மார்க்கெட்டில் இருந்து வரும்போது, அப்பப்பா.... என்ன வெய்யில் என்று அலுத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார் பார்வதி. ஹாலில் மின் விசிறியைத் தட்டிவிட்டு அதன் கீழே அமர்ந்தார். கழுத்தில் வழியும் வியர்வையை, சேலைத் தலைப்பால் சுற்றித் துடைத்து விட்டுக் கொண்டவர், ஏதோ பொறி தட்டியவராய், சேலைத்தலைப்பைப் பார்த்தார், காய்கறிக் கூடையைக் கொட்டிப் பார்த்தார். காணவில்லை. மின்விசிறி படபடக்க, பார்வதியும் அதனோடு சேர்ந்து கொண்டார்.
"இப்பத்தானே உள்ளே வந்தே, எங்கேம்மா திரும்பக் கெளம்பிட்டே" என்ற திலகத்தின் சொற்களைக் கேட்டவாறே தெருவில் நடையைத் துரிதப்படுத்தினார் பார்வதி.
கல்லு, மண்ணு, அங்கே அங்கே தோண்டியிருந்த குழிகள், அதில் தேங்கிய நேற்றைய மழை நீர் இவைகள் தான் பார்வதியின் கணகளில் பட்டன. எதை அவர் தேடுகிறாரோ அது தென்படவில்லை.
மாடியிலிருந்து கீழே இறங்கிய ஜெகன், "அம்மா குரல் கேட்டதே, எங்கே இப்ப காணோம்" என்று திலகத்திடம் கேட்டான்.
"என்ன நடக்குதுனு தெரியல. மார்க்கெட் போய்ட்டு வந்தவங்க, வந்த வேகத்திலேயே கெளம்பிட்டாங்க. ஆமா, நீ எதுக்கு அம்மாவத் தேடுற" என்றாள்.
"ஒன்னுமில்ல, சும்மாதான்" என்று சோபாவில் அமர்ந்து டி.வியை ஆன் செய்தான்.
அலைந்து திரிந்து வீடு திரும்பியவர், "கொடுத்திட்டேன்னா, கொடுத்திட்டேனு சொல்ல வேண்டியது தானே, எதுக்கு இந்தக் கத்து கத்துறான், எல்லாரயும் மாதிரியா நான் இருக்கேன், என்ன பார்த்தா ஏமாத்தறவ மாதிரியா இருக்கு, பேசிகிட்டே போறான்" என்று கடைக்காரனைத் திட்டிக் கொட்டினார்.
பார்வதியின் குரலைக் கேட்டு, "அம்மா, நேத்து ஒரு ஐநூறு ரூபாய் கேட்டேனே", என்று சோபாவில் இருந்தே குரல் கொடுத்தான் ஜெகன்.
"ஏன்டா, அம்மா படபடனு இருக்காங்க, அதுபத்தி ஏதாவது கவலைப் பட்டியா ? காசு தான் உனக்கு ரொம்ப முக்கியமாப் போச்சு" என்று வாயிலில் இருந்தே கத்தினாள் திலகம்.
"அம்மா, இப்பவாவது சொல்லு, அப்படி என்னதான் மார்க்கெட்டுல நடந்துச்சு" என்று கேட்ட திலகத்திடம், அம்மா சொன்னாள்
கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் இது தான் வாங்கினேன். கொடுத்த 50 ரூபாய்க்கு மீதி 5 ரூபா கடைக்காரன் தரணும். அவன் கொடுத்திட்டேன்கறான். ஆனா அந்த அஞ்சு ரூபா எங்கே போச்சுனே தெரியல, அதான் தேடிக்கிட்டு இருக்கேன் என்றார்.
"அம்மா, என்னோட ஐநூறு என்னாச்சு" என்று மீண்டும் குரல் விட்டான் ஜெகன்.
"இருப்பா வர்றேன்" என்று மகனுக்குச் சொல்லி, மொத்தமா அஞ்சு ரூபா, எனக்கென்னமோ கடைக்காரன் மேல தான் சந்தேகமா இருக்கு. அத்தனை பேரு வரும்போது அவன் சில்லரை தர மறக்க வாய்ப்பு இருக்கு, என்னடான்னா என்னை அல்லவா திட்டறான், மனதுக்குள்ளே நொந்து கொண்டார்.
கொட்டிய கூடையிலிருந்து காய்கறிகளை பிரித்து எடுத்து வைத்தாள் திலகம். ஒரு வெங்காயத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது அந்தப் பழைய ஐந்து ரூபாய் நாணயம்.
"அம்மா, இதோ இருக்கு பாரு, நீ பாடுபட்டு தேடிக் கொண்டிருந்த ஐந்து ரூபாய்" என்று ஹாலில் இருந்து கத்தினாள் திலகம்.
அளவற்ற சந்தோசத்துடன் வாயிலிலிருந்து எழுந்து உள்ளே வந்தார் பார்வதி. "அப்பாடா கெடச்சிருச்சு, நம்ம பணம் எங்கே போயிடும்" என்று திலகத்தின் கையில் இருந்து நாணயத்தை வாங்கிக் கொண்டார். "மருதமல முருகன் அருள் நமக்கு எப்பவும் உண்டுனு" உங்க தாத்தா அடிக்கடி சொல்லுவார் என்று சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
அடுக்களைக்குச் சென்றவர், மகனின் நினைவு வரவே, "ஏப்பா ஜெகா எவ்வளவு கேட்டே நீ, ஐநூறு தானே ? இந்தா" என்று தனது 'பிகிபேங்க்' அஞ்சறைப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தார்.
பணத்தை மகன் வாங்கிச் செல்வதை சந்தோசமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி.