வட்டக் கரிய விழி (ஒரு காதல் கதை !)
"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்."
...
"என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?"
...
"ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?"
...
"ஆமா...மத்த பிள்ளைங்க மாதிரி இல்லாம நம்ம பிள்ளைங்க நம்ம பேச்சு கேக்குதுங்களே, அதுவே எவ்வளவு பெரிய விஷயம். இதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்."
...
"சரி, வச்சிருங்க. அப்புறம் பேசலாம்".
***
"அம்மா, இன்னிக்கு ஆஃபீஸில் சரியான வேலை. தலைவலிக்குது, காஃபி சீக்கிரம் போடு" என்று சொன்ன ராஜேஷின் காதுகளில் விழுந்த, அவன் அம்மாவின் தொலைபேசி உரையாடல், சிறிதே நெருடலை ஏற்படுத்தியது. காரணம், இன்று தான் வாளினும் கூறிய விழியாளிடம் மொத்தமாய்ச் சுருண்டிருந்தான்.
***
'வந்த மின்னஞ்சல்களுக்கு எல்லாம் பதில் எழுதியாச்சு. ரீடெய்ல் ப்ராஜக்ட் டிசைன் முடிச்சு கோடிங் ஆரம்பிக்கப் போறாங்க. நாளைக்கு டிசைன் ரிவ்யூ ப்ரெஸன்ட் பண்ணனும். அதற்கான பவர்பாயின்ட் ரெடியா எடுத்து டெஸ்க்டாப்பில் போட்டாச்சு. ஃபார்மஸி ப்ராஜக்ட் கிக் ஆஃப் மீட்டிங் வேற இருக்கு நாளைக்கு. அதற்காக சேகரித்த செய்திகள், ஃபைல்கள் என எல்லாம் எடுத்து வச்சாச்சு' எனத் தனக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள் ஷாலினி. எப்பவுமே அவள் பெர்ஃபக்ட். ஆனாலும் 'பெர்ஃபக்ட் ஷாலினி' என்பதைவிட 'புயல் ஷாலினி' என்றால் அந்த ஆறரை ஏக்கர் இந்திய மென்பொருள் கம்பெனியில் அறியார் யாருமில்லை எனலாம். எல்லாவற்றிலும் ஒரு வேகம். தன் வேலையை, வேலை செய்யும் அலுவலகத்தை அந்த அளவிற்கு நேசித்ததன் பலன் தான் இந்த வேகம், பதவி எல்லாம்.
இதே அலுவலகத்தில் ராஜேஷ் ஒரு சீனியர் மேனேஜர்.
இவர்கள் இருவருக்கும் ஒரு 'இது' வந்து, நட்பாகிக் காதலாகிச் சில பல மாதங்களாகவே கசிந்து உருகிக் கொண்டிருந்தது.
"புயல், ஐ லவ் யூ" என்று ஷாலினிக்கு நொடித்தகவல் (இன்ஸ்டன்ட் மெஸேஜ் தாங்க, இதற்குத் தமிழ் வார்த்தை கண்டுபிடித்து எழுதுவதற்குள் இவங்க எங்கேயாவது போயிடப்போறாங்க. அதனால இவங்கள ஃபாலோ பண்ணலாம், சரியா ?)) அனுப்பினான் ராஜேஷ்.
"எத்தனை தடவை சொல்லிட்ட ... ஏதாவது புதுசா சொல்லுடா !" என்று பதிலடித்தாள் ஷாலினி.
"உடல் மண்ணுக்கு ... உயிர் ஷாலுவுக்கு ..."
"உவ்வே ... அரசியல் ஸ்டேமென்ட். ம்.ஹிம். நாட் இம்ப்ரஸ்ட் ..."
"வட்டக்கரிய விழி கண்ணம்மா என்னை
வாட்டி வதைக்கிறதே !
கிட்ட நெருங்கிவரக் கண்ணம்மா புயலாய்
கிறங்க(வும்) வைக்கிறதே !"
"பாவன்டா பாரதியார் பாட்டு. ப்ளீஸ் விட்டுடு. உல்டா பண்ணி சொன்னாலும் நல்லாத் தான் இருக்கு. ஏன் அவரு, இவருனு மத்தவங்க சொன்னதே சொல்றே ? உனக்கு என்று எதுவும் சொல்லத் தெரியாதா ?" என்று சீண்டினாள்.
"விளையாடாதே ஷாலு. ஐம் சீரியஸ்"
"நானும் சீரியஸ் தான் ராஜேஷ்"
"போதும் ... உங்க அப்பா கிட்ட பேசறேன் பேசறேனு சொல்லிட்டே இருக்கியே. எப்போ பேசப் போறே? இன்னும் நாட்களைத் தள்ளிப் போட்டுக் கடைசியில் என்னைக் குறை சொல்லாதே. அப்புறம், எங்க வீட்டில் பார்க்கும் எந்த அழகான பெண்ணையாவது நான் திருமணம் செய்து கொள்ள, நீயே வாய்ப்புத் தந்த மாதிரி ஆகிவிடும்."
