Wednesday, November 11, 2009

மெட்ரோ ... (யூத்ஃபுல் விக‌ட‌ன் Nov-09 மின்னித‌ழில்)



"நீ இன்னிக்கு சாயந்திரம் ஏழு மணிபோல வந்தா அவளைப் பார்க்கலாம். இல்லேன்னா ஆறேழு மாசம் ஆகும்" என்ற நித்யாவின் நினைவூட்டலில் கிளம்பினேன். நித்யாவின் வீட்டிற்கு செல்லும் சாலை, வழக்கம் போல போக்குவரத்து அதிகம் இருந்தது. நண்பர்கள் மூவருடன் மெட்ரோவில் செல்லத் தீர்மானித்தேன். மெட்ரோவில் செல்வது இதுவே முதல்முறையும் கூட.

'மனதிற்குள் ஆயிரம் மத்தாப்புக்கள் வண்ணங்கள் சிந்தின. அவளைப் பார்த்தபின், அவளின் முடிவிற்கேற்ப முதலில் வீடு மாற்றணும். பேஸ்மென்ட் இருப்பது போன்ற வீடாய் வாங்க வேண்டும். தணிகை வைத்திருப்பது போல அதில் ஒரு ஹோம் தியேட்டர். மாடியில் ஒரு கேம் ரூம்'. றெக்கை இல்லாமலே விநாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பறந்தது மனம்.

"யெல்லோ லேன் எடுத்து ஃபோர்ட்(டட்)ட‌ன் இற‌ங்கி, ப‌ச்சை லேனில் மாறி காலேஜ் பார்க்கில் இற‌ங்கிக் கொள்ளுங்க‌ள்" என்றார் கௌண்ட‌ரில் இருந்த பெரிய‌வ‌ர்.

ரயில் தளத்திற்குப் நாங்கள் நால்வரும் படியிறங்கி வருகையிலே, வலதுபுறம் 'ஃபோர்ட் ட‌ட்ட‌ன் மஞ்சள் 2 நிமிட‌ங்க‌ள்' என்று அறிவிப்புப் ப‌ல‌கை மிணுக்கியது.

சிறுத்த கடுகுகளாய் தூரத்தில் ஆங்காங்கே சிலர் சிந்தித்து நின்றிருக்க, அகண்ட ரயில் தளத்தில் கூட்டம் அதிகமில்லை. இலையுதிர் காலமாதலால் இரவு சீக்கிரமே வந்தனம் சொல்லியது.

"ச‌ரியான‌ நேர‌த்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்" என்று என் தோளில் த‌ட்டினான் ந‌ண்ப‌ன் ப‌வி.

"அவ‌ன் எங்கே தேர்ந்தெடுத்திருக்கிறான், 'எல்லாம் அவள் செயல்'" எனப் புதுப்பெண் போல நாணி நடித்துக் காண்பித்தான் நரேஷ்.

"இவன் ஒருத்தன், அப்படி எல்லாம் இல்லடா. இப்பதான் கூட்டம் கம்மியா இருக்கும். அதான்...." என்றேன்.

என்னதான் விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சி என்றாலும், மழைக்கு ம‌ண‌க்கும் ம‌ண்வாச‌னை போலே... த‌ட‌க் த‌ட‌க், த‌ட‌க் த‌ட‌க் என்று த‌ன‌க்கே உரிய‌ இறைச்சலுடன் சற்றைக்கெல்லாம் வ‌ந்து நின்ற‌து 'யெல்லோ லேன்' மெட்ரோ.

கோட்டு சூட்டிலிருந்து, கோடியில் கிழிந்த‌ ஆடை அணிப‌வ‌ர் வ‌ரை, கொத்தாய் ம‌க்க‌ள் கூட்ட‌ம் இற‌ங்க‌, நம்ம‌ ஊர் டீக்க‌டையில் பேப்ப‌ர் ப‌டிக்கும் ஆசுவாச‌த்தில் ஏறி, இரண்டு மூன்று வரிசை தாண்டி, ஆளுக்கு ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்தோம்.

