Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, March 22, 2012

தோற்றத்தில் என்ன இருக்கிறது ?


ம்மில் சிலர், உடுத்தும் துணி ஆகட்டும், கால் நுழைக்கும் காலணி ஆகட்டும், பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதாவது, நிறுவனக் குறியீடு பார்த்து வாங்குவார்கள்! காலணிக்கு இந்த நிறுவனம். மேலாடைக்கு இந்த நிறுவனம். கைக்கெடிகாரம், கால்சட்டை, காதணி, கைவளை, சாந்து மற்றும் சந்தனப் பொட்டு, வாகனம், வீட்டுப் பொருட்கள் என அது அதற்கு பேர்பெற்ற‌ நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவார்கள்.

பேர்பெற்ற நிறுவனங்களின் பொருள் வாங்குவதற்கும், சாதாரண நிறுவனப் பொருள் வாங்குவதற்கும் முக்கிய காரணிகள், விலை மற்றும் அதன் தரம். முன்ன‌தில் விலை, மற்றும் த‌ர‌ம் அதிக‌ம். பின்ன‌தில் விலையும் த‌ர‌மும் குறைவே. தங்கள் வசதிக்கேற்பப் பின்ன‌தைப் ப‌ல‌ரும், முன்னதைச் சில‌ரும் வாங்கி ப‌ய‌ன‌டைகிறார்க‌ள்.

முன்ன‌தில் உடை உடுத்திய‌ ஆணோ, பெண்ணோ, அப்படியெ லாவகமாக வந்து தங்கள் ஊர்தியில் இருந்து இறங்கினால், அங்கே அவ‌ர்க‌ளுக்குக் கிடைக்கும் ம‌ரியாதையே த‌னி தான். "திரைப்படங்களின் தாக்கமா, அல்லது, 'இது என்னால் முடியவில்லை இவன் செய்கிறான்' என்றா?, அல்லது வேறு என்னென்ன காரணங்களாக‌ இருக்க முடியும்?" என்று யோசித்தால், உள‌விய‌ல் ரீதியாக‌ அனுகினால் தான் இத‌ற்கு விடை காண‌ முடியும் போல‌.

கோவில் விஷேஷ‌ங்கள், வீட்டுத் திரும‌ண‌ங்கள், போன்ற இடங்களில் விலை மிகுதி போன்று போலியாக‌வோ, அல்ல‌து உணமையிலேயே விலை மிகுதியாகவோ ப‌ள‌ப‌ள‌க்கும் ஆடை அணிக‌ல‌ண்க‌ள் பூண்ட இச்சிலரின் அல‌ங்கார‌ம் ப‌ல‌ரின் க‌ண்களைப் படுத்தி எடுக்கும். ப‌ல‌ க‌ண‌ங்களில் 'ஏன் இப்படித் த‌ங்க‌ளை அல‌ங்கார‌ம் செய்து காட்சிப் பொருட்க‌ளாய் வ‌ல‌ம் வ‌ருகிறார்கள்' என்ற எண்ண‌ம் எழும்.

இப்ப‌டிப் ப‌ள‌ ப‌ளா என்று இல்லாம‌ல், 'கந்தையாணாலும் கசக்கிக் கட்டு' என்று சாத‌ர‌ண‌மாக‌ இருந்தால் தான் என்ன‌? இவ்வுல‌க‌ம் ந‌ம்மை எவ்வாறு பார்க்கும், ந‌ட‌த்தும்?

த‌லைக்குமேல‌ ஏறி உட்காருமா? எட்டி உதைக்குமா? திட்டுமா? வில்லெடுத்து எல்லாம் அடிக்குமா?

'நன்றாக உடுத்தாமல் தோற்றத்தில் பொலிவில்லாமல் ஏழையாய்த் தோற்றம் தரும் இறைவா, உன்னையே இவ்வுலகம் இப்படித் தானே நடத்திற்று' என்று வேடிக்கையாக‌ வெண்பா வ‌டிக்கிறார் ஆசுக‌வி காள‌மேக‌ம்.

தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
பூண்ட செருப்பாலொருவன் போடானோ –
மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ
தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.

தில்லை நாதனே, "நீ எழையானதால், உன் தலையில் கங்கை ஏறினாள். உன்னை செருப்பால் மிதித்தார் க‌ண்ணப்பர். 'பித்தா பேயா' என்று திட்டினார் சுந்தரர். வில்லால் அடித்தார் அர்ச்சுனன்" என்கிறார் காள‌மேக‌ம்.

ச‌மீப‌த்தில் என் நெருங்கிய நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் நடந்த சம்பவம். வேறொரு குழுவினரைச் சந்திக்க வேண்டி, இவரும் இவரது குழுவிலிருந்து வில்லியம் என்ற அமெரிக்கரும் காத்திருக்கிறார்கள். நம் நண்பர் சாதாரண தோற்றத்தில் என்ன தேவையோ அதற்கேற்ப இருப்பவர். ஐந்து நிமிடத்தில் வருகிறேன் பேர்வழி என்று சொல்லி கால்மணி நேரம் கழித்து வந்த இருவர், இவரைப் பார்த்து, 'யாரு வில்லியம்?' என்றிருக்கிறார்கள். நம் நண்பர் வில்லியத்தைக் காண்பிக்க. அவரிடம் ஓடி, 'ஹாய்... ஐ ஆம் ...' என்று சொல்லி இருவரும் அறிமுகம் செய்து கொண்டு, உரையாடலைத் தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரிடமே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் நம் நண்பரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வில்லியமும் எவ்வளவோ சங்கேதமாகச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. வந்த இருவரும் நம் நாட்டினர். ந‌ண்ப‌ர் இதுபோல‌ நிறைய‌ பார்த்திருப்பார் போல‌, அவ‌ர் முக‌த்தில் ச‌ல‌ன‌மில்லை. வில்லிய‌த்திற்கு ந‌ம் ந‌ண்பர் தான் மேலாள‌ர். ஆனால், க‌டைசி வ‌ரை ந‌ண்ப‌ர் அதைக் காட்டிக் கொள்ள‌வில்லை.

இதில், வெள்ளைக்கார‌ன் போல் தோற்ற‌மில்லாத‌, கோட் சூட் அணியாத‌ ந‌ம் ந‌ண்ப‌ரின் பேரில் த‌வ‌றா? அல்ல‌து ந‌ம் இந்திய‌ ம‌ன‌ங்க‌ளின் மீது த‌வ‌றா? இந்த எண்ண ஓட்டம் இந்தியா ம‌ற்றுமில்லை, பொதுவாக உலகெங்கிலும் உண்டு என்றே தோன்றுகிற‌து.


ஒரு காட்சி இங்கு அமெரிக்காவில். ஒரு கடையில், ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி ஒருவரும், நல்ல தோற்றம் கொண்ட ஒரு வெள்ளைக்காரரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் க‌டைக்கு ச‌ர‌க்கு இற‌க்க‌ வ‌ருகிறார் ஒரு வெள்ளையர். நேரே மற்ற வெள்ளைக்கார‌ரிட‌ம் சென்று, 'ஹலோ அலெக்ஸ், ...' என்று கைகுலுக்கி உரையாட‌லைத் தொட‌ங்குகிறார். ந‌ம் ந‌ண்ப‌ருக்கு நேர்ந்த‌ அதே க‌தி தான் இங்கு 'அலெக்ஸ்' என்ற‌ ஆப்பிரிக்க‌ அமெரிக்க‌ப் பெண்ம‌ணிக்கும். இத்த‌னைக்கும் அலெக்ஸ் கோட் சூட் எல்லாம் அணிந்திருந்தார், ம‌ற்ற‌ வெள்ளையர் ஓர‌ள‌வுக்கு அலுவ‌ல‌க‌ உடையில் இருந்தார். இருப்பினும், அலெக்ஸை ச‌ரியாக‌க் க‌ண்டு கொள்ளாது ஏன்?

இப்பொழுதெல்லாம் இங்கே அலுவ‌ல‌க‌ங்க‌ளில், மேற்க‌ண்ட‌ காட்சிக‌ளில் எவ்வாறு ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும், எவ‌ரிட‌ம் எங்கு எப்படிப் பேச‌ வேண்டும் என்றெல்லாம் வ‌குப்பெடுக்கிறார்க‌ள். இந்த‌ நிலை இந்தியாவிலும் க‌டைபிடிக்க‌ வேண்டும். எல்லோரும் ச‌ம‌மாக‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும் !!!

(படங்கள்: நன்றி இணையம்)

Thursday, March 15, 2012

கொடுப்பது கடினம் !


பத்திருபது ஆண்டுகள் முன்னர், நூறு ரூபாய் என்றாலே அது பெரிய பணம். இப்பொழுதெல்லாம் ஆயிரக்கணக்கில் சர்வசாதாரணமாக செலவழிக்கும் மனப்பாங்கு தழைத்தோங்குகிறது. காரணம், தாராளமயமாக்கல், வேலை உற்பத்தி, வாழ்க்கைத் தரம், பன்னாட்டு முதலீடுகள், இப்படிப் பல காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். நடந்து போனவன் சைக்கிள் வாங்கினான், சைக்கிளில் போனவன் பைக் வாங்கினான், பைக் காராச்சு, கார் வேனாச்சு, அதினும் மேலாய் எல்லாம் சொகுசாச்சு ... இதெல்லாம் நாம் பெற்றவை. பெறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கொடுப்பதற்கு ?

கிணறென்றிருந்தால் அதில் நீரென்றிருக்கும். எடுக்க எடுக்கத் தான் சுரக்கும். இல்லை என்றால் அது பாழும் கிணறு. 'தொட்டனைத்தூறும் மணற் கேணி' என்றார் வள்ளுவர். வீட்டினுள்ளே புகும் காற்று வெளியே செல்லவும் வழி இருக்க வேண்டும், அதற்கு வீடமைப்பு இப்படி இருக்க வேண்டும் என்கிறது மனை சாஸ்த்திரம். உள்ளே... வெளியே.... ஆனால், இக்கால வாழ்க்கை உள்ளே மட்டும் தான் செயல்படுகிறது, அநேக அப்பாட்மென்ட்கள் போல‌..,. வெளியேயும் செயல்பட்டால் நம் வாழ்வு மேலும் சிறக்கும் அல்லவா!

வாரியார் தன் வ‌ள்ள‌லார் உரையில்:

இந்த‌ உல‌க‌த்திலே ப‌க்த‌ர்க‌ள் ப‌லர். ஞானிக‌ள் ப‌ல‌ர். வீர‌ர்க‌ள் ப‌ல‌ர். சிற‌ந்த‌ அடியார்க‌ள் ப‌ல‌ர். பதிவிர‌தைக‌ள் ப‌ல‌ர். ஆனால், அள்ளிக் கொடுத்த‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர் ! வ‌ள்ள‌ல்க‌ளுக்குத் தான் எண்ணிக்கை உண்டு. முத‌லேழு வ‌ள்ள‌ல், இடையேழு வ‌ள்ள‌ல், க‌டையேழு வ‌ள்ள‌ல். ஒருவ‌ன் விடிய‌ விடிய‌ப் பேசுவான், அற‌ஞ்செய்ய‌ மாட்டான். நீர் மேல் குமிழிக்கு நிக‌ர் என்ப‌ர். ஆனால், அற‌ம் என்று சொன்னால், ஐம்ப‌து மைல் ஓடுவான். கொடுப்ப‌து தான் க‌டின‌ம். அதைத்தான் ஔவையார்,

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத் தொருவர் பூர்த்தமலர்த்
தண்டாமரைத் திருவே தாதா கோடிக் கொருவர் ...

வேட்டையாடி அர‌ண்ம‌னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான் ஒரு குறுநில‌ ம‌ன்ன‌ன். வ‌ழியிலே ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌ள்ளாடித் த‌விப்ப‌தைக் க‌ண்டான். உள்ள‌ம் துடித்த‌து, க‌ண்ணீர் வ‌டிந்த‌து. என் நாட்டிலே இப்ப‌டி ஒரு முல்லைக் கொடி தாவிப் ப‌ட‌ர‌ கொழு கொம்பில்லாம‌ல் த‌விக்க‌லாமா என்று தேரை விட்டு இற‌ங்கி த‌ன் ம‌ணித்தேரிலே முல்லைக் கொடியைப் ப‌ட‌ர‌ விட்டு ந‌ட‌ந்து போனான் அர‌ண்ம‌னைக்கு.

இதில் என்ன‌ கிடைக்கிற‌து?

செடி கொடிக‌ளுக்கு ஓர‌றிவு
ந‌த்தைக்கும் ச‌ங்குக்கும் ஈர‌றிவு
க‌றையானுக்கும் எறும்புக்கும் மூவ‌றிவு
ந‌ண்டுக்கும் வ‌ண்டுக்கும் நால‌றிவு
வில‌ங்குக‌ளுக்கும் ம‌னித‌ர்க‌ளில் ப‌ல‌ருக்கும் ஐய‌றிவு
மாவும் மாக்க‌ளும் ஐய‌றிவு என‌வே என்ப‌து தொல்காப்பிய‌ம்
ம‌க்க‌ள் தாமே ஆற‌றிவு !

ம‌னிதனாக‌ப் பிற‌ந்த‌ எல்லோருக்குமே ஆற‌றிவு கிடையாது. ஐய‌றிவோடு வில‌ங்குக‌ள் போல‌த் தான் வாழ்கிறார்க‌ள் ப‌ல‌ர். சில‌ வீட்டில் போய், 'அம்மா, ஐயா எங்க?' என்று கேட்டால், 'அது எங்க‌ போச்சோ தெரியவில்லை' என்பாள் அஃறினையில் வைத்து. ஆக‌வே, செடிக்கு ஒரே அறிவு, கொடிக்கும் ஒரே அறிவு. அந்த‌ ஓர‌றிவு ப‌டைத்த‌ முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுப்பானானால், ஆறறிவு ப‌டைத்த‌த‌ற்கு என்ன‌ த‌ர‌மாட்டான்?!

க‌பில‌ர் என்ற‌ அந்த‌ண‌ப் புல‌வ‌ர் பாரியை ஒரு பாட‌ல் பாடின‌வுட‌ன், முன்னூறு கிராம‌ம் கொடுத்தான். அத‌னால் தான் சுந்த‌ர‌மூர்த்தி நாய‌னார், கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பானில்லை. வ‌ன்புக‌ழ் பாரி காரி என்பார் அருண‌கிரிநாத‌ர். அள்ளிக் கொடுக்கிற‌ வ‌ள்ள‌ல்க‌ள் சில‌ர். க‌வ‌ச‌ குண்ட‌ல‌த்தை அறுத்துக் கொடுத்தான் க‌ர்ண‌ன். சிர‌ம் கொடுக்க‌ முய‌ன்றான் கும‌ண‌ன். ஆனால், அப்ப‌டி அள்ளி அள்ளி கொடுத்த‌வ‌ங்க‌ எல்லாம் வ‌ள்ள‌ல்.

நம்மால இவ்வாறெல்லாம் அள்ளி அள்ளித் தர முடியுமா?
'எவன் வூட்டுக் காச எவனுக்குத் தர்றது' என்பது தான் நம் சிந்தை எல்லாம். கொடுப்பது கடினம் !

