Photo credit: indiamike.com
வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர ஆடையை.
வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் பச்சை ருத்ராட்சங்களென சடை சடையாய் நெல்லிக்கனிகள்.
சில வருடங்கள் முன்னர் என் அண்ணன் எடுத்த புகைப்படம் இப்போது என் கையில். புகைப்படத்தில் மரம் சிரிக்க, மனப்படத்தில் சிலிர்ப்போடு பின்னோக்கி பயணித்தேன்.
***
"இன்னிக்கு நெல்லி மரம் சுத்தப் போகணும். வர்றியா ? உங்க அக்காளுக்குத் தான் வயசாகிடுச்சு. வாக்கப்பட ஒரு பய வரக்காணோம். மரத்தச் சுத்தினா சீக்கிரம் கல்யாணம் கைகூடும், துணைக்கு வாடா சந்திரா" என்று கிராமத்துக்கு வந்திருந்த என்னை இழுத்துக் கொண்டிருந்தார், பேரன் பேத்திகளை டா போட்டு அழைக்கும் மீனாக்ஷி பாட்டி. அவருக்கென்னவோ ஆண்பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.
'எனக்கு அப்படி என்ன வயசாகிடுச்சு. அவளைக் கூப்பிடாமல் என்னை ஏன் கூப்பிடுகிறார். நான் போய் அவளுக்காக என்ன செய்துவிடப் போகிறேன். இல்லை, என்னைவிட வயதில் மூத்த அண்ணனையாவது கூட்டிட்டு போகலாமே ?' என்றெல்லாம் எனக்குத் தோன்றவேயில்லை.
"வர்றேன். அங்க என்னல்லாம் நடக்கும் ?" என்றேன்.
"ஐயரு வருவாரு. நெல்லி மரத்துக்கு முன் வந்து, பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் தலைவாலை இலையில் வைத்து, அதில் கும்பம் வைத்து, பூஜை செய்து தீபாராதனை எல்லாம் செய்வாரு. கும்பத் தண்ணிய மரத்தில் தெளித்து, பின் மக்களுக்குத் தெளிப்பாரு. உங்க அக்கா வயசொத்த புள்ளைக நெறைய வரும். தங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும் என்று வேண்டி, மரத்த இருவத்தியோரு வாட்டி சுத்திவருங்க..."
'அப்பாவின் பணியை ஒட்டி படிப்பெல்லாம் வெளியூரில் இருந்ததால் உள்ளூர் நிகழ்ச்சிகள் பற்றிய ஞானம் எதுவும் இல்லை'. பாட்டி சொல்லச் சொல்ல, 'போய் பார்ப்போம்' என்று அவருடன் புறப்பட்டேன்.
காலை வெய்யில் பனியைக் கரைத்து பருகிக் கொண்டிருந்தது. ஊருணிக்கரையை ஒட்டி, மேற்கே இருந்த 'வித்யா பாடசாலை'யின் தோட்டத்தில் இருந்தது நெல்லி மரம். மா, பலா, வாழை என பல மரங்களின் ஆதிக்கம் இருந்தாலும், கூட்டத்திற்குள் காதலனைத் தேடும் கள்ளியைப் போலே தனித்துத் தெரிந்தது நெல்லி மரம்.
'வித்யா பாடசாலை' எங்கள் கிராமத்தில் ஒரு சின்ன பள்ளிக்கூடம். அதற்குள் இருந்தது சின்னத் தோட்டம் என்பதால், வந்திருந்த இருபது முப்பது பேர் கூட திருவிழாக்கூட்டத்திற்கு இணையாக இருந்தனர்.
பூஜை புனஸ்காரங்கள் முடித்து, அரிசி, காய், கனிகளை முடித்துக் கொண்டு டி.வி.எஸ் 50ல் புறப்பட்டுச் சென்றார் ஐயர்.
"சந்திரா... இங்கே இருப்பா. நான் போயி உங்க அக்காளுக்காக சுத்திட்டு வந்திர்றேன்" என்று மரத்தை சுற்ற ஆரம்பித்தார் மீனாக்ஷி பாட்டி.