ப‌ட‌ம் முடிந்து வெளியேறிய‌ கூட்ட‌ம் விட்டுச் சென்ற‌ எச்ச‌ங்க‌ளாய், க‌ச‌ங்கிய‌ செய்தித்தாள் குப்பைக‌ள், தின்று முடித்த‌ பிஸ்க‌ட் காகித‌ங்க‌ள், கடலைத் தோல்கள், ஐஸ் குச்சி, தீர்ந்த லிப்ஸ்டிக் குடுவை, இன்ன‌ பிற‌வும், ஆடி ஆடி நாங்கள் இருந்த கம்பார்ட்மென்ட்டில் ப‌ய‌ணித்த‌ன.

அடுத்த‌ இர‌ண்டு நிறுத்த‌ங்க‌ளில் ப‌ல‌ர் ஏற‌, ஓர‌ள‌வு கூட்ட‌மான‌து மெட்ரோ. இருப்பினும், மெட்ரோவின் இறைச்ச‌லுக்குப் போட்டியாக இருந்தது எங்க‌ளின் அர‌ட்டைக் க‌ச்சேரி.

"மச்சி, தாம்பரம் பக்கத்தில நாலஞ்சு வருஷம் முன்னர் ரெண்டு லட்சத்துக்கு ஒரு கிரவுண்டு வாங்கிப் போட்டேன். இன்னிக்கு ரேட்டு என்ன தெரியுமா ? கிட்டத்தட்ட முப்பது லட்சம்" என்றான் பவி.

"இதென்ன பெரிய விஷயம். மாம்பலத்தில் ஒரு சின்ன இடம், மூனு வருஷத்துக்கு முன் ஏழு லட்சத்துக்கு வாங்கினேன். இப்ப 'நாப்பது தர்றேன், அம்பது தர்றேன்'னு ஒரு நாளைக்கு நாலைஞ்சு பேரு வந்து பார்க்கிறாங்களாம். 'பேசாம குடுத்திருப்பா'னு எங்க அப்பா அலுத்துக்கறார்" என்றான் நரேஷ்.

ரியல் எஸ்டேட் முடித்து, ட்விட்ட‌ர், `ஃபேஸ்புக், ப்லாகிங் என‌ எண்ணப் பகிர்வுகள் மற்றும் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமா அப்டேட்கள், அரசியலின் சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று பேச்சுக்க‌ள் தொட‌ர, எங்களுக்கெல்லாம் முன் அம‌ர்ந்திருந்த‌ இருவ‌ரின் ச‌ம்பாஷ‌ணைகள், திடீரென எங்கள் க‌வ‌ன‌த்தை ஈர்த்த‌ன‌.

"என்ன‌ மொழிப் புத்த‌க‌ம் இது ? எழுத்துக்க‌ள் சுருள் சுருளாக‌ இருக்கின்ற‌ன‌" என்று தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளம் வெள்ளைக்காரப் பெண்மணியை, தூய‌ ஆங்கில‌த்தில் கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு ஆப்பிரிக்க‌ அமெரிக்கர்.

"த‌மிழ்" என்று கேட்ட‌து தான் தாம‌த‌ம். சடன் ப்ரேக்கிற்கு நின்ற ரயில் வண்டியாய் சட்டென்று நின்று போன‌து எங்க‌ள் அர‌ட்டை. எல்லோருக்கும் அவ‌ளிட‌ம் சென்று பேச வேண்டும் என்ற‌ ஆவ‌ல் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இல்லையெனில், இற‌ங்கும் இட‌ம் இன்னும் இருக்கிற‌தென்றாலும், அருமையான‌ திருப்ப‌ம் கொண்ட‌ திரைப்ப‌ட‌த்தின் க்ளைமாக்ஸ் போல‌ சீட்டு நுனியில் அம‌ர்ந்திருப்போமா ? மெட்ரோவின் 'த‌ட‌க் த‌டக்' இப்போது எங்க‌ள் ம‌ன‌ங்க‌ளில்.

