Wednesday, October 31, 2007

மாடு மேய்க்கும் கண்ணே - அருணா சாய்ராம்

ஒரு தாயிடம், அவள் குழந்தை வெளியில் விளையாடச் செல்லக் கெஞ்சுவதை எவ்வளவு அழகாக, எளிமையாக எழுதியிருக்கிறார்கள். இதை ஒரு folk, ஆன்மீகம், குழந்தைகள் என்று எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். பாடலைப் பாடிய அருணா அவர்களின் குரலிலும் என்ன ஒரு கணீர். அருமை.

பாட ஆரம்பிக்கும் முன், புலம் பெயர்ந்த பெற்றோர்களைப் பற்றி அருணா அவர்கள் பேசிய கருத்துக்கள் அப்பட்டமான உண்மை. என்ன சொல்கிறார் என்று கேட்டுத் தான் பாருங்களேன் !!



மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன் (2)
காச்சின பாலு தாரேன், கல்கண்டு சீனி தாரேன்
கை நிறைய வெண்ணெய் தாரேன்,வெய்யிலில் போக வேண்டாம்
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

காச்சின பாலு வேண்டாம், கல்கண்டு சீனி வேண்டாம் (2)
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே
யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் (2)
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா (2)
கள்வர் வந்து எனை அடித்தால் கண்டதுண்டம் செய்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு (2)
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

காட்டு மிருகங்கள் எல்லாம் எனை கண்டால் ஓடி வரும் (2)
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டையாடி ஜெயித்திடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

பட்சமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் (2)
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் (2)
தேடி எனை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே

மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே.........

Sunday, October 28, 2007

கிராமத்து பேருந்துப் பயணம்



விரைந்து வந்துநின்ற
அரசுப் பேருந்தில்

விறுவிறுவென ஏறும்
சுறுசுறுப்புக் கூட்டத்தினர்

ஜன்னலோரம் துண்டுபோடும்
மின்னல் மாந்தர்கள்

புகுந்து உள்ளேறும்
புத்திசாலிச் சிறுவர்கள்

இடித்துக் கீழிறங்கும்
களைத்த பயணிகள்

கூச்சலிடும் மனிதர்கள்
குழந்தையின் கூக்குரல்

திருவிழா கூட்டமென
பேருந்து நிரம்பியதில்

அமர்ந்தவர் சிலர்
அண்டிநிற்பவர் பலர்

வேகாத வெய்யிலிலும்
தேயிலைநீர் பருகி

கழுத்தில் கர்ச்சீப்போடு
கரம்சுழற்றும் ஓட்டுனர்

பயணச் சீட்டெழுதிபின்
பணவிசிறி விரலிடுக்கில்

கம்பியில் தனைச்சாய்த்து
கணக்கெழுதும் கண்டக்டர்

ஓடும் பேருந்தில்
ஓரமாய் ஜன்னலில்

காற்றின் வேகத்தில்
தேகமது சிலிர்த்திருக்க

கண்மூடித் தலைசாய்த்து
கனாக்கண்டு பயணிக்க

இனம்புரியா இன்பம்வந்து
நம்மனதைத் தாலாட்டும் !

Tuesday, October 16, 2007

ச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் - செய்முறை




தேவையானவை :

பாஸ்மதி அரிசி - 1 கப்
குடைமிளகாய் - 1/2
காரட் - 1
பீன்ஸ் - 5
பட்டானி - 1/4 கப்
பேபி கார்ன் - 4
வெங்காயம் - 1
காளான் - 3
சோய் சாஸ் - 1 ஸ்பூன்
ச்சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
டொமேடோ சாஸ் - 1 ஸ்பூன்
கருப்பு மிளகு - as required

கீழே உள்ளவற்றை அறைத்து விழுதாக்கிக் கொள்ளவும்:

பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 3


செய்முறை :

1. ஒருபுறம் பாஸ்மதி அரிசியை ரைஸ் குக்கரில் (1 + 1/4) கப் நீர், சிறிது பட்டர், அரிசிக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