"என்ன மிரட்டறியா ? அப்படியாவது ஆள விடு சாமீ. அடக்கமா அழகா எங்க வீட்டிலயும் எனக்குப் பையன் பார்க்கிறாங்க, தெரிஞ்சுக்கோ !"
'இன்னிக்கு என்னாச்சு இவளுக்கு. ரொம்பவே பொங்குது புயல். சூராவளி ஆகறதுக்கு முன் தடுக்கணுமே !' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.
"ஹேய் ஷாலு, நான் கெளம்பறேன். என்னடி அரட்டை அங்க இன்னும் கிளம்பாமல் ?!" என்று ஷாலினியின் கணினித்திரையை ஊடுருவினாள் (ஸ்கேன்க்கு தமிழ் வார்த்தை என்னவா இருக்கும் ?) லதா.
"ஓ... சாருக்குத் தெரியாதா செய்தி. அதான் இந்த வாரு வாருறியா ? இதோ இப்பவே போய் ராஜேஷ் கிட்ட எல்லாவற்றையும் சொல்றேன்" என்று புயலாய்க் கிளம்பிய லதாவைத் தென்றலாய்த் தடுத்தது புயல்.
"அவளைத் தடுத்து என்ன பிரயோஜனம். எல்லாத்தையும் கேட்டுட்டேன் ஷாலு." என்று பூரிப்புடன் வந்த ராஜேஷை, "என்னது மறைந்து நின்றுகொண்டு அந்தக்கால கதாநாயகன் ... ம்ம்ம்ம் ... ஜெய்சங்கர் மாதிரி டயலாக் விட்டுகிட்டு வர்றே" என்று வாருதலைத் தொடர்ந்தாள் ஷாலினி.
"அம்மாடீ... நீயாச்சு ராஜேஷாச்சு. நான் வர்றேம்பா ... ராஜேஷ், பை தி வே, கங்க்ராட்ஸ் அன்ட் ஆல் தி பெஸ்ட்" என்று அங்கிருந்து நாகரீகமாக நகன்றாள் லதா.
அலுவலகத் தளத்தில் அருகில் யாருமின்றித் தாம் இருவர் மட்டும் என்று உணர்ந்தது முதலாய் அண்ணலும் அவளும் நோக்கியதில், அந்தக் கட்டிடத்தில் இருந்த எல்லா விளக்குகளும் பட்டு பட்டென்று விட்டுப் பிரகாசித்தது.
இனிய மாலை நேரத்தில் மெரீனாவை நோக்கி பயணித்தது தென்றல். வழியில் செடி, கொடி, மரம், மக்கள் என எல்லோரும் சிலிர்த்தபடி ரசிக்க, மெரீனாவில் கடல்நீரில் கால்நனைத்து நடக்க ஆரம்பித்திருந்தனர் ராஜேஷும் ஷாலினியும்.
"வீட்டில் என்ன நடந்தது ? எப்படி ஆரம்பிச்சே ?" என்று ஆரம்பித்தான் ராஜேஷ்.
"ஆச்சாரம், அனுஷ்டானம் இதெல்லாம் இந்தக்காலப் பிள்ளைகள் எங்கே பாக்கறது. அதாவது பரவாயில்ல, ஒரு குலம் கோத்ரமாவது பாக்கப்படாதா ? அபிஷ்டுக்கள் இதெல்லாம் எங்கே போய் முடியப்போறதோ. ஈஸ்வரா ..." என்றார் அப்பா.
"குலம் கோத்ரம் பார்த்தால் ஆச்சாரம் அனுஷ்டானம் தன்னால வந்திடாதா என்ன ? என்ன பேசறேள் ? எங்கே போய் முடியும் ? கல்யாணத்தில தான்" என்றாள் அம்மா.
"கமலம், நீ என்ன பேசறேனு புரிஞ்சு தான் பேசறியா ? நீயே நம்ம ஷாலுவப் பிடிச்சு, இந்தாடீ உன் ஆம்படையான்னு அந்த ராஜேஷ் கையில கொடுத்திடுவ போல் இருக்கு"
"நான் புரிஞ்சுண்டு தான் பேசறேன். 'இந்தப் பையனப் பிடிச்சிருக்கு. இவன் இன்னார். அவா ஆத்துப் பழக்கம் இதான். நான் இவனக் கல்யாணம் பண்ணிக்கறேன்'னு நம்ம கிட்ட வந்து திடமா சம்மதம் கேக்கறச்சே எவ்வளவு சந்தோஷமா இருக்கு. அத்த விட்டுட்டு ..."