"என்ன, திருக்குற‌ள் புத்த‌க‌மா இருக்கும்" என்றான் ஆரோக்கிய‌ராஜ்.

"தோடா... இவ்ளோ நேர‌ம் அட‌ச்ச‌ பேஸ்ட் மாதிரி வ‌ந்துகிட்டு இருந்தான் ! இப்ப‌ என்ன‌டானா ஒட‌ஞ்ச‌ முட்டை மாதிரி வார்த்தைக‌ள‌க் கொட்டறான்" என்று ஆரோக்கியராஜை சீண்டினான் ந‌ரேஷ்.

"டேய் பார்த்துப் பேசுங்க‌டா, அவ‌ளுக்குத் த‌மிழ் தெரியும்" என்று எங்கள் காதுக‌ளில் கிசுகிசுத்தான் ப‌வி.

"நாங்க ஒன்னும் தப்பாப் பேசிடலயே ! நிறுத்தறியா நீ..." என்று பவியையும் ஒரு கை பார்த்தான் நரேஷ்.

இப்போது அவ‌ள் எங்க‌ளைக் க‌வ‌னிக்க‌ ஆர‌ம்பித்திருந்தாள்.

அடுத்த‌ நிறுத்த‌ம் ஃபோர்ட் ட‌ட்ட‌ன்.

அவ‌ளும் அங்கு இற‌ங்க‌. ரயில் தளத்திலேயே, மொய்க்கும் வ‌ண்டுக‌ளாய் அவளை நாங்க‌ள் சுற்றி கொள்ள‌, நான்கு வாலிப‌ர்க‌ளைப் பார்த்த‌தும், எந்த‌ ஒரு பெண்ணுக்கும் ஏற்ப‌டும் ப‌ய‌ம் அவ‌ள் முக‌த்தில் தோன்றிய‌து.

"ஒன்றும் த‌வ‌றாக‌ நினைக்காதீர்க‌ள். நாங்க‌ எல்லோரும் த‌மிழ்நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள். மெட்ரோவில் உங்க‌ளின் உரையாட‌ல்க‌ளைக் கேட்ட‌திலிருந்து உங்க‌ளுட‌ன் பேச‌வேண்டும் என‌ எங்க‌ள் எல்லோருக்கும் ஆவ‌ல்" என்று ப‌வி க‌னிவாகக் கூற, செவி ம‌டுத்துக் கேட்டுக் கொண்டாள்.

"த‌மிழ் மொழி உங்க‌ளுக்கு எப்ப‌டித் ப‌ரிட்சைய‌மான‌து ? யாரிட‌ம் க‌ற்றுக் கொண்டீர்க‌ள் ? உங்க‌ வீட்டில் யாரும் த‌மிழ் பேசுவாங்க‌ளா ? ப‌டிப்பாங்க‌ளா ? இத‌னால் உங்க‌ளுக்கு என்ன‌ ப‌ய‌ன் ?" என்று நாங்க‌ள் அனைவ‌ரும் உல‌க‌ நிருப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இணையாக‌ மாறி கேள்விக் க‌ணைக‌ள் தொடுக்க‌ ...

"பொறுங்க‌, பொறுங்க‌. உங்க‌ கேள்விக‌ளுக்கெல்லாம் பொறுமையா ப‌தில் சொல்றேன்" என்று காத்திருப்புப் ப‌ல‌கையில் அம‌ர்ந்தாள்.

"வேலை நிமித்தம் சென்னையில் சில ஆண்டுகள் வசித்த போது, பக்கத்து வீட்டில் வசித்தவர் ஒரு தமிழாசிரியர். அவர்கிட்டயே தமிழ் படிக்க ஆரம்பிச்சேன். நீங்க நம்ப மாட்டீங்க, ஒரு பைசா அவர் வாங்கிக் கொள்ளவில்லை. என் ஆர்வத்தைப் பார்த்து பணம் எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அந்த சொல் இப்ப நினைத்தாலும் என் மனதிற்குள் இனிமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதையே நானும் கடைபிடிக்கவும் செய்தேன், செய்கிறேன். முக்கியமா உங்க ஊர் கிராமப்புறங்களில்." என்றாள்.

பச்சை லேன் மெட்ரோ வர, நண்பர்களைப் பார்த்தேன். க‌ண்களிலேயே 'ரொம்ப‌ அவ‌சிய‌ம் ! என்ன‌ பெரிய‌ த‌மிழ். அவ‌ளுக்கு ஆர்வ‌ம் இருக்கு ப‌டிக்க‌றா. இத‌ப் போய் பெரிசு ப‌டுத்திகிட்டு. கெள‌ம்புங்க‌டா ... நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. நான் அவ‌ளைப் பார்க்க‌வேண்டும்' என்று க‌டிந்து கொண்டிருந்தேன். அட்ச‌ர‌ சுத்த‌மாய் பாட‌ம் எடுக்கும் ஆசிரியரையும் பொருட்ப‌டுத்தாது, க‌ன‌வுல‌கில் ச‌ஞ்ச‌ரிக்கும் க‌டைசி பெஞ்ச் மாண‌வ‌ர்க‌ளைப் போன்ற நிலையில் இருந்த‌ன‌ர் மூவ‌ரும்.

"அட‌டே நான் போற‌ மெட்ரோ தான் இது. நீங்க‌ள் எங்கு செல்கிறீர்கள் ?" என‌க் கேட்டுக் கொண்டே உள்ளே ஏறினாள். அனுமார் வால் போல‌ அவ‌ளைப் பின் தொட‌ர்ந்து நாங்க‌ளும் ஏறிக்கொண்டோம்.

"அது என்ன‌ புக் என்று நாங்கள் தெரிந்து கொள்ள‌லாமா ?" என்றான் ப‌வி.

"நீங்க‌ளே பாருங்க" என்று புத்த‌க‌த்தை எங்க‌ளிட‌ம் நீட்டினாள்.

'ஆம்பர்' என்று கூட்டெழுத்தில் அவ‌ளைப் போல‌வே அழ‌காக‌ இருந்த‌து அவ‌ள் பெய‌ர். பின்பு தான் 'ப‌ட்டின‌த்தார்' என்ற புத்தகத் தலைப்பையே க‌வ‌னித்தோம்.

ஆம்பருக்குத் தமிழ் தெரியும் என்பதையும் மறந்து, "பெரிய‌ ஔவையாராட்டு இருக்குது ..." என்று வாய்விட்டு விய‌ந்தான் ந‌ரேஷ்.

ஔவை போல‌ வ‌ய‌தில்லை. சுற்றிய‌ எண்முழ‌ப் புட‌வை இல்லை, கையில் கைத்த‌டி இல்லை .... ந‌ல்ல‌ வெளிறிய‌ நீல‌ ஜீன்ஸ். முழங்கை வரை நீண்ட‌ வெள்ளை மேல் ச‌ட்டை. க்ளிப்பிட்டுச் சுருட்டிய‌ த‌லைமுடி. மைதீட்டிய ஊதாக் க‌ண்க‌ள். காற்றிலாடும் காது வ‌ளைய‌ங்க‌ள் என‌ வ‌ய‌துக்கேற்ப‌ த‌ன்னை அழ‌குப‌டுத்தித்தானிருந்தாள்.

"இதில் உங்க‌ளுக்குப் பிடித்த‌ பாட‌ல் ஏதாவ‌து சொல்ல‌ முடியுமா ?" என்றேன் நான்.

"உங்க‌ பேரு ?" என்றாள்.

அட‌டா, இதுவ‌ரை யாரும் அவ‌ளிட‌ம் அறிமுக‌ப்ப‌டுத்திக்கொள்ளாத‌தை நினைத்து வ‌ருந்தினோம்.

"நான் ச‌ந்திரன். இவர்கள் ப‌வி, ந‌ரேஷ், ஆரோக்கிய‌ராஜ். நாங்க‌ள் நால்வ‌ரும் தமிழகத்தில் க‌ல்லூரி ஒன்றாக‌ப் ப‌டித்து, இங்கு வேறு வேறு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் வேலை பார்க்கிறோம். ச‌ந்திர‌னின் ந‌ண்பி ஒருவ‌ரைப் பார்ப்ப‌த‌ற்காக‌ இப்பொழுது போய்க்கொண்டிருக்கிறோம்." என்றேன்.

"இந்தப் பாட‌ல் என்றில்லை. ஓர‌ள‌வு எல்லாமே என‌க்குப் பிடிக்கும். குறிப்பா சொல்ல வேண்டும் என்றால் 'யாவ‌ர்க்கு மாம்' என்ற‌ பாட‌ல் ரொம்ப‌ப் பிடிக்கும். அதைக் காட்டிலும் நெஞ்சில் சட்டென்று ஏறி அமர்ந்த பாடல் 'அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே' என்றும் சொல்லலாம்.

'என்னென்னவோ சொல்றாளே' என்று விழிபிதுங்கிய பவிக்கு, "டேய், கவியரசரோட 'வீடு வரை உறவு'" பாட்டோட முந்தைய வெளிப்பாடு தான் அப்பாடல் என்றேன்.

கூட்டம் குறைந்து, சட சடவென இலையுதிர் கிளை போல் ஆனது மெட்ரோ. இன்னும் ஒரு நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

"எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், யாரும் அதற்கேற்ப வாழ்வது இல்லை. அதான் எல்லா ஊரிலும் பிரச்சனை. பட்டினத்தார் என்னிக்கு 'செல்வத்தின் நிலையாமை' பற்றி எழுதி வைத்தாரோ, அன்றிலிருந்தே 'சேர்த்து வைக்கனும்' என்று உஷாராயிட்டான் மனுஷன். பிறருக்குக் கொடுத்துத் தம் வாழ்வையும் நீத்த வள்ளல்களைப் பார்த்து, தம் வாழ்வும் பாழாகிவிடும் என்று ஈவதையே மறந்தான். பிரிக்க முடியாதது என்ற தருமியின் கேள்விக்கு 'அக்கால ஆசிரியரும் வறுமையும்' என்று சொன்னால், இதனைப் பார்த்து உஷாரானார்கள் ஆசிரியப் பெருந்தகைகள். சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட். ஒத்துக்கறேன். நிலைமை இப்படியே போனால், பிழிந்தெடுத்த கரும்புச் சக்கை போலல்லவா ஆகிவிடும் வாழ்க்கை. கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' . அது தான் வாழ்க்கை. அதைத் தான் நான் செய்கிறேன்" என்று ஆம்பர் நிறுத்த, மெட்ரோவும் 'காலேஜ் பார்க்' நிறுத்தத்தில் நின்றது.

"நண்பர்களே, உங்களை எல்லாம் சந்தித்தது ரொம்பவே மகிழ்ச்சி. உங்களை எல்லாம் போட்டு வாட்டி வதக்கிட்டேன்னா என்ன மன்னிச்சிருங்க. ஒரு ஆர்வத்தில என் மனசுக்குள்ள இருந்தத கொட்டிட்டேன். என் நண்பன் காத்திருப்பான். வரட்டா" என்று எவருக்கும் காத்திராமல் காற்றில் கரைந்தாள் ஆம்பர்.

"டேய் எனக்கு அந்தப் பொண்ண பார்க்க விருப்பம் இல்லடா. இப்படியே திரும்பிடலாம். இப்பவே யாருக்காவது உதவி செய்யணும். மத்ததெல்லாம் அப்புறம் பார்க்கலாம்" என்றேன்.

"இதத் தானடா இத்தன நேரம் பாடம் எடுத்துட்டுப் போறா ஆம்பர். 'கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' என்று" என அவளின் வாசகத்தை எதிரொலித்தான் பவி.

"ரியல் எஸ்டேட், சினிமா, ட்விட்டர் எல்லாம் இருக்கட்டும். அத்தோடு மற்றவர்களுக்கு உதவுவது பற்றியும் இனிமே நாம பேசுவோம்" என்றான் ஆரோக்கியராஜ்.

'தடக் தடக்' என்று மெல்ல நகர்ந்து வேகம் பிடித்தது மெட்ரோ.

யூத்ஃபுல் விக‌ட‌ன் Nov-09 மின்னித‌ழ்

13 மறுமொழி(கள்):

SUREஷ்(பழனியிலிருந்து)said...

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மிsaid...

வெகு அருமை சதங்கா. என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

//"எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால், யாரும் அதற்கேற்ப வாழ்வது இல்லை.//

உண்மை.

//பட்டினத்தார் என்னிக்கு 'செல்வத்தின் நிலையாமை' பற்றி எழுதி வைத்தாரோ, அன்றிலிருந்தே 'சேர்த்து வைக்கனும்' என்று உஷாராயிட்டான் மனுஷன். பிறருக்குக் கொடுத்துத் தம் வாழ்வையும் நீத்த வள்ளல்களைப் பார்த்து, தம் வாழ்வும் பாழாகிவிடும் என்று ஈவதையே மறந்தான். பிரிக்க முடியாதது என்ற தருமியின் கேள்விக்கு 'அக்கால ஆசிரியரும் வறுமையும்' என்று சொன்னால், இதனைப் பார்த்து உஷாரானார்கள் ஆசிரியப் பெருந்தகைகள். சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட். ஒத்துக்கறேன். நிலைமை இப்படியே போனால், பிழிந்தெடுத்த கரும்புச் சக்கை போலல்லவா ஆகிவிடும் வாழ்க்கை//

பிட்டு பிட்டு வைத்துவிட்டீர்கள்!

//கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' . அது தான் வாழ்க்கை.//

Hats off!

யூத்ஃபுல் விகடன் மின்னிதழ் பங்கெடுப்புக்கும் என் வாழ்த்துக்கள். கதையின் நடையும் அருமை.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

அருமை அருமை - கதை அருமை - அல்ல அல்ல - ஒரு நிகழ்வின் நேரடி வர்ணனை ஒளிபரப்பு அருமை.

ஆம்பர் கூறிய சொற்கள் - சிந்தனை அருமை. கொடுக்கவும் தெரிய வேண்டும் - வைத்திருக்கவும் தெரிய வேண்டும். கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி குறையாமல் இருக்க வைத்திருக்கவேண்டும்.

நாகேஷ் - சிவாஜி வசனங்கள் கூட
கதை எழுதுவதற்குப் பயன் படுகிறதே - நினைவாற்றலும் எதையும் உள்வாங்கும் மனமும் - கண் காது எப்பொழுதும் திறந்தே இருக்கும் பயிற்சியும் பாராட்டுதலுக்குரியவை.

நல்வாழ்த்துகள் சதங்கா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelansaid...

இதுவே முதன்முறையாக உங்கள் படைப்பை உங்கள் தளத்தில் படிக்கிறேன்.

நாங்களும் உங்கள் நண்பர்களுடன் பயணித்தேன். மிக அருமையான சிறுகதை..

யூத்ஃபுல் மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துகள்.

Kavinayasaid...

கதை கலக்கல். நடை இயல்பு. வாழ்த்துகள் சதங்கா :)

T.V.ராதாகிருஷ்ணன்said...

வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

SUREஷ் (பழனியிலிருந்து)said...

//வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க மருத்துவர்.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//வெகு அருமை சதங்கா. என் மனமார்ந்த பாராட்டுக்கள்!//

மனமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல.

//
//கொடுக்கவும் கற்றுக் கொள்ளணும் இருத்தி வைக்கவும் கற்றுக் கொள்ளணும்' . அது தான் வாழ்க்கை.//

Hats off!//

மனம் மகிழ்கிறது ... இருப்பினும், "வெற்றியின் கிறக்கத்தில் கிடக்கக்கூடாது தானே ?" அதனால் அடுத்த இலக்கை நோக்கி ....

//யூத்ஃபுல் விகடன் மின்னிதழ் பங்கெடுப்புக்கும் என் வாழ்த்துக்கள். கதையின் நடையும் அருமை.//

பூரிப்படைகிறது மனம். மின்னிதழில் உங்கள் கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//அன்பின் சதங்கா

அருமை அருமை - கதை அருமை - அல்ல அல்ல - ஒரு நிகழ்வின் நேரடி வர்ணனை ஒளிபரப்பு அருமை.//

மிக்க நன்றி ஐயா. ஒரு நிகழ்வின் ஒளிபரப்பு தான். கதைக்காக சிலவற்றைச் சேர்த்திருக்கிறேன்.

//ஆம்பர் கூறிய சொற்கள் - சிந்தனை அருமை. கொடுக்கவும் தெரிய வேண்டும் - வைத்திருக்கவும் தெரிய வேண்டும். கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி குறையாமல் இருக்க வைத்திருக்கவேண்டும். //

சமீபத்தில் எங்கள் கல்லூரி நண்பர்கள் சந்திப்பு நடத்தினோம் இங்கு. அதன் ஒரு உறுதி மற்றவர்களுக்கு உதவுவது. பலருக்கும் பலதரப்பட்ட கருத்துக்கள், பேச்சுக்கள் பல விஷயங்கள் பேசும்போது இருந்தாலும் இந்த விஷயத்தில் அனைவருக்கும் இருந்த உறுதியின் வெளிப்பாடு தான் கதை :))

//நாகேஷ் - சிவாஜி வசனங்கள் கூட
கதை எழுதுவதற்குப் பயன் படுகிறதே - நினைவாற்றலும் எதையும் உள்வாங்கும் மனமும் - கண் காது எப்பொழுதும் திறந்தே இருக்கும் பயிற்சியும் பாராட்டுதலுக்குரியவை.

நல்வாழ்த்துகள் சதங்கா//

வாழ்த்துக்களுக்கும், டீடெய்லான மறுமொழிக்கும் நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)said...

//இதுவே முதன்முறையாக உங்கள் படைப்பை உங்கள் தளத்தில் படிக்கிறேன். //

முதல் வருகைக்கு நன்றி செந்தில். உங்களது படைப்புக்களையும் தொடர்ந்து இளமை விகடனில் வாசித்த்து வருகிறேன்.

//நாங்களும் உங்கள் நண்பர்களுடன் பயணித்தேன். மிக அருமையான சிறுகதை.. //

வாங்க வாங்க. மனம் மகிழ்கிறது.

//யூத்ஃபுல் மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துகள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றியாக வாழ்த்துக்கள், தங்கள் படைப்பும் மின்னிதழில் வந்ததற்கு.

சதங்கா (Sathanga)said...

கவிநயா said...

//கதை கலக்கல். நடை இயல்பு. வாழ்த்துகள் சதங்கா :)//

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க கவிநயா.

சதங்கா (Sathanga)said...

T.V.Radhakrishnansaid...

//வாழ்த்துகள்//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.

இராஜராஜேஸ்வரிsaid...

ஈத்துவக்கும் இன்பம் பற்றி
இனிமையான கதை..பாராட்டுக்கள்..!

Post a Comment

Please share your thoughts, if you like this post !