'வெள்ளித்திரை' விமர்சனம்
ப்ரகாஷ்ராஜின் 'மொழி' பற்றி பேசாதவரே இல்லை எனலாம் ! வழக்கம் போல அவரின் மற்றுமொரு தரமான தயாரிப்பு 'வெள்ளித்திரை'. ஆபாசமில்லை ! குத்துப் பாட்டு(க்கள்) இல்லை ! பஞ்ச் டயலாக் இல்லை ! பஞ்சாப் கதாநாயகியர்கள் இல்லை ! இப்படி இன்றைய தமிழ் சினிமாவின் அடிப்படை அடையாளங்கள் எதுவுமே இல்லாமல், ஒரு நல்ல படம் தயாரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் 'செம தில்லான ஆள்' தான் என்று நிரூபித்திருக்கிறார் ப்ரகாஷ்ராஜ்.
விளம்பரங்களால் தான் படங்கள் பார்க்கிறோமே அன்றி, இன்றைய நிலையில், விரும்பி எந்தப் படமும் பார்ப்பதில்லை. இந்த மாதிரி படங்களுக்கு விளம்பரங்களும் அதிகம் வருவதில்லை. விமர்சனங்களும் வரவேற்கப்படுவதில்லை. யாரு சொல்றாங்க / கொடுக்கறாங்க என்று தெரிவதில்லை, ஆனாலும் 'நம்பர் ஒன்' என்று நாடி பிடித்து சொல்லும் தினசரிகளும், வார, மாத இதழ்களும் கூட வளவளப்பான அட்டை போல ஜிகிடிகளைத் தான் அச்சிடுகின்றன. சரி, ட்ராக் மாறுது ஷாட்டுக்கு வருவோம் !
ஒற்றை வார்த்தையில் சொன்னால் 'சினிமா' சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பற்றிய கதை தான் 'வெள்ளித்திரை'. நாயகன், டைரக்டர், துணை நடிகர்கள் என்று பல கோடி மக்கள் முன்னேறும் கனவுகளோடு, சினிமாவின் உள்ளும் புறமும் உணவின்றி, ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும் என்று உழன்று கொண்டிருக்க, டாக்குமெண்ட்ரி மாதிரி இல்லாமல், சினிமாவின் நடைமுறை வாழ்வை ரசிக்கும்படி செய்த இயக்குநர் 'விஜி' அவர்களுக்கு கோடி கோடி பாராட்டுக்கள்.
'சினிமாவில், திறமையானவன் திறமையில்லாதவன் என்று சொல்லாதீங்க. வாய்ப்புக் கிடைத்தவன், கிடைக்காதவன் அவ்வளவு தான்' என்பது போன்ற நறுக்கென்று சுறுக்கான வசனங்கள். இது சினிமாவுக்கு மட்டுமல்ல, பொருளீட்டும் மனித வாழ்வுக்கும் பொருந்தும் அல்லவா ?!
எப்படியும் ஒரு நாயகனாய் வந்திட வேண்டும் என்று வெறியோடு சினிமாக்காரர்களை வலம் வரும் ப்ரகாஷ்ராஜ். எப்படியும் ஒரு இயக்குநராக , தான் நினைக்கும்படி ஒரு தரமான படம் பண்ணனும் என்று போராடும் துணை இயக்குநர் ப்ரித்திவிராஜ். நல்ல வேடங்கள் சிறப்பா செய்யவேண்டும் என்று காத்திருக்கும் துணை நடிகர்கள் பட்டாளம். இவர்களோடு, வீட்டில் போராடும், சினிமாவில் முன்னேறிய நடிகை கோபிகா. இந்த சிம்பிள் கூட்டணியின் வெற்றிப் படம் தான் வெள்ளித்திரை.
முதலில், ஒரு false image க்ரியேட் பண்ணி அதன்மூலம் அனுதாபம் சம்பாதிக்கும் (இன்றும் முன்னனியில் நிற்கும் பல நடிகர்களின் ஆரம்ப கால படங்கள் போல) கேரக்டர் பண்றாரே ப்ரகாஷ்ராஜ் எனப் பார்த்தால், முழுக்க முழுக்க ஆன்டி ஹீரோ ரோல். வில்லன் ரோல் என்று கூட சொல்லலாம். ஆனால் வில்லன் இல்லை !!
'வாய்ப்புக் கிடைக்காத' பல சினிமாக்காரர்கள், அன்றைய வாழ்வைக் கழிக்க கால் டாக்ஸி ஓட்டுவதும், நண்பர்கள் கூடிப் பேசுகையில், டேய் 'கால் டாக்ஸி, மீட்டர் ஒழுங்கா போடுடா' என்று நக்கலடித்து, வேதனையைச் சிரிப்பாக்கி மகிழ்வதும் வெகு எதார்த்தம்.