***

கீர‌ன் த‌ன் திரும‌ந்திர‌ உரையில்:

நாம் தவம் தவம் என்று சொல்கிறோமே, பன்னெடுங்காலம் நீரிலே நின்றார்கள். நெருப்பிலே நின்றார்கள். ஊசி முனையிலே ஒரு காலைப் பொருத்திக் கொண்டு நின்றார்கள். என இந்த முனிவர் தவம் செய்தார் என்றெல்லாம் படிக்கின்றோமே, அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக் கூடிய கருத்து, இல்லாவிட்டால் அப்பேர்ப்பட்ட தவத்தினாலே பெறக்கூடிய பலன், மிக மிக எளிதாகவே நமக்குக் கிடைத்து விடும் என எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார். யாருக்கும் செலவில்லாமல், போகிற போக்கில், அனைத்து உயிர்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு செயலைச் செய்தால் போதும். அதற்காக சிவபெருமான் மகிழ்ந்து நமக்கு மிகப் பெரிய தவப் பலனைத் தருகிறான் என்பது திருமூலர் கருத்து. அவர் சொல்கிறார்,

யாவ‌ர்க்குமாம் இறைவ‌ர்க்கு ஒரு ப‌ச்சிலை
யாவ‌ர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவ‌ர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவ‌ர்க்குமாம் பிறருக்கு இன்னுரை தானே


***

இறைவனுக்குத் தங்கத் தேரிழுத்து, உடல் வருத்தி அலகு குத்தி எல்லாம் இல்லாமல் மிக மிக எளிதாகப் பச்சிலை கொடுத்து அர்ச்சித்தாலே புண்ணியம் என்கிறது முதல் வரி. ப‌ச்சிலை ப‌றித்துச் சென்று கோவிலில் கொடுக்க‌ முடியவில்லையா, அப்படியே போகிற வழியில் புல்லிருந்தால் பிடுங்கி அங்கிருக்கும் ஒரு பசுவுக்கு அளித்தால் புண்ணியம் என்கிறது இரண்டாவது வரி. 'புல்லுக்கு எங்கே செல்வேன்?, பசுவுக்கு என்ன செய்வேன்?, இதெல்லாம் கடினம்' என்கிறீர்களா, உண்ணும் போது ஒரு கைபிடி அப்படியே எடுத்து காகத்துக்கோ மற்ற ஜீவராசிகளுக்கு அளியுங்கள் புண்ணியம் என்கிறது மூன்றாவது வரி. இதுவும் கஷ்டம்னா, பேசாம வாய மூடிகிட்டு இருங்க, அதுவே பெரும் புண்ணியம் என்கிறது நான்காவது வரி.



இந்த நான்காவது வரியில் லேசாகப் புன்னகை சேர்த்தாவது நாம் தரலாமே ! மேற்கண்டவை நம் தமிழ் இலக்கிய ச‌முத்திர‌த்தில் இருந்து எடுக்கப்பெற்ற சிறு உதாரணங்களே ! பணம் தந்தால் தான் வள்ளல் என்றில்லை. நம்மால் இயன்றதை (மேற்கண்ட வரிகளில் வாயை மூடிக்கொண்டு சும்மா இருத்தல் சேர்த்து) பிறருக்குக் கொடுப்போம். உங்களால் என்ன தரமுடியும் என்று நீங்கள் சிந்தித்தால், 'என்னால் என்ன தரமுடியும்?' என்ற நம் ராமேஸ்வரத்து மசூதி தெரு நாயகன், அப்துல் கலாம் ஐயா அவர்களின் தளத்தைச் சென்று பாருங்கள். சுட்டி கீழே.

What can I give ?



படங்கள் நன்றி: இணையம்

Monday, September 28, 2009

தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்

ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்.

"தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"

'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க.

"ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ, அல்லது ஒரு நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கவோ பயன்படுகிறது" என ஸ்மார்டாக ஏதாவது சொல்வார்கள் என எதிர்பார்த்தால். ஜூஸ் கடையிலும், போக்குவரத்துப் போலீஸிடமும், கிராமத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பயன்படுகிறது என்று சொல்லி, யானை போல தம் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டனர்.

ஒரு ஆன்ட்டி சொன்னார், "இங்க்லீஷ் இஸ் எ வெப்பன். ஒரு போலீஸ்காரர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் என்னை நிறுத்தினால், வெப்பனைப் பயன்படுத்தி தப்பிப்பேன்" என்றார்.

அதற்கேற்ற ஒரு கேள்வியை அந்த ஆன்ட்டியிடம் கோபிநாத் கேட்க, அவர் முகத்தில் ஆங்கிலம்... மன்னிக்கவும், ஈ ஆடவில்லை :) 'நாங்களும் ரெவுடி தான்' மாதிரி இல்லாமல் ஒரு நிஜ ரவுடி இதே போல போலீஸிடம் மாட்டி, அவர‌து டீஃபால்ட் வெப்ப‌ன் அரிவாளைக் காண்பித்து எஸ் ஆகிறார் என்பது மாதிரி சொல்லி, "அவ‌ரும் நீங்க‌ளும் ஒன்றா ?" என்றார்.

"உங்க‌ளுக்கு என்னென்ன‌ ஆங்கில‌ வார்த்தைக‌ள் க‌டின‌மாக‌ இருந்த‌து ?" என்ற‌ கேள்விக்கு, த‌மிழ் அணியின‌ர் ப‌ல‌ரும் த‌ங்க‌ளுக்கு வ‌ராத‌ வார்த்தைக‌ளைக் கூற‌, எதிர் அணியில் ஆளாளுக்கு ஆங்கில‌ வாத்தியார்க‌ள் ஆகி, வாய்க்கு வ‌ந்த‌ உச்ச‌ரிப்புக‌ளை அள்ளித் தெளிக்க அரங்கமே காமெடி ஸீனாக ஆனது. இங்கு ஒரு கேள்வி நமக்கு எழுகிறது.

நமக்கென்று ஒரு ஆங்கில பாணி இருக்கிறதா ? நார்த் எல்லாம் போனால், ஹிந்தி பேசுகிறார்களா, ஆங்கில‌ம் பேசுகிறார்க‌ளா என்றே புரியாது ப‌ல‌நேர‌ங்க‌ளில்.

ஒரு அம்மணி சொன்னார் "சென்னை அமெரிக்கனைஸ்ட் ஆகிட்டு இருக்கிறது" என்று. ஆனால் உச்சரிப்புகளை சொன்ன வாத்தியார்களிட‌ம் அப்ப‌டி எதுவும் தென்ப‌ட‌வில்லை. இங்கிலாந்து ஆங்கில‌த்தையும், த‌மிழையும் (இவ‌ர்க‌ளின் இன்னொரு கூற்று: எதிர் அணியில், த‌மிழைக் க‌ல‌ந்து ஆங்கில‌த்தை த‌மிழ் போல‌வே பேசுகிறார்க‌ள் என்று), ஹிந்தியையும், இன்ன‌பிற‌ இந்திய‌ மொழிக‌ளையும் கல‌ந்து பேசுவ‌து போல‌வே இருந்த‌து எங்க‌ளுக்கு.

த‌மிழ் அணியில் இருந்து தடால‌டியாக‌ ஒருவ‌ர் புரியாத‌ வார்தை ஒன்றை சொன்னார். இங்கு எழுதலாம் எனப்பார்த்தால், இப்ப‌க்கூட‌ நினைவில் இல்லையே.

வாத்தியார்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக் கொள்ள, 'போலீஸிட‌ம் எஸ்ஸாவேன்' என்று சொன்ன‌ ஆன்ட்டி, "அப்ப‌டி எல்லாம் வார்த்தை இல்லிங்க‌. பைய‌ன் தெரியாம‌ வ‌ந்து உள‌ர்றான்" என்று சொல்லி அர‌ங்க‌த்தையே அதிர‌வைத்தார்.

பைய‌ன் ரூம் போட்டு டிக்ஸ்ன‌ரி புர‌ட்டிருப்பாரு போல‌. உண்மையிலேயே அப்ப‌டி ஒரு வார்த்தை இருக்காம். அத‌ற்கு அர்த்த‌ம் இது தான் என்றெல்லாம் கெஸ்டாக‌ வ‌ந்த‌ ந‌ரசைய்யா சொல்ல‌, ஆங்கில‌ம் த‌டுமாறித் தான் போன‌து.

"ச‌ரி, நம்மூரில் ஆங்கிலத்தில் புக‌ழ்பெற்ற‌ ஐந்து எழுத்தாள‌ர்க‌ளைச் சொல்ல‌ முடியுமா ?" என்ற‌ கேள்விக்கு, இப்ப‌டியா ஃபெவிக்கால் மௌத் ஆவார்க‌ள். ஒருவர் கூட ஒரு எழுத்தாளரைக்கூட சொல்லவில்லை. அப்ப‌ இவ‌ர்க‌ளின் ஆங்கில‌ம் "வீண் ஜ‌ம்ப‌ம்" தானா ?

பிற‌ப்பால் தெலுங்க‌ரான‌ ந‌ர‌சைய்யா, அதிக‌ம் எழுதுவ‌து த‌மிழில். ச‌மீப‌கால‌மாக‌த் தான் சென்னையில் வ‌சிக்கிறாராம். இவரின் இரண்டு வாக்கியங்கள் நினைவில் நிற்பவை.

1. Colonial left over: ரெண்டாயிரம் வருட‌ம் நாம பண்ணாதத முன்னூறு வருடத்தில் பிரிட்டிஷ்காரன் செஞ்சுகொடுத்துட்டுப் போயிட்டான்.
2. Language is a vehicle: பயணிக்க தான் மொழி பயன்படனும். ஒரு இட‌த்திற்கு செல்ல‌ பேருந்தில் ப‌ய‌ணித்து, செல்லும் இட‌ம் வ‌ந்த‌வுட‌ன் இற‌ங்கிக் கொள்ள‌ணும். புடிச்சுத் தொங்காதீங்க‌....னு சொல்லாம‌ச் சொல்லிட்டார் :)

உல‌க‌ம் சுற்றி வ‌ந்த அவர் மேலும் சொன்னது, "ஆங்கில‌ மோக‌ம் அதிக‌ம் இருக்கும் இடங்களில் தமிழகமும் ஒன்று" என்று. அப்ப, த‌மிழை அழிக்கிறோமா நாம் ? தமிழ் அழிந்துவிடுமே என ஆளும் அர‌சு ஆங்கில‌த்திற்கு தான் தார் பூசுமா ?

நாம ஆங்கிலத்தை இந்த அளவிற்கு நேசித்தால், தமிழ் எப்பொழுதோ அழிந்து போயிருக்கணுமே ? வாழும் த‌மிழை வாழ‌ வைப்ப‌வ‌ர் தான் யார் ?

நிக‌ழ்ச்சியின் ம‌ற்றொரு கெஸ்ட், "டால்ட‌ன்" என‌ நினைக்கிறேன். வேற்று மாநில‌த்துக்கார‌ரான‌ இவ‌ர், சென்னை வ‌ந்த‌போது த‌மிழ் க‌ற்றுகொள்ள‌ ரொம்ப‌வே ஆசைப்ப‌ட்டிருக்கிறார். "யூ நோ வேர் த‌ லேங்குவேஜ் லிவ்ஸ் ?" என்று அவ‌ர் விவ‌ரித்த‌ வித‌ம் அருமையாக‌ இருந்த‌து. ஆட்டோ ட்ரைவர்களிடமும், ரிக்ஷாகாரர்களிடமும் தேநீர் கடைகளில், பேப்பர் படிப்பது போல அமர்ந்து, தமிழ் படித்திருக்கிறார். வெவரமான ஆளு தான் :) வீட்டிற்கு வந்து "என்ன மச்சி", "போடீ" என்று தான் கற்றதை தன் மனைவியிடம் பயன்படுத்தியதையும் ரசிக்கும்படி சொன்னார்.

அர‌சிய‌ல் ஆதாய‌த்துக்காக‌ ஹிந்தியை எதிர்த்தோம். த‌மிழக‌த்தைத் த‌விர‌ ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளில் ஹிந்தி பேசுகிறார்க‌ள். ஆனாலும் அவ‌ர்க‌ள் இருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டால் த‌ங்க‌ள் தாய்மொழியில் தான் பேசுகிறார்க‌ள். ஹிந்தி வ‌ந்தால் த‌மிழ் அழிந்துவிடும் என்று தார் பூசினோம். ஆனால் இரு த‌மிழ‌ர்க‌ள் பேசுவ‌து ?

Friday, September 25, 2009

இதெல்லாம் ஜூஜூபி மேட்ட‌ர் ...


Photo Credit: wikimedia.org

Blade போடுவ‌த‌ற்கு முன்னால் ஒரு பாட்டோட‌ ஆர‌ம்பிப்போம்.

செக்கச் செவந்த பழம், இது
தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம், இது
ஏழைக்குனு பொறந்த பழம்

ஒரு புத்துண‌ர்ச்சி வ‌ந்த‌ மாதிரி இருக்குமே ? மேல‌ ப‌டிங்க‌ ப்ளீஸ்.

அநேக வியாழக்கிழமைகளில் சீனக் கடைக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று போன‌போது, க‌ண்ணில் ப‌ட்ட‌து அந்த‌ லேபில். 'Jujube lb $1.69'. எத‌ எத‌யோ ச‌ந்தைப்ப‌டுத்திய‌தில், எதற்கோ ஜூஜூபினு (இன்னோவேடிவா) பேரு வைத்து விற்கிறார்கள் போல என்று எண்ணினேன். வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடும் போது பார்த்தால், காஷிய‌ர் அருகில் மீண்டும் அந்த‌ லேபில்.

உடல் சோர்வா ? ஜூஜூபி
தொண்டையில் கிச் கிச் ? ஜூஜூபி
ம‌ன‌துக்குப் பிடித்த‌ ம‌யிலாலைக் க‌வ‌ர‌ணுமா ? ஜூஜூபி

என்றெல்லாம் நம்ம ஊரு விளம்பர பாணியில் சொன்னால், 'இதெல்லாம் அவ்ளோ ஜூஜூபியா ? எவ‌ன் சொன்ன‌து ?' என்று நீங்க‌ள் கேட்க‌லாம், கேப்பீங்க‌.

ப‌தில் திரும்ப‌வும் 'ஜூஜூபி' தான் :)

ந‌ம் திரைத்துறையின‌ரின் (குறிப்பாக‌ சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினி) புண்ணிய‌த்தில் இந்த‌ வார்த்தை ந‌ம‌க்கு பிர‌ப‌லம்.

எப்போதும் எளிதென்று,
த‌ப்பான‌ அர்த்த‌த்துட‌ன்,
இப்போதும் உலா வ‌ரும்,
ஜூஜூபி ... உண்மையில் ஒரு ஹீரோ.

Ziziphus jujube என்ற தாவ‌ர‌விய‌ல் பெய‌ரில் வ‌ழ‌ங்கி வ‌ரும் 'ஜூஜூபி', மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வ‌கைப் ப‌ழ‌ம்.

மேலை நாடுக‌ளில் 'Apple a day keeps a Doctor away' ப‌ழ‌மொழிக்கு இணையாக‌ ந‌ம்ம 'ஜூஜூபி' ஐயாவுக்கும் மதிப்பு இருக்கிற‌து. மேற் சொன்ன‌ விள‌ம்ப‌ர‌ வ‌ரிகள் ஜூஜூபி புகழின் சிறிய‌ உதார‌ண‌ங்க‌ள்.

ப‌ள‌ப‌ள‌க்கும் ப‌ச்சை இலைக‌ள், அட‌ர்ந்த‌ முட்புதர். அதில், உருண்டு திர‌ண்டு ஆலிவ் ப‌ழ‌ அள‌வில் வ‌டிவ‌ம். க‌ருஞ்சிவப்பு அல்லது க‌ரும்ப‌ழுப்பு நிற‌ம். சிறிது உலர்ந்து சுருங்கிய‌ தோல். மொத்த‌த்தில் ஆசியாவின் பேரீச்ச‌ம்ப‌ழ‌ம் என்றெல்லாம் அறிய‌முடிகிற‌து இணைய‌த்தின் வ‌ழி.

ஆசியா எனும் போது, பட்டியலில் சீனா இல்லை என்றால் தான் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ணும். ஆனால், இந்தியாவின் பெயரும் பார்த்த போது சிறிது ஆச்சர்யம். இந்தியாவில் கி.மு.9000 லிருந்தே ப‌யிரிட‌ப்ப‌ட்டிருக்கிற‌து ஜூஜூபி.

சீனர்கள் ஜூஜூபி டீ, ஜூஜூபி வைன் என்று தயாரித்தால், நம் நாட்டில் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் ஜூஜூபி ஊறுகாய் போட்டிருக்கிறார்கள். கிழ‌க்கே ஐரோப்பாவில் சாக்லெட், கேன்டி போடுகிறார்க‌ள்.

ஆனால், ந‌ம்ம‌ ஊருல‌ பாட்டே போட்டு ப‌ட்டைய‌க் கெள‌ப்பீட்டாங்க‌ள்ல‌ ...

செக்கச் செவந்த பழம், இது
தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம், இது
ஏழைக்குனு பொறந்த பழம்

ஆமாங்க‌, ஜூஜூபி ந‌ம்ம‌ எல‌ந்தைப்ப‌ழ‌மே !

ரஜினி அவ‌ர்க‌ளுக்கு ஒரு கேள்வி: இப்பேற்ப‌ட்ட‌ ஜூஜூபியை எப்ப‌டிய்யா த‌வ‌றான‌ அர்த்த‌த்தில் த‌ர‌ணியில் விட்டீர்க‌ள் ?

