Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, May 1, 2012

எங்கும் எதிலும் கலாம் ...



'ஒன்னா ரெண்டா ... ஆயிரம் பொன்னாச்சே, ஆயிரம் பொன்னாச்சே' என திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்புவது இன்றும் காதுக்குள் ஒலிக்கின்றது.  அப்படி இருக்க, தனக்குக் கிடைத்த ஒரு கோடியை, நான்காகப் பிரித்து, நான்கு நிறுவனங்களுக்குத் தந்த டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களை எவ்வளவு பாராடினாலும் தகும்.  அப்பொழுதே எனது மற்ற தளத்தில் பதிந்த சிறு கவிதை இப்பொழுது இங்கே:


அன்பாகப் பேசிக்கலாம்
அறன்போற்றிப் பழகிக்கலாம்
சிந்தனை வ‌ள‌ர்த்துக்கலாம்
சோம்பல் வீழ்த்திக்கலாம்
ஆன்றோரை அணைத்துக்கலாம்
சிறியோரைச் ச‌கித்துக்கலாம்
நல்லவை படித்துக்கலாம்
அல்லவை அடித்துக்கலாம்
விழியெனக் கோபித்துக்கலாம்
கனவில் விழித்துக்கலாம்
விழித்தபின் சிரித்துக்கலாம்
சிதறாமல் பார்த்துக்கலாம்
கருத்துக்களோடு மோதிக்கலாம்
நற்செயலால் சாதித்துக்கலாம்
பரிசுபல பெற்றுக்கலாம்
பிறருக்குக் கொடுத்துக்கலாம்
துயர் துடைத்துக்கலாம்
தோள் சாய்த்துக்கலாம்
புத்தகம் படித்துக்கலாம்
அறிவிய‌ல் ஆராய்ந்துக்கலாம்
இன்னும் பல கலாம்கள்
ம‌ன‌தில் இருத்திக்கலாம்
நிறைவாய் உணர்ந்துக்கலாம்
இறைவனை வணங்கிக்கலாம்
இனிது வாழ்ந்துக்கலாம்.

Tuesday, February 14, 2012

ஆதலினால், காதல் செய்வீர் !





ப‌ழகிய‌ சில‌ கால‌மே
ஈருடல் ஓருயிராய் இணைந்தோம்

இன்னார்க்கு இன்னாரென்று
எழுதியா வைத்தான் இறைவ‌ன் ?

அன்று, இன்னார் இன்னார் என்றறிந்தே
காத‌லித்துக் க‌ர‌ம்பிடித்தோம் !

இங்கே ஏது காத‌ல் ?

பகல் இர‌வாய் உழைத்து
ம‌னை ஊர்தி ம‌க்க‌ள் பெற்றோம்

உணவத‌னை வாய் விழுங்கி
தொலைக்காட்சியை க‌ண் விழுங்க‌

மனை வாழ்வை ம‌ற‌ந்தோம்
ம‌ற்ற‌ ம‌னை அறியோம்

இங்கே ஏது காத‌ல் ?

ப‌க‌ல‌வ‌ன் யாரென்றும்
குளிர் நில‌வை ஏனென்றும்

இய‌ற்கையை அறிவ‌த‌ற்கு
இணைய‌த்தை அணுகுகிறோம்

நான்கு சுவ‌ர்க‌ளுக்குள்ளே
தொலைத் தொட‌ர்பை வ‌ள‌ர்த்தோம்.

இங்கே ஏது காத‌ல் ?

பெற்ற‌ பிள்ளை கிட்டே வ‌ர‌
கீரியாய்ச் சீறுகின்றோம்

க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் க‌ன‌க்க‌
க‌டுஞ்சொற்கள் காட்டுகின்றோம்

மூன்றே வ‌ருட‌த்தில்
முட்டி நின்றோம் இருபுறமும்.

இங்கே ஏது காத‌ல் ?

இன்றுவ‌ரை எல்லாம் நல‌மே
சென்று சேருமிட‌ம் அறிந்தால்
என்றும் எல்லாம் ந‌ல‌மே !

முட்டி நின்றாலும் விட்டுக் கொடுப்பீர்
தடிக்கும் சொற்க‌ளை தள‌ர்த்திக் கொள்வீர்
வாய் நிறுத்த‌ கை உய‌ர்ந்தால்
துணையைப் ப‌ற்றி அணைப்பீர்

ம‌ற்ற‌ ம‌னை அறிவோம்
சுற்றம் சூழ‌ வாழ்வோம்
ஒற்றுமையை வ‌ள‌ர்ப்போம்

பெற்றோரைப் போற்றிடுவோம்
பெற்ற‌ பிள்ளை வ‌ள‌ரும‌ழ‌கை ர‌சிப்போம்
க‌ட்டிய‌வ‌ர் ம‌ன‌ம் இனிக்க‌க் க‌னிவாய் பேசிடுவோம்

இவ‌ற்றை எல்லாம் காத‌லிப்போம்.

காத‌லின்றி நாளையேது ?
ஆதலினால், காதல் செய்வீர் !


காதல் சிறப்பிதழ் அதீதத்தில் ஆதலினால், காதல் செய்வீர் !