"எனக்குத் தெரியும் அப்பா உஷ்ணமா இருந்தாலும், அம்மா தாங்கிப் பிடிப்பார் என. சிலநேர வாக்குவாதத்திற்குப்பின் பெண்கள் கூட்டணி வெற்றி வாகை சூடியது." என்று சொல்லி "த பால் இஸ் இன் யுஅர் கோர்ட் நௌ" என்றாள் ஷாலினி.
பன்னாட்டுக் குழுவினர் சந்திப்பில் கூட அவ்வளவு படபடப்பு ஏற்பட்டதில்லை. தற்போது படபடப்பின் உச்சத்தில் இருந்தான் ராஜேஷ்.
"இவ்ளோ ஈஸியா சம்மதம் வாங்கிட்டே. இத முன்னாடியே செய்திருக்கலாமே ?" என்றான் ராஜேஷ்.
'உன்ன நல்லாத் தெரிஞ்சுக்க டைம் வேண்டாமாடா மடையா ?' என்று நினைத்துச் சிரித்தாள்.
என்னதான் கம்பெனியில் சீனியர் மேனேஜர் பதவியில் மிடுக்குடன் வளைய வந்தாலும், வெளியில் அதுவும் ஒரு பெண்ணின் பிடியில், திருவிழாக் குழந்தையாய் ஆகிவிடும் ஆண்களில், ராஜேஷ் மட்டும் விதிவிலக்கா என்ன ?
சேலைத்தலைப்பு இருந்தால் பிடித்துக் கொண்டு நடந்திருப்பான். சுடிதாரில் 'துப்பட்டாவைப் பிடித்தால் கையோடு வந்துவிடுமே' என்று எண்ணியோ என்னவோ ஷாலினியின் விரல் பற்றி நடந்தான் ராஜேஷ்.
"ஷாலு, ஜீன்ஸ் டி.ஷர்ட் விட இந்த சுடிதார்ல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா ? ... அதையும் விட சேலையில, கடவுளே ... ரம்பை மேனகைகளை எல்லாம் விட அழகானவளை பூலோகத்திற்கு அனுப்பிவிட்டு அங்கே எப்படி இருக்கிறீரோ ... நீர் கடவுளே தான்" என்று தத்துவம் சிந்தினான்.
ஷாலினி அப்படி ஒன்றும் வெளித் தோற்றத்தில் அழகு எல்லாம் இல்லை. அது அவளுக்கும் தெரியும். இருப்பினும் ராஜேஷின் வரிகளை வெகுவாக ரசித்தாள். முள்வெளி உள்சுவைக்கும் பலா அல்லவா அவள்.
"ராஜேஷ், இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா மன நிறைவா உணருகிறேன். நீயும் சீக்கிரம் உங்க வீட்டில் இருந்து நல்ல செய்தி கொண்டுவா. இப்போ ஏதாவது கவிதை சொல்லேன். அவரு இவரு என்று சொல்லாமல் உனக்குத் தோன்றுவதைச் சொல்" என்றாள்.
"இது ஒரு விதமான 'ஞ்'சிருங்கோ கவிதை ஸ்டைல் ஷாலு. உனக்கான ஸ்பெஷல்...
வட்டவிழி விட்ட வழி
சுற்றுதடி நெஞ்சம்,
விட்டிடாது பற்றி அதை
சுற்றிவந்தே கெஞ்சும்.
சுட்டுவிடும் ஈர இதழ்
முத்தம்தர அஞ்சும்,
தட்டித்தட்டி நீயும் சென்று
காட்டுகிறாய் கஞ்சம்.
கட்டவிழ் காளை நானும்
அடையணுமே தஞ்சம்,
பட்டுத்தொட்டு நீயும் என்று
தீர்த்திடுவாய் பஞ்சம் ?"
"சாருக்கு ரொம்ப ஏக்கமும் ஆசையுமாத் தேங்கி நிக்குது போல. எதுனாலும் கல்யாணத்திற்கு அப்புறம் தான். முதலில் உங்க வீட்டில் சம்மதம் வாங்கப் பாருங்க" என்று கஞ்சத்தனத்தைத் தொடர்ந்தாள்.
ஷாலினியின் பாதங்களுக்குக் கொலுசாய் வந்து சுற்றிய நுரை தள்ளிய அலையை ரசிக்கவும் முடியாமல், ரசிக்காமல் இருக்கவும் முடியாமல் தவித்திருந்தான் ராஜேஷ்.