'பாட்டி போற வேகத்தைப் பார்த்தால், அவருக்கே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்போலவே' என்று நினைத்துக் கொண்டே மரத்தைப் பார்க்க, நெல்லி மரத்தைப் போலவே ஒல்லியாக, 'நெல்லி மரத்தைச் சற்று தள்ளி வைத்து என்னைப் பார்' என்பது போல ஒரு வசீகரத்துடன் சுற்றி வந்தாள் அவள்.
கார்குழல் காதுகளில் குழைய, கருநீள விரிசடையும், தங்கத் தோள்களில் உருளும் கருமணி மாலையும், தாமரை நிற தாவணியும், பிச்சிப்பூ நிற பாவாடையும், ஏதோ ஒன்று என்னை அவளிடம் ஈர்த்தது.
இவை எல்லாம் அன்றி, அவளின் 'சலக் சலக் கொலுசொலி' தான் முதலில் அவளைப் பார்க்க வைத்தது என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.
டி.ஷர்ட், ஜீன்ஸில் இருந்த என்னை, 'ஏதோ வித்தியாசமா இருக்கிறேனே' என்பது போல அவளும் ஓரிரு முறை கடைக்கண் பார்த்தாள்.
"என்ன சந்திரா, இப்படி ஆவ்னு பராக் பாத்துகிட்டு இருக்கே. யாராவது பையத் தூக்கிட்டு போனாக்கூட தெரியாதே ஒனக்கு" என்று பிதற்றி கொண்டே வந்தார் வேண்டுதலை முடித்துக்கொண்ட பாட்டி.
பள்ளியை விட்டு வெளியில் வந்த போது, என் வயதிலும் என் அண்ணன் வயதிலும் நிறைய இளவட்டங்கள் தென்பட்டனர். கூடி நின்றோ, சைக்கிளில் அமர்ந்தோ, அரச மர நிழலிலோ நின்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்கள் கண்கள் எல்லாம் பள்ளியின் வாசலிலே தான் இருந்தது. பூவிருக்கும் இடத்தில் தானோ வண்டுக்கு வேலை ?
என்னிடம் இருக்கும் கெட்ட குணங்களில் ஒன்று. யாரையாவது பார்த்து எனக்குப் பிடித்துப் போனது என்றால், உடனே அவங்ககிட்ட போயி பேசி எப்படியாவது நட்பாயிடுவேன்.
அப்படித்தான் இன்றும், பாட்டியுடன் செருப்பு மாட்டி கிளம்புகையில், செருப்பைக் கழட்டி விசிறிவிட்டு, விறுவிறுவென பள்ளிக்குள் சென்று, அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். திடுதிடுப்பென முகம் தெரியாதவர் வந்து பேச, சற்றே அதிர்ந்துவிட்டாள் அவள்.
காற்றின் சீற்றம் அதிகரித்து, இலைகளின் ரகசியப் பேச்சுக்கள் சளசளத்தன.
சற்றைகெல்லாம் சுதாரித்துக் கொண்டு, "அப்படியா ... சரீ..." என்றெல்லாம் தலையாட்டி கேட்டுக்கொண்டாள். திரும்ப எப்ப மீட் பண்ணலாம் என்றதற்கு, செவ்வாய்க்கிழமை மாலை அம்மன் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாள்.
கடவுளே, இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வீட்டிற்கெல்லாம் அழைக்க மாட்டாளோ என்றெண்ணி, 'பார்த்த உடனே எப்படிக் கூப்பிடுவாள் ?' என்றும் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
"உங்க பேரு சொல்லவேயில்லையே ?" என்றேன் நான்.
"நீ வா போ என்றே சொல்லலாம். மரியாதை எல்லாம் எதுக்கு ? என் பேரு பூரணி...அன்னபூரணி.." என்றுவிட்டு, "எனக்கு வீட்டில நிறைய வேலை கிடக்கிறது" என சிட்டாய் பறந்தாள் அங்கிருந்து.
வீட்டிற்கு வரும் வழியில், "சந்திரா, இந்த கூட்டத்தில ஒருத்தி சலக் சலக்குனு சிலுப்பிகிட்டு திறிஞ்சாளே. அவளப் பத்தி என்ன நினைக்கிறே ? உனக்குப் புடிச்சிருக்கா ?" என்றார் மீனாக்ஷி பாட்டி.
'அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைக்கணும் என்று தானே கூட்டி வந்தார். ஆனா யாருக்கு பொண்ணு பாக்குது பாட்டி. வெவரமான ஆளு தான்' என்று நினைத்து, "ஆங், பாத்தா நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கு. ஒரே நாள்ல எப்படி சொல்லிட முடியும். எதுக்கு பாட்டி கேக்கற, யாரு அந்த பொண்ணு ?" என்றேன்.
"உன் வயசு தான் அதுக்கும். நம்ம போ(ர்)ட்டு கார் சிங்காரம் தெரியுமா உனக்கு ? உங்க தாத்தோவோட ... " என்று நீட்டி முழக்கி ஒரு கதையைச் சொல்லி, "அவரு பேத்தி தான் இந்த சிலுப்பி" என்று பாட்டி தொடர்ந்து கொண்டிருக்க, எதிரில் அண்ணன் பைக்கில்.
"காலங்கார்த்தால கெளம்பி போனீங்க ரெண்டு பேரும். ஒரு நெல்லி மரத்த சுத்தி வர இவ்ளோ நேரமா ? அங்க உங்கள காணோம் என்று நாலு பக்கமும் எங்களை வெரட்டிகிட்டு இருக்காரு அப்பா" என்று பொறுமித்தள்ளினான்.
"சரி, சரீ, நீ பாட்டிய கூட்டிட்டுப் போ. நான் நடந்து வருகிறேன்" என்று பாட்டியை அண்ணனுடன் பைக்கில் அனுப்பிவிட்டு, காலாற நடந்தேன்.
பலநூறு அடிகள் எனக்கு முன் பூரணி சென்று கொண்டிருந்தது கண்ணில் பட்டது. பி.டி.உஷா அளவிற்கு இல்லேன்னாலும், ஓட்ட நடை நடந்து பூரணியை நிறுத்தி, சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். அவளுடன் வந்த இரு தோழிகள், எங்களை மேலும் கீழும் பலநூறு முறை பார்த்துவிட்டனர். அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்க, வெட்கத்தில் நாணி கோணினர். ஒரு திருப்பத்தில் இரு வேறு திசைகளில் திரும்பி இருவர் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தோம்.
கிராமத்தில் இருக்கும் வரையிலும் வாரத்திற்கு ஒருமுறையோ, இருமுறையோ நாங்கள் சந்தித்துக் கொள்ளத் தவறுவதில்லை.
"அண்ணனுக்குப் பார்த்திருக்கோம். அண்ணி புடிச்சிருக்காளா ?" என்று கோவிலில் ஒருமுறை மீனாக்ஷி பாட்டி என்னை இடித்துக் காண்பித்தார். நெல்லி மரத்தில் பார்த்தோமே, அந்தச் சிலுப்பி தான்" என்றும் நினைவூட்டினார்.
ஒரு கணம் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
எதிர்வரிசையில் நின்றிருந்த பூரணி எங்களைப் பார்த்து வெள்ளிக்கீற்றாய் புன்னகைத்தாள்.
***
"அப்படி என்ன தான் இருக்கு இந்த ஆல்பத்தில் ? எப்ப வந்தாலும் ஆல்பத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு, சின்ன புள்ளை மாதிரி. சூடா காஃபி போட்டு வச்சிருக்கேன். குடிச்சிட்டு கெளம்பு, இன்னிக்கு மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை இருக்கு, ஞாபகம் இருக்குல்ல ?" என்று சோஃபாவில் மெய்மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்துக் கொண்டிருந்தார் பூரணி அண்ணி.
அண்ணனின் வீட்டிற்குள் நுழைந்த போதே என் கணவர் காட்டிய தொட்டியை மீண்டும் பார்த்தேன். அழகிய நெல்லி கன்று, கொழுந்துவிட்டுக் குழைந்து கொண்டிருந்தது வாசல் காற்றில்.
***
சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டியில் இக்கதையை சமர்ப்பித்திருக்கிறேன்.