(படம்: நன்றி இணையம்)

Tuesday, September 15, 2009

ஐ.டி. ப்ரோக்ராமரும் ~ படிக்காசுப் புலவரும் ...



ச‌மீப‌கால‌மாக‌ ஐ.டி.துறை ப‌ற்றி வ‌ருந்த‌த்த‌க்க‌ ப‌திவுக‌ள் வ‌‌ருகின்ற‌ன‌. 'பணம் அதிகமா சம்பாதிக்கிறாங்க' என்று பல வருடங்களாக குற்றசாட்டு. போக, 'ஒரு ப்ராஜ‌க்ட் எடுத்து, எப்ப‌டி எல்லாம் போக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள்' என்று ஒரு பதிவு ப‌டித்த‌ போது ம‌ன‌ம் வெம்பித் தான் போன‌து. என்ன‌ தான் க‌ட்டுரையாள‌ர் ந‌கைச்சுவை(க்காக) க‌ல‌ந்து எழுதியிருந்தாலும், ம‌றுபுற‌ம் ஐ.டி.ப‌ற்றி அவ‌தூறான‌ எண்ண‌த்தை ம‌க்க‌ளிட‌ம் விதைப்ப‌தாகவே ஆகிற‌து.

எந்த‌த் துறையில் இல்லை கேவ‌ல‌ம் ? ஐ.டி.யிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ இருக்க‌லாம். அதற்காக மொத்தத் துறையையும் எப்ப‌டி குறை சொல்ல‌லாம் ?

சினிமாத் துறையில் ரஜினி கோடிகளில் சம்பாதிக்கிறார் என்பதற்காக, கோடியில் நிற்கும் லைட்மேனைக் குறை சொல்லலாமா ? ஐ.டி.யும் அப்ப‌டித்தானே. எத்த‌னை பேரு ச‌ந்தோஷ‌மா வேலைக்கு போறாங்க தினமும் ? எத்த‌னை பேர் கோடிக‌ளில் புர‌ளுகிறார்க‌ள் ?

அப்ப‌டியே க்ளைய‌ண்ட்டை இழுத்த‌டித்து வேலை வாங்கினாலும், எத்த‌னை கால‌ம் சந்தையில் வியாபார‌ம் ப‌ண்ண‌முடியும் அந்த ஐ.டி. கம்பெனி ? இதென்ன‌ திருவிழா கால‌ங்க‌ளில் போட‌ப்ப‌டும் க‌டையா ? 'வந்தவரைக்கும் லாபம்' என ப‌த்துநாளில் ப‌ண‌த்தை வாரிகிட்டு பொட்டி க‌ட்டி கெள‌ம்ப‌ ?

'ப‌ட்ட‌ர் அடிச்சு ப்ரெட் சாப்பிடும் ஆட்க‌ள்' இருக்க‌த்தான் செய்கிறார்க‌ள். ஆனால், விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், ஆணிபுடுங்கி அசந்து கிடக்கும் ப்ரோக்ராமர்கள் தான் எங்கிலும் அதிக‌ம். ஊண் உற‌க்க‌ம் இன்றி வற்றிய க‌ன்ன‌ங்க‌ளுடன், பாவம் ஓயாது உழைக்கும் வ‌ர்க்க‌ம். 'நீங்க என்ன செஞ்சாலும் சரி, நாங்க உழைக்கத் தயார். எங்களை ஆன்ஷோர் அனுப்புங்க' என்று க்யூ கட்டி 'தவமாய் தவமிருக்கும்' செய்திகளும் ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் தெரிகிறோம்.

"என்ன‌ய்யா தூங்கி மூனு நாள் தானே ஆச்சு. 'மூ....னு நாள்'னு இழுக்கறே. என்ன மசமசனு நின்னுகிட்டு இருக்கே. போ, போ, போயி கோட் அடி" என்று துர‌த்தும் ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர் முத‌ல், "டெஸ்ட் கேஸ்ல‌ புள்ளி இருக்கு. ஆனா, டெஸ்ட் ரிச‌ல்ட்ல‌ புள்ளி இல்ல. ப‌ஃக் ஃபிக்ஸ் ப‌ண்ணு ராசா" என 'கோடில் புள்ளி' வைக்கும் டெஸ்ட‌ர் வ‌ரை, அவ‌ர்த‌ம் பாடு அட‌ அடா ....

ந‌ம்ம‌ ஊர்ல‌ சின்ன‌ச்சின்ன‌ அலுவ‌ல‌க‌ங்க‌ளில் பார்த்தால், அக்க‌வுண்ட‌ன்ட் என்று ஒருவ‌ர் இருப்பார், அவ‌ருக்குக் கீழே நாலைந்து பேர் இருப்பர். ஒருவ‌ர் லெட்ஜ‌ர் எழுதுவார், ஒருவ‌ர் பெட்டி கேஷ், ஒருவ‌ர் ஜெர்ன‌ல் என்ட்ரி, ஒருவ‌ர் பி.அன்ட்.எல். இப்ப‌டி ஒவ்வொருவ‌ரும் ஒரு வேலையைச் செய்வார்க‌ள். ஆனால் சின்ன ஐ.டி.க‌ம்பெனியிலோ, அத்த‌னையும் ஒருவ‌ர் தான். UNIX, Windows, Networking, Java, .Net, 4gl, Oracle, Informix, db2 ..... இப்ப‌டி அத்த‌னையும் சும்மாடு வைக்காம‌லேயே ஒருவ‌ர் த‌லையில் ஏறி, அவர் த‌லை கன‌‌க்கும். இதைத்தான் த‌லைக்க‌ன‌ம் என்று த‌வ‌றாக‌ப் புரிந்துகொண்டோமோ ?

