்க ப்ரயாசைப்படும் ஆனந்தன், தான் கதாநாயகனாய் நடிக்கும் முதல் படம் பாதியில் நின்றவுடன், என்ன செய்வதென்று தவிக்கிறார். வாழ்க்கையே அவ்வளவு தானோ என்று பரிதவிக்கிறார். சினிமாவில் எப்படிப் பரிமளிக்கலாம் என்று தான் எப்போதும் எண்ணுகிறார். சிறு சிறு வேடங்கள் ஏற்பதற்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறார்.

தமிழ்செல்வனின் அறிமுகம் கிடைத்து, நட்பைத் தொடரும்போதும் சினிமா பற்றித்தான் அதிகம் பேசுகிறார்.

இப்படி இருக்கும் ஆனந்தனை 'அரசியல்' ஆர்வம் எப்படித் தொற்றிக்கொண்டது ?

நண்பனின் செயல் ? கல்பனாவின் ஆற்றல் ?

அல்லது தான் பட்ட காயங்களால் தான் மக்களின் செல்வாக்கோடு ஆனந்தன் வெற்றி அடைந்தாரா ?

ஆனந்தனுக்கு சாத்தியமானதெனில் 'சூப்பர் நட்சத்திரம்' ஏன் அரசியல் பிரவேசம் செய்யவில்லை ?

யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள் ...

மணிரத்னம் அவர்களின் பரிமாணத்தில், மோகன்லால் - ஆனந்தன் - M.G.R. என்ன ஒரு செலக்சன் ! சுருள் முடியும், வெளிர் நிறமும், கல்யாணம் கட்டியவுடன், புஷ்பாவிடம், "ஆமா உன்னிடம் மயங்கிட்டேன், ஆனா யாரிடமும் சொல்லிடாதே" என்று காதல் மொழி உரையாடுவதும், குழந்தைகள், பெரியவர் என அனைவரிடமும் நெருங்கிப் பழகுவதும், அரசியலில் ஜொலிப்பதும், அப்படியே M.G.R.ஆக மிகத் தத்ரூபமாகச் செய்திருந்தார் மோகன்லால்.

இதோ இக்காட்சியில் M.G.R.ஐக் காணுங்கள்.

Tuesday, September 11, 2007

கோப்பையிலே உன் குடியிருப்பு - ரோஜர் ஃபெடெரர்



2007 US Open நாயகன் Roger Federer பற்றி நிறைய படித்து வருகிறோம். அவரது நிதானம் தான் அவரது மிகப் பெரிய பலம் என்பது அவர் ஆட்டத்தைப் பார்ப்போர் அறிவர். மீண்டும் US Open கோப்பையை வென்று (தொடர்ந்து நான்காவது முறை) சாதனை புரிந்திருக்கும் அவருக்கு, என்னால் மில்லியன் கணக்கில் டாலர்கள் தர இயலாவிட்டாலும் ;-) எனது மிகச் சுருக்கமான கவிதை கீழே.

------------

நடை திறந்து நீ நடக்க
மடை திறந்த வெள்ளமென
படபடக்கும் மனம் படைத்த
பார்வையாளர்(கள்) ஏராளம்

களம் புகும் உன் முகம்
வளம் தரும் காட்சிதனில்
இனம் புரியா உத்வேகம் எங்கள்
மனம் பரவி நிற்கச் செய்வாய்

நின்று நிதானித்து
எங்கு அடித்தாலும்
தங்கு தடையின்றி
பந்து பயணிக்கும்

ஏஸ், டியூஸ், டைப்ரேக்
எல்லாம் சாதகமாய்
ஆக்கும் உந்தன் நிதானம்
அடையுமே வெற்றிக் கோப்பை.

எதிராளி களைத்திருக்க ...
பந்து(கள்) களைத்திருக்க ...
மட்டை(கள்) களைத்திருக்க ...
வர்னணையாளர்(கள்) களைத்திருக்க ...
ஆடுகளமும் களைத்திருக்கும் !!!

களைப்பறியா உந்தனுளம்
தளர்வின்றி நிமிர்ந்திருக்கும்.

கொஞ்சமே (!) போராடி
குவிக்கும் வெற்றிகளால்
கோப்பையிலே உன் குடியிருப்பு !

------------------

சில தொகுப்புகள் youtube-லிருந்து :