Friday, August 14, 2009

சுபாஷ் தந்திர போஸ் (Based on a True story !)




"எதைப் பற்றியும் கவலை இல்லை. என் நாட்டின் சுதந்திரத்திற்கு எந்தச் சாத்தானுடனும் கை கோர்ப்பேன் !!" என்ற போஸின் ஆணித்தரமான உரைகளில் உறைந்து போனார்கள் காந்தியும், நேருவும், ம‌ற்ற காங்கிர‌ஸ் த‌லைவ‌ர்க‌ளும்.

"அஹிம்ஸா முறையிலே தான் நாம் போரிட வேண்டும். உங்களது போக்கு மிகவும் தவறானது" என்றார் காந்தி. கூடியிருந்த‌ அனைவ‌ரும் காந்தியின் க‌ருத்தை ஆமோதித்த‌ன‌ர்.

போஸ் தன் நிலையில் இருந்து சற்றும் பின் வாங்குவதாய் இல்லை. "என‌து நாட்டில் வேரூன்றி, என‌து ம‌க்களைச் சித்திர‌வ‌தை செய்வ‌தை, அவ‌ர் த‌ம் பொருட்க‌ளைக் கொள்ளை அடிப்ப‌தை, பெண்க‌ளை மான‌ப‌ங்கப்ப‌டுத்துவ‌தை, போததற்கு 'இரண்டாம் உலகப் போரில் இந்தியாவும் கலந்து கொள்ளும்' என்று நம்மிடம் கேட்காமல் முடிவு செய்ததை, இதை எல்லாம் பார்த்துக் கொண்டு எப்ப‌டி அஹிம்ஸா முறையில் வெள்ளையருடன் போரிட‌லாம் என்கிறீர்க‌ள். என்னால் முடியாது. பிரிடிஷ் அரசுக்கு ஆறு மாத‌ கால‌ அவ‌காச‌ம் த‌ருவோம். அத‌ன் பின்னும் அவ‌ர்க‌ள் அன்னை பூமியை ந‌ம் வ‌ச‌ம் ஒப்ப‌டைக்காவிட்டால், க‌டுமையான‌ போர் தொட‌ர‌லாம் !".

போஸின் மேல் க‌டுங்கோப‌ம் கொண்ட‌ன‌ர் கூடியிருந்த‌ த‌லைவ‌ர்க‌ள். "ஒரு அமைப்பின் தலைவனாக இருந்து கொண்டு துடுக்குத்தனமாகப் பேசுவது பெரும் தவறு. நீங்கள் அறிவாற்றால் கொண்டவர் தான். வீரர் தான். வீரத்தையும் விவேகமாகக் காட்ட வேண்டும். கொஞ்ச‌ம் பொறுங்க‌ள், முதன் முறையாக விவேக‌ன‌ந்த‌ரின் சீட‌ர் 'ப‌க‌வான்ஜி'யும் இன்றைக்கு கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌ச் சொல்லியிருக்கிறார். உங்க‌ளுக்கு விவேகான‌ந்த‌ரைப்பிடிக்கும் எனில் ப‌க‌வான்ஜி அவ‌ர்க‌ளையும் பிடிக்கும். அவ‌ர் சொன்னாலாவ‌து கேட்பீர்கள் தானே ?!" என‌ முக‌ம் சுழித்த‌ன‌ர்.

குஞ்சுத‌னைக் காக்க‌ க‌ழுகிட‌ம் சின‌ம்கொள்ளும் கோழியின் சீற்ற‌‌மும், கட்டி வைத்த யானையின் அதகள ஆக்ரோஷ‌மும், கூடைக்குள் சுருண்டுருளும் கருநாகச் சீற்றமும், கொட்டடியில் அடைபட்ட கோவில் காளையின் மூர்க்கமும், என‌ ஏதோ ஒரு பிடிமான‌த்தின் கீழ் இருந்து க‌ட்டுண்டு தன்நாட்டை நயவஞ்சகர்களிடம் இருந்து காக்கமுடியாது உளன்றான் இளைஞன் போஸ்.