ஒரு சாதராண ஆளாய் வளைய வந்து, நண்பன் சரவணனின் ரூமிலேயே கெஞ்சிக் கூத்தாடித் தங்கிக் கொண்டு, நண்பனின் கதையைத் திருடி, தன் பெயரில் பதிவு செய்து கொண்டு, இயக்குனருடனும், தயாரிப்பாளருடனும் தர்க்கம் செய்து தானே ஹீரோவாகி, மற்றவர்களை ஜீரோ ஆக்கும் நாயகன் கே.கே. அதாவது கே. கண்ணையன் ! இவை தான் கதையின் கரு.
முதல் படம் வெளிவருவதற்குள் மேனேஜர் வச்சிட்டானா ! ஆங், மேனேஸராய் நிறைய டேமேஸ் செய்கிறார், 'தண்ணி புகழ்' பாஸ்கர். நிஜத்திலும் இப்படித் தானே இருக்கிறார்கள் மேனேஜர்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'நாயை ஏவினா, நாயி வால ஏவுச்சாம் !'. சினிமாக்காரர்கள் தங்களை எளிதில் யாரும் நெருங்கக் கூடாது என்பதற்காகவே பக்காவான ஷீல்டாக இந்த மேனேஜர்களை வைத்துக் கொள்கிறார்கள்.
'இந்த டிவிடி பார்த்தியா, அந்த டிவிடி பாரு, நடிப்புனா என்னன்னு இவங்களப் பார்த்து தெரிஞ்சுக்க' என்று மேலை நாட்டு வல்லுநர்களை அடுக்கும் ப்ரித்திவிராஜுக்கு, 'நான் ஏன் அவர்களைப் பார்க்கணும், என் மண்ணிற்கும், மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன சம்பந்தம். அவங்க ஊரில் அவங்க அம்மா செத்தால், மம்மி என்று அழுவார்கள், நான் ஆத்தா பூடுச்சே என்று எனது உணர்ச்சிகளைக் காட்டித் தானே அழமுடியும்' என்று நடிகனாகப் போராடும் ப்ரகாஷ்ராஜ் சொல்வதும் வெகு எதார்த்தம்.
'இந்த டிவிடி இல்லேன்னா இன்றைக்கு தமிழ் இன்டஸ்ட்ரீல, பாதிக்கு மேல அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் காணாமப் போயிருப்பான். இங்க மட்டும் தான் இப்படி. தமிழன் தமிழனுக்காக படம் எடுங்கடா' என்று சொல்லும் கட்டத்தில், ஈடுபட்ட நாயகர்கள் இருவருமே தமிழர்கள் அல்ல என்றாலும், தமிழுக்கு குரல் கொடுக்கும் அவர்களின் நேசம் நம்மை உருக்குகிறது. உரைக்குமா இன்றைய இளம் மற்றும் முன்னனி இயக்குநர்களுக்கு ?!
'எதுக்கு என்னப் பார்க்க வரும்போது மூட்டை முடிச்சோடு வர்றே' என்று ப்ரித்திவி கேட்க, 'ஒன்னுமில்ல சரவணா உன் ரூமில தங்கிக்கறேனே' என்று ப்ரகாஷ்ராஜ் கெஞ்சுவதும், 'எப்ப காலி பண்ணுவேனு சொல்லிட்டு உள்ள வா' என்று ப்ரித்திவி சொல்லி முடிக்குமுன் உள்ளே புகுந்து தன்னை இருத்திக் கொள்ளும் ப்ரகாஷ்ராஜ். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ரூமக் காலி பண்ணிடு என்று ப்ரித்திவி அடிக்கடிசொல்வதையெல்லாம், மனதில் காட்டமாக பதிந்து கொள்ளுகிறார்.
பின்னாளில், பலமுறை தன்னை சந்திக்க வரும் ப்ருத்வியை, தன் மானேஜர் பாஸ்கர் மூலம் வேலி போடும் ப்ரகாஷ்ராஜ், பழைய காட்டங்களை மனதில் வைத்து ரொம்பவே அப்செட் செய்கிறார்.
ஒரு கட்டத்தில் அவரை வைத்து இயக்க அரை மனதாக ஒப்புக்கொள்ளும் ப்ருத்வியை, ஒவ்வொரு செயலிலும் குத்திக் காட்டி, ஏதாவது இடைஞ்சலுடன் குடைச்சல் தந்து, ஷூட்டிங்குகளை கேன்ஸல் செய்து, தானே பேக்கப் சொல்லி, திடீரென வியட்நாமிலிருந்து யாரிடமும் சொல்லிக்காமல் சென்னை பறந்து, படக்குழுவினரை பதை பதைக்க வைக்கிறார். இன்றைக்கும் பல முன்னணி நடிகர்கள் அடிக்கும் கேலிக் கூத்தல்லவா !!!