Blade போதும்னு நினைக்கிறேன். இணையத்தில் ஏராளம் செய்திகள் ஜூஜூபி பற்றி குவிந்து கிட‌க்கின்றன. மேல் விப‌ர‌ங்க‌ளுக்கு கூகிளார், அல்ல‌து விக்கி அண்ணாச்சியை அணுக‌வும்.

Friday, September 18, 2009

சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள் vs. அயர்ன் செஃப் அமெரிக்கா



vs.



The Battle begins ...

நீங்க சாப்பாட்டுப் பிரியரா (ராமர் இல்லை) ? 'ஃபுட் நெட்வொர்க்' ரசிகரா ? அப்ப, உங்களுக்கு நிச்சயம் 'அயர்ன் செஃப் அமெரிக்கா' நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும். அல்லது நண்பர்களோ, உறவினர்களோ இந்நிகழ்ச்சி பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கலாம்.

நிகழ்ச்சியின் அந்த ஒரு மணி நேரமும், நம் காலில் சக்கரம் கட்டாத குறை தான். படம் பிடிக்கும் கேமிராக்களுக்கே பசி எடுக்கும் போல ! அப்பப்ப 'க்ளோஸ் அப்'பில் சென்றுவிடும். சமையல் செய்பவர், அவர் தம் கூட்டாளிகள், நடுவர்கள், தள மேலாளர்கள் இப்படி எல்லோரும் சமையல் சார்ந்து இருக்க, நிகழ்ச்சியின் சேர்மன் மட்டும் சற்று வித்தியாசமான களத்தில் இருந்து வந்திருக்கிறார்.

மார்க் டகாஸ்கோஸ் (MARK DACASCOS), பேருக்கேத்த மாதிரி ஏதோ டகால்டி செய்கிற மாதிரி தான் இருக்கு அவரது என்ட்ரி. ஆனா, ஆளு பலே ஆளாம். அதாங்க பலசாலி ! அடிப்படையில் குங்ஃபூ (குஷ்பூனு நீங்க படிச்சா நான் பொறுப்பு கிடையாது :)) மாஸ்டராம்.


Photo Credit: foodnetwork.com

அப்படியே ஒரு பத்தாயிரம் மைல் பயணித்து நம்ம ஊருக்குப் போனால், சட்டு புட்டுனு செட்டுப் போட்டு ஒரு பேரும் வச்சிட்டாங்க 'சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள்'னு.

நம்ம ஊருக்கேத்த மாதிரி கொஞ்சம் (நிறையவேயா ? சரி !) மாற்றி, இந்நிகழ்ச்சியை தமிழ்படுத்தித் தருகிறார்கள் விஜய் டி.வி.யில்.

அங்கே மார்க்கஸ் 'சம்மர் சால்ட்' அடித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, இங்கே 'கேட் வாக்'கில் பிரியதர்ஷினி அக்காவும், தேவதர்ஷினி அக்காவும் ஸ்டைலா நடந்து வந்து கடைய நடத்துறாங்க.

புதிய சமையல்காரர் ஏற்கனவே இருக்கும் 'அயர்ன் செஃப்' நால்வரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க, அவர்கள் இருவரின் அறிமுகத்திற்குப்பின், 'உங்களின் ஒரு மணி நேரம் ஆரம்பிக்கிறது, உங்களுக்கான சீக்ரெட் இன்கிரீடியன்ட் இஸ்'னு குங்ஃபூ ஸ்டைலில் பறந்து வானளவு மூடி திறக்கிறார்.

மட்டை அடித்து முட்டி வலிக்கிற மாதிரி தரையில் அமர்ந்திருக்கும் பிரியதர்ஷினி அக்காவைத் தலையில் தட்டி, 'ஏய் எழுந்திருடி, கமர்ஷியல் முடிஞ்சு காமெரா ஸ்டார்ட் ஆகிடுச்சு பாரு' என்று அதட்டுகிறார் தேவதர்ஷினி. அரக்கபரக்க இருவரும் டீம் ஏ, டீம் பி பற்றி உரையாற்றி விட்டு, 'உங்கள் அரை மணி நேரம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, அஞ்சு நிமிஷம் டைம் தர்றோம், அதுக்கும் முன் உங்க சீக்ரெட் இன்க்ரீடியன்ட் இஸ்'னு இட்லி சட்டி மூடி போல் இருக்கும் ஒன்றைத் திறக்கிறார்கள்.

ஒரு ஊரே சாப்பிடும் அளவிற்கு கோழியோ, பன்றியோ, ச்சீஸோ, மீனோ, ஏதோ ஒன்று குவிந்து கிடக்கிறது. கையில் அகப்பட்டதை அள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கும் சமையல்காரர்கள்.

'டீம் ஏ'வும் 'பி'யும் திருதிரு என்று விழிக்கிறார்கள் திறந்த மூடி கண்டு. உள்ளே என்ன இருக்கு ? எங்கே இருக்கு ? என்பது போல ஏதோ இருக்க. 'ஹையா சிக்கன்' என்று பள்ளிச்சிறுமிகள் போல பூரிக்கும் அக்காக்கள்.

முட்டை ஒரு பக்கம் உடைத்து, ச்சீஸ் ஒரு பக்கம் துருவி, அவனில் ஒரு பக்கம், ப்லெண்டரில் கொஞ்ச நேரம், கூட்டாளிகளுக்கு அவ்வப்போது கட்டளைகள் என்று செய்தித்தாள் அலுவலகம் போன்றதொரு பரபரப்பில் சமையல் வல்லுநர்கள். தள மேலாளர் கேட்கும் சமையல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு, சமையலில் பரபரப்பாகவும், மைக்கில் நிதானமாகவும், சுவையாகவும் பேசி சுழலுன்றபடி இருக்கிறார்கள்.

முதல் ஐந்து நிமிடத்தில் ஆர அமர, லிஸ்ட் போட்டு தேவையான சாமான்கள் அள்ளி வந்து, அலுக்காமல் சமைக்கும் செலிபிரிட்டீக்கள் (??) நடிகையாக இருந்தால், முடியை பின் தள்ளி விடுவதும், உடையை சரி செய்வதிலும், அக்காக்கள் கேட்கும் சினிமா கேள்விகளுக்கு அள்ளித் தெளிக்கும் அட்டகாசங்களும். அவர்கள் அம்மாவோ, அக்காவோ, நண்பியோ தேமே என சமைத்துக் கொண்டிருப்பார். செலிபிரிட்டாவாக ('டி' க்கு ஆப்போஸிட் 'டா' தானே ?) இருந்தால், எங்கவீட்டில் சமையல்கட்டு எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாது என்று சொல்லி வெகு அழகாகக் காய் அறிந்து கொடுப்பார் துணைவிக்கு.

கமர்ஷியல்ஸ் அதிகம் தான். இருப்பினும் சமையலில் யாரும் குறுக்கே புகுந்து எதையும் குதறுவது இல்லை.

நடுவால 'செஃப் ஸ்பெஷல்', 'நொடியில் ரெடி'னு புதுமை(யா ?) பண்ணியிருக்காங்க. 'சிரிப்பு போலீஸ்' மாதிரி ஒரு 'சிரிப்பு செஃப்'. ஏதோ ட்ராமாவில் இருந்து இழுத்து வந்தவர் போலவே இருக்கும் அவர் நடையும் உடையும். அள்ளிப்போட்டு சமைப்பதும், அதற்கோர் பேர் சொல்வதும், ஏதோ சின்னபுள்ளத்தனமா தான் இருக்கும்.

நாலைந்து டிஷ்கள் செய்து, வேர்த்து விறுவிறுத்து, ப்ளேட்டிங்க் செய்து, ஒரு மணி நேரத்திற்குப்பின், பவ்வியமாக பறிமாறும் போது தான் அப்பாடா என்று நிற்கிறார்கள் சமையல்காரர்கள்.

ஓடி ஆடி சமைத்த களைப்பில் தனி அறையில் ஜாலியா உட்கார்ந்திருக்காங்க இங்க. அவர்களை விடாது, 'சொல்லுங்க நீங்க டென்ஷனா தான இருக்கீங்க ?, ப்ளீஸ் சொல்லுங்க, டென்ஷனா இருக்கேன்னாவது சொல்லுங்க ப்ளீஸ்' என்று கெஞ்சும் ப்ரியதர்ஷினி.

சமையல்காரர் ஒவ்வொரு உணவாக சிறு குறிப்பு தந்து பாறிமாற, தாங்கள் ரசித்து ருசிக்கும் அனுபவங்களை, உணவு போலவே புட்டுப் புட்டு வைக்கின்றனர் நடுவர்கள். தலையாட்டிக் கேட்டுக் கொள்கின்றனர் சமையல்காரர்கள்.

தேவதர்ஷினி அக்கா சொல்ல சொல்ல, ஒரு சின்ன ஸ்பூன் எடுத்து, அதிலும் நுனியில், 'டீம் ஏ'யின் உணவு கொஞ்சம் எடுத்து, லைட்டா சரக்கு அடிக்கும்போது ஊறுகாய் தொட்டுக்கற மாதிரி சாப்பிடுகிறார் நம்ம ஊர் (செஃப்) நடுவர். நம்ம ஊரு டச் கொடுக்கலேன்னா எப்படி ? அந்த ஸ்பூனை அங்கிருக்கும் ஒரு கண்ணாடி டம்ளர் நீரில், அப்படி ஒரு சுழற்று சுழற்றி விட்டு, 'டீம் பி' உணவை மேற்சொன்னது போலவே சுவைக்கிறார்.

'அன்ட் த வின்னர் இஸ்'னு மார்க்கஸ் கதற, நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.

அதே 'அன்ட் த வின்னர் இஸ்'னு தேவதர்ஷினி அக்கா சொல்ல, அதே நெஞ்சை உறையவைக்கும் இசை சில நொடிகள்.

நொடியில் ரெடி மாதிரி இதுல ஏதாவது புதுமை பண்ணியிருக்கலாமே ?!

"நான் நல்லாத் தான் சமைத்தேன். இதுல காரம் இவ்வளவு தான் போடணும். அந்த டிஷ் நார்த்ல இப்படித் தான் பண்ணுவாங்க. குழந்தைகள் உணவுங்கறதால ஸ்பைஸஸ் கம்மியாத் தான் போடணும். தெரியாமச் சொல்றாரு."

இதெல்லாம் நம் நடுவர் குறித்து ரன்னர் அப் டீமின் கருத்துக்கள். சமீபத்தில் ஒரு மாமி, 'எந்த அடிப்படையில் எங்க உணவைத் தேர்ந்தெடுக்கலே'னு கேட்டு ஒரு நிமிடம் நடுவரை கிலிபிடிக்க வைத்துவிட்டார்.

'செய்வன திருந்தச் செய்'னு சொல்லியிருப்பதை சினிமாக்காரர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர் :))

---

இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. முழுக்க நகைச்சுவைக்காவே.

Tuesday, September 15, 2009

ஐ.டி. ப்ரோக்ராமரும் ~ படிக்காசுப் புலவரும் ...



ச‌மீப‌கால‌மாக‌ ஐ.டி.துறை ப‌ற்றி வ‌ருந்த‌த்த‌க்க‌ ப‌திவுக‌ள் வ‌‌ருகின்ற‌ன‌. 'பணம் அதிகமா சம்பாதிக்கிறாங்க' என்று பல வருடங்களாக குற்றசாட்டு. போக, 'ஒரு ப்ராஜ‌க்ட் எடுத்து, எப்ப‌டி எல்லாம் போக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள்' என்று ஒரு பதிவு ப‌டித்த‌ போது ம‌ன‌ம் வெம்பித் தான் போன‌து. என்ன‌ தான் க‌ட்டுரையாள‌ர் ந‌கைச்சுவை(க்காக) க‌ல‌ந்து எழுதியிருந்தாலும், ம‌றுபுற‌ம் ஐ.டி.ப‌ற்றி அவ‌தூறான‌ எண்ண‌த்தை ம‌க்க‌ளிட‌ம் விதைப்ப‌தாகவே ஆகிற‌து.

எந்த‌த் துறையில் இல்லை கேவ‌ல‌ம் ? ஐ.டி.யிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ இருக்க‌லாம். அதற்காக மொத்தத் துறையையும் எப்ப‌டி குறை சொல்ல‌லாம் ?

சினிமாத் துறையில் ரஜினி கோடிகளில் சம்பாதிக்கிறார் என்பதற்காக, கோடியில் நிற்கும் லைட்மேனைக் குறை சொல்லலாமா ? ஐ.டி.யும் அப்ப‌டித்தானே. எத்த‌னை பேரு ச‌ந்தோஷ‌மா வேலைக்கு போறாங்க தினமும் ? எத்த‌னை பேர் கோடிக‌ளில் புர‌ளுகிறார்க‌ள் ?

அப்ப‌டியே க்ளைய‌ண்ட்டை இழுத்த‌டித்து வேலை வாங்கினாலும், எத்த‌னை கால‌ம் சந்தையில் வியாபார‌ம் ப‌ண்ண‌முடியும் அந்த ஐ.டி. கம்பெனி ? இதென்ன‌ திருவிழா கால‌ங்க‌ளில் போட‌ப்ப‌டும் க‌டையா ? 'வந்தவரைக்கும் லாபம்' என ப‌த்துநாளில் ப‌ண‌த்தை வாரிகிட்டு பொட்டி க‌ட்டி கெள‌ம்ப‌ ?

'ப‌ட்ட‌ர் அடிச்சு ப்ரெட் சாப்பிடும் ஆட்க‌ள்' இருக்க‌த்தான் செய்கிறார்க‌ள். ஆனால், விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், ஆணிபுடுங்கி அசந்து கிடக்கும் ப்ரோக்ராமர்கள் தான் எங்கிலும் அதிக‌ம். ஊண் உற‌க்க‌ம் இன்றி வற்றிய க‌ன்ன‌ங்க‌ளுடன், பாவம் ஓயாது உழைக்கும் வ‌ர்க்க‌ம். 'நீங்க என்ன செஞ்சாலும் சரி, நாங்க உழைக்கத் தயார். எங்களை ஆன்ஷோர் அனுப்புங்க' என்று க்யூ கட்டி 'தவமாய் தவமிருக்கும்' செய்திகளும் ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் தெரிகிறோம்.

"என்ன‌ய்யா தூங்கி மூனு நாள் தானே ஆச்சு. 'மூ....னு நாள்'னு இழுக்கறே. என்ன மசமசனு நின்னுகிட்டு இருக்கே. போ, போ, போயி கோட் அடி" என்று துர‌த்தும் ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர் முத‌ல், "டெஸ்ட் கேஸ்ல‌ புள்ளி இருக்கு. ஆனா, டெஸ்ட் ரிச‌ல்ட்ல‌ புள்ளி இல்ல. ப‌ஃக் ஃபிக்ஸ் ப‌ண்ணு ராசா" என 'கோடில் புள்ளி' வைக்கும் டெஸ்ட‌ர் வ‌ரை, அவ‌ர்த‌ம் பாடு அட‌ அடா ....

ந‌ம்ம‌ ஊர்ல‌ சின்ன‌ச்சின்ன‌ அலுவ‌ல‌க‌ங்க‌ளில் பார்த்தால், அக்க‌வுண்ட‌ன்ட் என்று ஒருவ‌ர் இருப்பார், அவ‌ருக்குக் கீழே நாலைந்து பேர் இருப்பர். ஒருவ‌ர் லெட்ஜ‌ர் எழுதுவார், ஒருவ‌ர் பெட்டி கேஷ், ஒருவ‌ர் ஜெர்ன‌ல் என்ட்ரி, ஒருவ‌ர் பி.அன்ட்.எல். இப்ப‌டி ஒவ்வொருவ‌ரும் ஒரு வேலையைச் செய்வார்க‌ள். ஆனால் சின்ன ஐ.டி.க‌ம்பெனியிலோ, அத்த‌னையும் ஒருவ‌ர் தான். UNIX, Windows, Networking, Java, .Net, 4gl, Oracle, Informix, db2 ..... இப்ப‌டி அத்த‌னையும் சும்மாடு வைக்காம‌லேயே ஒருவ‌ர் த‌லையில் ஏறி, அவர் த‌லை கன‌‌க்கும். இதைத்தான் த‌லைக்க‌ன‌ம் என்று த‌வ‌றாக‌ப் புரிந்துகொண்டோமோ ?

