Tuesday, February 14, 2012

ஆதலினால், காதல் செய்வீர் !





ப‌ழகிய‌ சில‌ கால‌மே
ஈருடல் ஓருயிராய் இணைந்தோம்

இன்னார்க்கு இன்னாரென்று
எழுதியா வைத்தான் இறைவ‌ன் ?

அன்று, இன்னார் இன்னார் என்றறிந்தே
காத‌லித்துக் க‌ர‌ம்பிடித்தோம் !

இங்கே ஏது காத‌ல் ?

பகல் இர‌வாய் உழைத்து
ம‌னை ஊர்தி ம‌க்க‌ள் பெற்றோம்

உணவத‌னை வாய் விழுங்கி
தொலைக்காட்சியை க‌ண் விழுங்க‌

மனை வாழ்வை ம‌ற‌ந்தோம்
ம‌ற்ற‌ ம‌னை அறியோம்

இங்கே ஏது காத‌ல் ?

ப‌க‌ல‌வ‌ன் யாரென்றும்
குளிர் நில‌வை ஏனென்றும்

இய‌ற்கையை அறிவ‌த‌ற்கு
இணைய‌த்தை அணுகுகிறோம்

நான்கு சுவ‌ர்க‌ளுக்குள்ளே
தொலைத் தொட‌ர்பை வ‌ள‌ர்த்தோம்.

இங்கே ஏது காத‌ல் ?

பெற்ற‌ பிள்ளை கிட்டே வ‌ர‌
கீரியாய்ச் சீறுகின்றோம்

க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் க‌ன‌க்க‌
க‌டுஞ்சொற்கள் காட்டுகின்றோம்

மூன்றே வ‌ருட‌த்தில்
முட்டி நின்றோம் இருபுறமும்.

இங்கே ஏது காத‌ல் ?

இன்றுவ‌ரை எல்லாம் நல‌மே
சென்று சேருமிட‌ம் அறிந்தால்
என்றும் எல்லாம் ந‌ல‌மே !

முட்டி நின்றாலும் விட்டுக் கொடுப்பீர்
தடிக்கும் சொற்க‌ளை தள‌ர்த்திக் கொள்வீர்
வாய் நிறுத்த‌ கை உய‌ர்ந்தால்
துணையைப் ப‌ற்றி அணைப்பீர்

ம‌ற்ற‌ ம‌னை அறிவோம்
சுற்றம் சூழ‌ வாழ்வோம்
ஒற்றுமையை வ‌ள‌ர்ப்போம்

பெற்றோரைப் போற்றிடுவோம்
பெற்ற‌ பிள்ளை வ‌ள‌ரும‌ழ‌கை ர‌சிப்போம்
க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் இனிக்க‌க் க‌னிவாய் பேசிடுவோம்

இவ‌ற்றை எல்லாம் காத‌லிப்போம்.

காத‌லின்றி நாளையேது ?
ஆதலினால், காதல் செய்வீர் !


காதல் சிறப்பிதழ் அதீதத்தில் ஆதலினால், காதல் செய்வீர் !


(படம்: நன்றி இணையம்)