Monday, September 1, 2008

வானின் நிறம் நீலம் - 8


(ஏதோ ஒரு லீவு நாளில் யாரோ எடுத்த படம் போல :)) கூட்டமா இருக்க மாதிரி கூகளாரிடம் முறையிட்டாலும் கிடைக்க வில்லை ராஃபிள்ஸ் ரயில் நிலையம்)

படியில் கவனத்தோடு தபதபத்து செல்வா இறங்கினாலும், ஒரு கண் அந்த நீல சுடிதாரின் மேலேயே இருந்தது. இருள்சூழ் மேடையில் ஆடிப்பாடும் கலைஞர்களை, அவர்கள் செல்லும் இடமெல்லாம் வட்ட விளக்கு தொடர்ந்து காட்டுவது போல, அநேக ஆங்கிலேய உடைக் கூட்டங்களில் இந்தியச் சுடிதாரைத் தொடர்வது அத்தனை கடினமாய் இல்லை செல்வாவிற்கு.

அவள் எப்பொழுதும் போலவே தான் நடக்கிறாள். ஆனால் செல்வாவிற்கு அவள் விரைந்து செல்வது போல ஒரு எண்ணம். காரணம் கூட்டத்தில் யாரையும் இடிக்காது, தத்தித் தத்தி நடப்பதில் அவன் மெதுவாக இருந்தான்.

'இதோ ரயில் நிலையம் நோக்கி கீழே இறங்குகிறாள், ஒரு முறையாவது திரும்பிப் பாரேன்' எனத் தொடர்கிறான் செல்வா.

மதிய உணவு நேரம் என்பதால் ரயிலடி கூட்டத்தில் மிதந்தது. கார்ட் அடித்து உள்ளே சென்று விட்டாள். செல்வா கொஞ்சமும் யோசிக்கவில்லை, அவளைத் தொடர்கிறான். இன்னும் கீழே ஜூரோங்க் ஈஸ்ட் நோக்கி செல்லும் தடத்தில் நிற்காது, வேறு புறம் செல்கிறாள். 'எத்திசையா இருந்தால் என்ன, எப்படி இருந்தாலும் ரயில் வர சில நொடிகள் ஆகும், அதற்கு அவளிடம் என்ன ஏது என்று கேட்டு விடலாம் என செல்வா யோசித்துக் கொண்டேயிருக்க, ரயிலும் வந்து கொண்டே இருந்தது.

தூரத்தில் சில பெட்டிகள் கடந்து அவள் ஏறுவதைப் பார்த்தான். ஓடிச் சென்று அங்கு ஏறுவதற்குள் கதவு மூடிவிடலாம். ஒரு செகண்ட் யோசித்து, பக்கமே இருந்த கதவில் தாவி ஏறினான். 'அப்பாடா நல்ல வேளை, ரயிலில் கூட்டம் அதிகமில்லை' என்று மெதுவே அவள் இருந்த இடம் நோக்கி, ஓடும் ரயிலில் ஆடி நகர்ந்தான்.

இருக்கை இரண்டிருக்கும் ஓரத்தில் ஒன்றினில் அமர்ந்திருந்தாள் அமைதியாய் நிர்மலா. பக்கமே கம்பி பற்றி நின்றான் செல்வா. "என்னங்க, ஏதாவது முக்கியமான விஷயமா ? ஏதாவது ஆஃபீஸ்ல விட்டு வந்திட்டீங்களா ? சாரி, நாங்க பூட்டிட்டு வெளில போய்ட்டோம். ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா ?"

முதல் சில கேள்விகளுக்கு செவி சாய்க்காமல், செல்வாவையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த நிர்மலா ... தொடர்ந்த அடுக்கு கேள்விகள் அவளை பிரமிப்படைய வைத்தது. நிமிர்ந்து செல்வாவைப் பார்த்தவள் அதிசயித்தாள். "நீங்க ?!!"

