குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்றவளை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான் தியாகேஷ்.
"மொத டேக்லேயே ஓ.கே. பண்ணிட்டம்மா. சூப்பர், ஆஸம், கார்ஜியஸ்" என்று அமெரிக்கர்களை போல நம்ம ஊரு டி.வி.ஜட்ஜுகள் ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளில் ரிஷ்காவை புகழ்ந்து தள்ளிய இளம் டைரக்டர் ருத்ரன், கையோடு "பேக்கப்" என்று மைக்கில் கத்தினான்.
படிக்கிற காலம் தொட்டு, பாடங்களை விட படங்களில் தான் நாட்டம் அதிகம் தியாகேஷுக்கு. டிகிரி முடித்து முதன் முதலாய் வந்திறங்கியது கோடம்பாக்கம் தான். கொஞ்ச நஞ்சமல்ல டைரக்டர் ஆகும் கனவுடன். அறைகளில் தனித்து, வீதிகளில் வாழ்ந்து, அங்கே இங்கே என்றலைந்து கடைசியில் சேர்ந்தது ருத்ரனிடம் உதவி இயக்குனராக.
அப்படி என்ன மந்திர சக்தியோ 'பேக்கப்' என்ற வார்த்தைக்கு. ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடப்பதாய் ஆனது மொத்த யூனிட்டும். எல்லோரும் வெளியே கிளம்ப, ரிஷ்காவின் கேரவனுக்குள் நுழைந்தான் ருத்ரன்.
தத்ரூபம் கொண்டு வருகிறேன் பேர்வழி என, வெட்ட வெளி என்றும் பாராமல், அங்க தொட்டு, இங்க தொட்டு, என ஏற்கனவே நொந்திருந்த ரிஷ்கா, இப்படி உள்ளே நுழைவான் இவனென சற்றும் எதிர்பார்க்கவில்லை.
'வெளியே போடா நாயே !' என சொல்ல நினைத்து, இயலாமையில் குறுகி, எழுந்து நின்றாள்.
"எதுக்கு எழுந்து நின்னுகிட்டு, உட்கார் உட்கார்... பாரு இந்த படம் வெளிவரட்டும் தமிழ்நாடே எழுந்து நிற்கும் உன்னைக் கண்டா. அதில நானும் சேர்த்தி தான்" என்றான் நமட்டு சிரிப்புடன்.
"அப்படிலாம் சொல்லாதீங்க சார். நீங்க எவ்ளோ பெரிய ஆளு !" என்று ருத்ரன் எதிர்பார்த்தபடி பதிலளித்தாள்.
இத்தனைக்கும் ருத்ரனுக்கும் இது தான் முதல் படம் டைரக்டராக. டெக்னிகல் விஷயங்களில் சாமர்தியசாலி, அதிகம் செலவு செய்யாத பட்ஜெட், கொஞ்சம் கதை, நல்ல நடிகர்கள் தேர்வு. இது தான் ருத்ரன் ஃபார்முலா. படத்தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன வேண்டும்.
ரிஷ்காவிற்கு ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் நாயகியாக வந்தும், சில காரணங்களால் தடைபட்டு பாதியிலேயே நின்றும் போனது. ருத்ரனின் கதை அவ்வளாக பிடிக்காவிட்டாலும், வந்த வாய்ப்பை விடாமல் ஏற்று கொண்டாள்.
படம் வளர வளர அடுத்தடுத்த படப்பிடிப்புகளிலும் ருத்ரனின் தொல்லையும் வளர, ஒரு கட்டத்தில் படத்தை விட்டு ஓடிவிடலாமா என்று கூட நினைத்தாள். ஆணாதிக்க சினிமாவில் அவர்களை மீறி தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என எல்லாவற்றையும் பொறுத்திருந்தாள். நாளடைவில் ருத்ரனின் செய்கைகளுக்கு எதுவும் பெரிய எதிர்ப்பு காட்டுவதையும் தவிர்த்திருந்தாள்.
