Thursday, April 30, 2009

சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம் !அந்தக் குட்டி ஆட்டோவில் சுற்றி எங்கிலும் தட்டி. ஆளுயரத்தில் அரசியல் தலைவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நடப்பது போல் படங்கள். பின்சீட்டில் மைக்செட்டுக்கு வேண்டிய சாமான்கள், இருபுறம் தெருபார்த்து உறுமும் குழாய்கள். ஆட்டோவை சேகர் ஓட்ட, பக்கத்தில் தங்கராசு.

"அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை ... அஞ்சாத சிங்கம், ஆளப் பிறந்தவர், இல்லை என்று சொல்லாத ஈகை குணம் படைத்தவர், உங்களில் ஒருவர், ஊருக்கு உழைப்பவர், எல்லாம் அறிந்தவர், ஏகாதிபத்தியத்தை ஒழிப்பவர் ..."

"டேய், நிறுத்து நிறுத்து ... ஏதோ ஆத்திச்சூடி கணக்கா அடுக்குமொழியில அடுக்கிட்டே போறே, இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமாடா ?!" என்று தங்கராசின் பின்னந்தலையில் தட்டினான் சேகர்.

"அண்ணே, எதுக்குண்ணே அடிக்கிறே ?! அதுவும் தலையில. வீட்டுக்குத் தலைச்சன் புள்ளணே நானு. ஏதாவது ஆகிடுச்சுன்னா நீயா எங்க வீட்டுல பதில் சொல்லுவே" என்றான் தங்கராசு மைக்கை அடைத்துக் கொண்டு.

"பெரிய இவரு, வீட்டுல பதில் வேற சொல்லணுமாக்கும். விட்டா பேசிகிட்டே இருப்பியே ! சரி, சரி, பேச்ச மைக்கில காண்பி. அப்புறம் இதுதான் சாக்குனு சொல்லி நமக்கு மண்டகப்படி வச்சிறப் போறானுங்க" என்றான் சேகர்.

"தாய்மார்களே, பெரியோர்களே உங்கள் பொன்னான வாக்குகளை ..." என்று தங்கராசு ஆரம்பிக்க, மேடு பள்ளமான ரோடுகளில், குலுங்கிச் சென்றது ஆட்டோ.

இருபதுகளில் இருந்தனர் சேகரும், தங்கராசும். தேர்தல் வந்தால் போதும், தினமும் திருவிழா தான் இவர்களுக்கு. படிப்பு ம‌ற‌ந்து, விளையாட்டு மற‌ந்து, ஊண் ம‌ற‌ந்து, துயில் ம‌ற‌ந்து, 'என் க‌ட‌ன் தேர்தல் ப‌ணி செய்து கிட‌ப்ப‌தே' என்றிருப்ப‌ர்.

"டேய் மைக்க‌ ஆஃப் ப‌ண்ணு. வா டீ சாப்பிட்டு வ‌ர‌லாம்" என்ற‌ சேக‌ருட‌ன் சென்றான் த‌ங்க‌ராசு. சாப்பாடு செல்லுதோ இல்லையோ ! டீ, காபி ம‌ட்டும் இடைவிடாது இற‌ங்கும்.

"ஏப்பா, ப‌டிக்கிற‌ வ‌ய‌சுல‌ இதெல்லாம் தேவையா உங்க‌ளுக்கு. எவ‌னோ வ‌ர்றான் ! எவ‌னோ போறான் !! நீங்க‌ ஏன் கெட‌ந்து லோல்ப‌ட‌றீங்க‌" என்றார் 'டீக்க‌டை பெரிசு' மாரி.

"உங்க‌ க‌டையில‌ டீ ஆத்த‌ற‌ வேலை த‌ர்ரேண்ணு சொல்லுங்க‌. இதோ ! இப்ப‌வே ஆட்டோவை 'செயல்' வீட்டுல‌ விட்டு வ‌ந்திர்றோம்" என்றனர்.

"சரிதான், எம்பொழப்புல கைய வைக்கிறீங்களா..." என்று அங்க‌லாய்த்தார் மாரி.

"நீங்க எங்க பொழப்புல கை வைக்கலாம். நாங்க வைக்கக் கூடாது !!" எனப் பொங்கினான் தங்கராசு.

மைக் இல்லாமலே கம்பீரமாக தங்கராசு பேச, "ஏய் போங்கப்பா ... வயசு வித்தியாசமில்லாம இப்படியா பெரியவர் கிட்ட பேசறது, போங்க போங்க" என்று அங்கிருந்தவர்கள் சேகரையும், தங்கராசையும் கிளம்பச் செய்தனர்.