"ஆமா நானே தான். இன்று காலை பார்த்தோமே அலுவலகத்தில். என்னங்க ஏதாவது முக்கியமா ...." என செல்வா அடுத்து அடுக்கத் தொடங்குமுன், "அதெல்லாம் ஒன்றுமில்லை, நிக்கறீங்களே, உட்காருங்க" என பக்கத்து இருக்கையை காட்டினாள் நிர்மலா.

"பரவாயில்லைங்க" என்று சொல்லி எதிரில் காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்தான் செல்வா.

"சரி, அதுக்குள்ள ஆபீஸ் முடிஞ்சிடுச்சா, வீட்டுக்கு கெளம்பிட்டிங்களா ?" எனக் கேட்டாள்.

"அட, இதானே வேணாங்கறது. நானும் ப்ரஷாந்த்தும் மதியம் அலுவலகத்திலேயே சாப்பிடுவோம். சீனர்கள் எல்லோரும் வழக்கம் போல வெளிய சாப்பிட போயிருவாங்க. சில நிமிடங்களில் உணவு முடித்து விட்டு, லாக் பண்ணிட்டு அப்படியே ஒரு வாக் கெளம்பிப் போயிருவோம். இன்னிக்கும் அப்படித்தான். நடை போய்ட்டு வந்து பார்த்தா, நீங்க லிஃப்டல கீழ இறங்கறீங்க. முகம் வாட்டமா வேற தெரிஞ்சது, அதான் ஏதாவது " என்று சிங்கிள் டேக்கில் சொல்லி முடித்தான்.

'ம்ம்ம்ம்ம். இன்ட்ரஸ்டிங்' என நினைத்து "வாவ், இதுக்காகவா இவ்ள தூரம் வரீங்க, என்ன முக்கியம் என்றாலும் அது உணவு நேரம் அல்லவா, எனக்குத் தெரியாதா வெயிட் பண்ணனும் என்று, அதுமில்லாமல் இப்படி ரயிலேறி கெளம்பி போற அளவிற்கு இருக்கிறேன் என்றால், அப்புறம் என்ன முக்கியமா இருந்துவிடப் போகிறது"

'அடடா, க்ளீன் போல்ட் டா செல்வா நீ' என்று தன்னையே திட்டிக் கொண்டு, "என்ன இருந்தாலும் ஒருத்தருக்கு உதவி பண்ணனும்னு நினைக்கறது தப்பில்லை தானே, அதும் அழகான இதயம் கொண்டவர்களுக்கு என்றால் காலம் முழுக்க செய்யலாமே" என்று சமாளித்தான் தனது சறுக்கலை.

"இவ்ளோ தூரம் வந்திட்டீங்க, நானே சொல்லிடறேன். இன்டர்வியூ முடிச்சிட்டு, நேரா வீட்டுக்குப் போய் நல்லாத் தூங்கிட்டேன். அப்ப க்ரிஸ்டினா கிட்ட இருந்து கால். எடுத்தா, உடனே வரமுடியுமானு கேட்டாங்க. சரினு சொல்லி கெளம்பி வந்திட்டேன். அவங்களுக்கு ஒரு பெர்சனல் ப்ராப்ளமாம், அவசரமா மலேஷியா போகணும், சில வாரங்கள் ஆகும், அதனால என்னை உடனே அப்பாய்ன்ட் பண்ணுவதாகவும், சேர்ந்துக்கறியா என்றும் கேட்டார். அதான் பேப்பர்ஸ் எல்லாம் சைன் பண்ணி ஆஃபர் அக்ஸெப்ட் பண்ணிட்டேன், இனி ஹெச்.ஆர். பார்த்துப்பாங்க என்றார்." என்று சொல்லி முடித்தாள் நிர்மலா.

"வாவ், கங்ராஜுலேஸன்ஸ்" என்றான் செல்வா. "சரி, எங்க இந்தப் பக்கம் ? காலையில் ஜூரோங்க் ஈஸ்ட்டில் அல்லவா ஏறினீர்கள் ?"