'சினிமா ஒருத்தருக்கானது அல்ல, பலரைச் சென்றடையும் ஒரு பவர்புல் மீடியா. இதில நான் இப்படித் தான் படம் எடுப்பேன் என்று நீ இருந்தால், அது உன் முட்டாள் தனம். நல்லதையும் சொல்லணும், கெட்டதையும் சொல்லணும்' என்ற தயாரிப்பாளர் சரத்பாபுவின் யோசனைக்கு, 'ஆமா சார், அறிவை வளர்ப்பது போல மனதையும் வளர்த்துக் கொள்ளணும். இத்தனை நாள் இது தெரியாமல் போயிடுச்சே' என்று தன் முயற்சியை தளர்த்திக் கொள்ளும் ப்ருத்வி. இதுவும் பாராட்டப்பட வேண்டிய மெஸேஜ்.
சாதாரண கண்ணையனா இருந்த ப்ரகாஷ்ராஜ், திரைக்கதை, வசனம் மற்றும் கதாநாயகன் ஆகும் முதல் படத்திலேயே தன்னுடைய இமேஜை செட் செய்து கொள்கிறார். தன்னை இனிமேல் யாரும் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. தான் வரும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை தரணும். யாருகிட்டயும் மன்னிப்பு கேக்கற மாதிரி திரைக்கதை அமைக்கக்கூடாது. படத்தில் சாதரண போலீஸ் கான்ஸ்டபில் அரெஸ்ட் பண்ணக்கூடாது. டிஜிபி வந்து அரெஸ்ட் பண்ற மாதிரி காட்சி வைக்கணும்.... இப்படிப் பலப் பல தமிழ் சினிமாக்காரர்களின் வாழ்விலும் இருக்கத்தானே செய்கிறது.
'என்ன நிஜ டிஜிபியா வருவாரு .... அந்த ரோலும் ஒரு சைடு ஆர்ட்டிஸ்ட் தானே பண்ணனும், இது புரியாதா அந்த ஆளுக்கு !' என்று நக்கலடிக்கும் படக் குழுவினர்.
'இத்தனை மணிக்கு எங்க வெளிய போயிட்டு வர்றே' என அண்ணன் அடிக்க அடிக்க தாங்கிக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் கோபிகாவை, ப்ருத்வியுடன் சேர்க்கவே இந்த அடிதடிக் காட்சி என்று சிம்பிளாய் எவருக்கும் புரியும் படி வைத்தது சற்று சருக்கல்.
பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும் 'நாக்க முக்க' போன்று தரமில்லை !! எந்தப் பாடல்களிலும். கூர்ந்து கேட்டால், சில பாடல்களின் வரிகள் அர்த்தம் பொதிந்து ஜொலிக்கிறது.
இயக்குநராக, வாழ்வின் ஒரு பெரிய திருப்பத்திற்கு எதிர்பார்த்திருக்கும் கதையை, இதுபோல இலகுவாக நண்பன் களவாடுவதும், க்ளைமாக்ஸில் நாயகனுக்குத் தெரியாமல், தொடர்ந்து அவரை ஷூட் செய்வதும் சினிமாட்டிக்காக ஆகிவிடுகிறது. இருந்தாலும் கொஞ்சமும் விருவிருப்பு குறையாமல் காட்சி அமைத்ததற்கு இயக்குனர் விஜிக்கு மீண்டும் பாராட்டுக்கள் !
நிறைய எதார்த்தமான காட்சிகள், குட்டிக் குட்டி ஜோக்குகள் என தெளித்து தொய்வில்லாமல் படத்தை நகர்த்தி செல்வது அருமை. ஆங்காங்கே சில இடங்களில் வழுக்கினாலும், விழாமல் பறக்குது வெள்ளித்திரை !
-----
படம் நல்லா இருக்கே என்று அனுபவித்து விமர்சனம் எழுதி, எதேச்சையாக செய்திகளில் வாசித்தால், இது ஒரு மொழிமாற்று படமாம். மூலம் மலையாளம். எப்படி இவர்கள் 'டிவிடி' பற்றியும், மேலை நாட்டு மேதைகளை உதாரணம் கூறுபவனையும், கேலியும் கிண்டலும் பண்ணுகின்றனர் என்ற ஆச்சர்யமும் எழாமல் இல்லை !!!!