"மேடம் அடுத்தது, ரெண்டு நாள் முன்னாடி எடுத்ததோட கன்டினியூட்டி ஷாட். ஸீ க்ரீன் ஸாரி கரெக்ட், ஆனா உங்க தோடு நீங்க மாத்தணும்" என்றான் தியாகேஷ்.
"சரி" என்று கேரவனுக்குள் நுழைந்து தேடினாள். "தியாகேஷ், கொஞ்சம் நீங்களும் தேடுங்களேன். இங்க தான் வச்சேன், இப்ப காணோம்" என்றாள் கொஞ்(சசு)ம் தமிழில்.
"இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்கு. ரெடியாம்மா ?" என்று உள்ளே நுழைந்தான் ருத்ரன். ரிஷ்காவின் பின்னால் சென்று வழக்கம் போல அப்படியே கட்டியும் அணைத்தான்.
குனிந்திருந்து "இங்க இருக்குங்க மேடம் !" என்று எழுந்த தியாகேஷைக் கண்டு திகைத்தான் ருத்ரன். "இங்க என்னையா பண்ணிகிட்டு இருக்கே ?! உன்னை நம்பி ஷூட்டிங்கே கொடுத்திருக்கேன். ஸ்பாட்டுல எல்லாம் ரெடி பண்ணிட்டு இருப்பேனு பார்த்தால் ..."
"சார் வந்து ... மேடம் தான்..." என்று வெலவெலத்துப் போனான் தியாகேஷ்.
"சரி, சரி. பார்த்தது பார்த்திட்டே. பம்மிகிட்டுப் போ. வெளியில ஏதாவது காமிசிச்சுக்கிட்டே.... அப்புறம்... சரி, வேணாம். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று தியாகேஷை எச்சரித்து அனுப்பினான் ருத்ரன்.
'வந்தா எல்லாம் ஒன்னா வரும்' என்பது போல அன்றைக்கு தியாகேஷுக்கு இரட்டை மகிழ்ச்சி.
"இனிமே நீங்க என்னை மேடம்னு கூப்பிடாதீங்க. மல்லிகானு சொந்த பேரைக் கூப்பிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்றாள் படப்பிடிப்பின் இடைவேளையில் ருத்ரன் இல்லாத ஒரு நாளில். கண்களில் மை போல சோகமும் அப்பியிருந்தது.
'நான் இன்னும் ஒன்றும் சாதித்துவிடவில்லை. என்னைப் போயி...' என்று நினைத்தாலும், ரிஷ்காவின் வார்த்தைகளில் மகிழ்ந்து போனவனின் செல் சிணுங்கியது.
"சார் ! நீங்களா ? சொல்லுங்க சார். இதோ, இப்பவே கெளம்பறேன் சார்" என்று அடித்துப் பிடித்து, கேமிராவைத் தள்ளி ஓடியவனை, காலரைப் பிடித்து நிறுத்தினான் கேமிராமேன் பாலு.
"மச்சி எதுக்காக இத்தனை நாள் காத்திருந்தேனோ, அந்தக் கனவு நனவாகப் போகுது. என்ன மாதிரி ஆளுங்க தவமா தவம் கிடக்கிற தயாரிப்பாளர் கிட்ட இருந்து தான் போன். இதுக்கு மேல கேக்காத, போய்ட்டு வந்து விபரம் சொல்றேன்" என்று காற்றில் கரைந்தான் தியாகேஷ்.
'கடவுளாவது கத்தரிக்காயாவது !' என்று சொல்கிற முன்னனி நடிகர் ஒருவர் வந்து குத்து விளக்கேற்ற, அமர்க்களமாக பூஜை போட்டு, ஆரம்பமானது தியாகேஷின் 'தலைப் பிரசவம்'.