'செயல்' என்றழைக்கப்படும் ராசேந்திரன், அந்த மாவட்டத்திலேயே பெரும் அரசியல் புள்ளி. அவரது வயதை விட, அரசியல் வளர்ச்சி அபாரமாக இருந்தது. மற்ற மாவட்ட நிர்வாகிகள் பார்த்து வாய்பிளக்கும் அளவிற்கு, கட்சி தலைமையுடனான நெருக்கம். இந்த‌த் தேர்த‌லில் சொந்தத் தொகுதியில் வேட்பாள‌ராக ஆகும் அள‌விற்கு உய‌ர்ந்திருந்த‌து.

வ‌ருங்காலம் இளைஞ‌ரின் கையில்
வகை செய்தார் தலைவர்.

செயல் வீரர் நம் அண்ணன்
செவ்வனே செயல்ப‌டுவார்.

வ‌ள‌மான‌ வாழ்வை, நமக்கு
மனம்போலத் தரவே,

வாக்களிப்பீர் அண்ணனுக்கு !!!

என்ற‌ வாச‌க‌ங்க‌ள் தாங்கி, வெள்ளுடுப்பில் இருக‌ர‌ம் கூப்பி, வெண்ப‌ற்க‌ள் சிரித்து ராசேந்திர‌னின் ஆளுய‌ர‌ப் ப‌ட‌ம் கொண்ட‌ த‌ட்டிக‌ள் த‌யாராய் இருந்த‌து அவ‌ர‌து வீட்டில்.

தெருவெலாம் சுற்றி, அர‌சிய‌ல் த‌லைவ‌ரின் புக‌ழ் பாடி, தொண்டைக் குழி வ‌ற்றி, முக‌மெலாம் சோர்ந்து செய‌ல் வீட்டை வ‌ந்த‌டைய‌ இர‌வு ப‌தினோறு ம‌ணி ஆகி இருந்த‌து.

இவ‌ர்க‌ள‌து கூட்டாளி இளைஞர்கள் ப‌ல‌ரும் அங்கே குழுமியிருந்த‌ன‌ர். போஸ்ட‌ர் ஓட்டுவ‌து, சுவ‌ர்க‌ளில் சித்திர‌ம் தீட்டுவ‌து, பிர‌ச்சார‌ முழ‌க்க‌ம் இடுவ‌து என‌ அத்த‌னை ப‌ணிக‌ளும் ஆற்றி, அன்றைய‌ கூலி வாங்க‌ காத்திருந்த‌ன‌ர்.

தலைக்கு ஐந்நூறும், ஆயிரமுமாய் ப‌கிர்ந்த‌ளிக்க‌ப்ப‌ட, ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்புகளாய் மின்னியது அவர்க‌ள‌து முக‌ங்க‌ள்.

"இந்த போஸ்டர் வாசகம் எழுதினது நீ தான ?!! இந்தா ரெண்டாயிரம் எஸ்ட்ரா வச்சுக்க, அண்ணன் குடுக்க சொன்னாரு." என்றார் பணப் பட்டுவாடா செய்த கரை வேட்டி ஒருவர்.

"த‌ம்பிக‌ளா, நாளைக்கு இன்னும் கொஞ்ச‌ம் வெள்ள‌ன‌ வ‌ந்திருங்க‌டா. வ‌ரிச‌யா த‌ட்டி இருக்கு பாருங்க‌. நாளைக்கு ஊரு முழுக்க‌ க‌ட்ட‌ணும், ச‌ரியா ?!!" என்றார் க‌ர்ன‌கடூரமாய் இருந்த‌ க‌ரை வேட்டி ம‌னித‌ர்.

'சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம் !' என்பதாய் அங்கிருந்து கிளம்பியது இளைய சமுதாயம் !!!

மே 2, 2009 யூத்ஃபுல் விகடனில்

12 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

"இளைய பாரதத்தினாய் வா வா வா!"
என அழைக்கப்பட்டு கொடுக்கப்படும் வேலைகளை "சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம்" என செவ்வனே முடித்தபடி செல்கிறது இளைய சமுதாயம்! நாளை இவர்கள் எதிர்காலம்?

நல்ல கதை சதங்கா.

cheena (சீனா)said...