"வீதியில் வியாபாரம் செய்ய வந்தவனை வீட்டுக்குள் அழைத்து, பொறுப்பையும் தந்த நீங்கள், அஹிம்சை அஹிம்சை என்றால், விடுதலை என்பது வான் உள்ளளவும் எட்டாத காரியமாகி விடும். நீங்க‌ள் ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌மாட்டீர்க‌ள். என் முடிவை நானே எடுக்கிறேன் ! இந்தப் பதவியினால் தானே என்னை அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட பதவி எனக்குத் தேவையில்லை !" என‌ த‌ன‌து காங்கிர‌ஸ் தலைவர் ப‌த‌வியை ராஜினாமா செய்து கூட்ட‌த்தை விட்டு வெளியேறினான்.

'போராடிப் பெறுவதே விடுதலை, அதுவே தமது குறிக்கோள்' என்று இளைஞர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் செய்தான். க‌டுமையான‌ த‌ண்ட‌னைக‌ளுக்குட்ப‌ட்டு ப‌ல‌முறை சிறை சென்றான். எந்திர‌த்தின் முடுக்குத‌லில் இறுகும் இரும்பென‌, மேலும் இறுகி உறுதியான‌து போஸின் எண்ண‌மும், செய‌லும்.

'ப‌க‌த் சிங்கைத் தூக்கிலிடுவான். ஜாலிய‌ன் வாலா பாகில் அப்பாவி ம‌க்களைப் பொசுக்கித் த‌ள்ளுவான். அவ‌ன் ஜென்டில்மென், நாம‌ காட்டுமிராண்டிகள் ! இவற்றை எல்லாம் தட்டிக் கேட்டால் என் நாட்டிலேயே என்னைச் சிறையில் தள்ளுகிறான். என் தலைவர்களையே என்மேல் வெறுப்பு கொள்ள வைக்கிறான். எங்கிருந்தோ வந்து, எவ்வளவு தந்திரமாக ந‌ம் ஆட்க‌ளையே ஏவி விட்டு, த‌ள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறான். அவனைப் போல தந்திரக்காரனாகத் தான் போரிட வேண்டும். அதற்கு எல்லைகளற்ற அறிவும் ஆதரவும் வேண்டும். இங்கிருப்பதால் தானே எதுவும் செய்ய முடியவில்லை. நம் எதிரியின் எதிரி நமக்கு நண்பன்.' ... எண்ண‌ அலைக‌ளில் மித‌ந்து ஜெர்ம‌னி சென்றான்.

அங்கிருந்து வானொலியில் போஸ் உரையாற்ற, 'இங்கே சிறையிலடைக்க அங்கே எப்படி அவன்?!' என அதிர்ந்து போன‌து பிரிடிஷ் அர‌சு. அதுவும் சென்ம‌ப் ப‌கைய‌னான‌ ஜெர்மானிய‌னினுட‌ன். 'அஹிம்சா முறை' ஆட்டுவிக்காத‌ வித்தையை, முதன்முறையாகத் த‌ந்திர‌ம் ஆட்டுவித்த‌து.

கால் க‌டுக்க‌ ந‌ட‌ந்து, ம‌லைக‌ள் ப‌ல‌ க‌ட‌ந்து, நீரடியில் மித‌ந்து, ஊண் உற‌க்க‌ம் ம‌ற‌ந்து, ஜெர்ம‌னியில் இருந்து ஜ‌ப்பான், சிங்க‌ப்பூர், ப‌ர்மா, ஸோவியத் ரஸ்யா என‌ப் பல திசைகளிலும் ப‌ய‌ணித்தான். ப‌ல‌ த‌லைவ‌ர்க‌ளுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தினான். வழக்கம் போல் வானொலியில் உரையாற்ற‌வும் த‌வ‌றுவ‌தில்லை. செல்லும் இட‌மெல்லாம் சேர்ந்த‌து இளைஞ‌ர் பட்டாளம். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என‌ ஆங்காங்கே அணிக‌ள். ம‌லைத்துப் போன‌து பிரிடிஷ் அர‌சாங்க‌ம்.

ந‌ரியின் த‌ந்திர‌ம் ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ளுக்குச் சொல்லியா த‌ர‌ணும். உள்ளூரில் ஒடுக்குமுறையை ஆர‌ம்பித்த‌து பிரிட்டிஷ் அர‌சு. ப‌ல‌ சார‌ண‌ர் இய‌க்க‌ங்க‌ளைத் த‌டை செய்த‌து. வெள்ளைச் ச‌ட்டைச் சுதேசிகளை அடித்துத் துவைத்த‌து. ச‌ந்தேக‌த்திற்குரிய‌வ‌ரை அந்த‌மானில் கொடும் சிறைக்கு அனுப்பிய‌து.

எண் திசைகளில் இருந்தும் ஏராளச் செய்திக‌ள் வ‌ந்து குவிய‌, போஸின் ம‌ன‌ப்பாறை லேசாக‌ ஆடிய‌து. லாவாக் கொப்புள‌மாய் உதிர‌ம் கொதிக்க‌, வெடிக்க‌த் தாயாரான‌து எரிம‌லை.

"ஆளும் அதிகார‌ம் சிறிதும் இல்லாத வியாபாரியான வெள்ளையன் உட‌ன‌டியாக‌ எம் ம‌ண்ணை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவ‌ன‌து நாட்டுக்குள் புகுந்து துவ‌ம்ச‌ம் செய்வேன். ஏராள‌மான‌ போர்க் க‌ப்ப‌ல்க‌ளும், போர் விமான‌ங்க‌ளும், ஆள் ப‌ல‌மும், நாடுக‌ள் ப‌ல‌மும் உங்கள் நாட்டின் திசை நோக்கி நிற்கிறது. எந்த நேரமும் அவை புறப்படலாம். ஜெர்ம‌னி வானொலி மூல‌ம் இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அர‌சுக்கு நான் விடுக்கும் உறுதியான இறுதிக‌ட்ட‌ எச்ச‌ரிக்கை !" என்று சீறினான்.

இவ‌னை உயிரோடு இன்னும் விட்டு வைத்தால், அது பிரிட்டிஷ் அரசை பேராப‌த்தில் கொண்டு விடும். இனியும் தாம‌திக்க‌லாகாது என ரகசிய‌ கூட்ட‌ம் போட்டு க‌ட்ட‌ம் க‌ட்டிய‌து பிரிட்டிஷ் அர‌சு.

க‌ட‌ந்த‌ சில வாரங்க‌ளில், தாய்வானில் இருந்து ஜ‌ப்பான் நோக்கி சென்ற‌ விமானம் நொறுங்கி விழுந்ததில், ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் அனைவ‌ரும் உயிரிழ‌ந்த‌ன‌ர் என்றும், அவ‌ர்க‌ளில் போஸும் ஒருவ‌ர் என்ற‌ செய்தியும் காட்டுத் தீயாய்ப் ப‌ர‌வ‌, பிரிட்டிஷ் அர‌சின் க‌ண்க‌ளில் ப‌ர‌வ‌ச‌ம் மின்னிய‌து.

"செத்தொழிந்தான் எதிரி !" என்று பிரிட்டிஷார் மார்தட்ட முடியா வண்ணம், போஸ் ம‌றைந்தாலும் அவ‌ர் விட்டுச் சென்ற பட்டாளம் மறையாது, தொட‌ர்ந்து ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து வெள்ளைய‌ரை எதிர்த்துப் போராடிய‌து. ப‌ல போராட்டங்களுக்குப் பின், அடிதடிகளுக்குப் பின், ஆச்சரியங்களுக்குப் பின், பணிந்தனர் வெள்ளையர். "உங்க‌ள் நாட்டிற்கு சீக்கிர‌மே விடுத‌லை கொடுப்போம் !" என்று உறுதி அளித்தனர்.

போஸ் ம‌றைந்து இர‌ண்டாண்டுக‌ளில், 1947 ஆக‌ஸ்ட் மாத‌ம் 15ம் தேதி விடுத‌லை பெற்ற‌து இந்திய‌த் தாய் நாடு. நாடுமுழுக்க வெற்றிக் கனியைச் சுவைத்துக் கொண்டிருக்க‌, 'இதைக் காண‌ ந‌ம் த‌லைவ‌ன் இன்று இல்லையே !' என‌ ஏங்கிய‌ ப‌ட்டாள‌த்தார்க‌ளுக்கு ம‌த்தியில், காங்கிரஸ் த‌லைவ‌ர்களுக்கு ந‌டுவில், விடுத‌லை விருந்தில் க‌ல‌ந்திருந்தார் 'ப‌க‌வான்ஜி' !!!!!