ரெண்டு நாள் ட்ரெய்னிங், மூனு வார கோர்ஸ் என்று இப்படி ஆறுமாச‌த்துக்கு ஒரு த‌ர‌ம் அறிவை அப்டேட் ப‌ண்ணியே ஆக‌ணும். இல்லை எனில் 'சர்வைவ‌ல் ஆஃப் த‌ ஃபிட்ட‌ஸ்ட்' கேமில் கால் பதிக்கும் முன்னே க‌ரைந்து போகும் நிலை.

இப்ப‌டி இந்த‌க்கால‌த்தில் ஐ.டி. ப‌டித்துவிட்டு அல்லோலகல்லோலப்படும் ம‌க்க‌ள் போல‌ அந்த‌க்கால‌த்தில் த‌மிழ் ப‌டித்துவிட்டு த‌வித்திருக்கிறார்க‌ள் போல‌. த‌மிழால் பிர‌ப‌ல‌மடைந்தவர்கள் சிலர் தானோ ? (வள்ளுவருக்கே, மதுரை தமிழ் சங்கத்தில் ஔவை சிபாரிசு செய்தார் என்பதாகப் படிக்கின்றோம்). பலரது படைப்புகள் பலரைச் சென்றடையாமலும் போனதுவோ ? அவ‌ர்க‌ளில் சில‌ர் த‌ங்க‌ள‌து ஆற்றாமையை வெளிப்ப‌டுத்தியும் சென்றிருக்கிறார்க‌ள்.

த‌னிப்பாட‌லில் 'ப‌டிக்காசுப் புல‌வ‌ர்' இவ்வாறு புல‌ம்புகிறார்:

அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக்கல்வி
   அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக்கூத்தாடச்
   செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோமில்லைத்

தடமுலைவே சையராகப் பிறந்தோமில்லைச்
   சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் !
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை
   என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின்றோமோ ?


எந்த‌ அள‌விற்கு ப‌டித்துவிட்டோம் என நொந்திருக்கிறார் ம‌னுஷ‌ன். ப்ரோக்ராமர் மாதிரியே புலம்பியிருக்காருல்ல ?

ஏதாவது ஒரு இலக்கண முறைக்குட்பட்டு தான் இப்பாடல் எழுதியிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில பெயர்களை பயண்படுத்திக்கொள்கிறேன். தமிழார்வலர்கள் மன்னிக்க.

இதே புலவர் (ப்ரோக்ராமர்) 'நிலைமண்டில ஆசிரியப்பா'வில் (கணினி மொழிகள்) பாடல் (சுயபுராணம்) எழுதி மன்னரிடம் (கார்ப்பரேட் நேர்முகம்) பரிசில் (வேலை) பெறச் சென்றால், அங்கே இருக்கும் மந்திரி (ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்) "எண்சீர் விருத்தத்தில் இல்லையா ?" (வேறு கணினி மொழிகள்) என்பார்.

"இது நிலைம‌ண்டில‌ ஆசிரிய‌ப்பானு எப்ப‌டிச் சொல்கிறீர்க‌ள் ?" என்று குறுக்கு விசார‌ணை செய்வார் ந‌க்கீர‌ன் (டெக் லீட்).

"எங்கள் மன்னவரின் ஆட்சி பற்றி (கம்பெனி பற்றி) ஒரு பாடல் பாடுங்கள் (என்ன நினைக்கிறீர்கள் ?)" என்பார் அரசியார் (ஹெச்.ஆர்)

பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் விளக்கி, நஞ்சு தொஞ்சு (நாலைந்து நேர்முகங்கள்), கடைசியில் அரசி கிட்ட பேரம் பேசி தான் பரிசில் பெறமுடியும்.

இப்படி பீஸ் பீஸா பிஞ்ச பஞ்சுகளை லூஸ்ல விடுங்க பாஸ் :)))

Wednesday, July 22, 2009

வாக்கினிலே இனிமை வேண்டும் !


Photo: www.zynnyadesign.com

கடும் அலை மோதலிலும் -- அசையாது
கரும் பாறை.

மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது
மயில் தோகை.

சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது
நெடு ம‌ர‌ம்.

விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது
மலர் கூட்டம்.

சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது
குருவிக் கூடு.

சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது
சிலந்தி வலை.

ஆனால் ...

சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !

அத‌னால் ...

வாக்கினிலே இனிமை கொள்வோம்
வ‌ள‌மாய் வாழ்திடுவோம் !

Thursday, July 16, 2009

நம்மூரு அழுக்கு நோட்டு !


Photo (Thanks): www.picturejockey.com

சடசடக்கும் வெண்தாளில்
சட்டென்று ஈர்க்கும்வண்ணம்,
புத்தம் புதிதாய்
பிரசவிக்கும் நம் நோட்டு !