2. மறுபுறம் மிளகைத் தூளாக்கிக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் (Baby corn தவிர்த்து) சிறிதாக நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். படத்தில் குடைமிளகாயும், காரட்டும் தெரிவது போல். Baby corn-ஐ வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

3. வானலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். அதில் விழுதை இட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

4. பின்பு வெங்காயத்தையும் அதில் சேர்க்கவும். லேசாக வதங்கினால் போதும். அதன் பின் மற்ற காய்கறிகளையும் சேர்க்கவும். கால்வாசி வெந்தால் போதும், அல்லது ஓவர்குக் ஆகிவிடும்.

5. மிளகு, உப்பு இவற்றையும் வதக்கலில் சேர்த்துக் கொள்ளவும். சிறிது கிளறி அனைத்து சாஸ்களையும் ஊற்றி மீண்டும் கிளறவும். சில நொடிகளில் அடுப்பை அனைத்துவிடலாம்.

6. பாஸ்மதி அரிசி வெந்த பின்பு, காய்கறி வதக்கலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அழகான container-ல் மாற்றி, வெங்காயத்தாள் இருந்தால், அதை சிறுசிறு வட்டங்களாக நறுக்கி, மேலாகத் தூவினால் அழகாக இருக்கும். அற்புதமான ச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.



ஃப்ரைட் ரைஸ் செய்து, சுவைத்து மகிழ்ந்து சொல்லுங்கள்.

Thanks to PIT and Shri for encouraging me to post this recipe.

Questions and Suggestions are Welcome !

மழைக் காலம்



போர் கொள்ளும் மேகம்
தார் போலக் கருக்க

ஒளி மினுக்கல் மின்னி
துளித் துளியாய்த் தூவ

சிதறும் வெள்ளிக் கம்பி
உதறி மண்ணில் இறங்க



வட்ட வட்டமாய்ச் சொட்டி
வறண்ட பூமி நனைய

தென்றல் கூடிய காற்றில்
மண்ணின் வாசனை கசிய

மிதமாய் நடுக்கும் குளிரில்
இதமாய் தேகம் சிலிர்க்க

மரக்கிளை இலைகளின் இடுக்கில்
தூறல்த் துளிகள் தங்க



நடை பாதையில் ஈரம்
கேட்டுக் கதவில் ஈரம்

வீட்டுக் கூரையில் ஈரம்
ஆட்டு மந்தையில் ஈரம்

எங்கும் எதிலும் ஈரம்
பங்கு கொண்டு இருக்க

மழைக் கால ஈரம்
மனம் முழுதும் பரவியதே !

Monday, October 8, 2007

October மாத புகைப்படப் போட்டிக்கு

October மாத புகைப்படப் போட்டிக்கு

படம் : 1 - Fried Rice

முன்னெல்லாம் ப்ரியாணிக்கும் ஃப்ரைட்ரைஸ்க்கும் வித்தியாசமே தெரியாது. ஹோட்டல்களில் ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும். அம்மாவுக்குப் பண்ணத் தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் தான் வித்தியாசம் தெரிஞ்சது. அதுவும் நம்ம தங்கமணி கைவண்ணம், கேக்கவே வேணாம், கலக்கிப்புடுவாங்க. அன்று காலை அவர்கள் நண்பி ஒருவரிடம் receipe வாங்கி சுடச்சுட இந்த Fried Rice செஞ்சு அசத்திட்டாங்க.




படம் : 2 - Prawns ready for masala

ப்ரான் மசாலா பண்ணலாம்னு முடிவான அன்று நம்ம புகைப்படப் பொட்டியோட சமையல்கட்டில் ஆஜர். ஆரம்பம் முதல் கடைசி வரை எடுத்த புகைப்படங்களில் சிலவே நன்றாக வந்தன. அதனால் preperation-ல் இருக்கும் படங்களில் ஒன்றை போட்டிக்கு சேர்த்திருக்கிறேன்.




கீழே உள்ளவை பார்வைக்கு

Prawn masala




Vegetable dices




Briyani