Wednesday, May 2, 2012

நா சுழற்றி - அருணகிரியார்


ம‌ணிய‌டிக்க‌ உடனெழுந்து குளித்துச்
சில‌நொடியில் உடை நுழைத்து
ஊண் திணித்துப் பறந்து தெருவேறி


வாக‌ன‌ப் புகை க‌சிந்து
விய‌ர்த்தொழுக‌ வீதி நிறைத்து
உட‌ல் துடைத்து அலுவ‌ல் ப‌டியேறி


கணிணி த‌ட்டிக் க‌டித‌மெழுதி
க‌ல‌வையாக‌க் குழுக்க‌ள் க‌ல‌ந்து
காஃபி குடித்து ம‌திய‌ உண‌வருந்தி


இருக்கை ச‌ரிந்து க‌ண்மூடிக்
கனாக்கண்டு சிறுநகை பூத்து
பின்னெழுந்து ப‌ல‌ கதைகள் பேசி


இரவு நிலா ஒளிவீச
காலைச் சூரியன் த‌க‌த‌க‌க்க‌
இன்று என்பணி இவையெலாம் என்று


மின்னஞ்சல்செய்து அலுவ‌ல் ம‌ற‌ந்து 
மீண்டும் வீதி நிறைத்து
அயர்வாக அடுக்கு மாடிப் ப‌டியேறி


க‌ணிணி த‌ட்டி உல‌கிற்க‌ல‌ந்து
க‌ண்ட‌தையும் உண‌வென்று உண்டு
தொலைக்காட்சி சிறிது க‌ண்டு முட‌ங்கியே !


ம‌ணிய‌டிக்க‌ உடனெழுந்து குளித்துச்
சில‌நொடியில் உடை நுழைத்து
ஊண் திணித்துப் பறந்து தெருவேறி

சமீப காலமாகக் கேட்டு வரும் ஞான சொற்பொழிவுகள், சற்று ... இல்லை இல்லை, பலமாகவே சிந்திக்க வைக்கிறது. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்றார்கள். மனம் இளகும். கண்கள் நீர் சுரக்கும் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.  சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட ராகத்தோடு பாடக் கூடிய மென்தமிழ்ப் பாடல்கள் அத்தனையும். அத்தோடு நில்லாம‌ல், இன்றைய‌ கால‌த்திற்கு ஏற்ற‌வாறு பாட‌லும் நாம் எழுத‌லாம்.  உதாராண‌ம்: மேலே :)

ஏற்கனவே அருணகிரியாரை வில்லிபுத்தூரார் யாரென்று கேட்டதற்கு, அருணகிரியாரின் நகைச்சுவை கலந்த தத்துவார்த்தமான பதிலை இந்தப் பதிவில் கண்டோம்.

ஒரு குழந்தை, கருவாகி உருவாகி வளரும் நிலையை எளிய தமிழில் அழகாகப் பாடியிருக்கிறார் அருணகிரியார். பாடலுக்கு விளக்கம் தேவையில்லை, ஒருமுறைக்கு இருமுறை படித்தால் நிச்சயம் புரியும்.

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி


கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி


அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி


அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இதே கருத்தை ஒத்த, ஆனால் சற்று விரிவாக வரும் 'இத்தா ரணிக்குள்மநு வித்தாய்' இப்பதிவில் வரும் இப்பாடலில் இறுதி வரிகள் சற்று ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது.  எனக்கு விபரம் தெரிந்து இருபது ஆண்டுகள் முன்னர் வரை கோவில் திருவிழாக் காலங்களில் நிச்சயம், சொற்பொழிவுகள், கதாகாலட்சேபங்கள் இருந்தன.  இன்று ஆங்காங்கே ஒன்றிரெண்டு இருந்தாலும் கருத்தைக் கவர்வதாய் இருக்கின்றனவா என்றால், பெரும் கேள்விக்குறியே பதில்.  வர்த்தகத்தையே முதற்கண் நோக்கும் ஊடகங்களும், தமக்கு ஆதாயம் இருந்தாலலன்றி இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை.  நம்முடைய பழம்பாடல்கள் பொக்கிஷம் எனில், அதைக் காத்து நமக்கு எடுத்துச் சொல்ல ஆட்கள் இப்பொழுதில்லை.  இப்படியிருக்க, அருணகிரியார், இவ்வுலகில் பிறந்து, வளர்ந்து, கலைகள் பயின்று, புத்தி கெட்டு, நரை கூடி, பின் கிழப் பருவம் எய்திடினும் தமிழ் பாடும் நேசத்தை என்றும் தரவேண்டும் என்று வேண்டுகிறார்.  இன்று வரை தமிழ் வந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  சிதைந்துவிடாமல், மேலும் காப்பது நமது பெரும் கடமை.  முக்கியமாக அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இவ்வித்தையும் விதைத்துச் செல்ல வேண்டும்.  கட கட என ஓடும் இத்தாரணிக்குள் பாடல்:

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி 


இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச் 


சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச் 


சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும் 


தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித் 

நா சுழற்றி அடிக்கும் மேற்க‌ண்ட‌ வ‌ரிக‌ளில் வ‌ரும் சொற்க‌ள் எல்லாம் ஒலியைக் குறிப்ப‌தாக‌வே ஆகிற‌து.  'இவ்வாறு ஒலிக்கும் படியான ஒரு மயிலேறி வந்து' காக்க‌ வேண்டும் என்று சொல்கிறார் அருண‌கிரியார்.