பொக்கை வாய் காந்தியும்
புன்னகையாய் சிரித்து,
வலம்வருவார் நாடெங்கும்
வண்ண நோட்டுக்களில் !

பத்தும் இருபதுமாய்
பலகோடி நோட்டுக்கள்,
பயணித்துச் செல்லும்
பலரின் வாழ்விலே !

கீரைத்தண்டு கரம்பற்றி
மீதிச் சில்ல‌ரையாக‌,
முழ‌ம்போட்ட‌ விர‌ல்பிரித்து
பூக்கும் சில்ல‌றையாக‌ !

சுருட்டிக் படுத்திருக்கும்
சுருக்குப் பைக‌ளுக்குள்,
வேர்க்கும் இத‌ய‌த்தின்
மேல்மிதக்கும் பைக‌ளுக்குள் !

நடத்துனரின் விரல்பற்றி
பேருந்தில் பயணிக்கும்,
ஊரெலாம் சுற்றி
ஓயாது ஒரு நாளும் !

நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?!

சந்தைக்குப் போய்வரும்
சடுகுடுவில் கலந்து கொள்ளும்,
அண்டை வீட்டாருடன்
அடிக்கடி நட்பு கொள்ளும் !

உள்ளங் கையிடுக்கில்
சுருண்டு கறுத்ததுவோ ?
ஊர்சுற்றி களைத்து
வேர்த்துக் கறுத்ததுவோ ?!

அழுக்காகி அழுகவில்லை
அதைநினைத்துக் கவலையில்லை,
என்னோடு எங்கும் வரும்
நம்மூரு அழுக்கு நோட்டு !

ஜூலை 24, 2009 யூத்ஃபுல் விகடனில்

Monday, July 6, 2009

மைக்கேல் ஜாக்ஸன் - நடனப் புயலும், ஓய்வும் !



பாடலில் பரவசம்
மேடையில் நவரசம் -- உன்
ஆடலில் உல‌கே
ஆடியது நிதர்சனம் !

குதூகலிக்கும் குழ‌ந்தைத்த‌ன‌ம்
சிறுவயதில் ம‌ற‌ந்தாய் -- உன்
சிலிர்க்கும் நடனத்தில்
உல‌கையே க‌வ‌ர்ந்தாய் !

திகிலூட்டும் த்ரில்லர்
சிலிர்ப்பூட்டும் டேஞ்சரஸென -- உன்
அற்புத‌ பாட‌ல்க‌ளில்
கிறங்க‌(வும்) வைத்தாய் !

ஒவ்வொரு அசைவிற்கும்
ஓராயிர‌ம் ப‌யிற்சி -- உன்
ஒத்திகை ந‌ட‌ன‌ங்களிலும்
அத்துணை ஈடுபாடு !

பொங்கும் மாக்கடலில்
திரண்டது நீரலை -- உன்
உலுக்கும் தோள்களில்
உருண்டது கடலலை !

நிலவிருக்கும் வரை
நினைவு இருக்கும் -- உன்
நீந்தும் கால்களின்
நிலவு நடனத்தில் !

ஈடிலா‌ வ‌ள‌ர்ச்சி
ஈட்டிய‌து ப‌ல‌கோடி -- உன்
வாழ்க்கையும் உழன்றதே
அனுதினம் அலைமோதி !

சீறிப் பாய்ந்து
சிருங்காரம் செய்து -- உன்
நடனம் (நெஞ்சில்) நிறுத்தி
ஓய்வாய் புயலே !

தூற்றுவார் தூற்ற
போற்றுத‌ல் நிலைநிறுத்தி -- உன்
ம‌ன‌ம் அமைதியில்
துயில்வாய் புய‌லே !

உனைத்துர‌த்தித் துன்புறுத்த
இனி எவருமில்லை -- உன்
க‌ல்லறையும் இனி(தாக‌)
காவிய‌ம் பாடிடுமே !

-----

மேலே இருக்கும் மைக்கேலின் படம், 93-ல் வரைந்தது. அவரோட படம் வரைந்தோமே என்றது மட்டும் நினைவில் இருந்தது. கால ஓட்டத்தில் எங்கே வைத்தோம் என்பது மறந்தே போனது ! அங்க தேடி, இங்க தேடி, நல்ல வேளைக்கு எங்கும் போய்விடவில்லை. படம் இருந்தது என்னுடனே !

Tuesday, June 30, 2009

கருப்புச் சாலையில் வெண்நிறப் புரவி

சடுகுடு ஆடி
சளசளத்து ஓடி,
பள்ளமேடு பாரா
பயணிக்கும் ஆறே !

கண்ணெட்டும் தூரம்
விண்முட்டி நிற்க,
நீர்த்திவலை ஓடி
நீந்திவரும் ஆறே !

சிலந்தி வலைகளும்
சிற்சில பறவைகளும்,
சாய்ந்த மரத்தண்டுகளும்
கடந்துவரும் ஆறே !

பாடித் திரிந்து
ஓடிக் களைத்து,
தாவிக் குதிக்க(வும்)
தயாரான ஆறே !

த‌டுத்து நிறுத்தி
அடக்கி வைக்க‌,
துளியும் த‌ய‌க்க‌ம்
எம‌‌க்கு இல்லை !!!

சோவென்று இறைத்து
சருக்கியது ஆறு ...
பட்டொளி வீசிப்
பாய்ந்தது அருவி !