கதையின் கருத்து புரியவில்லை சதங்கா

இளைய சமுதாயம் சீர் கெட்டுப்போகிறதே என்பதா

பணம் கொடுத்தால் எவ்வேலையும் செய்து முடிப்பர் என்பதா

இளைய சமுதாயம் பணத்திற்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வந்து விடுகிறார்களே என்பதா

புதசெவி

பழமைபேசிsaid...

நல்லா இருக்கு...

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//"இளைய பாரதத்தினாய் வா வா வா!"
என அழைக்கப்பட்டு கொடுக்கப்படும் வேலைகளை "சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம்" என செவ்வனே முடித்தபடி செல்கிறது இளைய சமுதாயம்! நாளை இவர்கள் எதிர்காலம்?//

கிராமப்புறங்களில் இன்றும் இளைஞர்களில் நிலை இப்படித் தான் இருக்கிறது. 'வருங்காலம் இளைஞர்கள் கையில்' என்பதைத் தவறாக பயன்படுத்துகிறார்களோ அரசியல்வாதிகள் என்ற சிந்தனை தான் இக்கதையை எழுத்தத் தூண்டியது.

//நல்ல கதை சதங்கா.//

மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//கதையின் கருத்து புரியவில்லை சதங்கா

இளைய சமுதாயம் சீர் கெட்டுப்போகிறதே என்பதா

பணம் கொடுத்தால் எவ்வேலையும் செய்து முடிப்பர் என்பதா

இளைய சமுதாயம் பணத்திற்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வந்து விடுகிறார்களே என்பதா

புதசெவி//

க‌டைசி கேள்வி த‌விர்த்து, முத‌ல் இர‌ண்டு கேள்விகளுக்கும் 'ஆம்' என்று பதில் சொல்லிக்கிறேன். இளைஞ‌ர்க‌ளை, அவ‌ர்க‌ள‌து திற‌மைக‌ளை, ச‌க்திக‌ளை, முறைய‌ற்ற‌ முறையில் ப‌ண‌ம் த‌ந்து ம‌ன‌ம் குலைத்து தமக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள் அர‌சிய‌ல்வாதிக‌ள் என்று சொல்ல‌ நினைத்தேன்.

ஆனால், குழ‌ப்பிவிட்டேனோ ?

சதங்கா (Sathanga)said...

பழமைபேசி said...

//நல்லா இருக்கு...//

பாராட்டுக்கு மிக்க நன்றி

ராஜ நடராஜன்said...

ரொம்ப நாளா கதை சொல்றத விட்டுட்டீங்க போல இருக்குதே.அல்லது நான் தான் கடைப்பக்கம் டீ சாப்பிட வரலையோ?

குடந்தைஅன்புமணிsaid...

கதை நல்லா இருக்கு.

துளசி கோபால்said...

காலத்துக்கேத்த 'கதை'


அப்ப எல்லாரும் கூலிக்கு மாரடிக்கிறவங்களா இருக்காங்கன்னு சொல்லுங்க.

என்ன ஒன்னு இது வெறும் சீஸனல் இன்கம்தாம். நிரந்தர வருமானம் 'செயல்'போன்றவர்களுக்கே தவிர இந்த இளைஞர்களுக்கு இல்லை(-:

சதங்கா (Sathanga)said...

ராஜ நடராஜன்said...

//ரொம்ப நாளா கதை சொல்றத விட்டுட்டீங்க போல இருக்குதே.அல்லது நான் தான் கடைப்பக்கம் டீ சாப்பிட வரலையோ?//

ரெண்டுமே தான் :))

சதங்கா (Sathanga)said...

குடந்தைஅன்புமணிsaid...

//கதை நல்லா இருக்கு.//

மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

//காலத்துக்கேத்த 'கதை'


அப்ப எல்லாரும் கூலிக்கு மாரடிக்கிறவங்களா இருக்காங்கன்னு சொல்லுங்க.///

அந்த மாதிரி ஆக்கிவிடுகிறார்கள் !!

//என்ன ஒன்னு இது வெறும் சீஸனல் இன்கம்தாம். நிரந்தர வருமானம் 'செயல்'போன்றவர்களுக்கே தவிர இந்த இளைஞர்களுக்கு இல்லை(-://

சரியாக சொன்னீர்கள் டீச்சர். அவர்களுடைய அன்றைய தேவைக்கும் அதிகமாக பணத்தை அரசியல்வாதிகள் வாரியிறைக்க, அதனுள்ளே புதைந்தல்லவா போகிறார்கள் இளைஞர்கள்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !