Thursday, January 30, 2014

பழமொழி 400



'பழமொழி'கள் பல நம் வாழ்வில் நாம் கேட்டு வந்திருக்கிறோம். இன்றைய தலைமுறையினர் அவற்றைக் கையாளுகிறார்களா என்றால், அநேகமாக இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. காரணம், இன்றைய ஊடகங்களின் ஆளுமை. நம் போன்ற சாமான்யர்களிடம், 'ப்பா....' என்ற வசனம் கூட எவ்வளவு பிரபல்யமாக்க முடியும் என்று ஊடகம் அறிந்து வைத்திருக்கிறது.

அந்தக் காலங்களில் செய்தி பரப்ப என்னவெல்லாம் முறை இருந்திருக்கும் ?! காதலர்களுக்கு புறாவும், மன்னர்களுக்குத் தூதுவர்களும், .... இருக்க நம் போன்ற சாமான்யர்களுக்கு எவ்வாறு செய்தி பரப்பப்பட்டிருக்கும் ?! 'செவி வழி' என நாம் இது வரை அறிந்து வந்திருக்கிறோம். இது மட்டும் போதுமா என சிந்தித்தால், இதற்கு மேலும் வேறு ஏதாவது மார்க்கம் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

பண்டை தமிழனின் வரலாறு பல 'பாடல்'களில் பொதிந்திருக்கிறது. கண்டதையும், கேட்டதையும், ஆராய்ந்து மொழி ஆற்றலோடு பாடலாகப் படைத்தனர் அன்றைய புலவர்கள். போட்டிகள், பொறாமைகள் பல இருந்திருக்கக் கூடும். அத்தனையும் பாடல் பெற்றது. கம்பனுக்கும் ஔவைக்கும் நடந்த சப்தமில்லாச் சண்டைகள் பாடலாக்கப்பட்டது !

இதேபோல, நாம் பயன்படுத்தும் பழமொழிகள் பலவும் பாடல் பெற்ற பழமொழிகளே. இது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாது இருக்கலாம். 'கோழி மிதித்துக் குஞ்சு முடமாகாது', 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது', 'சூரியனைக் கண்டு நாய் குரைத்தாற் போல்' என்பதெல்லாம் இன்று வரை நாம் கேட்டு வந்திருக்கும் பழமொழிகளில் சில. இவை எல்லாம் ஒவ்வொரு பாடலின் இறுதி வரிகள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ! சில பழமொழிப் பாடல்கள்:

உளைய உரைத்து விடினும் உறுதி
கிளைகள்வாய்க் கேட்பதே நன்றாம் - விளைவயலுள்
பூமிதித்துப் புட்கலாம்ம் பொய்கைப் புனலூர !
'தாய் மிதித்து ஆகா முடம்'. (பாடல்: 353)

ஒற்கத்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல் - வற்பத்தால்
தன்மேல் நலியும் 'பசிபெரி தாயினும்
புன்மேயா தாகும் புலி
'. (பாடல்: 70)

நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
'திங்களை நாய்குரைத் தற்று'. (பாடல்: 107)

இவற்றுள் 400 பாடல்களைத் தொகுத்து 'பழமொழி நானூறு' எனும் தலைப்பில் 'மூன்றுறை அரையனார்' என்ற சமண முனிவர் இயற்றியுள்ளார். இணையத்தில் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக விளங்கும் 'ப்ராஜக்ட் மதுரை' தளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது இப்பழமொழித் தொகுப்பு. சுட்டி கீழே:

http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0036.pdf

மேலே கண்ட நன்கு பயன்பாட்டில் இருக்கும் பழமொழிகள் கூட சற்று எளிமைப் படுத்தி தான் நம்மை வந்து அடைந்திருக்கிறது. பாடலில் அவை பயன்படுத்திய விதம் கண்டால் வித்தியாசம் உணர முடியும். இப்படி இருக்க பல பாடல்கள் நமக்கு புரிவதாக இல்லை. புரியவில்லை என்பதற்காக அவற்றை ஒதுக்கிவிடலாமா ?!