பொங்கும் நுரைதனில்
வெண்முகில் குருதி,
கரும்பாறையில் மோதி
கனைத்தது அருவி !

ஈரத்தில் சிலிர்க்கும்
நீள்வெண் சுருளி,
காற்றில் மிதக்கும்
வெண்புகை அருவி !

கருப்புச் சாலை(யில்)
வெண்நிறப் புரவி,
கண்களைக் கவரும்
நயாகரா அருவி !

*****

க‌விதை பிடித்ததா உங்க‌ளுக்கு ?! அப்ப, இந்தக் காட்சியும் ரொம்ப‌ப் பிடிக்கும். கொட்டும் அழகில், அருவியைக் கண்டு மகிழுங்க‌ள். அந்த‌ ச‌ந்தோஷ‌த்தோடு உங்க‌ள் க‌ருத்தையும் ப‌திந்து செல்லுங்க‌ள்.

Sunday, March 8, 2009

கருப்பு வெள்ளை நினைவலைகள் ...


Photo courtesy: Muthukumar's Picassa album

கருப்பு வெள்ளை
புகைப் படத்தில்,
இருக்கும் சுகம்
என்றும் நிஜம் !

காலத்தின் மாற்றங்களை
கருப்பு வெள்ளை மங்காமல்,
ஆளில்லா ஊர்த்தெருவை
அழகாய் காட்டி நிற்கும் !

வீட்டுச் சுவற்றினிலோ
உத்திரத்து உச்சியிலோ,
பாலகத்துப் பெரியோரை
பாந்தமாய் தாங்கி நிற்கும் !

கண்டாங்கி சேலைகட்டி
கழுத்துநிறை நகைபோட்டு,
புஸ்ஸென்ற‌ ர‌விக்கையிலே
புன்ன‌கைக்கும் ந‌ம் பாட்டி !

கம்பீரம் குறையாத‌
கர்ஜிக்கும் சிங்கமென‌,
வெள்ளை உடுப்பினிலே
வீற்றிருக்கும் நம் தாத்தா !

காசி ராமேஸ்வரம்
கால்வலிக்க நடந்ததையும்,
கழுதைமேல் பயணித்து
பனிலிங்கம் பார்த்ததையும் !

ஒற்றைப் படத்தில்
ஓராயிரம் கதை படிக்க,
உற்று நோக்காமலே, மனதில்
ஒட்டிக் கொள்ளும் !

க‌ல்யாண‌ வைப‌வ‌ங்க‌ள்
புழுதிக் கை கால்கள்,
சின்னஞ் சிறுவயது
அப்பா அம்மாக்கள் !

அங்கொன்றும் இங்கொன்றும்
அளந்தெடுத்த படங்கள்,
இன்றும் நம்நெஞ்சில்
ஏகாந்த நினைவலைகள் !

படமெடுத்தால் ஆயுசு
பட்டென்று குறையுமென,
படப்பெட்டி முன்நிற்க
பயந்த கதை கேட்டிருப்போம் !

காலங்கள் உருள
நாகரீகம் வளர, வண்ணப்
படங்களுக்குக் குறைவில்லை
மனதில் இருத்த நேரமில்லை !

ஆயிரம் படங்கள்
அடுக்கடுக்கா எடுக்கின்றோம்,
அத்தனையும் மனதில் நிற்க
எத்தனை நாள் ஆகிடுமோ !

மார்ச் 12, 2009 யூத்ஃபுல் விகடனில்

Saturday, February 14, 2009

உலுக்கும் உறுமி மேளம்

கோவில் திருவிழாக்கள்
குலதெய்வ வழிபாடு,
எங்கிலும் ஒலித்தாலும்
இங்கு வலி(மை) அதிகம் !

உறுமல் ஒலி எழுப்பும்
இடிபடும் உறுமியோடு,
சுருண்டு படுத்துறங்கும்
இடுப்பில் கைக் குழந்தை.

த‌ம் வாழ்வின் தேவைகளை
தலையில் வைத்த கனம்,
உற்ற‌வ‌ன் ப‌க்க‌ம் வ‌ர‌
உறுமி அடித்திடுவாள்.

கூடும் கூட்டத்திலே
ஆட்டம் பாட்டமுண்டு,
சாட்டை சுழன்றாட
சதைகிழியும் காட்சியுண்டு.

கரணம் தப்பாது
மரணம் ஜெயித்து,
சாகசங்கள் பல புரியும்
யாசகம் வேண்டும் பிள்ளைகள்.

கோடிகளில் அடித்து
குளித்து மகிழ்பவரில், தெருக்
கோடியில் அடிபடும்
இவ‌ர்க‌ள் மேல்.

அடிமேல் அடிவைக்க‌
அதிருது சதங்கை,
வேர்த்த உடம்பிலே
உதிருது உதிரம்.

உறுமி மேளச் சத்தம்
உலுக்கும் அடி வயிற்றை,
சேகரிக்கும் சில்லரைகள்
நிரப்பும் அவர் வயிற்றை.

வளைந்த குச்சியாய்
வாழ்வும் கேள்விக்குறி,
தொடரும் பயணத்தில்
தினமும் எழுப்பும் ஒலி.