யூத்ஃபுல் விகடன் - ஆகஸ்ட் 15 சுதந்திரதின சிறப்புப் பக்கத்தில்


விகடன் முகப்பில்

12 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

அஹிம்சை வென்றது. சுதந்திரம் கிடைத்தது. உண்மை. ஆனால் அதன் பின்னே சுபாஸ் சந்திர போஸ் தீமை கண்டு பொங்கி எழுந்து போரிட்டதன் பலன்களும் உண்டு என்பதை சரித்திரம் மறுக்கவே இல்லை. அழகாக விவரித்துள்ளீர்கள் அவரது போராட்டத்தை.

//விடுத‌லை விருந்தில் க‌ல‌ந்திருந்தார் 'ப‌க‌வான்ஜி' !!!!!//

இப்போதும் தீவிரவாதிகளை அடக்கவும் ஒடுக்கவும் ஆயுதம் எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது அரசு. பகவான்ஜி எப்போதும் நம்மோடு இருந்து நாட்டினைக் காக்கட்டும். அவருக்கு நம் வீரவணக்கங்கள்!

அருமையான இடுகைக்கு என் பாராட்டுக்களும்!

ராமலக்ஷ்மிsaid...

சுதந்திரதினத்துக்கு என் வாழ்த்துக்களும்:)!

துபாய் ராஜாsaid...

//"எதைப் பற்றியும் கவலை இல்லை. என் நாட்டின் சுதந்திரத்திற்கு எந்தச் சாத்தானுடனும் கை கோர்ப்பேன் //

//காங்கிர‌ஸ் தலைவர் ப‌த‌வியை ராஜினாமா செய்து கூட்ட‌த்தை விட்டு வெளியேறினார்.//

//குஞ்சுத‌னைக் காக்க‌ க‌ழுகிட‌ம் சின‌ம்கொள்ளும் கோழியின் சீற்ற‌‌மும், கட்டி வைத்த யானையின் அதகள ஆக்ரோஷ‌மும், கூடைக்குள் சுருண்டுருளும் கருநாகச் சீற்றமும், கொட்டடியில் அடைபட்ட கோவில் காளையின் மூர்க்கமும், என‌ ஏதோ ஒரு பிடிமான‌த்தின் கீழ் இருந்து க‌ட்டுண்டு தன்நாட்டை நயவஞ்சகர்களிடம் இருந்து காக்கமுடியாது உளன்றார் இளைஞன் போஸ்.//

//கால் க‌டுக்க‌ ந‌ட‌ந்து, ம‌லைக‌ள் ப‌ல‌ க‌ட‌ந்து, நீரடியில் மித‌ந்து, ஊண் உற‌க்க‌ம் ம‌ற‌ந்து, ஜெர்ம‌னியில் இருந்து ஜ‌ப்பான், சிங்க‌ப்பூர், ப‌ர்மா, ஸோவியத் ரஸ்யா என‌ப் பல திசைகளிலும் ப‌ய‌ணித்தான். ப‌ல‌ த‌லைவ‌ர்க‌ளுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தினான். வழக்கம் போல் வானொலியில் உரையாற்ற‌வும் த‌வ‌றுவ‌தில்லை. செல்லும் இட‌மெல்லாம் சேர்ந்த‌து இளைஞ‌ர் பட்டாளம். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என‌ ஆங்காங்கே அணிக‌ள். ம‌லைத்துப் போன‌து பிரிடிஷ் அர‌சாங்க‌ம்.//

//ஆளும் அதிகார‌ம் சிறிதும் இல்லாத வியாபாரியான வெள்ளையன் உட‌ன‌டியாக‌ எம் ம‌ண்ணை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவ‌ன‌து நாட்டுக்குள் புகுந்து துவ‌ம்ச‌ம் செய்வேன். ஏராள‌மான‌ போர்க் க‌ப்ப‌ல்க‌ளும், போர் விமான‌ங்க‌ளும், ஆள் ப‌ல‌மும், நாடுக‌ள் ப‌ல‌மும் உங்கள் நாட்டின் திசை நோக்கி நிற்கிறது. எந்த நேரமும் அவை புறப்படலாம். ஜெர்ம‌னி வானொலி மூல‌ம் இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அர‌சுக்கு நான் விடுக்கும் உறுதியான இறுதிக‌ட்ட‌ எச்ச‌ரிக்கை !" என்று சீறினார்//

நல்லதொரு நாளில்,
நல்லதொரு தலைவரைப் பற்றி,
பல நல்ல தகவல்களை,
நல்லவிதமாக வழங்கியமைக்கு
நன்றி.வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதிsaid...