ரெண்டு நாள் ட்ரெய்னிங், மூனு வார கோர்ஸ் என்று இப்படி ஆறுமாச‌த்துக்கு ஒரு த‌ர‌ம் அறிவை அப்டேட் ப‌ண்ணியே ஆக‌ணும். இல்லை எனில் 'சர்வைவ‌ல் ஆஃப் த‌ ஃபிட்ட‌ஸ்ட்' கேமில் கால் பதிக்கும் முன்னே க‌ரைந்து போகும் நிலை.

இப்ப‌டி இந்த‌க்கால‌த்தில் ஐ.டி. ப‌டித்துவிட்டு அல்லோலகல்லோலப்படும் ம‌க்க‌ள் போல‌ அந்த‌க்கால‌த்தில் த‌மிழ் ப‌டித்துவிட்டு த‌வித்திருக்கிறார்க‌ள் போல‌. த‌மிழால் பிர‌ப‌ல‌மடைந்தவர்கள் சிலர் தானோ ? (வள்ளுவருக்கே, மதுரை தமிழ் சங்கத்தில் ஔவை சிபாரிசு செய்தார் என்பதாகப் படிக்கின்றோம்). பலரது படைப்புகள் பலரைச் சென்றடையாமலும் போனதுவோ ? அவ‌ர்க‌ளில் சில‌ர் த‌ங்க‌ள‌து ஆற்றாமையை வெளிப்ப‌டுத்தியும் சென்றிருக்கிறார்க‌ள்.

த‌னிப்பாட‌லில் 'ப‌டிக்காசுப் புல‌வ‌ர்' இவ்வாறு புல‌ம்புகிறார்:

அடகெடுவாய் பலதொழிலு மிருக்கக்கல்வி
   அதிகமென்றே கற்றுவிட்டோ மறிவில்லாமல்
திடமுளமோ கனமாடக் கழைக்கூத்தாடச்
   செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோமில்லைத்

தடமுலைவே சையராகப் பிறந்தோமில்லைச்
   சனியான தமிழைவிட்டுத் தையலார்தம் !
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை
   என்னசென்ம மெடுத்துலகி லிரக்கின்றோமோ ?


எந்த‌ அள‌விற்கு ப‌டித்துவிட்டோம் என நொந்திருக்கிறார் ம‌னுஷ‌ன். ப்ரோக்ராமர் மாதிரியே புலம்பியிருக்காருல்ல ?

ஏதாவது ஒரு இலக்கண முறைக்குட்பட்டு தான் இப்பாடல் எழுதியிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த சில பெயர்களை பயண்படுத்திக்கொள்கிறேன். தமிழார்வலர்கள் மன்னிக்க.

இதே புலவர் (ப்ரோக்ராமர்) 'நிலைமண்டில ஆசிரியப்பா'வில் (கணினி மொழிகள்) பாடல் (சுயபுராணம்) எழுதி மன்னரிடம் (கார்ப்பரேட் நேர்முகம்) பரிசில் (வேலை) பெறச் சென்றால், அங்கே இருக்கும் மந்திரி (ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்) "எண்சீர் விருத்தத்தில் இல்லையா ?" (வேறு கணினி மொழிகள்) என்பார்.

"இது நிலைம‌ண்டில‌ ஆசிரிய‌ப்பானு எப்ப‌டிச் சொல்கிறீர்க‌ள் ?" என்று குறுக்கு விசார‌ணை செய்வார் ந‌க்கீர‌ன் (டெக் லீட்).

"எங்கள் மன்னவரின் ஆட்சி பற்றி (கம்பெனி பற்றி) ஒரு பாடல் பாடுங்கள் (என்ன நினைக்கிறீர்கள் ?)" என்பார் அரசியார் (ஹெச்.ஆர்)

பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் விளக்கி, நஞ்சு தொஞ்சு (நாலைந்து நேர்முகங்கள்), கடைசியில் அரசி கிட்ட பேரம் பேசி தான் பரிசில் பெறமுடியும்.

இப்படி பீஸ் பீஸா பிஞ்ச பஞ்சுகளை லூஸ்ல விடுங்க பாஸ் :)))

ஹேப்பி டியர்ஸ் - ஹுவான் மார்டின் - யு.எஸ்.ஓபன் 2009 சாம்பியன்


Photo Credit: usopen.org

வழக்கம் போல அலுவலகப் பணிகளின் தீவீரத்தில் மூழ்கியதில் இன்று US Open 2009 Mens Final என்பது மறந்தே போனது. ஞாபகம் வந்து டிவியைத் தட்டினால், நான்கு செட்கள் ஆடி ஐந்தாவது செட்டில் ஹுவான் மார்ட்டின் லீடிங்கில் இருந்தார்.

ஒரு செகண்ட் பெடரர் தோற்கப்போவதை நினைத்து நிலைகுலைந்தாலும், அர்ஜெண்டினாவின் இளம்புயல் (20 வயது) ஹுவானின் விளையாட்டுத் திறன் ஆச்சரியம் தந்தது. போதும் ராஜர், ஐந்து வருடங்களில் நாற்பது தொடர் வெற்றி. புதியவர் வெல்லட்டும் என பிரார்த்தித்துக் கொண்டோம்.

பெடரரின் நிறைய இடர்கள், டபுள் ஃபால்ட், ஏகப்பட்ட டென்ஷனுக்கிடையில் கடைசியில் அவுட்டில் அடிக்க, ஹுவான் ஹேப்பி டியர்ஸில் விழுந்தார். தேம்பி அழுத கன்னங்களில் முகம் பூரிக்க, நேரமிண்மை குறித்து அறிவிப்பாளர் அறிவித்தும், விடாப்பிடியாக ஸ்பானிஷில் நான்கு வார்த்தைகளாவது எனது மக்களுக்கு நான் பேசவேண்டும் என வாங்கிப் பேசி, மீண்டும் தேம்பியது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.


Photo Credit: usopen.org

இளம் வயதில் கோப்பை வென்று யு.எஸ். ஓபனில் புதிய வரலாறு. அர்ஜெண்டினாவில் இருந்து இரண்டாவது யு.எஸ்.சாம்பியன். உலகின் ஆறாவது நிலை ஆட்டக்காரர். ஆனாலும் புதிய முகம். என்றெல்லாம் அறிவிப்பாளர் அறிவித்து, உங்களது போராட்டதின் வெற்றி ஒரு மில்லியன் அறுநூறாயிரம் டாலர், அது போக மேலும் இருநூறாயிரத்தூ சொச்ச டாலரும் சேர்த்து, ஒரு மில்லியன் என்னூறாயிரத்தி சொச்சம் டாலர் என்றார். இடையில் நிறுத்தி இத்தோடு நின்றுவிடவில்லை, லெக்ஸஸ் கார் கம்பெனி (ஏற்கனவே விலை உயர்ந்தது தான்) விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாகவும் அளிக்க, இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கண்களில் நீர்வழிய, உள்ளத்தில் வெற்றி கனியைச் சுவைத்து கொண்டிருந்தார் ஹுவான்.

மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள் ஹுவான் மார்டின்!!!

ஹுவான் மார்டினின் வெற்றி தருணங்கள் கீழே வீடியோவில்:

Wednesday, July 8, 2009

நீயா ? நானா ? -- அப்பாக்கள் பாஸாட்டம் ஆடுகிறார்களா ?

காலத்தின் பயணத்தில் எவ்வளவோ சகிப்புத் தன்மையை நாம வளர்த்துகிட்டாலும், சில நேரங்களில், சில மனிதர்களின் செயல்கள் நம்மை ரொம்பவே அமைதி இழக்கச் செய்துவிடுகின்றன‌. சரீ, பில்டப் நிறுத்திக்கறேன் :))

சமீபத்தில் பார்த்த "நீயா‍ ? நானா ?" நிகழ்ச்சி "அப்பா பாஸாட்டம் ஆடுகிறாரா ?" தலைப்பு இதுவல்ல, இதுபோல ஒன்னு :))) ரெண்டு விச‌ய‌ங்க‌ள் ந‌ம்ம‌ ச‌கிப்புத் த‌ன்மையையும் மீறி சோதித்த‌து.

முதலாவது, ஒரு கட்டத்தில் விழுந்து விழுந்து கோபிநாத் சிரிக்க, என்னாச்சுனு நாங்க பதறிபோய், ஏற்கனவே டி.வி. திரையில் ஒட்டிக்கிட்டிருந்த கண்களை, மேலும் அழுத்தி விழுந்து விடாமல் ஒட்டிப் பார்க்க, 'சின்ன இடைவேளைக்குப் பிறகு'னு, சைக்கிள் கேப்ல ஆட்டோ வேற (வேற ஒன்னும் புதுசா கெடைக்கலபா) ....

'அப்பாக்கள் ஔட் டேட்டட் என்கிறதுக்கு இத விட வேற என்ன வேணும்'னுட்டு மேலும் இடி இடி என சிரிப்பு !!! ஏன் ? ஏ.இ.கொ.வெ ??? ஒரு அப்பாவிற்கு மைக்கை சரி வர பயன்படுத்தத் தெரியவில்லை ! இதுக்கு தான் இத்தனை அலப்பரை. ரொம்ப சி.பு.த.இ ஓய் !!!!

அப்பாக்க‌ள் ஔட் டேட்ட‌ட் ஆக‌ இருப்ப‌தால் தான், பிள்ளைக‌ள் அப் டு டேட் ஆக‌ இருக்க‌ முடியுது ! ந‌ல்ல‌ வீடு வேணும், வ‌ண்டி வேணும், செல்போன் வேணும், ஜிமிக்கி வேனும், ச‌ல்வார் வேனும், செருப்பு(க‌ள்) வேணும் ... ஆனா "ஏன் ?" அப்ப‌டினு ஒரு வார்த்தை கேட்டுர‌ப்ப‌டாது.

இரண்டாவது, "பொட்டு இப்படி வச்சா நல்லா இருக்கும். செல் போன் அதிகம் பயன்படுத்தாதீங்க. ராத்திரில சீக்கிரம் வீட்டுக்கு வாங்க" இப்படீனு ஒரு அப்பா சொல்ல ... "நிறுத்து ... இதெல்லாம் உங்களுக்கு அதிகமா தெரியல ... இத தீர்மானிக்க நீங்க யாரு சார்" என்றாரே பார்க்கலாம். "உன் பிள்ளைக்கு நீ எப்படி டா பேர் வைக்கலாம்"ன்கிற மாதிரில இருக்கு !!!

ஆரம்பத்தில விட்டாலும் பிறகு பிடித்தார் ஒரு அப்பா. "ஒரு அலுவ‌ல‌க‌த்தில் பாஸ் திட்டிட்டான்னா, இவ‌ங்க‌ வேலைக்கு போகாம‌ இருப்பாங்க‌ளா ? என் சிறுவ‌ய‌தில் ஒரு நூறு ரூபாய் இல்லாம‌ல் ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் என‌க்குத் தான் தெரியும். என் க‌ஷ்ட‌ம் என் பிள்ளைக‌ள் ப‌ட‌க்கூடாதுனு தான் இத்த‌னை செய்கிறோம் பிள்ளைக‌ளுக்கு. அவர்கள் தவறுதலான வழியில் செல்கையில், நாங்க‌ ஏன்னு கேட்க‌ கூடாதா ?"

யாராவ‌து ப‌தில் சொல்ல‌ணுமே ! ம்.ஹிம்.

வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌டுவில‌ நாலு அப்பா, அம்மாக்க‌ள அழ‌விட்டு ... ப்ளீஸ் இதைத் த‌விர்த்துவிடுங்க‌ள். அய‌ல‌க‌த்து டி.வி.க்க‌ளை அப்ப‌டியேவா காப்பி அடிப்ப‌து !

உலகம் முழுக்க மதர்ஸ் டே, எர்த் டே ஃப்ரீ ஏர் டே, இப்படி என்னன்னெவோ டேக்கல் படு பிரபலம். ஆனா ஃபாதர்ஸ் டேயும் வருது ! அது பாட்டுக்குப் போகுது. இங்க கூட ஃபாதர்ஸ் டே பத்தி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

சில‌ வீடுக‌ளில் மோச‌மான‌ அப்பாக்க‌ள் இருக்கிறார்க‌ள். அத‌ற்காக, ந‌ட‌ந்த‌ இந்த‌ நிக‌ழ்ச்சியில், ஒட்டு மொத்த‌ அப்பாக்களையும் கூப்பிட்டு அவ‌மான‌ப்ப‌டுத்தியதாக‌வே ஆகிற‌து :((

Wednesday, January 28, 2009

பெய்யெனப் பெய்யும் (ஆலங்கட்டி) மழையும், கொசுவர்த்தி சுருளும் ...


Photo: hodgman.org.jpg

மேற்கிலிருந்து கிழக்குவரை, அமெரிக்கா முழுதும் இப்ப ஹீரோ 'ஐஸ் ஸ்ட்ராம்' ஆலங்கட்டி அவர்கள் தான் !!!

திங்கள் மதியத்திலிருந்து ஆரம்பித்து, செவ்வாய் இரவு வரை ஆலங்கட்டியின் ஆதிக்கம், இன்று மென்பனியாய் (snow தாங்க) மாறி இன்னும் கொட்டுவதை செய்திகளில் பார்த்தால் எண்ணில் அடங்காது.

பாலம் பாலமாக, வீட்டுக் கூரையிலிருந்து, மரக் கிளைகள் படர்ந்து, தரையில் உதிர்ந்து, வெண் தார்ச் சாலை நிரப்பி ... (படங்கள் இங்கே)

வீட்டில் இணையம் வேலை செய்யாததால், இன்று ஆணிபுடுங்க அலுவலகத்துக்கு வரும்படி ஆகிவிட்டது. வழியெல்லாம் வெண்மை. 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' பாடல் தான் மனசுக்குள் மத்தாப்பாய். மெதுவே வண்டியை கராஜிலிருந்து எடுத்து, பின் ஐஸ்கட்டியிலேயே பயணித்து, பத்து பதினைந்துக்கு மேல் ஓட்ட முடியவில்லை. ஒரு சாலை விளக்கு நிறுத்தத்தில் எதிரே வந்த ஜீப், ப்ரேக் பிடிக்க, அப்படியே வழுக்கியதை பார்த்தபோது நமக்கு நெஞ்சம் உறைந்து போனது .... நல்ல வேளைக்கு ஒன்றும் ஆகவில்லை.

ரெண்டு நாளா வெளியில் எங்கும் போக முடியவில்லை (அலுவல் தவிர). வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. பத்தாதற்கு பவர் கட் வேற. முதல் வார்த்தை தங்க்ஸ் சொன்னது "ஐயோ ஃப்ரீஸர்ல‌ இருக்கதெல்லாம் என்னாகுமோ ?!!!" என :))) 'எதுக்குக் கவலைப் படறே, ஃப்ரிட்ஜை விட வெளியில் எடுத்துப் போட்டா இன்னும் பத்திரமா இருக்கும்' என்றேன். அந்த அளவிற்கு ஐஸ் வெளியே !!!!

'பட்டால் தான் தெரியும் பகலவனுக்கும் சூடு' என்பது போல். 'பவர் கெட்டால் தான் தெரியும் முன்னேற்பாடு' என்கிற மாதிரி (இதெல்லாம் யாரு சொன்னாங்கனு கேக்கக்கூடாது), நேற்றிரவு ஒரு மெழுகுவர்த்தி கூட சட்டுனு கண்டுபிடித்து எடுக்க முடியவில்லை :(((

வொய்ங் வொய்ங் வொய்ங் (டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள்கிறது) ...

ஊரில் ஹரிக்கன் விளக்கு இருக்கும். பாட்டி துடைச்சு துடைச்சு வைத்திருப்பார். தங்கம் போல் மினுமினுக்கும். கோடைகாலங்களில் (அப்ப இருந்தே) கரண்ட் போயிடும் என்று, சாயந்திரம் வெளிச்சம் குறையும் நேரத்தில் ஒரு நாலஞ்சு விளக்கு ஏற்றி, அங்கங்க‌ வைப்பார் தினம். காலை வரை எரியும் அவை.

