லெட்சுமி மாமி (நாடக அனுபவம்)
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
இதுவரையிலும் செய்திராத ஒரு புதிய படைப்பை ஏற்படுத்த இந்த ஆண்டுப் பொங்கல் விழா அமைந்தது. இப்ப தான் 'எங்கள் ஊர்ப் பொங்கல் விழா'னு பதிவு போட்ட மாதிரி இருக்கு, அதுக்குள்ள ஒரு வருடம் ஓடிவிட்டது.
விழாக் கமிட்டியில் இருந்து, கலைக்குழுவின் சார்பில் நண்பர் ஒருவர் சொன்னார், "நீங்க இந்த ஆண்டு ஒரு நாடகம் போடுங்களேன்" என்று. "நாடகமா ? நானா ? (தினம் தினம் வீட்டில் போடுவது பத்தாதா ? வெளியில் வேறு போடவேண்டுமா ? :)))" என சற்றுப் பின் வாங்கினேன். அவர் விடுவதாய் இல்லை. "விகடனுக்கு என்றால் எழுதுவீர்கள். எங்களுக்கு எழுதுங்க என்றால், உங்களுக்கு அதெல்லாம் ஜூஜூபி தானே !" என்று போட்டு வாங்கிவிட்டார் நாடகத்தை :) நம்மை ஏதோ பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு உயர்த்திய நண்பருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் இன்னும் 'எழுத்துலகில் தவழும் ஒரு குட்டிப் பையன்' என :)
என்ன எழுதப்போறோம், எது எழுதப்போறோம் என்று யோசனையே இல்லாமல், வழக்கம் போல 'என்ன பதியலாம்' என்று சிந்திக்கும் உங்களைப்போல (சரி, சரி கோச்சுக்காதீங்க, நம்மளைப் போல்) சென்றது சிலநாட்கள். விழாவிற்கு ஒரு வாரம் இருக்கையில் தான் இந்த ப்ராஜக்ட் நம் கைக்கு வந்தது. கதை இல்லை, கதை மாந்தர்கள் இல்லை. ஆனால், வீராப்பாக பதினைந்து நிமிடம் ஸ்லாட் பதிந்து கொண்டாயிற்று.
ஒரு அளவிற்கு சிறிய கதையை ரெடி பண்ணி, நண்பர்கள் இருவரிடம் சொல்லி வைத்திருந்தேன் கதைமாந்தர்களுக்கு. ஆளுக்கு மூன்று பேரைப் பிடித்து விட்டோம் (நம்ம ஊரு போலீஸ் மாதிரி வலைவீசி தான் :)) என்று இருவருமே சென்ற வெள்ளி சொன்னபோது கொஞ்சம் நிம்மதி.
அன்றிரவே நண்பர் வீட்டில் அனைவரும் சந்தித்து கதை விவாதம் நடத்தினோம். கமல், ரஜினி (அதெல்லாம் ஓல்டோ) சரி விஜய், சூர்யா (ம்.ஹிம்மா ?), சரி ... சரி ... ஒரு சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சுவிட்ஸர்லாந்தில் கதை விவாவதம் பண்ண முடியவில்லை என்றாலும், நண்பர் வீட்டில் நல்ல விதமாகவே எங்கள் கதை விவாதம் தொடங்கியது.
கதைப்படி அறுவர் தேவை. மூன்று பெண்கள், மூன்று ஆண்கள். மாமி வேடத்திற்கு ஆண் நண்பரே வேடமிட்டு நடிக்கவும் தயாராக இருந்தார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து வசிக்கையில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் கதையின் நாயகன் லோகு. சிலநாட்கள் கழித்து தன் தாய் லெட்சுமிக்கு விஷயத்தைத் தெரிவிக்கிறான். தனக்குக் குழந்தை பிறக்கையில், தாயை இங்கு அழைத்து வருகிறான். அவரது முதல் விமானம் மற்றும் வெளிநாட்டுப் பயணம் தான் கதை.
"வெள்ளைக்காரப் புள்ள தானங்க, புடிச்சிருவோம்" என்றார் நண்பர். அப்புறம், நம்ம இஷ்டத்துக்கு அவங்க ப்ராக்டிஸ் எல்லாம் வருவாங்களா என்றெல்லாம் தெரியாது. அதனால் நம்ம ஊரு பொண்ணு, அதுவும் வடநாட்டுப் பொண்ணுனு கதையில் சிறிது மாற்றம் செய்தோம். ஒரு நண்பியும் கதையின் நாயகி சாந்தியாக நடிக்க சம்மதித்தார்.