சோகம் அப்பிய கண்கள் கொண்டவள் தான் கதாநாயகியாக சித்தரித்து வைத்திருந்தான். ரிஷ்காவின் பாதிப்பாகக் கூட இருக்கலாம். கதாநாயகிக்கு அவளையே தயாரிப்பாளரிடம் சிபாரிசும் செய்து, போராடி ஒப்புதலும் வாங்கினான்.
சினிமாத் துறையில் பத்து வருடங்கள் பட்ட கஷ்டங்களும், சினிமா பற்றி கற்ற பாடங்களும் சேர்த்து வைத்து, சின்ன சின்ன விஷயத்துக்கு கூட முக்கியத்துவம் தந்து, கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தனுமே என்று கிட்டத் தட்ட படத்தை செதுக்கினான் என்றே சொல்லலாம்.
ருத்ரனின் படமும் நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த அளவிற்கும் மேலாக தியாகேஷின் படம் வசூலில் சக்கைப் போடு போட, ஊரெல்லாம் தியாகேஷுக்கு போஸ்டர் ஒட்ட, அவனைத் தன் மனதில் சிக்கென ஒட்டிக் கொண்டாள் ரிஷ்கா.
"ரெண்டு பேரோட வளர்ச்சிக்கும், இப்போதைக்கு திருமணம் என்பது தடையா இருக்கும். அதனால கொஞ்ச காலம் போகட்டும், பொறுத்திரு !" என்றான் ரிஷ்காவின் திருமண யோசனைக்கு.
"உங்களுக்கு என்னைப் பிடிக்கலை. அதான் சாமர்த்தியமா என் யோசனையைத் தள்ளிப் போடறீங்க !" என்று சிறு குழந்தையாய் தேம்ப ஆரம்பித்தாள்.
சினிமா போலவே, ஒரே இரவில் தியாகேஷின் வாழ்வும் முற்றிலும் மாறிப் போனது. கார், பங்களா, காவலாளி என்றும் ஆனது.
"புரிஞ்சுக்க மாட்டேங்கறியே ! இப்ப தான் ரெண்டாவது படம் பண்ணப் போறேன். பாரு, ஹாலில் க்யூ கட்டி தயாரிப்பாளர்கள் உட்கார்ந்திருப்பதை. இவங்கள இப்ப விட்டா அப்புறம் எப்பவும் பிடிக்க முடியாது" என்றான்.
தியாகேஷ், ரிஷ்கா, இருவருக்கும் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தாலும், இருவருக்கும் பிடித்தமாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, 'அன்புள்ள ஆனந்திக்கு...' என்றும் தலைப்பிட்டு, தயாரிப்பாளரைத் தேர்ந்தெடுத்து, இசை அமைப்பாளரைத் தேர்ந்தெடுத்து என வரிசையாய் இவர்கள் செலக்ஷன் தான் அனைத்தும்.
"சரி, ஊரறிய வேண்டாம். உங்க கூடவே இருக்கேன்ல ! யாருக்கும் தெரியாம ஒரு தாலியாவது கட்டிடுங்க. வேண்டாம், வேண்டாம் ஒரு மோதிரம் போதும். பிற்பாடு ஒரு நிலைக்கு வந்தவுடன் ஊரே வியக்கும் படி கல்யாணம் செய்துக்குவோம்" என்றாள்.
"பேசாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோமே !"என்றான் தியாகேஷ்.
"இத விட வேறு செய்தி வேணுமா நம்ம பத்திரிகைகாரங்களுக்கு !! நமக்குள்ள மட்டும் இருக்கட்டும். 'இந்தாங்க, இந்த மோதிரத்தை எனக்குப் போட்டுவிடுங்க'" என்று தயாராய் வைத்திருந்த மோதிரத்தை தியாகேஷிடம் நீட்டினாள் ரிஷ்கா.
