Sunday, January 8, 2012

வீராப்பு


படம்: நன்றி இணையம்

பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.

நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.

ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல கோழியவும் போட்டு அடைக்காதேன்னு. கேக்குதா?...

எதுக்கெடுத்தாலும் ஒரு டயலாக்கு, 'அட போடா போக்கத்தவனே...'

எரிந்து கொண்டிருந்த அறுபது வாட்ஸ் பல்ப், படக் படக் என மினுக்கியது. பொசுக்கென்று காரிருள். மையிருட்டில் நின்ற இடத்திலேயே நின்றான் பாண்டி.

இருட்டினுள் கண்கள் பழக சிறிது வினாடி பிடித்தது. உத்தரத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கை எடுத்து விளக்கை ஏற்றினான். நான்கடி தூரத்தில் படுத்திருந்தது லக்ஷ்மி. ம்மாஆஆஆ என்று முனகிக் கிடந்தது. இன்றோ நாளையோ குட்டியை ஈன்றுவிடும். காளையா இருந்தா, அதுவும் அர‌க்கும் வெள்ளையுமா இருந்தா 'செவலை', க‌ருப்பா இருந்தா 'க‌ருப்பு'. 'காளையாத் தான் இருக்க‌னும் க‌ட‌வுளே...' அப்ப‌டி இருந்துச்சு, த‌லை ம‌ழித்து உன் தாள் ப‌ணிகிறேன் என்று வேண்டிக் கொண்டான்.

சட சடவெனத் தூறல் பிடிக்க ஆரம்பித்தது. கூடவே ல‌க்ஷ்மியின் முன‌க‌ல் வ‌லுப்பெற்றுத் தூற‌லோடு சேர்ந்து கொண்ட‌து. அக்க‌ம் ப‌க்க‌ம் யாரையும் கூப்பிடும் நிலையில் இல்லை பாண்டி. எழுந்திருக்க‌ முடியாம‌ல் இருந்த ல‌க்ஷ்மியை, முடிந்த‌ வ‌ரை தூக்கி ம‌றுபுற‌ம் ப‌டுக்க‌ வைக்க‌ முய‌ற்சித்தான். ம்..ஹீம்... வயிறு மேலும் கீழும் ஏறி இறங்க, ஜ‌ன‌ன‌ப் பை திற‌க்க‌, திரை அப்பிய‌ முக‌த்தோடு முன்னிரு கால்க‌ளை நீட்டிய‌ க‌ன்றை வெளித்தள்ளியது ல‌க்ஷ்மி.

ச‌ற்றும் தாம‌திக்காது, த‌ன் இட‌க்கையை ஜனனப் பாதையினுள் விட்டு, ச‌ள‌க் புள‌க் என்று தொங்கிய‌வ‌ற்றை வாரி வெளித்த‌ள்ளி ஒரு ப்ளாஸ்டிக் பையில் முடிந்து கொண்டான் பாண்டி. சில நாட்களாக அசையாம‌ல் ப‌டுத்திருந்த‌ ல‌க்ஷ்மி, விறுட்டென்று துள்ளி எழுந்த‌து. வாஞ்சையாக‌ நாவினால் த‌ட‌விக் கொடுத்து, க‌ண்றின் மேலிருந்த‌ திரையை அக‌ற்றி அழ‌கூட்டிய‌து. ர‌ப்ப‌ர் ப‌ந்து போல‌ துள்ளிய‌ க‌ண்றின் அழ‌கையும், மாட்டுத் தொழுவத்தை சுத்த‌ம் செய்வ‌திலும் க‌வ‌ன‌மாக‌ இருந்த‌ பாண்டி, அப்போது தான் க‌வ‌னித்தான், அட... 'காளை'. நிறம் அரக்கும் வெளுப்புமாக.

ப‌ல‌ நாள் க‌ன‌வு இன்னும் சில வருடங்களில் நினைவாகப் போகிறது.

***

'ஏய், க‌ருப்பு ... இன்னிக்கு செவ‌லைய‌க் குளிப்பாட்ட‌ணும். நான் ப‌க்க‌த்துல‌ மதுரை வ‌ரைக்கும் போயிட்டு வ‌ந்திர்றேன், பாத்துக்க‌' என்று த‌ங்கையிட‌ம் சொல்லிவிட்டுக் கிள‌ம்பினான் பாண்டி.

அரிசி மாவு தேய்த்து வாரம் இருமுறை குளியல். துருவிய தேங்காயை சாதத்தில் பிசைந்து திருப்பதி லட்டு அளவுக்கு உருட்டி தினம் சிலபல உருண்டைகள். பாண்டி டவுனுக்கு போயிட்டு வரும்போதெலாம் பார்லே பிஸ்கட் பாக்கெட்கள், என ஏக கவனிப்புடன் பராமரிக்கப் பட்டான் செவலை. பாண்டிக்குத் தானும் தன் குடும்பமும் சாப்பிடுதோ இல்லையோ, நேரம் தவறாமல் செவலை கவனிக்கப்பட வேண்டும்.

ஆறேழு வருடங்களில், ஐயனார் விழிப் பார்வையும், மூக்க‌னாங்க‌யிறிடாத ப‌ள‌ப‌ள‌த்த‌ மூக்கும், சற்றே வளைந்து திமிறிய திமிலும், அக‌ன்ற‌ தோள்க‌ளும், ப‌ருத்த‌ கால்க‌ளும், நெய்யும் எண்ணையும் தடவித் தந்தம் போன்ற கூரிய கொம்புகளும் என‌ க‌ம்பீர‌மாக‌ நின்றான் செவ‌லை.

'ஒரு பயல கிட்ட நெருங்கவிட மாட்டான்' என்றும், 'பாண்டி..., மிஞ்சிப் போனா அவந்தங்கச்சி கருப்பு. ரெண்டு பேத்தையும் தவிர யாருமே செவலைய நெருங்க முடியுமா? குத்தித் தூக்கிருவான்ல ....' என்றும் ஊருக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

அதே நேரம். 'இவனுக்கென்ன இப்படி ஒரு கேடு. பேசாம இந்தக் காச வேற எங்காவது போட்டா, சாப்பாட்டுக்காவது கவலை இல்லாம இருக்கலாம். இந்த மாட்டக் கட்டி அழுது அப்படி என்னத்த பெரிசா கிழிக்கப் போறான்' என்று தூற்றிக் கொண்டும் இருந்தார்கள்.

'டவுனுக்குப் போகலாமாடா ?' என்று பாண்டி கேட்டால் தலையாட்டுவான். 'இன்னிக்கு என்ன சாப்பாட்டு அளவு கூடிருச்சே' என்று பாண்டி நையாண்டி செய்தால், முறைப்பான். குளிக்க நீச்சலுக்குச் செல்கையில் குஷியாகும் சமயங்களில் முதுகின் மேல் பாண்டியை அமர்த்திக் கொள்வான். அவர்களுக்குள் நாளுக்கு நாள் நெருக்கம் கூடிக் கொண்டிருந்தது.

மதுரையிலிருந்து திரும்பி வருகையில், 'ஏம்பாண்டி செவலைக்கு இந்த கவனிப்பு நடக்குதே, அடுத்த வருஷமாவது அலங்காநல்லூர்ல இறக்கிட வேண்டியது தானே?' என்றார் சுப்பு வாத்தியார்.

'அடுத்த வருஷம் என்ன சார் அடுத்த வருஷம் இந்த வருஷமே அலங்காநல்லூர் போகணும்னு செவலையே அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டான்' என்றான் வீட்டை நெருங்கிய பாண்டி.

இவர்கள் சம்பாஷனையைக் கேட்டு, பக்கத்து வேப்ப மரத்தில் கட்டியிருந்த செவலை தலையை மேழும் கீழும் ஆட்டினான். பக்கத்தில் இருந்த மண்மேட்டில், தலை கவிழ்ந்து கூரிய கொம்புகளால் மண்ணைக் கீறினான். விண்ணில் புயலெனப் புழுதி பறந்தது.

***

'அடுத்து வருவது படமாத்தூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் செவலை. முதன்முறையாக அலங்காநல்லூரில் கால் பதிக்கிறான் செவலை.

மாமலை எனத் தோள்கள்
மதயானைத் தந்தக் கொம்புகள்
பாரினில் கண்டதுண்டா
படமாத்தூர் செவலை போலே ...
பார் ... என்னைப் பிடித்துப் பார் ...

வருகிறான், இதோ ...

எனக் கவிதை பாடிக் கொண்டிருந்தது ஆங்காங்கே கட்டியிருந்த பச்சை வண்ணக் குழாய்கள்.