நாடகத்தின் நடுநடுவே இசை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். எப்படி செய்யலாம் ? ஒவ்வொரு கோப்பாக வைத்துக் கொண்டு, நேரம் வரும்போது ஒருவர் ப்ளே செய்யலாம். அல்லது வரிசையாக எல்லா கோப்புகளையும் இணைத்து, நடுநடுவே சைலன்ஸ் வைத்து ஒரே கோப்பாக ஆக்கி ஒருவர் கையாளுவது போல் செய்யலாம். எது எப்படியோ, டி.ஜே.வாக இருக்க ஒரு நண்பர் சம்மதித்தார்.
மறுநாள் கூடி கதை விவாதம் சிறிது நடத்தி, சிலர் சொன்ன மாற்றங்களைச் செய்து, சரி 'இன்று, முதல் இரு காட்சிகள் செய்து பார்த்துவிடுவோம்' என அமர்ந்தோம். அப்பொழுது நண்பர் ஒருவர் சொன்னார், "ஊரில் இருந்து வந்த ஒரு மாமி இருக்காங்க. அவங்கள வேணா நடிக்கக் கேட்டுப் பார்ப்போம். இதிலெல்லாம் அவங்களுக்கு நிறைய ஆர்வம் உண்டு" என்றார். தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார்.
"அப்படியா, பேஷ் நல்லா செய்யறேனே. எனக்கு என்ன காஸ்ட்யூம் ? எங்க, எப்ப ரிகர்சலுக்கு வரணும் ?" என்றெல்லாம் கேட்டு எங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் மாமி. கதைக்கு எப்படி அவர் முதுகெலும்போ, அதே போல் ரிகர்சலிலும் எங்கள் அனைவருக்கும் அவர் தான் இன்ஸ்ப்பிரேஷன். பொங்கல் அன்று ரிகர்சலுக்கு நிஜ பொங்கலுடன் வந்து இறங்கினார். டப்பாக்களில் அடைத்து முறுக்கு செய்து வந்தார். கமகம மொறுமொறு என ரிகர்சலும் நடந்தது.
காட்சி அமைப்பில் முக்கிய உதவியாக இருந்தார், இக் கதையில் நண்பன் ராகவனாக நடிக்க சம்மதித்த நண்பர். ரொம்ப சிம்ப்பிளான மேடை. ஒரு காட்சி விட்டு மறு காட்சிக்கு ஸ்க்ரீன் எல்லாம் போட்டு வித்தியாசப்படுத்த முடியாது. சொற்ப எண்ணிக்கை மைக்குகள், மேசை, நாற்காலிகள் எல்லாம் சரியான இடத்தில் அமைத்து அதை நாடகத்தின் கடைசிவரை எப்படிப் பயன்படுத்துவது என்று யோசனைகள் சொன்னதில் நடிக நண்பர்கள் அனைவரின் பங்கும் பாராட்டத்தக்கது.
"காட்சிகளில் ஒரு தொய்வு தெரியாமல், கடைசி வரை அந்த ப்ளோ சூப்பரா இருந்துச்சுங்க" என்று ஒரு நண்பர் பிறகு சொன்னபோது, அட ! இந்த அளவுக்கு மக்கள் கூர்ந்து கவனிக்கிறாங்களா என்று ஆனந்த வியப்படைந்தோம்.
மாலை ஆறரை அல்லது ஏழு என்று தொடங்கி ஒரு மணி நேரம் ரிகர்சல். ஐந்து நாட்கள் ரிகர்சலில் அனைவரும் சந்தித்தது முதல் நாள் மட்டுமே. அனைவருக்கும் வேலைப் பளு தான் முக்கிய காரணம். கடைசி நாள் மட்டும் கொஞ்சம் ரிகர்சலுக்கு அதிக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன். அப்படி இருந்தும் நாயகியால் வரமுடியவில்லை. "விழா அன்று கண்டிப்பாக வந்துவிடுவேன். எனது டயலாக் எல்லாம் ஞாபகம் இருக்கு ஒன்னும் கவலைப்படாதீர்கள்" என்றார்.
பயிற்சி விட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஒருவரே மற்றவர் பாத்திரத்தை செய்ய, சில இடங்களில் பெயரை மாற்றி உச்சரிக்கும் படி ஆனதெல்லாம் தமாஷாக இருந்தது. அம்மாவ மாமினு கூப்பிடறது, ராகவனை லோகுனு சொல்றது என்று. மேடையில் பெயரை மாற்றி சொல்லிவிட்டாலும் சமாளித்துவிடுங்கள் என்று அனைவருக்கும் சொல்லி வைத்தோம்.
ஜனவரி 16, 2010 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது எங்கள் ஊர்ப் பொங்கல் விழா. அதில் எங்கள் 'லெட்சுமி மாமி' நாடகமும்.
'லெட்சுமி மாமி' நாடகக் குழுவினர் - From left to right: Uma Shankar, Shan, Nagarajan, Vibha, Pangajam Mami, Mani, Srivatsan
தனக்குக் கொடுத்தது மிகச் சிறிய வேடமே என்றாலும், உண்மையான அபீசர் போல, உடையில் இருந்து, அச்சடித்து கொடுக்கும் பாஸ்போர்ட் என்றெல்லாம் செவ்வனே செய்து அசத்தினார், இமிக்ரேஷன் ஆபீசராக நடித்த உமா சங்கர்.
இமிக்ரேஷனில் மூவர் என்றிருந்ததைக் குறைத்து இருவராக்கி, இருவரையுமே ஆண் கதாபாத்திரங்களாக ஆக்கியபோது எங்களிடம் அகப்பட்டுக் கொண்டார் இந்த நண்பர். மாமிக்கு குடைச்சல் கொடுக்கும் நுழைவாயில் ஆபீசராக வந்து, பாடி லேங்குவேஜ் மற்றும் கேஷுவல் டயலாக் டெலிவரியில் அசத்தினார் மணி.
ராகவனாக வந்த நண்பர் தனது ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியைக் கையாண்டார். கொண்டு வந்த ரோலர் ஹேண்ட்லக்கேஜ், விமனப்பயணத்தில் போர்த்திக் கொள்ளக் கம்பளிப்போர்வை, மாமியின் குடைச்சல் பொறுத்து நண்பனைப் பார்த்தவுடன், மாமியை ஒப்படைத்துவிட்டு தலைதெரித்து ஓடுவது என கலக்கிவிட்டார் நாகராஜன்.
ஆரம்பம் முதல் கடைசி வரையில் மேடையில், கமல் போல வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார் மாமி. முதலில் போர்த்திய சால்வை, ப்ளேனில் இருந்து இறங்கியவுடன் சால்வையை எடுத்த வெளிச்சுற்று சேலை, பிறகு குளித்துமுடித்து வருகையில் வேறொரு சேலை என்று வித்தியாசம் காண்பித்தார். ஹேண்ட்லக்கேஜில் வைத்துக் கொள்ளும் பொருட்கள் சேகரிப்பிலும் பங்கஜம் மாமி காட்டிய ஆர்வம் பாராட்டத்தக்கது.
துறுதுறுப்புள்ள இளைஞர் லோகுவாக வந்த நண்பர். "என்ன பேசணும் ? எங்க பேசணும் ? நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க" என்று எப்பவும் ஒரு பரபரப்புடனேயே இருப்பவர். ஆள் மாற்றி ப்ராக்டிஸ் செய்ததில் அம்மாவை மாமி என்றவர். அப்படியே mommyனு மேடையிலும் ஆக்கிக்கொண்டார் ஸ்ரீவத்ஸன்.
"சாந்தியாக நீங்கள் சேலையில் வரணுமே" என்றபோது, ('உங்க ஊர்க்காரங்களே எங்க சேலை கட்டறாங்க ?' என்பது போல் பார்த்து) , "சல்வார் ஓகே வா ?" என்றார். ஆரம்பம் மட்டும் தமிழில் சொல்லுங்கள், பிறகு ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றோம். 'ம்.ஹிம். எனக்கு என்ன பேசணும் என்று தமிங்கிலத்தில் எழுதிக் கொடுங்கள்' என்றார். வட இந்தியப் பெண்ணாக இருந்தாலும், தமிழில் பேசி மேடையில் அனைவரையும் அசத்தி விட்டார் விபா.
ஒரு சினிமா டைரக்டருக்குக்கூட படத்தின் முதல்நாள் வெளியீடு அன்று இந்த அளவு டென்ஷன் இருக்குமா ? தெரியாது.... ஓரளவுக்கு எங்கள் ஊர் மக்களை சிரிக்க வைக்க முடிந்ததில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் நிறைவான மகிழ்ச்சியே.
கலைக்குழு நண்பர்: குமரேஷ்; நடிக நண்பர்கள்: பங்கஜம் மாமி, விபா, ஸ்ரீவத்ஸன், நாகராஜன், உமா சங்கர், மணி; நடிகர்கள் சம்மதம் மற்றும் டி.ஜே வாக இருந்த நண்பர்கள்: குமரேஷ், அருள்; மேடை அலங்காரம் மற்றும் வீடியோ உதவி செய்த நண்பர்: யோகா; மற்றும் யோசனைகள் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகள்.
நாடகத்தின் வீடியோ வடிவம் யூடியூபில்: