தோற்றத்தில் என்ன இருக்கிறது ?
நம்மில் சிலர், உடுத்தும் துணி ஆகட்டும், கால் நுழைக்கும் காலணி ஆகட்டும், பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதாவது, நிறுவனக் குறியீடு பார்த்து வாங்குவார்கள்! காலணிக்கு இந்த நிறுவனம். மேலாடைக்கு இந்த நிறுவனம். கைக்கெடிகாரம், கால்சட்டை, காதணி, கைவளை, சாந்து மற்றும் சந்தனப் பொட்டு, வாகனம், வீட்டுப் பொருட்கள் என அது அதற்கு பேர்பெற்ற நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.
பேர்பெற்ற நிறுவனங்களின் பொருள் வாங்குவதற்கும், சாதாரண நிறுவனப் பொருள் வாங்குவதற்கும் முக்கிய காரணிகள், விலை மற்றும் அதன் தரம். முன்னதில் விலை, மற்றும் தரம் அதிகம். பின்னதில் விலையும் தரமும் குறைவே. தங்கள் வசதிக்கேற்பப் பின்னதைப் பலரும், முன்னதைச் சிலரும் வாங்கி பயனடைகிறார்கள்.
முன்னதில் உடை உடுத்திய ஆணோ, பெண்ணோ, அப்படியெ லாவகமாக வந்து தங்கள் ஊர்தியில் இருந்து இறங்கினால், அங்கே அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி தான். "திரைப்படங்களின் தாக்கமா, அல்லது, 'இது என்னால் முடியவில்லை இவன் செய்கிறான்' என்றா?, அல்லது வேறு என்னென்ன காரணங்களாக இருக்க முடியும்?" என்று யோசித்தால், உளவியல் ரீதியாக அனுகினால் தான் இதற்கு விடை காண முடியும் போல.
கோவில் விஷேஷங்கள், வீட்டுத் திருமணங்கள், போன்ற இடங்களில் விலை மிகுதி போன்று போலியாகவோ, அல்லது உணமையிலேயே விலை மிகுதியாகவோ பளபளக்கும் ஆடை அணிகலண்கள் பூண்ட இச்சிலரின் அலங்காரம் பலரின் கண்களைப் படுத்தி எடுக்கும். பல கணங்களில் 'ஏன் இப்படித் தங்களை அலங்காரம் செய்து காட்சிப் பொருட்களாய் வலம் வருகிறார்கள்' என்ற எண்ணம் எழும்.
இப்படிப் பள பளா என்று இல்லாமல், 'கந்தையாணாலும் கசக்கிக் கட்டு' என்று சாதரணமாக இருந்தால் தான் என்ன? இவ்வுலகம் நம்மை எவ்வாறு பார்க்கும், நடத்தும்?
தலைக்குமேல ஏறி உட்காருமா? எட்டி உதைக்குமா? திட்டுமா? வில்லெடுத்து எல்லாம் அடிக்குமா?
'நன்றாக உடுத்தாமல் தோற்றத்தில் பொலிவில்லாமல் ஏழையாய்த் தோற்றம் தரும் இறைவா, உன்னையே இவ்வுலகம் இப்படித் தானே நடத்திற்று' என்று வேடிக்கையாக வெண்பா வடிக்கிறார் ஆசுகவி காளமேகம்.
தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
பூண்ட செருப்பாலொருவன் போடானோ –
மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ
தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.
தில்லை நாதனே, "நீ எழையானதால், உன் தலையில் கங்கை ஏறினாள். உன்னை செருப்பால் மிதித்தார் கண்ணப்பர். 'பித்தா பேயா' என்று திட்டினார் சுந்தரர். வில்லால் அடித்தார் அர்ச்சுனன்" என்கிறார் காளமேகம்.
சமீபத்தில் என் நெருங்கிய நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் நடந்த சம்பவம். வேறொரு குழுவினரைச் சந்திக்க வேண்டி, இவரும் இவரது குழுவிலிருந்து வில்லியம் என்ற அமெரிக்கரும் காத்திருக்கிறார்கள். நம் நண்பர் சாதாரண தோற்றத்தில் என்ன தேவையோ அதற்கேற்ப இருப்பவர். ஐந்து நிமிடத்தில் வருகிறேன் பேர்வழி என்று சொல்லி கால்மணி நேரம் கழித்து வந்த இருவர், இவரைப் பார்த்து, 'யாரு வில்லியம்?' என்றிருக்கிறார்கள். நம் நண்பர் வில்லியத்தைக் காண்பிக்க. அவரிடம் ஓடி, 'ஹாய்... ஐ ஆம் ...' என்று சொல்லி இருவரும் அறிமுகம் செய்து கொண்டு, உரையாடலைத் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரிடமே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் நம் நண்பரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வில்லியமும் எவ்வளவோ சங்கேதமாகச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. வந்த இருவரும் நம் நாட்டினர். நண்பர் இதுபோல நிறைய பார்த்திருப்பார் போல, அவர் முகத்தில் சலனமில்லை. வில்லியத்திற்கு நம் நண்பர் தான் மேலாளர். ஆனால், கடைசி வரை நண்பர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
இதில், வெள்ளைக்காரன் போல் தோற்றமில்லாத, கோட் சூட் அணியாத நம் நண்பரின் பேரில் தவறா? அல்லது நம் இந்திய மனங்களின் மீது தவறா? இந்த எண்ண ஓட்டம் இந்தியா மற்றுமில்லை, பொதுவாக உலகெங்கிலும் உண்டு என்றே தோன்றுகிறது.
ஒரு காட்சி இங்கு அமெரிக்காவில். ஒரு கடையில், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவரும், நல்ல தோற்றம் கொண்ட ஒரு வெள்ளைக்காரரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கடைக்கு சரக்கு இறக்க வருகிறார் ஒரு வெள்ளையர். நேரே மற்ற வெள்ளைக்காரரிடம் சென்று, 'ஹலோ அலெக்ஸ், ...' என்று கைகுலுக்கி உரையாடலைத் தொடங்குகிறார். நம் நண்பருக்கு நேர்ந்த அதே கதி தான் இங்கு 'அலெக்ஸ்' என்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணிக்கும். இத்தனைக்கும் அலெக்ஸ் கோட் சூட் எல்லாம் அணிந்திருந்தார், மற்ற வெள்ளையர் ஓரளவுக்கு அலுவலக உடையில் இருந்தார். இருப்பினும், அலெக்ஸை சரியாகக் கண்டு கொள்ளாது ஏன்?
இப்பொழுதெல்லாம் இங்கே அலுவலகங்களில், மேற்கண்ட காட்சிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவரிடம் எங்கு எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் வகுப்பெடுக்கிறார்கள். இந்த நிலை இந்தியாவிலும் கடைபிடிக்க வேண்டும். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் !!!
(படங்கள்: நன்றி இணையம்)
4 மறுமொழி(கள்):
அனைவருக்குமான பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
ஆடை பாதி ஆள் மீதின்னு அந்தக் காலத்துலேயே சொல்லி வச்சுருக்காங்க.
சிந்திக்க வைக்கும் அவசியமான பகிர்வு.
அன்பின் சதங்கா - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - இந்நிலை இந்தியாவிலும் நடக்கிறது - காலம் மாறும் - மாறத்தான் வேண்டும் - மாறும். நட்புடன் சீனா
Post a Comment
Please share your thoughts, if you like this post !