என்றோ கேட்ட‌ ஒலி
இன்றும் சுழ‌ல்கிற‌து,
அன்று பார்த்த‌ வ‌லி
இன்றும் (மனம்) க‌ன‌க்கிற‌து.

Tuesday, January 27, 2009

எனையே நான் தொலைத்தேன் !!!

காதல் கவிதை எழுதி எம்புட்டு நாளாச்சு. அப்பாடா, இன்னிக்கு ஒரு நல்ல மாலை நேர இனிய மனநிலையில், கவியரசரின் 'தேன்' பாடல் ஞாபகம் வர, கூடவே காதலும் பிறக்க, இதோ கவிதை (?!!) ...

---


Photo: wikimedia.org

உலகத்து அழகெலாம்
ஒன்றாய் அணிசேர்த்து,
ஓவியமாய் உலாவரும்
உனைக் கண்டு மலைத்தேன்.

மீன்களெனக் கண்கள்
மிதக்கின்ற குளத்தில்,
தூண்டிலே போடாமல்
துள்ளி நான் விழுந்தேன்.

ஈர்க்கும் காந்தமதில்
இழுபடும் இரும்பாய்,
உருக்கும் உன் இதழில்
மெல்ல நான் தவழ்ந்தேன்.

இடறி உள்விழுந்து
இம்மியும் பிசிறில்லா(த),
வெண்கலக் குரலில்
வெல்லமாய்க் கரைந்தேன்.

விழி வாசல் மூடி
உன் சுவாசம் புகுந்து,
இதயத்துக் கதகதப்பில்
எகிறி நான் குதித்தேன்.

காண்கின்ற அனைத்திலும்
வான் வரை சென்று,
கன்னி உனைக் காண
எ(ன்)னையே நான் தொலைத்தேன் !!!

Tuesday, January 20, 2009

துளித் துளியாய்: 5 - கலையாக கோலங்கள்


Photo: webshots.com

விடிந்தும் விடியாத
கருக்கல் வேளையிலே,
வளைந்தும் நெளிந்தும்
வரிவரியாய் கோலங்கள்.

தள்ளித் தள்ளி வைத்து
புள்ளிகளை இடிக்காமல்,
அள்ளி அள்ளி தொடர
பிறந்திடும் அற்புதங்கள்.

சுவாசத்தின் ஊடே
எண்ணத்தில் முளைத்து,
வாசலை நிறைக்கும்
வண்ணப் பூக்கள்.

மாக்கோலக் வரிசையிலே
எறும்புகளின் அணிவகுப்பு,
பூக்கோல வரிசையிலே
வண்டுக்களின் ஏமாற்றம் !

புள்ளி வைத்துக் கோலமிட
சொல்லி வைத்தார் போல்,
கச்சிதமாய் எப்புறமும்
கலையாக(க்) கோலங்கள்.

அச்சம் தவிர்த்து, தெருவில்
ஆட்களை புறம்தள்ளி,
கூச்சமும் தவிர்த்து, பெண்களை
மகிழ்விக்கும் கோலங்கள்.

அனுதினம் காலையில்
அலங்கரித்த கோலங்கள் அன்று,
பண்டிகை நாள்மட்டும்
பிறந்திடும் கோலங்கள் இன்று !!!

Saturday, December 20, 2008

துளித் துளியாய்: 4 - சிலந்தியும் வலையும்


Photo: sheltoweetrace.com

முட்டி மோதி
விட்டம் ஏறி
மூலைகள் இணைத்து
வலைகள் பின்னி

அசையாப் பொருளாய்க்
காத்திருந்து
வலையில் விழும் இரை
உண்டு வளர்வாய்.

***

பென்டுலம் போலே
நூலில் ஆடி

வாலாய் நூலை
வளைத்து நெளித்து

குறுக்கும் நெடுக்கும்
குறும்புதிர் போலே

ஏற்ற இற‌க்க‌மில்லா(ம‌ல்)
இடைவெளி விட்டு

வ‌லையைப் பின்ன‌
எங்கு க‌ற்றாய் ?!

***

துளித் துளியாய் இழை விட்டு
தூண்டில் நீள் நூலாய்

தூரிகை ஓவிய‌மாய்
துயிலும் தூளியாய்

துள்ளித் துள்ளி
வ‌லை பின்ன‌ ...

க‌ண்ணாடி நூலிழையில்
காண்போர் க‌ண்ப‌டும்

க‌லை ஒத்த‌ க‌ட்டுமான‌ம்
நிலையாகும் உன் வாழ்வு அதில் !!!

***

ஓட்டுக் கூரையிலும்
வீட்டுத் தோட்ட‌த்திலும்

வ‌லை பின்னும்
க‌லை அறிய‌

உனைத் தொட‌ர்ந்தேன்
ப‌ல‌ முறை

எங்கு ஆர‌ம்பித்து
எப்ப‌டி முடித்தாய் என‌

க‌ண்ட‌தில்லை ஒரு முறையும்
இன்று வ‌ரை விய‌ப்பே !!!

***

ஊரு உல‌கெலாம்
தெரியுது வ‌லை - அதில்,
விஞ்ஞான மருத்துவங்கள்
விவாதக் கட்டுரைகள்,

அற்புத‌ங்க‌ள் ப‌ல‌கொண்ட‌
ஏராள‌ச் செய்திக‌ள்,
அன்றாட வாழ்வின்
அங்க‌மாய் ஆன‌துவே.

இது தான் இன்றைய நிலை
இப்ப‌டி ...
நாங்களும் பின்னூவோம் வலை !

***

Friday, December 5, 2008

சிலந்திக்கும் இருக்கு வாலு (குழந்தைகள் கவிதை)


Photo: medicalimages.allrefer.com

குட்டிச் சிலந்திக்கு
எட்டுக் காலு.

கொழு கொழு சிலந்திக்கும்
எட்டுக் காலு.

சிலந்திக்கும் இருக்குது
நீள வாலு.

வலை பின்ன உதவும்
நூல் வாலு.

தத்தியும் தாவியும்
நடக்கும் பாரு.

பிறர் தொட்டால் பயந்து
ஏறிடும் சுவரு.

Wednesday, November 19, 2008

பச்சை குத்திப் பேரெழுதி



பச்சை குத்திப் பேரெழுதி
இச்சை கொள்ளும் மாந்த‌ருண்டு

இடக்கையோ வலக்கையோ
இழுத்து நீண்ட பெயருமுண்டு.

புருஷ‌ன் பேர் சொல்லாத‌
பொக்கை வாய் பாட்டி

பிற‌ர் கேட்க‌ கைநீட்டி
நாய‌க‌ன் பேர் காட்டிடுவாள்.

நாகரீக வளர்ச்சியிலே
நாட்டுப்புற பச்சை எல்லாம்

நங்கையரின் மேனி எங்கும்
நழுவிக் கிடக்குதிங்கே.

தேளென்ன பாம்பென்ன‌
தேடும் இடுப்பினிலும்

முள் வேலி போட்ட‌
முழ‌ங்கால் க‌ணுக்கால்க‌ள்.

ப‌ச்சை ம‌ட்டுமில்லை
ப‌ல‌ வ‌ண்ணமும் க‌ல‌ந்து

பாரே பார்க்க‌ வைக்கும்
வ‌டிவ‌ங்க‌ள் ப‌ல‌வுண்டு.

ந‌ங்கைய‌ருக்குப் போட்டியாய்
நாய‌க‌ரும் ச‌ளைத்தாரில்லை

நாக்கினிலும் கூட‌
நான்கைந்து படங்கள் கொண்டு !!!

Wednesday, October 29, 2008

நிறம் மாறும் இலைகள்


Photo: freefoto.com

வெற்றிலைப் பச்சை
நிறத்து இலைகள்

குளிர்வர உதிருமுன்
நிறமாறும் இலைகள்

நெல்லிக் கனிநிறம்
துவங்கும் இலைகள்

பரங்கிப் பூவாய்
பழுக்கும் இலைகள்

செம்மண் போலச்
சிவக்கும் இலைகள்

கத்தரி நிறத்தில்
கறுக்கும் இலைகள்.

மறையும் பச்சையில்
பழுப்பு வண்ணம்

கரையும் சிவப்பில்
காவி வண்ணம்

அனைத்து நிற‌மும்
கலந்த‌ வ‌ண்ண‌ம்

ப‌ட‌ர்ந்து ப‌ரவி
எங்கும் வ‌ண்ண‌ம்

காணும் கண்கள்
களிப்புறும் வண்ணம்

இயற்கை தூரிகை
தீட்டும் வண்ணம் !

Sunday, October 26, 2008

சுடரின் நடனம் - தீபாவளி வாழ்த்துக்கள்


Photo: lpstnvs.com

சுடரின் நடனம்
தொடரும் தீபங்களில்,

காணும் போதே
களிப்புறும் உள்ளம்.

வானின் இருளில்
வண்ணங்கள் தூவி,

மிளிரும் ஒளியில்
சிதறும் பூக்கள்.

பட்டுத் துணியும்
பரிசுப் பொருளும்,

கிடைத்திட‌ இன்புறும்
சின்னஞ் சிறார்கள்.

என்றும் இனிமையாய்
இவ‌ர்க‌ளைப் போலே,

இருந்திட வாழ்த்துக்கள்
இத்தீபாவளி நன்நாளில் !

அனைவருக்கும்
இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள் !!

Sunday, October 12, 2008

குட்டி அணிலே ! (குழந்தைகள் கவிதை)


Photo courtesy: http://flickr.com/photos/43555660@N00/468195506

குட்டி அணிலே
சுட்டி நீயே,

மரங்கள் ஏறி
கனிகள் சுவைத்து,

தரையில் தாவி
விதைகள் தேடி,

பொறுக்கும் எதையும்
இருகை பிடித்து,

மருள விழித்து
கொறித்து உண்பாய் !

எங்கள் வீட்டின்
பக்கம் வந்து

மேனி வரிகள்
மினுக்கி இருக்க,

வளைந்து வாலும்
அடர்ந்து இருக்க,

கீச்சுக் குரலில்
தொடர்ந்து கத்தி

உந்தன் குட்டி
அணில்களுக்கு ஊட்டி

ஓட்டின் மேலே
எட்டித் தாவி,

ஏறிப் பறப்பாய்
குட்டி அணிலே !

Sunday, October 5, 2008

இந்தியா என் பார்வையில் - 2008 - காணாமல் போகும் தெரு ...


Photo: http://www.leelau.net/chai/india.htm

தெருவோரக் குப்பைகளும்
தேங்கிய மழை நீரும்,

தெருவடைக்கும் வாகனங்கள்
தேர் போல ஊருவதும்,

இருபக்கப் பள்ளங்கள்
எமன் போல அமைவதுவும்,

கோலமிடும் வாசல்கள்
குட்டிக் கடைகள் ஆனதுவும் ...

மேடு பள்ளம் பலவுண்டு
மேட்டுக் குடியும் தானுண்டு,

ராமெ ஆண்டாலும்
ராவணெ ஆண்டாலும்,

எனக்கேன் அக்கவலை
என்கவலையே ஏராளம்,

என்றே மனநிலையில்
இருக்கிறோம் அனைவருமே ...

நாட்டு வளர்ச்சியிலே
நம் பங்கும் ஒன்றுமில்லை,

வீட்டு வளர்ச்சி காண
வளர்க்கிறோம் சுயநலத்தை,

தெருவடைக்கும் நம்செயல்கள்,
வீட்டோடு அடைக்கும் நம்மை,

பின்னாளில் என்றாவது
வெளிக்காற்று வாங்க,

வீதியில் நடக்கலாம் என்றால்கூட,

அன்று ...

வீதி என்பது இல்லாது போகலாம் ...

Tuesday, July 1, 2008

வேல் காக்கும் வெண் சோலை



பாற்கடலில் விழுந்த‌
பட படக்கும் வண்டே

வெண்பூவை மொய்த்து
சுற்றி வரும் வ‌ண்டே

விரியும் சிப்பிக்குள்
உருளும் க‌ருமுத்து வ‌ண்டே

வேல் காக்கும் வெண்சோலையில்
சிறைப்பட்ட சிறு வண்டே

வெண்பனியில் ஓடியாடி
விளையாடும் க‌ரு வண்டே

கற்பானையில் க‌த‌க‌த‌ப்பாய்
நீந்தும் க‌ரு வ‌ண்டே

அப்பார்வையிலே ம‌ய‌ங்கி
பூ மொய்க்கும் வ‌ண்டை

என்றென்றும் எண்ணி
என் ம‌ன‌ம் மொய்க்க‌லான‌தே !

Monday, June 30, 2008

வலையில் விழுந்து விட்டேன்

சமீபத்தில் ராமலஷ்மி மேடம் அவர்களின் பதிவில் (மெகா முதலைகள்), அநேக மூத்த, இளைய பதிவர்கள் வலையில் விழுந்து விட்டோம் என்று சொன்னதைப் படித்து விளைந்த பாடல். பாடலைக் கீழ்க் கண்ட படத்தில் உள்ள பாடல் மெட்டில் படித்து இன்புறுங்கள்.

அப்படியே ஒரு வரி, எப்படி இருக்குனு சொன்னிங்கன்ன்னா, ப்லாகுல விழுந்த புண்ணியம் உங்களுக்கும் உண்டு :))

-----

படம்: (ஸ்டூடன்ட்) ப‌திவ‌ர்
பாடியவர்கள்: S.P.B.சரண், சித்ரா

-----

என் எழுத்துக்க‌ளைப் பிரசுரிப்பவன் நீ தான் என்று
ந‌ல்ல‌ ந‌ட்புக்க‌ளைத் தேடித் த‌ரும் தோழ‌ன் என்று

எனக்குத் தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
ப்லாகிற்குள்ளே ப‌திவ‌ர்க‌ளே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா
விழுந்து விட்டேன் ப்லாக் வ‌லையிலே !

நிஜம் தான் நிஜம் தான்
இங்கு பாச‌ங்க‌ளின் தொல்லை தாங்க‌ல‌

விழாமலே .....

ப்லாகுகுள்ளே உள்ள‌தென்ன‌ என்ன‌ ச‌க்தியோ
பக்கம் பக்கமாக பதிய‌ இழுக்கும் காந்த சக்தியோ

ஓஓஓஓஓ .....

ப‌திவின் த‌லைப்பினிலே வைக்க‌ வேண்டும் ம‌ந்திர‌ச் சொல்லோ
படித்தவுடன் வந்து விழும் பின்னூட்டங்களின் குவியலோ

ப்லாகு ஒரு ப‌ர‌ம‌ப‌த‌ம்
த‌ட்ட‌ச்சிட‌ ப‌திவு விழும்

ப்லாகு .....

பதிவு மேல பதிவு போட‌
பின்னூட்டங்கள் குவிந்திருந்தால்

விழாமலே .....

வாசகர் எண்ணிக்கை பெருகிடுமா என்று நினைத்தாலும்
பதிவுகளைப் பதியும் போது ஆனந்த நடனம்

ஓஓஓஓஓ .....

என் பதிவு உந்தன் மனதைத் தொட்டால் அற்புத நடனம்
பின்னூட்டங்களின் அணிவகுப்பில் கோடி சஞ்சலம்

பதிந்திருந்தால் வாழ்வு ருசி
பதிவருக்கு ஒரே குஷி

ப்லாகு வந்து வலையை விரிக்கும்
மாட்டிக் கொண்டு நீ பதி

விழாமலே .....