***
இரவு, உணவு வேளையில் பேச்சை ஆரம்பித்தான் ராஜேஷ். "அப்பா, உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இப்ப பேசலாமா ?" என்றான்.
"இருப்பா, அம்மாவும் வந்திரட்டும்" என்று சொல்லி, "சாரதா, கொஞ்சம் இங்க வர்றியா ..." என்றார்.
"என்னங்க, உப்புப் புளி எதிலாவது குறைவா இருக்கா ?" என்று ஈரக் கைகளைத் துடைத்துக் கொண்டே வந்து உணவு மேசையில் அமர்ந்தார் சாரதா.
"அதெல்லாம் சரியாவே இருக்கு. நம்ம ஜூனியர் நம்ம கிட்ட பேசணுமாம். அவரு ஏதாவது சொல்லி நம்ம வயிற்றில் புளியக் கரைக்காமல் இருந்தால் சரி" என்றார் விஸ்வநாதன்.
"தோளுக்கு மேல் வளர்ந்தவனை, அதுவும் ஒரு ஐ.டி. கம்பெனியில் சீனியர் மேனேஜரா இருக்க புள்ளைகிட்ட இப்படியா சர்க்காஸ்டிக்கா பேசறது ..." என்றார் சாரதா.
'அப்பா மூடு சரியில்லையே. இன்று பார்த்தா இந்த டாப்பிக்க ஓப்பன் பண்ணனும் ? ரொம்ப முரண்டு பிடிச்சாங்க என்றால், ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணனுமோ ?' என்று யோசித்திருந்தான் ராஜேஷ்.
"சரி, நானே நேரா விஷயத்துக்கு வருகிறேன். 'அப்பா, நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். அவள் பேரழகி எல்லாம் இல்லை. என் மனதிற்குப் பிடித்திருக்கிறது. அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று நாங்கள் எடுத்த முடிவிற்கு, உங்கள் ஒத்துழைப்புத் தேவை...' என்னடா, சரியா சொல்லிட்டனா" என்று மகனைப் நோக்கிவிட்டு மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
'பெற்றோர்கள் இவ்வளவு ஈஸியா எடுத்துப்பார்களா ?' என ராஜேஷுக்கு ஒன்றும் புரியவில்லை.
"அப்பா ..." என்று இழுத்தான் ராஜேஷ். பிறகு அம்மாவை நோக்கி, "அம்மா, உனக்கு மருமக வேலைக்குப் போனால் பிடிகாதே. அப்ப, கதையின் ஆரம்பத்தில் நீ விட்ட பில்ட்அப் ?"
"அது உங்க அத்தை தான். மூனு மணி நேரமா போன் போட்டுத் தொல்லை தாங்கல. எப்படி கட் பண்றதுனு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அதான் அவங்க சொன்னதுக்கெல்லாம் ஆமா போட்டுகிட்டு இருந்தேன். எனக்கெதுக்குப்பா வேலைக்குப் போறவளப் பிடிச்சு வீட்டுல அடைக்கணும்னு ஆசை. அதுக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு நீங்க நல்லா இருந்தா, அதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு..." என்று அன்டார்ட்டிக்காவின் குளிருக்குள் ராஜேஷை நிறுத்தினார் சாரதா.
"முன்னரே எல்லாம் தெரியும்பா எங்களுக்கு. உங்க ஆஃபீஸ்ல லதா வேலை பாக்குதுல்ல. அவங்க அப்பாவும், உங்க அப்பாவும் சமீபத்தில ஒரு மீட்டிங்கில் சந்திச்சிருக்காங்க. அப்புறம் அடிக்கடி சந்தித்ததில், ஒரு நாள் உங்க அப்பா, அவருகிட்ட உனக்குப் பொண்ணு கேட்டிருக்காரு. பிறகு, லதா எல்லா விஷயத்தையும் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கு. அவரு உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு." என்ற சாராதவைத் தொடர்ந்தார் விஸ்வநாதன்.
"நீ எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கே என்று எங்களுக்குத் தெரியாது. உனக்கு ஒரு கான்ஃபிடன்ட் வந்து, நீயா எங்ககிட்ட பேசட்டும் என்று தான் காத்திருந்தோம். இப்ப எங்களுக்குப் பூரண சம்மதம். உங்க கல்யாணத்த இந்த பிப்ரவரி 14 வச்சிக்கலாமா ?" என்று குறுநகை பூத்தார் விஸ்வநாதன்.
மொட்டவிழ்ந்த வலையில் இருந்து, ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வானில் பறப்பதாய் உணர்ந்தான் ராஜேஷ்.
***
படம்: நன்றி யூத்ஃபுல் விகடன்.
பிப்ரவரி 14 காதல் ஸ்பெஷல் - யூத்ஃபுல் விகடனில்