'ம்ம், அடப் பாவி சரியான ஆள் தான், எல்லாம் கரெக்டா சொல்றான்'. "ஆமாங்க, வீடு அங்க தான், இப்ப கொஞ்சம் போரடிக்குது அதான் செரங்கூன் சைட் போயிட்டு, கொஞ்சம் சுத்திட்டு, கோவில் போயிட்டு வீட்டுக்குப் போலாம்னு" என்றாள்.

'தனியா போறே, நானும் வரவா ? என்றால் என்ன நினைப்பாள், கேட்டுத் தான் பார்ப்போமா ?!'

"செல்வா, நீங்க என்ன பண்ணறீங்க ! அடுத்த நிறுத்தத்தில இறங்கி, ட்ரய்ன் மாறி ஆஃபீஸ் போயிடுங்க, இவ்ள தூரம் எனக்கு உதவ நினைத்து வந்த உங்கள் மனதிற்கு நன்றிகள் பல" என்றாள்.

'இல்லை, எப்படியாவது இவளுடன் போகணும்' என முடிவு செய்து "நிர்மலா, உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா, நான் உனக்கு கம்பெனி கொடுக்கட்டுமா ?"

அவனை அறியாமல் ஒருமையில் தன்னை அழைப்பதை, நிர்மலா கவனிக்காமல் இல்லை !!!!

அதே சமயம், வில்லென கேள்விக்குறியாய், 'இவனெதற்கு' என்பது போல் வளையும் அவளின் புருவங்களை செல்வாவும் கவனிக்கத் தவறவில்லை !!!


தொடரும் .....

11 மறுமொழி(கள்):

Ramya Ramanisaid...

குட் ஸோ வேலைக்கு சேர்ந்தாச்சு!

ஆனாலும் செல்வாவுக்கு இப்படி ஒரு பாசமா மெய் சிலிர்க்குது :)

\\அதே சமயம், வில்லென கேள்விக்குறியாய், 'இவனெதற்கு' என்பது போல் வளையும் அவளின் புருவங்களை செல்வாவும் கவனிக்கத் தவறவில்லை !!!
\\

:)

ராமலக்ஷ்மிsaid...

Ramya Ramanisaid...
//ஆனாலும் செல்வாவுக்கு இப்படி ஒரு பாசமா மெய் சிலிர்க்குது :)//

ஆனாலும் செல்வா கொஞ்சம் அவசரக் குடுக்கையோன்னும் தோணுதே ரம்யா:)!

//வில்லென கேள்விக்குறியாய், 'இவனெதற்கு' என்பது போல் வளையும் அவளின் புருவங்களை செல்வாவும் கவனிக்கத் தவறவில்லை//

சரி கவனித்த பின் சுதாகரித்துக் கொள்கிறானா பார்க்கலாம்:)!

RamyaRamanisaid...

\\ஆனாலும் செல்வா கொஞ்சம் அவசரக் குடுக்கையோன்னும் தோணுதே ரம்யா:)!
\\

ஆமா ஆனா அவரோட நாட்டை சேர்ந்தவர் + அழுகு பெண் வேறன்னு நினைச்சு அக்கரை எடுத்திருக்கலாம் .

நாட்டை விட்டு இருக்கும் போது, அவர்கள் நாடோ,மொழியோ பேசும் நபர்களை பார்க்கும் போது ஒரு சிலிப்பு வருதே அந்த மாதிரி இருக்கலாமோ??

கதாசிரியரே சொல்லுங்க..

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//குட் ஸோ வேலைக்கு சேர்ந்தாச்சு!

ஆனாலும் செல்வாவுக்கு இப்படி ஒரு பாசமா மெய் சிலிர்க்குது :)//

இந்தப் பசங்களே இப்படித் தான். ஒருவரைப் பிடித்து விட்டது என்றால் போதும், அப்படியே உருகி ஜொள்ளிருவாங்க :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

////வில்லென கேள்விக்குறியாய், 'இவனெதற்கு' என்பது போல் வளையும் அவளின் புருவங்களை செல்வாவும் கவனிக்கத் தவறவில்லை//

சரி கவனித்த பின் சுதாகரித்துக் கொள்கிறானா பார்க்கலாம்:)!//

ம்ம்ம். சுதாரிச்சிகிட்டானு தான் சொல்லணும். அடுத்த பாகத்தில் படியுங்களேன் :))

சதங்கா (Sathanga)said...