மாவீரன் நேதாஜியின் தியாகமும், அவனுடைய படையினரின் தியாகமும் உண்மையான நாட்டுப் பற்று, அதன்பால் ஏற்பட்ட கோபக்கனல், அதன் வெளிப்பாடு.

நேதாஜி இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...!

ரூபாய் நோட்டுகளில் அல்ல...!

மக்களின் இதயங்களில்...!

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

அருமை அருமை - இடுகை அருமை

விடுதலைத் திருநாளில் நல்லதொரு தகவல் அடங்கிய இடுகை

நன்று நன்று

நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால்said...

நல்ல நினைவூட்டல் -

வழக்கம் போல நல்ல இடுக்கை.

சுதந்திர தின நல் வாழ்த்துகள்

யூத்துக்கும் ...

துளசி கோபால்said...

//என்திசைகளில் //இருந்தும் ஏராளச் செய்திக‌ள்


எண் திசைகளில்




//போஸ் ம‌றைந்து இர‌ண்டாண்டுக‌ளில், 1945 ஆக‌ஸ்ட் மாத‌ம் 15ம் தேதி விடுத‌லை பெற்ற‌து இந்திய‌த் தாய் நாடு//

ஆஹா..... அவசரத்தில் சுதந்திரம் சீக்கிரமாக் கிடைச்சுருச்சா?

1947

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//பகவான்ஜி எப்போதும் நம்மோடு இருந்து நாட்டினைக் காக்கட்டும். அவருக்கு நம் வீரவணக்கங்கள்!//

நிச்சயம் நேதாஜி போன்ற தலைவர்கள் நாட்டுக்கு என்றும் தேவையே. பகவான்ஜி வடிவிலாவது சாத்தியமாகட்டும் :)

//அருமையான இடுகைக்கு என் பாராட்டுக்களும்!

சுதந்திரதினத்துக்கு என் வாழ்த்துக்களும்:)!//

எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் !

சதங்கா (Sathanga)said...

துபாய் ராஜாsaid...

//
நல்லதொரு நாளில்,
நல்லதொரு தலைவரைப் பற்றி,
பல நல்ல தகவல்களை,
நல்லவிதமாக வழங்கியமைக்கு
நன்றி.வாழ்த்துக்கள்.
//

குறிப்பிட்டு பாராட்டியதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு.

சதங்கா (Sathanga)said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//மாவீரன் நேதாஜியின் தியாகமும், அவனுடைய படையினரின் தியாகமும் உண்மையான நாட்டுப் பற்று, அதன்பால் ஏற்பட்ட கோபக்கனல், அதன் வெளிப்பாடு.//

நேதாஜி பற்றி என்று படித்தாலும் சிலிர்க்கவைக்கும் வரிகள்.

//நேதாஜி இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...!

ரூபாய் நோட்டுகளில் அல்ல...!

மக்களின் இதயங்களில்...!//

ம்ம்ம். யோசிக்க வைக்கும் வரிகள். க்ரேட்.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...
அன்பின் சதங்கா

//அருமை அருமை - இடுகை அருமை

விடுதலைத் திருநாளில் நல்லதொரு தகவல் அடங்கிய இடுகை

நன்று நன்று

நல்வாழ்த்துகள்//

வழக்கம் போல வளமான வாழ்த்துக்களுக்கு, எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால்said...

//வழக்கம் போல நல்ல இடுக்கை.

சுதந்திர தின நல் வாழ்த்துகள்

யூத்துக்கும் ...//

நன்றி ஜமால் ...

Post a Comment

Please share your thoughts, if you like this post !