வீடு, மனை, வாகனம், வங்கிக்கணக்கு என எல்லாவற்றையும் இருவர் பெயரிலும் பதிந்து கொண்டார்கள். வெளியில் அதிகம் நெருக்கம் காட்டிக் கொள்வதில்லை இருவரும். ஆனால், தனித்திருக்கையில் சுனாமியே வந்தாலும் அவர்களைப் பிரிக்க முடியாது. 'முளை விட்ட பூ, வெடித்துக் காய்ப்பது போல்' இவர்களின் நெருக்கம், நெருக்கமானவர்களால் வெளியில் வெடித்துக் கசியவும் செய்தது.
ராஜர் ஃபெடரரிடம் டென்னிஸ் விளையாடி நாம ஜெயிச்சுட்டோம் என்றால் எப்படி நம்ப முடியாதோ, அந்த அளவிற்கு ஆச்சரியப்படும்படி தியாகேஷின் இரண்டாவது படம் படு தோல்வியைச் சந்தித்தது.
பங்களாவில் ஹால் வெறிச்சோடியது. இவன் தொலைபேசி என்றால் மறுமுனையில் உதவியாளருடன் இணைப்பு முறிந்து விடும். ரிஷ்காவின் நிலையும் அதுவே. இருவருக்கும் வாய்ப்புகள் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையானது !
வெளியில் செல்லவே கூசினான் தியாகேஷ். "எங்காவது கொஞ்ச நாளைக்கு போய் இருந்துட்டு வரலாம். கிராமத்துக்குப் போனா நல்லது" என்றான்.
ரிஷ்காவிற்கு சுத்தமாக இதில் இஷ்டமில்லை. "நீங்க வேணா போய் இருந்துட்டு வாங்க. நான் இங்க இருந்து பாத்துக்கறேன்" என்றாள்.
இந்நிலையில் சினிமாவில் நன்றாக பெயர் வாங்கியிருந்தான் ருத்ரன். கைராசி டாக்டர் மாதிரி, கைராசி டைரக்டர் என்றார்கள் தயாரிப்பாளர்கள் ருத்ரனை.
"'அடுத்த படத்துக்கு நீ தான் ஹீரோயின் ! என்ன சொல்றே'னு ருத்ரன் கேட்கிறார். என்ன சொல்ல ?" என்றாள் ரிஷ்கா தியாகேஷிடம்.
"உனக்காவது வாய்ப்பு வருதே ! எதுக்கு வேண்டாம் என்று சொல்லிகிட்டு. எடுத்து பண்ணு. நான் இங்க இருக்க விரும்பலை. நீ தனியா இருக்க, ஜாக்கிறதையா இருந்துக்க" என்று சொல்லிச் சென்றான்.
இரண்டொரு வாரங்கள் கடந்த நிலையில், ரிஷ்காவின் மேக்கப் அறைக்குள் நுழைந்தான் ருத்ரன். அவள் திடுக்கிடவில்லை. முன்பு போலவே கட்டிப் பிடித்து காதுகளில் கிசு கிசுத்தான், 'எத்தனை நாள் தான் உனக்காக தவமிருப்பேன்' என்று. அப்படியே படுக்கையில் சாய்த்தவனை சேர்த்திழுத்தாள் ரிஷ்கா.
'ம்ம்ம். நீ முன்பு போல இல்லையே. ரொம்ப தேறிட்ட !' என்று முனகினான். சற்றும் எதிர்பார்க்கவில்லை ருத்ரன். அப்படியே அவனைப் புரட்டி, அவன் மேலேறி ... விட்டாள் ஒரு குத்து ! பொல பொலவென்று சிறுமூக்கு உடைந்து ரத்தம் சிதறியது !!!
"ஆம் நான் முன்பு போல இல்லை தான் ! ரொம்பவே தேறிட்டேன் !!" என்று சொல்லி திராட்சைக் கொத்தாய் முன் விழுந்த சுருள் முடிகளைப் பின் தள்ளி கொண்டையிட்டு விறுவிறுவென ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறினாள் ரிஷ்கா !!!