\\ஆனாலும் செல்வா கொஞ்சம் அவசரக் குடுக்கையோன்னும் தோணுதே ரம்யா:)!
\\

ஆமா ஆனா அவரோட நாட்டை சேர்ந்தவர் + அழகு பெண் வேறன்னு நினைச்சு அக்கரை எடுத்திருக்கலாம் .

நாட்டை விட்டு இருக்கும் போது, அவர்கள் நாடோ,மொழியோ பேசும் நபர்களை பார்க்கும் போது ஒரு சிலிப்பு வருதே அந்த மாதிரி இருக்கலாமோ??//

அதே ! அதே !!

//கதாசிரியரே சொல்லுங்க..//

ரம்யா, கொஞ்சம் பி.ஸி. கொஞ்சம் லாங் பொறுமை காக்க முடியுமா ?

Ramya Ramanisaid...

அண்ணே பொறுமையாவே பதிவிடுங்க..அவசரம் வேண்டாம்.. நான் கேட்டது ராமலஷ்மி மேடத்துக்கு நான் சொன்ன பதில சரியா இல்லியான்னு தான் !

வல்லிசிம்ஹன்said...

செல்வா பாவம்பா.
அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே பிரச்சினை. இப்போ மனசு வேற சரியில்லை. ஹ்ம்ம் காதலுக்கு எந்தக் கோணத்தில பார்த்தாலும் கண்ணில்லை.
அந்த உவமை பிரமாதம் சார்.''ஒளிவட்டம் மேடையில் சுற்றி பின் தொடர்வது''.

நாகு (Nagu)said...

என்ன சதங்கா - சுயசரிதை எழுதப்போறேன்னு சொன்னீங்க, ஆரம்பிச்சாச்சா? :-)

நாகு (Nagu)said...

என்ன ட்ரெய்ன் அப்புறம் நகரவேயில்லை. டிக்கெட் செக்கிங் வந்து உள்ளே தள்ளிட்டாரா இல்லை, நான் கொளுத்திப்போட்ட 'சுயசரிதை' வெடி வெடிச்சிருச்சா? :-)

cheena (சீனா)said...

வழக்கமான ரசிகர் கூட்டத்தில் இவ்வாரம் ஒரு புதிய ரசிகர் ( இத்தொடருக்கு மட்டும் தான் - மற்றபடி அவர் சதங்காவின் அருமை நண்பர்)

மேடை - கலைஞர்கள் - வட்ட விளக்கு
நிலையம் - வெள்ளையர்கள் - நீலச்சுடிதார்

செல்வாவின் மனம் நிமலாவினையே சுற்றிச் சுற்றி வரும் பொழுது தப்ப முடியுமா என்ன ?

தொடக்கக் கேள்விகளுக்குப் பதிலளிக்கமல் அடுத்த அடுக்குத் தொடர்க்கேள்விகளில் மலைத்து பதிலளிப்பது - நன்று

பக்கத்து இருக்கையில் அமரச் சொன்னாலும் எதிர் இருக்கையில் அமரும் சராசரி தமிழக ஆண்

வேலையில் சேர்ந்தது பற்றிய மகிழ்ச்சி இருவருக்குமே

எதிர் திசையில் செல்வதை நாசுக்காகச் சுட்டிக் காட்டி - உன்னையே தொடர்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லும் விதம்

சடாரென - அதுவும் இயல்பாக - ஒருமைக்குத் தாவுவது - அதை அவள் கவனிப்பது - புருவத்தினை உயர்த்துவது - அதை அவன் கவனிப்பது

அடடா - காதாசிரியரின் கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது

நன்று நன்று - செல்வா - நிமலா - அடுத்த பாகத்திற்கு வெயிட்டீங்க்ஸ்

Post a Comment

Please share your thoughts, if you like this post !