Tuesday, January 8, 2008

கிராமத்து முடிதிருத்தும் நிலையம்

குளத்தங் கரையினிலே
கூரைக் கொட்டகை,

தலையாய அதிகாரியும்
தலைவணங்கித் தானமர

பலகை அபிநயங்கள்
பலகையில் அமர்ந்து.

நால்வரோடு நாமும் சேர்ந்து
கல் திண்ணைக் காத்திருந்து,

மடிந்து கந்தலான
செய்தித் தாள் வாசிப்பு.

எப்ப வந்தீக
என்று தொடங்கும் உரை,

சங்கன் வீட்டு விசேஷம் முதல்
இந்தியா விடும் ராக்கெட் வரை,

செய்திப் பரிமாற்றம்
செய் தொழிலிலும் கவனம்.

மரத்தடியில் கீழமர்ந்து
சிரம்தாழ்த்தி நாம் பணிய,

சின்னஞ் சிறு கதைகள் பேசி
தண்ணீரில் கேசம் கிளறி,

கத்தரியின் கிடு கிடுப்பில்
சித்திரமாய்ச் சிதறும் முடி.

மர இலைச் சலசலப்பை
ஏறிட்டு நாம் காண

நரைத்த புருசு தடவி
முகச் சவரம் நடக்குமங்கே.

பரதேசியாய் அமர்ந்து
பளிச்சென்று எழுந்து,

குளத்தில் நீராடி
குளித்து வெளியில் வர

சில்லென்ற குளிர்காற்று
சிணுங்கித் தீண்டிச் செல்லும் !

9 மறுமொழி(கள்):

Mangaisaid...

நல்லா இருக்கு.
கவனம் 'ண' இல்லை, 'ன'

சதங்கா (Sathanga)said...

பாராட்டுக்கும், பிழை திருத்தலுக்கும் நன்றி மங்கை.

கபீரன்பன்said...

//மரத்தடியில் கீழமர்ந்து
சிரம்தாழ்த்தி நாம் பணிய //

அப்ப முதலில் சொன்ன கூரைக் கொட்டகை யாருது ? நான் அதுதான் முடித்திருத்தகம் என்று நினைத்தேன்.

Unknownsaid...

சதங்கா,

எங்கள் ஊரில், மரத்தடி கிடையாது. கடைதான். சில சமயம், வீட்டுக்கு வந்து செய்வார்கள். காசு எதுவும் வாங்க மாட்டார்கள். பதிலாக, அறுவடையின்போது நெல் வாங்கிச் செல்வார்கள்.

இதெல்லாம், அந்தக் காலத்து 'பண்டமாற்று' முறை. இருந்தாலும், அந்தச் சகோதரர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப் ப்டுவதில்லையென்று எனக்குச் சிறு வருத்தமுண்டு!

சதங்கா (Sathanga)said...

கபீரன்பன்,

//அப்ப முதலில் சொன்ன கூரைக் கொட்டகை யாருது ? நான் அதுதான் முடித்திருத்தகம் என்று நினைத்தேன்.//

அது தான். ஆனா பேருக்கு தான். தொழில் எப்பவுமே காற்றோட்டமா வெளில தான் :)

சதங்கா (Sathanga)said...

தஞ்சாவூரான்,

//எங்கள் ஊரில், மரத்தடி கிடையாது. கடைதான். சில சமயம், வீட்டுக்கு வந்து செய்வார்கள். காசு எதுவும் வாங்க மாட்டார்கள். பதிலாக, அறுவடையின்போது நெல் வாங்கிச் செல்வார்கள்.//

எனக்கும் நினைவில் இருக்கிறது. எங்க தாத்தாக்கள் இருக்கும் வரை (ஒரு 15 வருசம் முன்னாடி) எங்க வீட்டுக்கும் வருவார்கள். அதுக்கப்புறம் நாங்க அவங்க இடத்துக்குப் போகும்போதும் நல்ல அன்போடு விசாரித்து, அட விடுங்க ... பேசிக்கிட்டே போகலாம்.

//இதெல்லாம், அந்தக் காலத்து 'பண்டமாற்று' முறை. இருந்தாலும், அந்தச் சகோதரர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப் ப்டுவதில்லையென்று எனக்குச் சிறு வருத்தமுண்டு!//

அதான் அவங்க ஞாபகமாய் அவங்களுக்காக இந்தக் கவிதை பதிந்தாச்சு.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

இவ்வனுபவம் எனக்கும் உண்டு - சிறு பலகையில் மரத்தடியினில் அமர்ந்து, பெரியவரின் சிறு கதைகள் கேட்டுக்கொண்டே - முடி திருத்திக் கொண்ட காலம் நினைவில் வருகிறது. கிணற்றடியில் நீர் இறைத்து ஊற்ற, இன்பமாக குளித்ததும் நினைவில் வருகிறது. நாம் இம்மாதிரி சிறு சிறு இன்பங்களை எப்பொழுது திரும்பப் பெறுவோம் ?

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

எளிய வரிகளில், அடைந்த இன்பத்தைப் பகிர்ந்து கொண்டது பாராட்டத்தக்கது

நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மிsaid...

//குளத்தில் நீராடி
குளித்து வெளியில் வர

சில்லென்ற குளிர்காற்று
சிணுங்கித் தீண்டிச் செல்லும் !//

பழைய நினைவுகளில் திளைத்து வெளி வர அதே குளிர்காற்று தீண்டிச் சென்ற உணர்வை நீங்கள் அடைந்திருப்பது புரிகிறது. எளிய சொற்களில் அற்புதமான வெளிப்பாடு.

தஞ்சாவூரான்said...
//அந்தச் சகோதரர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப் ப்டுவதில்லையென்று எனக்குச் சிறு வருத்தமுண்டு!//

உண்மைதான். இன்றைய ஏஸி சலூன்களிலும் ப்யூட்டி பார்லர்களிலும் கட்டணம் செலுத்துகையில் இப்போது கொடுப்பதை நினைத்து அல்ல..அப்போது குறைவாகக் கொடுக்கப் பட்டதை நினைத்து வருத்தம் எழத்தான் செய்கிறது.

Post a Comment

Please share your thoughts, if you like this post !