'இன்னோரு சிறப்பம்சம் என்னன்னா, செவலையின் கழுத்தில் ரெண்டு கிராம் தங்கக் காசு முடிந்திருக்கிறது...' வாடிவாசல் மேலே சாளரத்தில் அமர்ந்து அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் ஒருவர்.அவரைச் சுற்றிலும் கூட்டம். வாடிவாசல் திறந்து சிங்கமெனச் சீறிப் புறப்பட்டான் செவலை. கிட்ட நெருங்க முயற்சிப்போரை மணல் மேடாய் நினைத்து மோதினான. பதறிச் சிதறினர் மாடுபிடி வீரர்கள். 'யாரையும் கிட்ட நெருங்க விட மாட்டேங்குதே...' என்ற வீரர்களின் சொற்கள் செவலையின் காதுகளுக்குள் புகுந்து இனிமை கசிந்தது. உத்வேகம் பெற்று பாய்ந்து பறந்தான். 'செவ்லை நல்லா ஞாபகம் வச்சுக்க ... ஒரு பய கிட்ட வரப்படாது. அப்படியே வந்தாலும் முட்டித்தள்ளீரு. வாலைப் பிடிச்சா அப்படியே சுத்தித் தூக்கி வீசீரு...' என்ற வாசகங்களும் செவலைக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

'ஏன்டாப்பா பாண்டி, போட்டில ஜெயிச்சா இந்த வருஷம் என்ன குடுக்குறாக' என்றார் டீக்கடை அழகர்.

'அத ஏங்கேக்குற பெருசு. ஒரு சைக்கிளாம், டிவிடி ப்ளேயராம், அப்புறம் அம்பதாயிரத்துக்கிட்ட மத்த சன்மானம்னு பேசிக்கிறாக' அப்புறம் பாரும், இந்தப் பாண்டிய யாரும் பிடிக்கமுடியாது. நம்ம கிட்ட எல்லாம் பேசுவானான்னு கூடத்தெரியாது. எது பேசுறதா இருந்தாலும் இந்தப் பொங்கலுக்கு முன்னாடி அவன்கிட்ட நாமெல்லாம் பேசிக்கிட்டாத்தேன்...' எனப் புகழ்கிறாரா அல்லது இகழ்கிறாரா என்று தெரியாத வண்ணம் சொல்லிக்கொண்டிருந்தார் நாத்திகம் பேசும் தேசிகன்.

யாரும் நெருங்க முடியவில்லை. வீரர்கள் சிலர் கூச்சலிட்டுக் கொண்டனர். புதுசா வந்திருக்கு படக்குனு புடிபட்டுரும்னு பார்த்தா, விடாக்கண்டனா இருகே இந்த மாடு' என்று. இதெல்லாம் சரிப்பட்டு வராது. டேய் பரந்தாமா, நீ இடது பக்கமா ஓடு, நான் வலது பக்கம் ஓடிக்கிறேன். நம்ம ஆளுகள மேற்கால வரச்சொல்லிரு என்று சைகையிலேயே தன் கூட்டத்தாருக்கு செய்தி அனுப்பினான் மாறன். மாட்டோடவே ஓடிக்கொண்டு திமிலைப் பிடித்துக் கொண்டான். சரக்கென்று மாட்டின் வயிற்றை ஒட்டி உள்ளே கால்களை நுழைத்தான் மாறன். முட்டித் தூக்க நினைத்த செவலை தடாலடியாகச் சுருண்டு விழுந்தது. பாய்ந்து அதன் கழுத்துகளில் இருந்த துணியை அவிழ்த்து பொன் காசை எடுத்துக் கொண்டன் பரந்தாமன். 'அதான் விழுந்திருச்சுல்ல, விடுங்கப்பா ... மாட்டு மேல விழுகாதிங்க ... போகட்டும் விடுங்க' என்று அறிவிப்பாளர் அலறிக் கொண்டிருந்தார்.

மாறனின் குறுக்கு புத்தியினால் இடறி விழுந்ததில் செவலையின் இடது பின்னங்கால் முறிந்து விட்டது. கெந்திக் கெந்தி நடக்க ஆரம்பித்தது செவலை. வழியெங்கும் அழுது கொண்டே வந்தான் பாண்டி. செவலையின் கண்களிலும் கண்ணீர் பெருகி நீண்ட கழுத்துகளில் ஒற்றை நீர்வீழ்ச்சியாய் ஓடியது. 'நீ என்னடா செய்வ, நீ ஏன் அழுகறே. பாவம் கால வேற ஒடச்சிட்டாய்ங்களே, பாவிங்க. நல்லாயிருப்பாய்ங்களா ... நாசாமாப் போவாய்ங்க' என்று திட்டித்தீர்த்தான். 'நான் இனி எந்த மூஞ்சியோட ஊருக்குள்ள போவேன். இனி என் செவலைய எவன் மதிப்பான்.' என்று சிந்தனை கண்ணீரோடு சேர்ந்து பெருகி ஓடியது.

