துளித் துளியாய்: 4 - சிலந்தியும் வலையும்

Photo: sheltoweetrace.com
முட்டி மோதி
விட்டம் ஏறி
மூலைகள் இணைத்து
வலைகள் பின்னி
அசையாப் பொருளாய்க்
காத்திருந்து
வலையில் விழும் இரை
உண்டு வளர்வாய்.
***
பென்டுலம் போலே
நூலில் ஆடி
வாலாய் நூலை
வளைத்து நெளித்து
குறுக்கும் நெடுக்கும்
குறும்புதிர் போலே
ஏற்ற இறக்கமில்லா(மல்)
இடைவெளி விட்டு
வலையைப் பின்ன
எங்கு கற்றாய் ?!
***
துளித் துளியாய் இழை விட்டு
தூண்டில் நீள் நூலாய்
தூரிகை ஓவியமாய்
துயிலும் தூளியாய்
துள்ளித் துள்ளி
வலை பின்ன ...
கண்ணாடி நூலிழையில்
காண்போர் கண்படும்
கலை ஒத்த கட்டுமானம்
நிலையாகும் உன் வாழ்வு அதில் !!!
***
ஓட்டுக் கூரையிலும்
வீட்டுத் தோட்டத்திலும்
வலை பின்னும்
கலை அறிய
உனைத் தொடர்ந்தேன்
பல முறை
எங்கு ஆரம்பித்து
எப்படி முடித்தாய் என
கண்டதில்லை ஒரு முறையும்
இன்று வரை வியப்பே !!!
***
ஊரு உலகெலாம்
தெரியுது வலை - அதில்,
விஞ்ஞான மருத்துவங்கள்
விவாதக் கட்டுரைகள்,
அற்புதங்கள் பலகொண்ட
ஏராளச் செய்திகள்,
அன்றாட வாழ்வின்
அங்கமாய் ஆனதுவே.
இது தான் இன்றைய நிலை
இப்படி ...
நாங்களும் பின்னூவோம் வலை !
***