'பக்தி என்றால் வியாபாரம்' என்ற எண்ணம் தளைத்தோங்க இன்றைய சாமியார்களும் மடாதிபதிகளுமே பெரும் காரணம்.  இவர்களையும் மீறி, தமிழைப் போல் பக்தியும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறதெனில், நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணரலாம்.  'அன்பே சிவம்' என்றார் திருமூலர்.  இது தான் பக்தி.  தமிழோடு பயணித்து பல இடர்களையும் தடைகளையும் கடந்து தான் வந்திருக்கிறது பக்தியும்.  அப்படி வந்த அருணகிரியாரின் அடுத்த தமிழ்கவிதையின் பால் காதல் கொள்ளாதவர் எவருமில்லை எனலாம்.  இப்பொழுதெல்லாம் படத்திற்கு முன்னரே பாடல் வெளியாகிவிடுகிறது.  அதுவும், மிகப் பிரபலமான நடிகரின் படம் என்றால்,  பட்டி தொட்டி எங்கும் டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், தொலைக்காட்சி, பத்திரிகைகள் என மாதக்கணக்கில் எங்கும் பரப்பி, நம் மண்டைக்குள் நீங்கா இடம்பெற்று பெரும் வெற்றி பெரும் அவர்தம் பாடல்கள்.  இப்பேற்பட்ட விளம்பரங்கள் சிறிதுமின்றி, பொருள் புரிகிறதோ இல்லையோ, முதன்முதலில் கேட்கையிலே மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் பாடல்:

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் 


முருகா...

என்று திரை இசைப்புகழ் டி.எம்.சுந்தரராஜன் அவர்கள் அட்சர சுத்தமாக ஆரம்பிக்க, திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இருக்கை நுனியில் அமரும் ஆர்வத்தைப் போல, மனம் பரபரப்பாகும்.  திரை சம்பந்தமாக அதிக மேற்கோள் காட்டியதற்கு, இப்பாடல் திரையின் மூலம் தானே நம்மை வந்தடைந்தது.  முழுப் பாடல்:

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ....எனவோதும் 


முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ....அடிபேண


பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ....இரவாகப்


பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ....ஒருநாளே


தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு .... கழுதாடத்


திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக ....எனவோதக்


கொத்தப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென ....முதுகூகை


கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ....பெருமாளே !

நம்மைப் போலவே பால்ய பருவத்தில் அருணகிரியாரும் படிப்பில் நாட்டம் அதிகமில்லாமல் இருந்திருக்கிறார். தொழு நோய் வந்து, மனம் வாடி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தவரைக் காப்பாற்றி, நாவினில் வேல் கொண்டு மந்திரம் எழுதி, 'அருணகிரி தற்கொலை செய்து கொள்வது பாவம், மீண்டும் ஒரு பிறப்பு வாராது. எம்மருள் உனக்குண்டு', என முதலடி முத்தாக எடுத்துக் கொடுத்து, 'திருப்புகழ் பாடுவாயாக' என்று எம்பெருமான் முருகன் சொல்வது, அருணகிரியாரின் மிகச் சுருக்கிய வரலாறு. முருகனருள் பெற்று முத்து முத்தாய்ப் பொழிந்தார் அருணகிரியார் திருப்புகழை. மேற்கண்ட பாடல்கள் போலவே இன்னும் ஏராளம் இருக்கிறது அதனுள்.





4 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

/இப்பாடல் திரையின் மூலம் தானே நம்மை வந்தடைந்தது. /

அதென்னவோ உண்மைதான். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். காலத்துக்கேற்ற தங்கள் பாடலையும் ரசித்து மகிழ்ந்தேன்:)!

நாகு (Nagu)said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அருமையான பதிவு.

நாகு (Nagu)said...

கவிதை நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் நாம் என்னதான் செய்யவேண்டும்? ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் உதவிக்கொண்டு மனிதாபிமானத்துடன் நம் கடமைகளைச் செய்து வருவது தவிர? கீதாச்சாரியனும் இதைத்தானே சொல்லியிருக்கிறான்? அலுப்பு, சலிப்பு ஏன்? பக்தி, இறையுணர்வு இல்லாமலேயே இதைச் செய்யலாமே? அருணகிரியார் தம் சொந்த ஆர்வம், பக்தி ஏதும் இல்லாமல், செய்த ஒரே முயற்சி தற்கொலைதான் போலும். இறைவன் வந்து தடுத்தாட் கொள்ளவில்லை என்றால் அவரும் எல்லோரையும் போல் போய்ச் சேர்ந்திருப்பார்.
வாருங்கள், இந்த இனிய உலக வாழ்க்கையை ரசித்து அனுபவிப்போம். இடுக்கண் வந்தால் நகுவோம். எமன் வந்தால் எட்டிஉதைப்போம்.
- நரசிம்மன்

சென்னையிலிருந்து திரு. நரசிம்மன்: பதிவில் தமிழில் பின்னூட்டமிட முடியவில்லை என்று எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார்.

நாகு (Nagu)said...

ARUNAGIRINATHAR WAS SUPREME... BAR NONE... when it came to not only using Tamil but making it sing.. just with the words and the meters !! Needaamangalam Krishnamurthy Bhaghavathar said.. "nobody revolutionized bhakti in the way he blended both Shivam and Vaishnavam in his verses".

Ganesh/Bhargavi from Richmond

Post a Comment

Please share your thoughts, if you like this post !