சளைக்காம ஏத்தறாங்களே என்று பார்த்தால், பின்னர் புரிந்தது அவர்கள் காலத்தில் தான் தீப்பந்த விளக்குகளில் இருந்து மின்சார விளக்குகளுக்கு ட்ரான்ஸிசன் ஆனார்கள் என‌. அதனால் விளக்கு ஏற்றுவது அன்றாட வேலைகளில் ஒன்றாக இருந்திருக்கிற‌து அவர்களுக்கு.

எங்க‌ள் ஊர் வீடுக‌ளில், உள் வாச‌ல் ந‌டுவில், ஒரு சிறு க‌ல்தூண் இருக்கும். மேலே சிறு குழியும் இருக்கும். ம‌ழைகால‌ங்க‌ளில் நீர் நிறைந்தும் இருக்கும். ப‌ள்ளி கால விடுமுறையில் ஊருக்கு போகும்போதெல்லாம், விளையாட்டில் அந்தத் தூணைச் சுற்றி சுற்றி வ‌ருவோம். அது ஏன் அங்க‌ நிற்கிற‌து என்றெல்லாம் தெரியாது.

அந்த‌கால‌த்து செய‌ல்க‌ளுக்கு எந்த‌கால‌த்திலும் ஒரு கார‌ண‌ காரிய‌ம் மெய்பிக்க‌லாம். ஆன்மிக‌ம் இதில் அடங்குமா என‌த் தெரிய‌வில்லை. அந்த‌ அள‌விற்கு எனக்கு இன்னும் வ‌ய‌தாக‌வில்லை :))) ஆனா இந்த‌ கால‌த்து செயல்க‌ளுக்கு ஒரே வார்த்தை, 'ஃபேஷ‌ன்' :)) ஏன், எதுக்கு எல்லாம் சுத்தமாத் தெரியாது.

'இது ஒவ்வொரு வீடுக‌ளுக்கு உள்ளும் உள்ள‌ விள‌க்குத் தூண்' என்று தாத்தா சொல்வார்க‌ள். மின்சாரம் வருவதற்கும் முன், பெட்ட‌ர்மாக்ஸ் விள‌க்கெல்லாம் வ‌ருமுன்னே, க‌ண்ணாடிக் குடுவையுள் விள‌க்கேற்றி, அதை இந்த‌த் தூணில், அந்தச் சிறு குழியில் நிறுத்தி விட்டால், வாச‌ல் முழுதும் இரவு பிர‌காசிக்குமாம்.

மின்சார விளக்குகளின் ஆதிக்கம் வந்த பின்னாளில், இத் தூண்க‌ள் துணி உல‌ர்த்தும் கொடி க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌ட்ட‌து, ப‌டுகிற‌து :)))

பெரிய‌வ‌ர்க‌ளிட‌ம் ப‌ழ‌ங்க‌தைக‌ள் கேட்க‌ அப்பொழுது பொறுமையும் இல்லை, ஒரே இட‌த்தில் உட்கார்ந்திருக்க‌ வ‌ய‌தும் இல்லை. எப்ப‌ ந‌ம்மைப் பிடித்து உட்கார‌ வைத்தாலும், சில‌ நொடிக‌ளில் விடு ஜூட் தான். இருந்தாலும், பிடிக்குதோ இல்லையோ, நிறைய‌ சொல்லியிருக்கிறார்க‌ள். இன்று அவர்கள் உயிருடன் இல்லை, இருந்திருந்தால் ...

சின்னஞ் சிறுக‌தைக‌ள் பேசி
சிரித்து உற‌வாடி,
அன்பின் பெருக்கத்தில்
அரவணைக்கப் பெற்று,
சிந்தை ம‌கிழ்ந்து
செழிப்புற் றிருப்போம் ...

இந்த‌ ஒரு நெருக்க‌ம் அப்பா, அம்மாவிட‌ம் இல்லாதது இன்ற‌ள‌வும் ஆச்ச‌ரிய‌மே !!!!

Saturday, December 27, 2008

இசை இல்லாத மார்கழியா .....

ஜாதி, மதம், இனம், மொழி ... இப்படி எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காத ஒன்றை இசை என்று சொல்லலாமா ?

சின்னப் புள்ளையா இருந்த காலத்தில் இருந்து, இந்த தாளங்களை நம்மை அறியாமலேயே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டில் இருந்து, கோவில் விசேடங்கள், கல்யாண வைபவங்கள், என எல்லாம் கடந்து கடைசி மூச்சுக்கு அப்புறமும் இசையை நாம் அனைவருமே சுவாசிக்கிறோம்.

சின்ன வயதில் யாராவது ச,ரி,க,ம ... என்று சாதகம் பண்ணினாலோ, அல்லது ஊரில் பக்கத்து தெருவில் குடியிருந்த மேளகாரர், டம்மு, டும்முனு அடித்து (தவிலை தான் :))) ப்ராக்டிஸ் செய்வதைப் பார்த்தாலோ ரொம்ப பாவமா இருக்கும். ஏன் இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று :))) வயதாக ஆக, நமக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்று நினைத்து உண்டு, இன்று வரை.

அதுக்காக நம்ம புள்ளையவாவது இசை மேதையா ஆக்கலாம்னு பியானோ க்ளாஸ் சேர்த்தோம் .... கத்துக்க முடியலையேனு நாம அழுதால், "எங்களை ஏன் கஷ்டப்படுத்தறீங்க"னு புள்ளைங்க அழுகுதுங்க :((( ஃப்ரீயா விட்டாச்சு அவங்களை.

சென்னை சபாக்கள் நிறம்பி வழிவதால், இங்க ஒரு கச்சேரி பண்ணலாம், யூ டியூபின் துணையுடன் :))

ஒரு கல்யாண வீட்டுக்குள்ள நுழையும் போது, டக்கடக்க ... என்று விரல் உருள எழும் ஒலியில், நம் மனம் கரைவது நிச்சயம். இல்லையா ?!! இங்க ஒரு வெளிநாட்டுக்காரர், நம்ம ஊருக்கு எப்படி தேடி வந்து, தவில் மேல் காதல் கொண்டு (இப்படி தான் சொல்லணும் அவரின் வாசிப்பு லயிப்பைப் பார்த்து), முறைப்படி கற்றுக் கொண்டு ... நீங்களே பார்த்து மகிழுங்கள்.



பன்னாட்டுக் கலைஞர்கள் ஒரு ட்ரூப்பா சேர்ந்து, பாடும் பாடலும், இசையும் அருமை.



நம்ம ஊரு ஆட்கள் இல்லாமல் கச்சேரியா ? :))) டூயட் படம் பார்த்ததிலிருந்து, கத்ரி கோபால்நாத் அவர்களின் பல்லாயிரக்கான ரசிகர்களுள் நானும் ஒருவனானேன். இதோ அவருடைய இசைக் காட்சி

Thursday, November 27, 2008

அடிச்சா.....ச்சு நூறு !



மில்லி இல்லீங்கோ :))

சின்னச் சின்னத் துளிகள்
எல்லாம் சேர்த்து வைத்தேனே
நாள் செல்லச் செல்ல‌
பதிவுகளாய்ப் பதிந்தும் வந்தேனே
எண்ணிக்கையில் ... நூறைத் தொட‌ ...
எகிறி குதித்தேன் வானம் இடிந்தது !!!

ஆயிரக்கணக்கில் பதிவுகள் போட்டு, அமைதியா பதிவர்கள் இருக்கும்போது, இது கொஞ்சம் ஓவரா இருக்குல்ல. என்ன செய்றது. ரத்னபாலா, பாலமித்ராக்களுக்கு, மாஞ்சு மாஞ்சு, சோறு தண்ணியில்லாம வரைஞ்சு அனுப்பி. அப்புறம் தேவுடு காத்து, ஒன்னுமே வரமா நொந்து நூலானது மனது. பிற்பாடு குமுதம், விகடனுக்கும் படைப்புக்கள் அனுப்பி, காத்திருந்தது தான் மிச்சம். இந்த கால கட்டத்தில் இப்படி நெனச்சவுடன் பதிந்து, நண்பர்கள் வந்து வாசித்து திட்டியோ, பாராட்டியோ ... எல்லாம் சில நொடிகளில் எனும்போது சந்தோசம் பெறுகத் தான் செய்கிறது.

துளித் துளியாய் ஆரம்பித்து, முதலில் கொஞ்சம் பதிவுகள் போட்ட பிறகு, சிறு இடைவெளி. எல்லோரும் நினைப்பது போலவே, 'நமக்கும் சரக்கு தீர்ந்து போச்சா' என்ற எண்ணம் அடிக்கடி வந்து தொல்லை தந்தது. 'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற கவியரசரின் பாடல் வரிகள் தரும் ஊக்கம், 'பதிய நினைத்தால் பதியலாம்' என்று மாற்றி யோசிக்க வைத்தது. என்ன, நேரம் ஒத்துழைக்கணும் !!

நமக்கு இந்த அரசியல், ஆன்மிகம் ரெண்டுமே ரொம்ம்ம்ம்ம்ப தூரம். முக்கியமா சென்ஸிடிவ் சண்டைகள் இந்த இரண்டிலுமே அதிகம். மதம், ஜாதி எல்லாம் வேறு சேர்ந்து ஆட்டி படைக்கும் களங்கள். அப்படியே ஒரு பை, ரெண்டுக்கும் சேர்த்து தான் :)) பிற‌கு எதைத் தான் எழுத‌லாம் என்று யோசிக்கையில், சாதார‌ண‌ ம‌னித(ர்களின்) அன்றாட வாழ்வைப் ப‌ற்றி எழுத‌லாமே என‌ ... இன்றுவ‌ரை தொட‌ர்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன் :))

கொஞ்சம் கதை, நிறைய கவிதைகள் என எழுதி வந்த போது, ஒரு பெரீய்ய்ய்ய எழுத்தாளருக்கு என் படைப்புக்களை வாசிக்குமாறு மடல் அனுப்பினேன். எங்கே வாசிக்கப் போறார் எனப் பார்த்தால், ஓரிரு நாட்கள் கழித்து அவரிடம் இருந்து பதில் மடல்.

சாட்டையில் அடித்த‌து போல‌ இருந்த‌து, எனது க‌விதைக‌ளைப் ப‌ற்றி அவ‌ர் எழுதியிருந்த‌து. ப‌ள்ளிச் சிறுவ‌ர்க‌ள் தேவ‌லை என்று சொல்லாம‌ல் சொல்லிவிட்டார் :(( ஒரு புறம் வருத்தம். அதே அவ‌ர், க‌தைக‌ளை சிலாகித்துப் புக‌ழ்ந்திருந்தார். குறிப்பிட்ட‌ க‌தைக‌ள், சொல்லிய‌ வித‌ம், பாத்திரங்கள், காட்சி விவ‌ரிப்பு என‌ நுணுக்க‌மாய் அவ‌ர் எழுதிய‌து க‌ண்டு ம‌றுபுற‌ம் ம‌கிழ்ச்சி.

நல்லா இருக்கோ, இல்லையோ ... என்ன‌ தான் எழுதினாலும், ஒருவ‌ர் வ‌ந்து, லேசா பாராட்டினா போதும், உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை குளிர்ந்து போகும். இந்த‌ ம‌னித‌ இய‌ல்புக்கு யாவரும் உட்பட்டவர்கள் தான் இல்லையா ?!

திரும‌ண‌மாகி ப‌த்தாண்டுக‌ள், இருப‌து, முப்ப‌து ... எத்த‌னை ஆண்டுக‌ள் ஆனாலும், சாப்பிடும்போது க‌ண‌வ‌ர் ம‌னைவியிட‌ம் "இன்னிக்கு சாம்பார் அற்புத‌ம்" என்று ஓரிரு வார்த்தைக‌ள் சொன்னால் போதும். ச‌ந்தோஷ‌ப்ப‌டாத‌ ம‌னைவிமார்க‌ள் உண்டா ?!!! வைஸ் வெர்ஸா, கணவன்மார்கள் தான் உண்டா ?!!! :))

ஆங் ம‌ற‌க்க‌ற‌துக்கு முன்னால் ... என்னுடைய‌ தொல்லைக‌ளைப் பொறுத்துக் கொண்டு, வீட்டு வேலையைப் பார்த்து, குழ‌ந்தைக‌ளை க‌வ‌னித்து, ப‌திவுகளையும் ப‌டித்து க‌ருத்துக்க‌ள் கூறும் என‌து ம‌றுபாதி த‌ங்க‌ஸுக்கு முத‌ல் ந‌ன்றி.

எழுத்தாளர் கதை சொன்னேனே, அங்கு விழுந்த‌து க‌விதைக்கு ஆப்பு, இல்லை இல்லை கேப்பு. "ந‌ல்லா இருக்கு, இல்லை எனப் பிறர் சொல்வ‌தெல்லாம் அப்ப‌டியே எடுத்துக் கொள்ளாதீர்க‌ள். எல்லாம் அவரவர் ரிலேடிவ் க‌ருத்துக்க‌ள். தொட‌ர்ந்து எழுதுங்கள்" என்று சொன்ன‌வ‌ர்க‌ள் இருவ‌ர். சீனா ஐயா, ராம‌ல‌ஷ்மி மேட‌ம்.

அறிமுகமான பதிவிலிருந்து இன்று வ‌ரை தொட‌ர்ந்து அனைத்து ப‌திவிற்கும் வ‌ந்து, பிழைக‌ள் திருத்தி, பாராட்டி, 'அடுத்து என்ன எழுதப் போறீங்க' என்று ந‌ம‌க்கும் ஆவ‌லைத் தூண்டும் சகோதரி ராமலஷ்மி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல..

வ‌லைச்ச‌ர‌த்தின் ஆசிய‌ராக‌ இருந்த‌ போது ஆரம்பித்த சேட்டிங்க் இன்றும் தொடர்கிறது. எனது எழுத்துக்களுக்கு கிடைத்த முத‌ல் வெற்றி அது. (அப்ப ரெண்டாவது, மூனாவது ... என்றெல்லாம் டீடெய்ல் கேக்கப்படாது :))))) இன்றும் பதிவுகளுக்கு வந்து முழுமையாய் வாசித்து மறுமொழியிடும் சீனா ஐயா, செல்வி அம்மா அவ‌ர்க‌ளுக்கும் இந்த‌ நேர‌த்தில் ந‌ன்றி சொல்லிக்க‌றேன்.

முன்னெல்லாம் ஆஸ்தான‌ ஸ்பெல் செக்க‌ராய் இருந்த‌வ‌ர் ந‌ண்ப‌ர் நாகு. நிறைய பேரு இவரை, ஸ்பெல் செக் ப‌ண்ணி குடுங்க‌ என்று தொல்லை ப‌ண்ண‌, ந‌ம்ம‌ ப‌திவுக‌ளுக்கு அப்ப‌ப்ப வ‌ருவ‌தோடு நிறுத்திக் கொண்டார் :))) அவங்கள்லாம் ரிச்மண்டில் இருப்பதாய் கேள்வி !!! நாகுவின் ம‌னைவி ல‌தா. மின்ன‌ஞ்ச‌ல் ஆக‌ட்டும், தொலைபேசி ஆக‌ட்டும் ... புக‌ழ்ந்து த‌ள்ளிவிடுவார். இவர்கள் இருவ‌ருக்கும் ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

கதைகளுக்கு என்று ஸ்பெஷலாக கமெண்ட் போட, இவருக்காகவே அடுத்தடுத்த பாகங்கள் விறுவிறு என தட்டச்சிட்டுப் பதிந்ததும் உண்டு. இப்ப கொஞ்சம் நாட்களாகக் காணோம். தங்கச்சி ரம்யா படிப்பில் பிஸியாக இருக்கிறார் போல.

அப்ப‌ப்ப‌ ந‌ம்ம‌ இன்விடேஷ‌ன் ஏற்று அல்லது தமிழ்மணத்தில் பார்த்து வ‌ரும் அன்பு உள்ளங்க‌ள் வ‌ல்லிம்மா, துள‌சி டீச்ச‌ர், நானானிம்மா, க‌விநயா, ஜெய், முரளி, பித்தன், அப்புற‌ம் முக்கிய‌மா நீங்க‌ ... உங்க‌ எல்லோருக்கும் கோடி கோடி ந‌ன்றிக‌ள்.

ந‌ம்மை எல்லாம் இணைக்கும் ஒரு குழுவிற்கு ந‌ன்றி சொல்ல‌வில்லை என்றால் எப்ப‌டி, அத‌னால‌ ...

வ‌ர‌ம் த‌ந்த‌ சாமிக்கு
ப‌த‌மான‌ லாலி
க‌ள‌ம் த‌ந்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ...
கனிவான நன்றி !!!

டிஸ்கி : இன்னிக்கு "தேங்க்ஸ்கிவிங் டே" வாம்ல‌. அதான் எல்லாருக்கும் நன்றி சொல்வோம் என்று இந்த‌ சிற‌ப்புப் ப‌திவு.

Tuesday, October 14, 2008

அமெரிக்காவில் பத்தாயிரம் டாலருக்கு வீடு !!!

"இன்று அமெரிக்க வங்கிகளிடம் பணத்துக்குப் பதிலாக, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்கள்தான் இருக்கின்றன. அமெரிக்கா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பரிடம் இதுபற்றி பேசியபோது, ‘‘Texas, Michigin, Ohio, Vergina போன்ற மாநிலங்களில் இரண்டு பெட்ரூம் குடியிருப்புகள் வெறும் 10 ஆயிரம் ஹிஷி டாலர் அதாவது சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கின்றது. சில இடங்களில் அதற்கும் குறைவாகக்கூட கிடைக்கிறது... அமெரிக்காவில் வீடு வாங்குகிறாயா?' என்கிறார்."

இதை நான் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர், செனட் என்று ஆரம்பித்து இந்தியாவிற்கு பாடம் என்று வரிந்து கட்டி ஒருவர் கட்டுரை எழுதி இருக்கிறார். மேலே குறிப்பிட்ட பத்தியில், மிச்சிகன் மற்றும் வெர்ஜினியா ஸ்பெல்லிங் கவனிங்க. இதில் இவர், இவரது நண்பர் (அமெரிக்கால எந்தப் பக்கம்பா) கிட்ட பேசினாராம். அவர் சொன்னாராம் பத்தாயிரம் ஹிஷி டாலர் (இதென்னாது ?!!!) கொடுத்தா வீடு வாங்கலாம் என்று சொன்னது மட்டுமில்லாமல், வாங்குகிறாயா என்றும் கேட்டாராம். மேலும் அடிச்சு ஆடறார் பாருங்க, இதற்கும் குறைவான விலையில், மற்ற இடங்களில் வீடுகள் கிடைக்கிறதாம்.

நண்பர்கள் வட்டத்தில் அளந்து விடுவது போல இருக்கும் இக்கட்டுரை வெளிவந்தது பிரபல ஜூ.வி. 15-10-2008 தேதியிட்ட இதழில். எடிட்டர், ஆசிரியர் எல்லாம் வெக்கேஷன்ல போய்ட்டாங்க போல :)))

Thursday, July 10, 2008

ஹூஸ்டன் பயணம் - 1 - ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில்

வழக்கம் போல் இல்லாம இந்த முறை ப்ளான் பண்ணதாலோ என்னவோ சிகாகோ பயணம், சூழ்நிலைகளின் காரணமாக செல்ல முடியாமல் போய்விட்டது.

கடந்த ஜூன் மாதம், மிசிசிபி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, மிசூரி மாகாணத்தில் பல இடங்களைச் சேதப்படுத்தியது. எங்க ஊரு பென்டன்வில்லில் இருந்து சிகாகோ செல்ல மிசூரி கடந்து தான் செல்ல வேண்டும். போன வாரம் வரை நிலவரம் இப்படியே இருக்கவே, தங்கமணி சொல்லிவிட்டார்கள், 'எதுக்கு ரிஸ்க்', அடுத்த முறை சிகாகோ பார்த்துக்கலாம்' என்று. அதனால் 'ப்ளான் B - ஹூஸ்டன்' ஆக்டிவ் ஆனது.

டெக்சாஸ் ஹூஸ்டனில் என்னவெல்லாம் பார்க்கலாம் என்று ஒரு லிஸ்ட் தங்கமணியிடம் நண்பி ஒருவர் தந்திருந்தார். என் பள்ளி கால நண்பன் ஒருவன் பல ஆண்டுகள் ஹூஸ்டன் வாசம். அவனையும் தொடர்பு கொண்டு ஒரு ஷார்ட் லிஸ்ட் போட்டு மூன்று நாட்களில் ... மீனாஷி அம்மன் கோவில், நாசா, கேல்வஸ்டன் பீச், மூடிஸ் கார்டன், இந்தியக் கடைகள் (எங்க போனாலும் விடறாதாயில்லை :)) பார்க்க முடிவு செய்தோம்.

நாசாவிற்கு ஐந்து டாலரும், மூடிஸ் கார்டனுக்கும் இரண்டு டாலரும் ஆஃபர் இருப்பதாக நண்பன் சொன்னான். தனியே சென்றால் இந்த ஆஃபர், டீல் எல்லாம் பற்றி ரொம்ப யோசிப்பதில்லை ;) குடும்பமாக செல்லும்போது அது அத்தியாவசியமாகிறது. ஒரு இடத்தில் இருபது டாலர் மிச்சமாகிறது எனும்போது மகிழ்ச்சி தான் இல்லையா !

டிக்கட் அங்க போய் வாங்கணுமா, கூட்டம் ஜாஸ்தியா இருந்தா என்ன பண்றது என்றெல்லாம் யோசித்தால், இப்ப நிறைய இடங்களுக்கு வீட்டிலேயே டிக்கட் ப்ரிண்ட் பண்ணி எடுத்துச் செல்லும் அளவிற்கும் வசதி பண்ணியிருக்கிறார்கள். 'நாசா'வும் அதில் ஒன்று.

ஜூலை 03, வியாழன்.

சின்னஞ்சிறு வேலைகளாலே கிளம்ப மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. இர‌வு பதினோறு மணிக்கு டாலஸ். ஹைவே விட்டு வெளி வந்து, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து ரூம் அவைலபிலிட்டி கேட்டால், அட நம்ம குஜ்ஜூஸ் நடத்தும் ஹோட்டல் ! இங்கு அமெரிக்காவில், ஹோட்டல் பிஸினஸில் கொடி கட்டிப் பறப்பவர்கள் குஜ்ஜூஸ் என்றால் மிகையாகாது !!! இங்கு நைட் ஸ்டே அடிச்சாச்சு.

ஜூலை 04, வெள்ளி.

டாலஸில் இருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பினோம். ஒரு நாலு மணி நேரம் ட்ரைவ் ஹூஸ்டனுக்கு.

கல்லூரியில் 'ட்ராவலிங்க் சேல்ஸ்மேன் பாத்' என்று (ஒரு அறுவை :)) இருந்தது. பல இடங்களுக்கு ஒரே ட்ரிப் ஷார்ட்டா கண்டுபிடிக்கணும். அப்படி ஆச்சு இந்த‌ முறை. நேரா பீச் போய்ட்டு, கோவில் போலாமா. அல்ல‌து கோவில் போனால், அன்று முழுதும் வேறு எதுவும் செய்ய‌ முடியாது. நாசா பார்க்க‌ காலை தான் சிற‌ந்த‌ நேரம் (கூட்டம் குறைவாக இருக்குமென நண்பன் சொல்லியிருந்தான்), அதுவும் இன்று முடியாது.

இந்தக் குழப்பங்களிடையே நேரே பீச், மூடிஸ் கார்டன் பார்த்துட்டு, ஸ்டே. மறுநாள் நாசா, அப்புறம் கோவில் போகலாம் என்று முடிவு செய்தோம்.

விதி வலியது என்பார்கள். ஹூஸ்டன் நெருங்க நெருங்க, வானம் இருட்டிக் கொண்டு வந்தது. எப்ப‌டி என்னை வ‌ந்து க‌டைசியில் பார்க்க‌லாம் என‌ மீனாக்ஷி அம்ம‌ன் கோபித்து கொண்டாரோ என்ன‌வோ ! சட சட வென வெள்ளை அம்புகளாய், விண்ணிலிருந்து மண்ணைத் தாக்கி பெருமழை பொழிந்த‌து. முன்னாடி என்ன நடக்குதுனே தெரியல. ஹைவேல எல்லாரும் பத்து மைல் ஸ்பீட் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

லிஸ்டில் க‌டைசியில் இருந்த‌ கோவில் இப்ப‌ முத‌லிட‌த்தில். ச‌ரி ரூட்ட‌ மாத்துனு, சிறு பொட்டிய‌த் த‌ட்டி கோவில் போனால், ச‌ரியான வெயில். ட்ராபிக், ம‌ழை எல்லாம் தாண்டி கோவில் வ‌ர‌ ம‌திய‌ம் இர‌ண்டு ம‌ணி ஆன‌து.

ப‌ர‌ந்து விரிந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பில் அமைந்திருக்கிற‌து 'ஸ்ரீ மீனாக்ஷி அம்ம‌ன்' கோவில். சுற்றிலும் பெரிய மதில் சுவர். மதில் மேலே ஆங்காங்கே சிற்சில சிலைகள். கோவில் உள்ளேயும், வெளியேயும் நிறைய மரங்கள். பசும்புற் தரைகள். ராஜகோபுர‌ம் வ‌ழியே உள்ளே நுழைந்தால் ஒரு வெளிச் சுற்று பிர‌கார‌ம். நான்கு மூலைக‌ளில் ச‌ந்நிதிக‌ள். துர்கை, விநாய‌க‌ர், ஐய‌ப்ப‌ன், முருக‌ன், ராம‌ர், ல‌க்ஷ்ம‌ண‌ர், ந‌ட‌ராஜ‌ர், ந‌வ‌க்கிர‌ங்க‌ள் என‌.

நுழைவாயில் இருந்து நேரே அம்ம‌ன் ச‌ந்நிதி (அதன் எதிரே வெளியில், சிறிய‌ துவ‌ஜ‌ஸ்த‌ம்ப‌ம், குட்டி ந‌ந்தி ம‌ண்ட‌ப‌ம்). கோவிலின் உள்ளே ஒரு பெரிய ஹால் போன்ற பரப்பில் நடுவில் மீனாக்ஷி அம்மன், இட‌ப்புற‌ம் சிவ‌ன், வ‌ல‌ப்புற‌ம் வெங்க‌டாஜ‌ல‌ப‌தி. இன்ன‌பிற‌ சுவாமி சிலைக‌ள்.

நம்ம ஊரு கோவில் போல அட்டகாச வர்ணப்பூச்சு இல்லாத, வெண்மஞ்சளில், கோபுரம் முதல், மதில் சுவர் வரை ஒரே வர்ணம். கோவில் இன்டீரியர் விட எக்ஸ்டீரியர் அற்புதம். கோவிலில் பணிபுரிவோருக்கு, பின்னே வரிசையாய் குடியிருப்புக்கள். ஒரு புறம் தனிக் கட்டிடத்தில் மண்டபம், நூலகம், உணவகம். முன்னேயும், பின்னேயும் விசாலமான பார்க்கிங்க் லாட்.

ந‌ம்ம‌ ஊரு 'ஆன‌ந்த‌ ப‌வ‌ன்' போல் இருந்த‌து கோவில் கேஃப்டீரியா. இட்லி, பொங்க‌ல், ம‌சால் தோசை, பூரி, வ‌டை, ச‌ட்னி, சாம்பார். அட‌ அடா !!!

ஒரு ரூபாய் நாணய அளவுகளில் டோக்கன். மெஷினில் டாலர் போட்டு டோக்கன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைக் கொடுத்து உணவுகளைப் பெற வேண்டும். நல்லா ஆசுவாசமா உட்கார்ந்து சாப்பிட பெரிய ஹால். சைடில் ரெஸ்ட் ரூம்ஸ், வாட்டர் ஃபௌன்டெய்ன்.

சாப்டாச்சா, கீழே கோவில் படங்கள் பார்த்துட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. அடுத்த பதிவில் 'நாசா விண்வெளி அரங்கம்' செல்வோம்.

-----


கோவில் முகப்புத் தோற்றம்


அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்


ராஜ கோபுரம் ('மகாநதி' ஸ்டைல்ல இருக்கா ?, அதுக்கும் முன்னாடியே தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை இவ்வாறு எடுத்திருக்கிறேன் :))


ராஜ கோபுர நுழைவு வாயில்


நந்தி மண்டபம்


அம்மன் சந்நிதி


சிவன் சந்நிதி


வெங்கடாஜலபதி சந்நிதி


எண்ணெய் விளக்கு


கோவில் உள் பிரகாரம்


இடப்புற நுழைவு வாயில்


வெளிச் சுற்று மதில்

Thursday, May 15, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 2)



பெண்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் சென்ற பதிவில் பார்த்தோம். இனி அவ்வகுப்பில் கலக்கிய ஆண்கள் சிலரின் பேச்சுக்களைப் பார்ப்போம்.

-----

"இருபது வருடங்கள் ஃப்ளோரிடாவில் இருந்து, தற்போது மாற்றலாகி இங்கு வந்திருக்கிறேன். வந்த சில மாதங்களாகவே எனது பதினேழு வயது மகன், தினம் என்னிடம், 'ஏன்ப்பா இங்க வந்தீங்க ? நம்ம பழைய வீட்டை மறக்க முடியவில்லை, எனது பழைய பள்ளியை மறக்க முடியவில்லை, பழைய நண்பர்களை மறக்க முடியவில்லை ... எனக்கு இங்கு இருக்க துளியும் பிடிக்கவில்லை' என முறையிடாத நாள் கிடையாது.

திடீரென்று அவன் ஒரு நாள் வந்து, "ஏன்பா இத்தனை நாள் இங்கு வராமல் இருந்தீர்கள்" எனக் கேட்க, என்னுள் தாளமுடியாத வியப்பு !!!

ஆமாம்பா, அவள் பெயர் ரோஸி. மிகவும் நல்லவள். என்னை ஆண் நண்பனாக ஏற்றுக் கொண்டாள் என அவன் மேலும் கூற, சந்தோசம் வீட்டை நிரப்பிய‌து.

சில மாதங்களுக்குப் பின், "Dad it got broken, she got a new boy friend" என விசும்பி விசும்பி சிறு குழந்தைபோல் அழ ஆரம்பித்து விட்டான். பதினேழு வயது வாலிப மக‌ன் அழுவதை என்னால் தாங்க முடியவில்லை. சொல்லுங்கள், எந்தத் தந்தையால் தான் தாங்க முடியும்.

பிறகு அவனுக்கு சில விளக்கங்கள் அளித்தேன். வாழ்வில் எதுவுமே நடைபெறலாம். எல்லாவற்றையும் எதிர் கொள்ளப் பழகிக் கொள். ரோஸி இல்லையென்றால் வாழ்வு நின்று போய்விடாது என அவனைத் தேற்றி ஆறுதல் படுத்தினேன்." என்றார் நாற்பதுகளின் முடிவில் இருக்கும் ஒருவர்.

-----

"பிறப்பால் அனாதையான (!) நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால், அது அந்தக் கடவுளின் கருணை தான் என ஆரம்பித்தார் ஒருவர். சிறு வயதில் ரோட்டோரங்களிலும், பாலங்களுக்கு கீழேயும் படுத்துறங்கி, பல நாட்கள் (ஒரு முறை தொடர்ந்து பத்து நாட்கள்) தண்ணீரை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு அலைந்தேன்.

நமக்கு வாழ்வே அவ்வளவு தான். இனி ஒன்னும் செய்வதற்கில்லை என்ற நிலையில் தான் இருந்தேன். ஒரு முறை முயற்சித்துப் பார்ப்போம் என‌ எங்கள் ஊருக்குப் பக்கத்தில் பெரிய ஊரான டெக்ஸாசிற்கு வேலை தேடிப் போனேன். கையில் இருந்த சொற்ப பணமும் கறைந்து போனது தான் மிச்சம். படிக்காதவனுக்குப் பிடிப்பேது !!!

பின் எங்களூரில் இருக்கும் சர்ச்சில், ஏதாவது வேலை கொடுங்கள் எனக் கெஞ்ச, சுத்தம் செய்யும் வேலை கொடுத்தார்கள். சர்ச்சுக்கு வரும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராவது பணம் கொடுப்பார்கள். எனக்கு எஞ்சினியரிங் படிக்க ஆசை. சர்ச் நிர்வாகமும் எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பண உதவி செய்தது. அவற்றை சேர்த்து வைத்து, எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். நாள் ஒன்றுக்கு இருபது மணிநேரம் படிப்பிற்கு செலவிட்டேன். டிகிரி வாங்கி இப்போது இதோ நல்ல நிலையில் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அந்த இறைவன் எனக்கு இட்ட பிச்சை" என கலக்கலாக முடித்தார்.

-----

என் பெண் நண்பி ஒரு நாள் திடீரென்று கீழே விழுந்து இடுப்பை முறித்துக் கொண்டார். டாக்டர்களோ, அவள் எழுந்து நடமாட மாதக்கணக்காகும் என்றார்கள். இடுப்பில் ஒரு ஸ்டீல் ப்ளேட் வைத்து முதுகெலும்பு வரைக்கும் சர்ஜரி வேறு. மனதொடிந்திருந்த நிலையில் இருந்த அவளுக்கு முடிந்த வரை அனைத்து உதவியும் செய்யலானேன். சில நாட்களிலேயே மெதுவாக என்னைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

எனக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். தினமும் சில மைல் தூரங்களாவது ஓடாமல் இருக்க முடியாது என்னால். நடக்க ஆரம்பித்த என்னவளை மெல்ல ஜாகிங் வரை இழுத்துச் சென்றேன். கொஞ்சம் கொஞ்சமாக தினம் ஜாகிங் செய்து, இப்போது சில வாரங்களிலேயே, அவள் என்னுடன் சகஜமாக கூட ஓடி வருகிறாள் என்றார் முப்பதுகளில் இருக்கும் வாலிபர் ஒருவர்.

இது என்ன பெரிய விசயம் என்கிறீர்களா ? இந்த வாலிபர் ஊனமுற்றவர் (குறிப்பாக கால்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

-----

இது யாருக்கு யாரு போட்டி என்று இல்லாமல் யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கவே இந்த இரு பதிவுகளும். வந்து வாசித்தமைக்கும், கருத்து சொல்வதற்கும் மிக்க நன்றி. திருவிளையாடல் படம், சிவம், சக்தி ... இதெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Friday, May 9, 2008

தன்னம்பிக்கையில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா ? (பகுதி - 1)



Photo courtesy : electricwarrior.com

சமீப‌த்தில் அலுவல் மூலம் க‌ல‌ந்து கொண்ட‌ ஒரு வ‌குப்ப‌றையில், மற்றவர்களுக்கு நீங்கள், அல்லது உங்களுக்கு மற்றவர் inspiration-ஆக இருந்த தருணங்கள் ப‌ற்றி இர‌ண்டு நிமிட‌ம் பேச‌ வேண்டும் என்றனர். நாற்ப‌து பேர் கொண்ட‌ வகுப்பறை அது. பெண்க‌ளும், ஆண்க‌ளும் எண்ணிக்கையில் ச‌ம‌ விகித‌த்திலேயே இருந்த‌ன‌ர்.

அப்பா, தாத்தா, பாட்டி, க‌ண‌வ‌ன், ம‌னைவி, குழ‌ந்தைக‌ள் என‌ தங்க‌ள் inspiration ப‌ற்றி பெண்களும், ஆண்களும் சுவார‌சிய‌மாக‌ப் பேசினாலும், இங்கு வாழும் நிறைய‌ பெண்ம‌ணிக‌ள் ப‌ரிதாப‌த்திற்கு உரிய‌வ‌ர்க‌ளாக‌வே வாழ்கிறார்க‌ள் என‌லாம்.

பேசிய முக்கால்வாசி பெண்கள், திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர்கள் !!! இதெல்லாம் இங்கே சகஜம் தானேப்பா என்பவர்கள் மேலும் பொறுமையாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மூன்று பெண்களின் inspiration கதைகள் கூட்டத்தினரை வெகுவாகக் கட்டிப் போட்டது. பெயர்கள் தவிர்த்து, அவர்கள் கூறிய சம்பவங்களின் சாரம் கீழே.

-----

"எங்களுக்குத் திருமணம் ஆகி பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. பத்து வயதிலும், ஆறு வயதிலும் இரு மகன்கள் இருக்கின்றனர். சில வருடங்கள் முன்பு என் கணவரின் நடத்தையில் சில மாற்றங்கள் உணர்ந்தேன். மெல்ல மெல்ல அவரை தொடர்ந்து கண்காணித்ததில், அவருக்கு ஒரு பெண் அல்ல, பல பெண்களின் சகவாசம் இருப்பதை அறிந்து அதிர்ந்து போனேன் !

எனக்குத் தெரிந்துவிட்டது என அவர் துளியும் கவலைப் படவில்லை. இப்ப என்ன செய்யணும் என்கிறாய் என விவாதித்து மிரட்டினார். அவர் வெளிப்படையாக அவரின் தொடர்புகளை என்றும் காட்டிக் கொள்வதில்லை. அதனால் எனது மகன்களுக்குத் துளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன செய்யலாம் எனப் பல மாதங்கள் யோசித்து, இருவரும் பேசி விவாகரத்து செய்யலாம் என முடிவு செய்தோம். முக்கியமாக எனது குழந்தைகளுக்கு அவரின் நடத்தை தெரிந்து விடக்கூடாது என அவரிடம் தீர்மானம் வாங்கிக் கொண்டேன். என் குழந்தைகளுக்கு, இது தான் காரணம் என, நானும் இதுவரை கூறவில்லை.

என் வாழ்வில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என் குழந்தைகள் தான் இனி என் உலகம். அவர்கள் வளர்ந்து பெரிவர்களாகி வாழ்வில் உயர நான் அவர்களுக்கு நல்ல‌ inspiration-ஆக இருப்பேன். நான் மிகுந்த சந்தோசத்துடன் இருக்கிறேன், மகன்களையும் சந்தோசமாய் வளர்த்து வருகிறென்." என முடித்தார் ஒரு ந‌டுத்த‌ர‌ வ‌யதுப் பெண்ம‌ணி.

-----

பின் ஒரு இளம்பெண் தனது கதையைக் கூறினார்.

"இரண்டு அக்காக்களுடனும், ஒரு தம்பியுடனும் பிறந்தேன். எனது பெற்றோர் சில ஆண்டுகள் முன்னர் விவகாரத்து செய்து கொண்டனர். அக்காக்களுக்கு திருமணம் ஆகி வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். நானும் எனது தம்பியும் அம்மாவுடன் வசிக்கலானோம். சில மாதங்களில் அம்மா மறுமணம் செய்து கொள்ள, வழியறியாச் சிறுவர்களாக இருந்த எங்களை தந்தையே அழைத்துச் சென்றார்.

தாயில்லா இடத்தில், தம்பியின் வாழ்வு திசை திரும்பியது. சேரக்கூடாத சேர்க்கை, போதை வஸ்து, பள்ளிக்கு முறையாகச் செல்லாமல் வெளியேற்றம். இந்த நிலையில் தந்தை ஒருநாள் நோய்வாய்பட்டு கோமாவில் இறந்து போனார். அம்மாவிற்கு இது பற்றி தெரியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அவர் எங்களைக் கவணித்துக் கொள்வார் என நம்பிக்கை இல்லை.

அப்பொழுது கல்லூரி முடித்து, ஒரு சிறிய அலுவலகத்தில் வேலையும் பார்த்தேன். தாய், தந்தையின் இழப்பைக் காட்டிலும் எனது தம்பியின் நிலை மிகுந்த மன வருத்தத்தை தந்து கொண்டே இருந்தது.

தந்தை இறந்த அன்று, அவனிடம் நீ இப்படியே இருக்க விரும்புகிறாயா அல்லது என்னுடன் வருகிறாயா ? என்றேன். அவனுக்கு அப்பொழுது பதினாறு வயதிருக்கும். சம்மதம் என்றான். சில நிபந்தனைகள் சொன்னேன். சரி என்றான்.

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விட்டேன். கெட்ட நண்பர்களை வெட்டி எறியச் சொன்னேன். கிடைக்கும் வேலையை ஏற்கச் சொன்னேன்.

இன்று அவனுக்கு வயது இருபத்தி ஒன்று. கெட்ட பழக்கங்கள் துளியும் இல்லை. நல்ல வேலையில் இருக்கிறான், போன மாதம் திருமணம் கூட செய்து கொண்டான். ஒரு தாயாய், தந்தையாய் இருந்து தம்பிக்கு நல்ல inspiration-ஆக இருக்க நினைத்தேன், இருந்தும் காண்பித்தேன் " என டச்சிங்காக முடித்தார் அச்சகோதரி.

-----

"என் மாமியார் தான் எனக்கு inspiration" என்று அசத்தலாய் ஆரம்பித்தார் முன் ஐம்பதுகளில் இருந்த‌ மாது ஒருவர். சில நொடிகள் தான், பொல பொல என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அவற்றை அடக்கிக் கொண்டு, தழுதழுத்த குரலில் தொடர்ந்தார்.

"என் பெற்றோர் விவாகரத்து செய்து கொள்ள, சிறு வயதிலேயே தனிமைப் படுத்தப்பட்டேன். திருமணமாகி இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றது. திருமணம் ஆன முதல் நாள் முதல் இன்று வரை என் கணவர் என்னிடம் அன்பாய் நடந்து கொண்டதில்லை. நிறைய அடிப்பார் (இந்த அமெரிக்கவிலா என சற்று வியப்படையச் செய்ய வைத்த சொற்கள்), சண்டை பிடிப்பார். எல்லாவற்றையும் நான் தாங்கிக் கொண்டு அவருடன் வாழ்வதற்குக் காரணம் எனது மாமியார் தான்.

மிகுந்த depression-ல் பெற்றோரில்லாமல் தவித்த எனக்கு, குடும்பம், குழந்தைகள், சுற்றம், நட்பு என எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக்கி ஒரு தோழியாகவே வாழ்ந்தார். (இவருக்குப் போய் என் கணவர் குழந்தையாய் பிறந்தது இன்றும் என்னை ஆச்சரியப்பட வைக்கும்.) புற்று நோயாளியான எனது மாமியார், அறுபத்தைந்து வயது வரை, பிறருக்கு சிரமங்கள் கொடுக்காமல், தாமாகவே எல்லா காரியங்களையும் செய்து, சில மாதங்கள் முன்னர் இறந்து போனார். நான் இடிந்து போனேன்" என நம்மையும் கலங்க வைத்தார்.

-----

மற்றும் சில பெண்கள், தங்கள் குழந்தைகளுக்காக‌ மறுமணம் செய்து கொள்ளாமலும், அவர் தம் கணவர்கள் மறுமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

இங்கு பேசிய பல ஆண்களின் கருத்துக்களும் வியப்படையவே செய்தன. பதிவின் நீளம் கருதி (நன்றி: சுப்பையா வாத்தியார்) அவை அடுத்த பகுதியில்.

Sunday, May 4, 2008

அனெக்ராம் என்னும் உயரிய கலை



'டவின்சி கோட்' படித்தவர்கள் அனெக்ராம் (Anagram) எனும் சொல்லை எளிதில் மறக்க மாட்டார்கள். நிறைய செய்திகள் அலசியிருக்கும் 'டேன் ப்ரௌன்', அவற்றை ஆதாரங்களுடன் கதையாக்கி, உலகிற்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தவர். சப்ஜெக்ட் திசை திரும்புகிற மாதிரி இருக்கே, மன்னிக்கவும், 'அனெக்ராம்'க்கு மீண்டும் வருவோம்.

பள்ளிகளில், ஒரு சொல்லின் எழுத்துக்களைத் தலைகீழாய் எழுதி 'பாலின்ட்ரோம்' விளையாடியிருப்போம். சிலர் அனெக்ராம் கூட விளையாடியிருக்கலாம் !!!

அனெக்ராம் பற்றி அறிய வாய்ப்பு கிட்டாதவர்களுக்கு : அனெக்ராம் என்பது, ஒரு சொல்லிலோ, வாக்கியத்திலோ இருக்கும் எழுத்துக்களை, சகட்டு மேனி மாற்றிப் போட்டு (இயன்றவரை பழைய சொல்லின் பொருளில்) புது சொல்லைக் கொண்டு வருவது.

குழப்புகிற மாதிரி இருந்தால், இந்தச் சிறு உதாரணத்தைப் பாருங்கள்.

"Camry" என்பதன் எழுத்துக்களை மாற்றி அமைத்து "My car" என்று அதே பொருள்படும் எளிய அனெக்ராம் .

1

2

3

4

5


C

a

m

r

y


3

5


1

2

4

M

y


C

a

r


இன்னுமொறு உதாரணத்தைப் பார்போம்:

'Eleven plus two' என்பதை 'Twelve plus one' என்று மாற்றி, இரண்டுக்குமே விடை பதின்மூன்று கிடைப்பது !

1

2

3

4

5

6


7

8

9

10


11

12

13

E

l

e

v

e

n


p

l

u

s


T

w

o

11

12

1

2

4

3


7

8

9

10


13

6

5

T

w

e

l

v

e


p

l

u

s


o

n

e


"Mother-in-law"-வை அனெக்ராம் முறையில் மாற்றினால் மருமகள்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்படி ? "Woman Hitler" என்று ;)

ப்ரென்சு அரசர்கள் பலர் தங்கள் அரசியல் முடிவுகளுக்கு அனெக்ராம் முறையில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். மந்திர சக்தி கொண்ட கலை என ஆத்மார்த்தமாக நம்பியும் இருந்திருக்கிறார்கள். க்ரேக்கர்கள், ரோமியர்கள், யூதர்கள், ஃப்ரென்ச்சுக்கள், ஐரோப்பியர்கள் என இக்கலை பரவலாகப் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.

அனெக்ராம் பற்றிய வாசிப்பு/பயன்பாடு ஒரு பெரும் கலையாகவே இருந்திருக்கிறது. 'ANAGRAMS' என்னும் ஆங்கில சொல்லை மாற்றி அமைத்து 'ARS MAGNA' என்ற சொல் தருவித்தால், இந்த லத்தீன் வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 'Great Art' என்கிறது வரலாறு.

எதற்காக அனெக்ராம் பயன்பட்டிருக்கிறது என்று பார்த்தால், அரசர்களும், படைப்பாளர்களும், பின்னாளில் இன்ன பிற அறிஞர்களும், வெகுவாக தங்கள் ரகசியங்களை (நாம பார்க்கும் வண்ணம் இருந்தாலும், என்னவென்று புரியாமல்) பாதுகாக்கவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Anagrams பற்றி நிறைய சுவையான தகவல்கள் இணையத்தில் இருக்கின்றது. மேல் விவரங்களுக்கு, சில சுட்டிகள்:

http://en.wikipedia.org/wiki/Anagram
http://www.experiencefestival.com/a/Anagram_-_History/id/608574
http://www.anagrammy.com/anagrams/faq1.html

உலகப் புகழ்பெற்ற அனெக்ராம்கள் சில :

Albert EinsteinTen elite brains
Leonardo da VinciO Draconian devil
George BushHe bugs Gore
A decimal pointI'm a dot in place
The public art galleriesLarge picture halls, I bet
DormitoryDirty room

Sunday, March 30, 2008

விதை ஒன்று செடி மூன்று (3-in-1) - Trucks & Drivers

சிலருக்கு கவிதை பிடிக்கும், கதை எழுதினால் வாசிக்க மாட்டார்கள். சிலருக்கு கவிதையா, அது சுத்தப் பொய் என்று எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். சிலர் கட்டுரையோடு நின்று கொள்வார்கள். சிலர் சிலர் என்று சொல்லிய சிலருள் நானும் ஒருவன் தான்.

இந்த மூன்று தரப்பினருக்கும் பிடித்த மாதிரி, நம் தளத்திற்கு வரச் செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்து விளைந்த கரு இது. மூன்று செடிகளையும் வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

-----
முதல் செடி (கவிதை)


Photo courtesy: largePhoto12_ownerdriver.com.au

முத‌ன் முத‌லில் காரோட்டி
முழுதும் அறியுமுன்

நெடுஞ்சாலை சேருகையில்
நீளமாய் வருமுன்னை

ப‌க்க‌மே வ‌ருகிறானே என
படபடக்க‌ மனம் பதறி

கையுத‌ற‌க் காலுதற
கண்டபடி உனைத் திட்டி

சிறு காரோட்ட பயந்திருக்க‌
பெருந் தேரோட்டிப் பறந்திடுவாய்.

நாள் செல்ல‌ச் செல்ல‌
நான் க‌ற்றேன் ந‌ன்றாக‌

குறுந் தெருக்க‌ளில் கூட‌
அருகினில் நீ வ‌ர‌

முன்னிருந்த‌ ப‌ய‌மில்லை
ப‌ட‌ப‌ட‌ப்புத் துளியுமில்லை

குட்டித் திமிங்கிலமாய்
ஒட்டியே வந்திடுவேன்.

எச்சூழ‌லும் ச‌மாளிக்கும்
இப்பெரிய‌ ஊர்தியோட்டி

அச்சிறு தெருவில்
எங்ஙன‌ம் வ‌ளைவாய் என‌

யோசித்து முடிக்குமுன்
லாகவமாய் வளைந்து செல்வாய் !

-----

இரண்டாம் செடி (கதை)


Photo courtesy: driverscdlstaffing.com

லூசி, எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் ஜன்னல் வழியா குதிக்காதே என்று. கதவு வழியா இறங்கு என்று செல்லமாகச் சொல்லி வீட்டினுள் நுழைந்தார் பேட்ரிஷியா.

மறுநாள் பயணத்தைத் துவங்கினர்.

இரவு எழு நெருங்கி வானம் கருக்கத் துவங்கியிருந்தது. சிரம பரிகாரம் முடித்து, வெண்டிங் மெஷினில் இருந்து மேத்யூ காஃபி எடுத்துக் கொண்டார். பேட்ரிஷியா தனது பர்ஸில் இருந்து சில்லரைகள் பொருக்கி, பக்கத்தில் இருந்த மற்றொரு வெண்டிங்க் மெஷினில் போட்டு தண்ணீர் எடுத்துக் கொண்டார். அறுபது, அறுபத்தி ஐந்து வயதிருக்கும் இருவருக்கும்.

அந்த ரெஸ்ட் ஏரியாவின் வெளியில் வந்து வரிசையாக இருந்த பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்தனர். காற்று சிலு சிலுவென வீசியது. நாம் இங்கிருந்து நியூயார்க் செல்ல இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். வண்டியைப் பற்றி ஒரு குறையும் இல்லை, இயற்கை அன்னை சோதிக்காமல் இருக்கணுமே என்று பேட்ரிஷியா சொல்ல, ஏதோ சிந்தனையின் ஊடே இருந்த மேத்யூ தலையை லேசாக ஆட்டி, ஆமாம் என்று ஆமோதித்தார்.

சிறிது நேரம் கழித்து பேட்ரிஷியா, டார்லிங்க், நான் போய் லூசிய அழைத்து வருகிறேன் என்று எழுந்தார்.

உள்ளே, லூசி வழக்கமாகத் தூங்கும் ஸ்லீப்பரில் காணவில்லை !

லூசி ... ஸ்வீடி ... என்று சில முறை மெதுவே அழைத்துப் பார்த்தார், ஒரு பதிலும் இல்லை.

போன ஸ்ப்ரிங்கின் போது, ஒரு அனாதை இல்லத்திலிருந்து அவளைத் தத்தெடுத்துக் கொண்டனர் மேத்யூவும், பேட்ரிஷியாவும். அவர்களின் வளர்ப்புப் பிள்ளையானாலும், சொந்தப் பிள்ளை போலவே பார்த்துக் கொண்டனர் இருவரும்.

பலமுறை அழைத்தும் பதில் வராமல் போகவே, மழை பொழியும் மேகம் போல் மனம் கருத்து, தூறலாய்க் குரல் தழுதழுத்தது பேட்ரிஷியாவுக்கு. ஸ்வீட்டீ .... என்று மயங்கி விழாத குறை.

இதுக்கு முன்னால் எக்ஸிட் 45 கிட்ட இருக்கின்ற ரெஸ்ட் ஏரியாவில் நிறுத்தினேன். பார்த்தேன், நீயும், லூசியும் ஸ்லீப்பரில் நல்ல உறக்கத்தில் இருந்தீர்கள். மெதுவே உங்கள் இருவரையும் அழைத்துப் பார்த்தேன். ஆறு மணி நேரம் ஓட்டிய களைப்பில் நீ அயர்ந்து உறங்கவே, உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணினேன். நான் மட்டும் கீழிறங்கிச் சென்று வந்தேன். நீயும், லூசியும் இருப்பதை உறுதி செய்து கொண்டு வண்டியை எடுத்து வந்து இப்ப இங்க இருக்கிறோம் என்றார் மேத்தியூ.

எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. முன்னால் நீங்கள் நிறுத்திய இடத்தில் லூசியும் இறங்கியிருக்க வேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். ஐயோ என் நெஞ்சே பதறுதே, பாவம் சிறு பிள்ளை, என்ன பண்ணுதோ, எங்க இருக்குதோ ... என்று பதறி, வண்டிய எடுங்க, நாம திரும்ப எக்ஸிட் 45க்கு போவோம் என்றார் பேட்ரிஷியா அழுது கொண்டே.

நிறுத்தங்களில் எப்போதுமே ஜன்னல் கண்ணாடிகளை நன்றாக மூடுவதில்லை. முன்னர் சரி, இப்போது தான் லூசி இருக்கிறாளே. எத்தனை முறை சொல்லியிருப்பேன். அதில் தாவிக் குதித்து இறங்க சிறு பிள்ளைக்குச் சொல்லியா கொடுக்கணும். அதுவும் இது சமத்து, அழகாகக் தாவி இறங்கி விடுவாளே. சமத்துப் பிள்ளையாக வாய்த்தது கூட தவறோ, ஐயோ என்று அழுது, மேத்யூவை விரைவு படுத்தினார்.

இந்தப் பக்கமே பேசிக் கொண்டிருந்து விட்டு, வண்டியை எடுக்க இடப்புறம் சென்ற மேத்யூ ஒரு கணம் திகைத்து நின்றார்.

"பேட்", "பேட்" என்று உணர்ச்சிவசப்பட்டு அழைத்தார் மேத்யூ. நாம் வெகு தூரம் போகத் தேவையில்லை, லூசி இங்கு தான் எங்காவது இருப்பாள். பார், ஜன்னல் கண்ணாடி சரியாக மூடாமல் இருக்கிறது.

அப்பொழுதும் பேட்ரிஷியாவிற்கு முழு மனது வரவில்லை. "ஏன் இது அங்கேயே இப்படி இருந்து, லூசி இறங்கியிருந்தால்" என்று இழுத்தார். இல்லையே, நான் தான் ஓட்டும் போது, ரொம்ப குளிருகிறது என்று கண்ணாடியை நன்றாக ஏற்றிவிட்டிருந்தேனே. இங்க இறங்கும் போது தானே லேசா இறக்கிவிட்டேன் என்று பதிலலித்தார் மேத்யூ.

இவர்களின் உரையாடலுக்குத் தடை போடுவது போல‌, எங்கிருந்தோ நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து, பேட்ரிஷியாவின் மேல் தொற்றி, மூச்சிறைக்க அவரது கைகளை நக்கி, சுற்றிச் சுற்றி ஓடி வந்தாள் லேப்ரடார் ரிட்ரைவர் இனத்தைச் சேர்ந்த கறுப்பு லூசி.

லூசி காணவில்லை என்றவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணாடிக் கதவு சரியா இருக்கிற‌தா என்று கூட பார்க்கத் தோன்றவில்லை பாருங்கள் என்று தன்னை நொந்து கொண்டார் பேட்.

-----

மூன்றாம் செடி (கட்டுரை)


Photo courtesy: truck1a_johnsantic.com

இங்கு வந்த புதிதில் ட்ரைவிங் பழகியது நம்ம ஊரு பயிற்சியாளர் ஒருவர் மூலம். ஒரு ட்ரைவிங் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டு, பார்ட் டைம் ஆக வெளி ஆட்களுக்கும் கற்றுத் தருகிறார். ட்ரைவிங் போது ஏதாவது பேசிக் கொண்டே வருவார். அப்படி அவர் பேசியதில் வெகுவாக என்னைக் கவர்ந்த ஒன்று இங்கு செல்லும் ட்ரக்குகள் பற்றி. எந்த ஸ்டேட்டாக இருக்கட்டும், ஒரு ஹைவே எடுத்தால் எண்ணில் அடங்காத ட்ரக்குகள்.

"ட்ரக் ட்ரைவிங் லைசென்ஸ் எடுக்கறது ரொம்ப கடினம். நாலைந்து test எடுக்கணும். எல்லாம் ஒரே தடவை என்று இல்லை, பல பாகங்களாகப் பிரித்து எடுக்கலாம். நிறையத் தம்பதிகளாகத் தான் ட்ரக் ஓட்டுகிறார்கள். நியூயார்க்கிலிருந்து, கலிஃபோர்னியா வரை போகிறதெல்லாம் சர்வ சாதாரணம்.

வண்டியில் இருக்கும் பொருட்களைப் பொருத்து அவர்கள் காலம் கருத வேண்டும். சில நேரம் காய்கறி, பழங்கள் போன்றவை குறிப்பிட்ட காலத்தில் deliver செய்ய வேண்டும், அதனால் கணவன் ஓட்டுகையில் மனைவி ஓய்வெடுப்பதும், பின் மனைவி ஓட்டுகையில் கணவர் ஓய்வெடுத்தும் மாறி மாறி செலுத்துவார்கள். ஆங்காங்கே சில நிமிடங்கள் நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொள்வதோடு சரி."

இங்கிருக்கும் மக்கள் எல்லாத்திலும் ஒரு crazy-யா இருப்பது போலத் தான் ட்ரக் ட்ரைவிங்கும் செய்கிறார்கள் என்று எண்ணினேன். ஆனால் இதன் வருமானம் முக்கிய காரணமாக இருக்கிறது.

இவர்கள் ஓட்டும் ஹைவே மைல்கள் கூடக் கூட, சம்பளமும் கூடுகிறது. நீங்கள் இங்கு பல ஹைவேக்களில் இது போன்று விளம்பர அட்டைகள் பார்த்திருக்கலாம். "Experienced truck drivers needed, 45 - 70 cents per mile".

குறைந்த காலத்தில் நிறைந்த‌ வருமானம். நிறைய நாட்கள் ஓய்வெடுப்பது. அதுபோக இன்சென்டிவ், போனஸ், இத்தியாதி எனப் பல சலுகைகள்.

ஒரு ஓட்டுனர் இத்தனை மணி நேரம் தொடர்ந்து ஓட்டலாம். அதன் பின் கட்டாய ஓய்வு இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும் என அமெரிக்க "Federal Motor Carrier Safety Administration" நிறுவனம் "hours of service" என்று வரையறை வகுத்துள்ளது. அதன்படி ஒருவர் தொடர்ந்து பதினோறு மணி நேரங்கள் ஓட்டலாம். அதன் பின் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று விதிக்கிறது.

சீரான போக்குவரத்து, காலநிலை இருந்தால், ஒரு நாளில், இரு ஓட்டுனர்கள், குறைந்தது 600 லிருந்து 1000 மைல் வரை செல்கின்றனர்.

இவர்கள் சந்திக்கும் தொல்லைகள்: தட்பவெப்பம், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல், ப்ரேக் டவுன், உடல் நலக் குறைவு, மற்றும் சில.

-----

மேல் விபரங்களுக்கு:

http://www.fmcsa.dot.gov/rules-regulations/topics/hos/hos-2005.htm
http://en.wikipedia.org/wiki/Trucking_industry_in_the_United_States

Tuesday, March 18, 2008

எண்ணும் எழுத்தும் (Fibonacci Series)

90களில் நம்ம மார்க்குக்கு இயற்பியல் கிடைக்கவே ரொம்ப கஷ்டமாகப் போனதென்றால், எவ்வளவு பெரிய அறிவாளி என்று ஊகித்துக் கொள்ளுங்கள் :D கணிதம் தருகிறோம் என்றார்கள். இத்தனைக்கும் நான் கணிதத்தில் வாங்கிய மார்க், Just pass ! அறிவியலிலாவது நூற்றுக்கும் மேலே !!!

கணிதத்தைப் போயா படிக்கிறது என்ற மனநிலை இல்லை. நமக்கு மிகவும் கடினமாச்சே, எப்படிப் படிச்சு டிகிரி வாங்கறது என்ற கவலை. +2வில் ஒரு பேப்பர் தான், இங்கு அத்தனையும் கனிதம் என்றால் ... தலை சுத்திக் கீழே விழாத குறை ;)

அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கணிதத்தில் இருந்து, அப்புறம் ரெகமண்டேசன் பிடித்து இயற்பியல் மாறி, அதுக்கப்புறம் கல்லூரியே மாற்றி கணினி எடுத்தது எல்லாம் பெரிய கதை.

கணினியிலும் கணிதம் வரவே, சற்று பயம். ஆனால் ப்ராக்டிகல்ஸ் ஒரு ஈடுபாடு தந்தது. ஆசிரியர் ஒரு ப்ரோக்ராம் எழுதி, அதை அப்படியே நாங்கள் கணினியில் எழுதி, கணினி விடை சொல்லும்போது ஒரு சிறு குழந்தை போல அனைவரும் 'ஆ' வென்று பார்த்து ரசிப்போம்.

அப்படி ஒரு உதாரணப் ப்ரோக்ராம் தான் நம் தலைப்பின் நாயகன் ஃபிபோனாச்சி. தற்சமயம் பாடத்திட்டம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் 90களில் கணினி முதல் பாடமாக எடுத்தவர்கள் அனைவரும் அறிந்தது இந்த ஃபிபோனாச்சி முறை. இத‌ன் ஃபார்முலா மிக எளிது. பூஜ்ஜியம், ஒன்று என்று துவங்கி, இந்த‌ இரு எண்களைக் கூட்டி மூன்றாவது. பின் இரண்டாவதையும், மூன்றாவதையும் கூட்டி நான்காவது, என்று முடிவில்லாமல் சீரீஸ் நீழும்.

உதாரணம்: 0,1,1,2,3,5,8,13,21,34 ....

சரி இப்படியே கூட்டிக் கொண்டே போனால் தான் என்ன. நமக்கும், நம் வாழ்விற்கும் தொடர்பிருக்கிறதா என்று கேட்டால், விடை வானத்தைப் போல விரிகிறது. முயல், தேனீ, மனிதன் என இன்னபிற பிறப்புக்களிலும், பூக்களின் அடுக்குகளிலும், அன்னாசி போன்ற பழங்களின் தோல்களிலும், பைன் கோன்களிலும், ஃபிபோனாச்சி முறை அறியப்படுகிறது என்கிறது விஞ்ஞானம் !!


ஃபிபோனாச்சியின் ஆர்க் (நன்றி: விக்கிபீடியா). நத்தைக் கூடு போல் இருக்கிறதல்லவா ?!



பூக்களின் விதை அடுக்குகளில் இடது (55), வலது (34) என்று ஃபிபோனாச்சி எண்கள்.



பைன்கோன்களில் இடது ஆர்க்குகள் (13), வலது ஆர்க்குகள் (8) என்று ஃபிபோனாச்சி எண்கள்.


கணிதம் என்றால் இந்தியாவிற்கு எப்போதும் ஒரு இடம் உண்டு என்பதை இந்த ஃபிபோனாச்சி முறையும் நிரூபிக்கின்றது :

http://en.wikipedia.org/wiki/Brahmagupta-Fibonacci_identity
http://en.wikipedia.org/wiki/Fibonacci_number#Origins


மேல் விபரங்களுக்கு:

http://www.mcs.surrey.ac.uk/Personal/R.Knott/Fibonacci/fibnat.html - படங்களுடன் அருமையாக‌ விளக்கியிருக்கிறார்கள்.
http://www.branta.connectfree.co.uk/fibonacci.com - இங்கு முயல், தேனீ எல்லாம் தாண்டி சஸ்பென்சன் ப்ரிட்ஜ், CD, சேவிங்க்ஸ் அக்கௌண்ட் என்று விரிகிறது ஃபிபோனாச்சி.
http://video.google.com/videoplay?docid=7179950432887640376 - ஃபிபோனாச்சி காட்சி வடிவிலும்.


இது கணித வகுப்பு அல்ல. நீங்கள் கணிதமும் பயிற்சி செய்ய வேண்டியதில்லை. கணிதம் ஒரு கலையாக‌ வாழ்வோடு எவ்வளவு தொடர்புடையதாய் இருக்கிறது என்பதைக் கண்டு அதிசயிக்கவே இந்தப் பதிவு. இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் மீண்டும் தெரிந்து கொள்வதில் தவறில்லையே !

சுட்டிகளுக்குள் சென்று பார்க்கும்போது, அப்பப்பா கண்ணக் கட்டுதே ... மீண்டும் சந்திப்போம்.