Showing posts with label நடனம். Show all posts
Showing posts with label நடனம். Show all posts

Monday, July 6, 2009

மைக்கேல் ஜாக்ஸன் - நடனப் புயலும், ஓய்வும் !



பாடலில் பரவசம்
மேடையில் நவரசம் -- உன்
ஆடலில் உல‌கே
ஆடியது நிதர்சனம் !

குதூகலிக்கும் குழ‌ந்தைத்த‌ன‌ம்
சிறுவயதில் ம‌ற‌ந்தாய் -- உன்
சிலிர்க்கும் நடனத்தில்
உல‌கையே க‌வ‌ர்ந்தாய் !

திகிலூட்டும் த்ரில்லர்
சிலிர்ப்பூட்டும் டேஞ்சரஸென -- உன்
அற்புத‌ பாட‌ல்க‌ளில்
கிறங்க‌(வும்) வைத்தாய் !

ஒவ்வொரு அசைவிற்கும்
ஓராயிர‌ம் ப‌யிற்சி -- உன்
ஒத்திகை ந‌ட‌ன‌ங்களிலும்
அத்துணை ஈடுபாடு !

பொங்கும் மாக்கடலில்
திரண்டது நீரலை -- உன்
உலுக்கும் தோள்களில்
உருண்டது கடலலை !

நிலவிருக்கும் வரை
நினைவு இருக்கும் -- உன்
நீந்தும் கால்களின்
நிலவு நடனத்தில் !

ஈடிலா‌ வ‌ள‌ர்ச்சி
ஈட்டிய‌து ப‌ல‌கோடி -- உன்
வாழ்க்கையும் உழன்றதே
அனுதினம் அலைமோதி !

சீறிப் பாய்ந்து
சிருங்காரம் செய்து -- உன்
நடனம் (நெஞ்சில்) நிறுத்தி
ஓய்வாய் புயலே !

தூற்றுவார் தூற்ற
போற்றுத‌ல் நிலைநிறுத்தி -- உன்
ம‌ன‌ம் அமைதியில்
துயில்வாய் புய‌லே !

உனைத்துர‌த்தித் துன்புறுத்த
இனி எவருமில்லை -- உன்
க‌ல்லறையும் இனி(தாக‌)
காவிய‌ம் பாடிடுமே !

-----

மேலே இருக்கும் மைக்கேலின் படம், 93-ல் வரைந்தது. அவரோட படம் வரைந்தோமே என்றது மட்டும் நினைவில் இருந்தது. கால ஓட்டத்தில் எங்கே வைத்தோம் என்பது மறந்தே போனது ! அங்க தேடி, இங்க தேடி, நல்ல வேளைக்கு எங்கும் போய்விடவில்லை. படம் இருந்தது என்னுடனே !

Saturday, February 23, 2008

பிரமிக்க வைக்கும் Tap Dance - Must see

சில மாதங்களாகவே, கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதும் youtube இணைய தளம் செல்வது வழக்கமாக ஆகிவிட்டது ;‍) எனக்கு மட்டும் தான் இப்படியா ? அப்படிச் செல்லும் போதெல்லாம் இந்த வீடியோ பல தடவை பார்த்திருக்கிறேன், பிரமித்திருக்கிறேன்.

எல்லோரும் ஆடுகின்றனரா, அல்லது எங்கேயாவது இசையைத் தட்டி விட்டு சும்மா, கையை ... மன்னிக்கவும், காலைத் தூக்குகிறார்களா என்று எண்ணினால், அட அடா. அற்புதம்.

இது டாப் டான்ஸ் (tap dance) என்று சிலரும், நதி நடனம் என்று சிலரும் விவாதித்து அங்கு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். எதுவா இருந்தா என்ன, மனதை மயங்க வைக்கும் எதுவும் அற்புதமே !!!!

தனியே ஆடிக்கொண்டிருக்கும் ஆடவர் சில நொடிகளில் அந்த இருள் படிகளில் ஏற‌, விளக்குகள் எறிய, அவ்வரிசையும், அதன் பின்னாலும் இருந்து பெண்களும், ஆண்களும் அணிவகுத்து, டப் டப் டப் என்று அனைவரும் கீழிறங்கி வந்து அமர்க்களப் படுத்த‌, வயலினின் இசை கசிவிலும், அதன் பின்னர் நடனம் முடியும் வரையிலும், மனம் நெகிழ்வது நிச்சயம்.

இந்த மாதிரி நல்ல விசயங்கள் ஏராளம் இவ்வுலகில் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் என்று இதோ வீடியோ. இசை ரசிகர்கள், கணினியின் ஒலி பெருக்கி அளவை முடிந்த மட்டும் உயர்த்தி வைத்து கேளுங்கள், வீடியோவையும் பார்த்து ரசியுங்கள்.