அப்பாவின் காகிதக் கப்பல்
அன்றொரு காலை
அடித்த மழையில்
அழுது பிடிக்க
அப்பா செய்தார்
அழகிய அந்தக்
காகிதக் கப்பல்
நான்காய் மடித்து
மூன்றும் ஒன்றுமாய்
குவித்து மடக்கிப்
பிரித்து இழுக்க
பிறந்தது அழகியக்
காகிதக் கப்பல்.
ஜன்னல் விட்டிறங்கி
வாசல் வெளிவந்து
தெருவில் திரண்டு
ஓடும் நீரில் விட
மிதக்குது அழகியக்
காகிதக் கப்பல்.
அசைந்து ஆடி
செல்லும் அழகை
ரசிக்கும் கண்கள்
குதிக்கும் கால்கள்
தூரம் போனது
காகிதக் கப்பல்.
ஓடிச் சென்று
மடக்கிப் பிடித்து
மீண்டும் விடுகையில்
மெதுவாய் நகருது
மெத்து மெத்தான
காகிதக் கப்பல்.
சடசடவென மழைபிடிக்க
சட்டென மூழ்கி
மிதந்து மேல்வந்து
பிரிந்து மறைந்து
மனதைக் கரைத்தது
காகிதக் கப்பல்.
குளமாகும் கண்களை
காணச் சகிக்கா
அப்பாவின் அன்பில்
மீண்டும் பிறந்தது
மற்றோர் அழகிய
காகிதக் கப்பல்.
ஏப்ரல் 13, 2009 யூத்ஃபுல் விகடனில்
7 மறுமொழி(கள்):
ம்ம் நல்ல அப்பா
காகித கப்பல் செய்து உங்கள் கண்களை குளமாகமால் செய்திருக்கின்றார்.
நந்தியா,
வருகைக்கு நன்றி. என்னதான் டெக்னாலஜி வளர்ந்து ஆரைகமி, கிரைகமி (உச்சரிப்பு சரியா என்று தெரியவில்லை, ஆங்கிலத்தில் Origami, Kirigami) என்று காகிதப் படைப்புக்கள் சிறந்து விளங்கினாலும், அன்று நமக்கு அப்பா அன்பினால் செய்து கொடுத்த காகிதக் கப்பல் இன்றும் மறக்க முடியாத ஒரு inspiration தான்.
அருமையான நினைவுகள், சதங்கா. அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். இந்த ஊரில் எங்கே கப்பல் விட முடிகிறது?
நன்றி நாகு.
//இந்த ஊரில் எங்கே கப்பல் விட முடிகிறது?//
மில்லியன் டாலர் கேள்வி .... நாம நம்ம பசங்களுக்கு செஞ்சு கொடுக்கறோமா ;-)
நெகிழ வைத்தது காகிதக் கப்பல்.
//என்னதான் டெக்னாலஜி வளர்ந்து ஆரைகமி, கிரைகமி (உச்சரிப்பு சரியா என்று தெரியவில்லை, ஆங்கிலத்தில் Origami, Kirigami) என்று காகிதப் படைப்புக்கள் சிறந்து விளங்கினாலும், அன்று நமக்கு அப்பா அன்பினால் செய்து கொடுத்த காகிதக் கப்பல் இன்றும் மறக்க முடியாத ஒரு inspiration தான்.//
மகிழ வைத்தது தங்கள் விளக்கம்.
என் பிள்ளைகளுக்கு காகிதக்கப்பல் செய்து கொடுக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தேன். இன்று என் பேத்திகளுக்கு, சாதா கப்பல், கத்திக்கப்பல் பெரிதாகவும் சின்னதாகவும் செய்து அவர்களுடன் விளையாடுவதுதான் என் பொழுதுபோக்கு.
சகாதேவன்
வலைச்சரத்தில் இப்பதிவுக்கு இணைப்பும், ஒரு அழைப்பும்:)!
Post a Comment
Please share your thoughts, if you like this post !