'சொன்னாக் கேட்டாத்தானே ... தனம் இருக்கவென தானம் பண்ணாத காலத்தில ... நமக்கெல்லாம் இது தேவையா ... பேசாம மாட்ட கோவிலுக்கு நேந்து விட்டமா, வயக்காட்டுல வேல செஞ்சு பொழப்ப ஓட்டுனமா, தின்னுனு வளந்து நிக்கிற தங்கச்சிக்கு ஒரு கல்யாணத்த பன்னமான்னு இல்லாம ...' என்றும், 'யானைக்குத் தீனி போடற மாதிரில்ல போட்ட ... இந்த மாட்ட கவனிச்சதுக்கு, ஒரு யானையை கவனிச்சிருந்தாக் கூட வீதிவீதியாப் போய் நாலு காசு பாத்திருக்கலாம்' என்றும் ஊராரின் பழிப்புச் சொற்களுக்கு ஆட்பட்டான்.

சில நாட்கள் கால்களுக்கு மருந்து தடவியதில் முன்னைப் போல நடக்க ஆரம்பித்தது செவலை. முன்னிருந்த கம்பீரம் குறைந்து களையிழந்து நடைபோட்டது.

'ஏன்டா பாண்டி. அதான் சொன்னேன்ல‌, அடுத்த‌ வ‌ருஷ‌ம் விடுறான்னு. என்ன‌மோ செவ‌லை சொன்னானாம், இந்த‌ வ‌ருஷ‌மே அல‌ங்காந‌ல்லூர் போக‌னும்னு. இவ‌ரும் ஓட்டிக்கிட்டு போனாராம். க‌ட‌சீல‌ என்ன‌ ஆச்சு ... வாத்தியார் சொல்றத எவன் தான் கேக்கறான் ...' என்று எறியும் வேள்விக்கு எண்ணையிட்டார் சுப்பு வாத்தியார்.

'அப்ப‌டி என்ன‌தான் வீராப்பு உனக்கு. அரசாங்கமே இத நிறுத்தலாமான்னு யோசிக்குது. ஜ‌ல்லிக்க‌ட்ட நிறுத்துனு பல ஊர்கள்ல கூட்டம் போடுறாக‌. இந்த வீரவிளையாட்டெல்லாம் ஒரு கால‌த்துல‌ தேவையா இருந்திருக்கலாம். இன்னிக்குத் தேவையா? கைத் தொலைபேசி, கணிணினு மாறிவிட்ட காலத்தில‌, இப்ப‌டி மாட்ட‌ப் பேணிப் பாதுகாத்து, போட்டியில‌ விட்டு, ப‌ல‌ பேற‌ காய‌ப்ப‌டுத்தி, சில‌ உயிர்க‌ள‌ மாய்ச்சு...எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல. ஒரு காலத்துல எனக்குப் பிடிச்சது தான். ஆனால் இன்னிக்கு பிடிக்கல, விட்டுரு‌' என்று குழைந்து கொண்டிருந்தாள் மாமன் மகள் சித்ரா.

பல்லாண்டுக் காதலை உதறி, ஊராரின் ப‌ல‌ வ‌ச‌வுச் சொற்க‌ளையும் ம‌ன‌தில் இறுத்தி, அடுத்த ஓராண்டில், அண்ண‌னும் த‌ங்கையும் சேர்ந்து செவ‌லையை மீண்டும் த‌யார் செய்த‌ன‌ர் ஜ‌ல்லிக்க‌ட்டுக்கு !!!

***

அதீதம் பொங்கல் சிறப்பிதழில் 'வீராப்பு'.

6 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

மண் மணம் கமழும் சிறப்பான கதை அருமையான நடையில். வாழ்த்துகள்!

சதங்கா (Sathanga)said...

சிறிது இடைவெளி விட்டு எழுதிய கதை. மீண்டும் எழுதக் காரணம் முற்றிலும் உங்கள் ஊக்கமே. இக்கதை நன்றாக வந்திருந்தால்,அந்த வெற்றி உங்களதே :)

Bloggersaid...

எப்பயிம் போல கலக்கி புட்டீகல்ல, சூப்பர் அப்பு !!

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா - அருமை அருமை - மண் வாசனையுடன் எழுதப்பட்ட கதை - வர்ணனைகள் அற்புதம் - இயல்பான நடை - ஜல்லிக்கட்டில் செவலை தோற்கும் என்பது எதிர் பாரா ஒன்று. - அடுத்த ஆண்டு வெற்றி பெறும். பாண்டியும் அவன் தங்கையுமாக அடுத்த ஆண்டு வெற்றிப் பாதையில் வலம் வர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

கோகுல் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதன் சுட்டி தவறாகக் தந்திருக்கிறார். சரியான சுட்டி இதோ :
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_26.html

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரிsaid...

மண்ணின் மணம் கமழ
அருமையான கதை..பாராட்டுக்கள்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !