Friday, December 5, 2008
Friday, August 10, 2007
வாத்து (குழந்தைகள் கவிதை)
வாத்தின் உருவமும், அதன் நிறமும், நடையும் பார்ப்பதற்கு நமக்கே அழகாய் இருக்கும். குழந்தைகளுக்கு அதைவிட மேலாய் ஆனந்தம். வீட்டின் அருகில் இருக்கும் ஒரு சிறு குளத்தில் நிறைய வாத்துக்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் போது அவற்றிற்கு ரொட்டித் துண்டுகள் போட்டு, குழந்தைகள் படும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. அதன் நினைவாய் தோன்றிய கவிதை கீழே.
வெள்ளை நிற வாத்து
காவி மூக்கை சாய்த்து
தட்டை காலை வீசியே
தத்தித் தத்தி நடந்திடும்
கிட்ட நீயும் செல்லவே
நீரில் தாவி நீந்திடும் !
பதித்தது :
சதங்கா (Sathanga)
at
10:20 AM
3
மறுமொழி(கள்)
வகை : குழந்தைகள் கவிதை, வாத்து
Thursday, August 9, 2007
நிலாச் சோறு (குழந்தைகள் கவிதை)
முதலில் எழுதிய யானை கவிதையை, எனது எட்டு வயது மகன் பிழையின்றி வாசித்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டான். இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்போருக்கு, புலம் பெயர்ந்த அனேகரின் குழந்தைகள் தமிழில் பேசுவதே இல்லை, அதிலும் வாசிக்கிறார்கள் என்றால் எவ்வளவு ஆனந்தம். அதே நிலை தான் எனக்கும்.
அடுத்த சந்ததியினருக்கு நாம் நமது மொழியைக் கற்றுக் கொடுக்காவிடில், பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க காப்பியங்கள், அதன் பின் வந்த இலக்கியங்கள், இன்று நாம் விவாதிக்கும் பல நிகழ்வுகள், இதெல்லாம் எதற்காக ?
மொழியும், இயற்கையும், உணவும், பாசமும் எல்லாம் கலந்து, நமது பெற்றோர் நமக்குச் சொல்லியதை, நாம் நமது சந்ததியினருக்குச் சொல்லித்தர வேண்டாமா ?
எனது இரண்டாவது கவிதை (நிலாச் சோறு):
வட்ட நிலா மேலே
தட்டில் சோறு கீழே
நிலா பார்த்து நாமும்
நித்தம் உண்ணலாமா ?!
நெய் சோறு கொஞ்சம்
பருப்பு சோறு கொஞ்சம்
அழகாய் நீயும் சாப்பிடு
அன்னை சொல் கேட்டிடு !
அண்ணாவுக்கு ஒரு வாய்
அப்பாவுக்கு ஒரு வாய்
பகிர்ந்து நீயும் கொடுத்திடு
பாசத்தோடு வளர்ந்திடு.
பதித்தது :
சதங்கா (Sathanga)
at
11:17 AM
3
மறுமொழி(கள்)
வகை : குழந்தைகள் கவிதை, சோறு, நிலா
Tuesday, August 7, 2007
யானை (குழந்தைகள் கவிதை)
நாம் படித்த அளவிற்கு இக்காலக் குழந்தைகள் தமிழில் பாடல்கள் படிப்பதில்லை (சினிமா பாடல்கள் அல்ல :)). அவர்கள் தமிழில் பேசுவதே அறிதாய் இருக்கிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் சிதைந்துவிடுமோ நம் தமிழ் என்று எண்ணத் தோன்றுகிறது.
வலையில் நாம் தமிழில் இடுகைகள் இட்டாலும், வளையவரும் நம் குழந்தைகள் தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. இதற்கு பல பெற்றோர் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள். அதைப் பற்றிப் பிறகு வேறு பதிவுகளில் பார்ப்போம்.
எளிமையாய் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி எழுதலாம் என்றால், எளிமை தான் கடினம் என்று புரிந்தது. ஓரளவுக்கு எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது எனது முதல் முயற்சி. படித்து, நன்றாக இருந்தாலும் / திருத்தங்கள் தேவைப்பட்டாலும் மறவாமல் தெரிவியுங்கள். -- நன்றி.
கரு கரு யானை
பட பட காது
குரு குரு கண்ணு
துரு துரு தும்பிக்கை
பெரிய பெரிய வயிறு
டம் டம் காலு
கம்பி முடி வாலு
------
ஆற்றில் நீரை உறிஞ்சி
பீச்சி அடிக்கும் யானை
உச்சி மர இலையையும்
உறித்து உண்ணும் யானை
கோவில் வாசல் நின்று
ஆசி வழங்கும் யானை
காசு தரும் குழந்தைகளை
முதுகில் ஏற்றும் யானை
பாடி ஆடும் சிறுவர்களோடு
பந்தடிக்கும் யானை
பதித்தது :
சதங்கா (Sathanga)
at
8:39 AM
8
மறுமொழி(கள்)
வகை : குழந்தைகள் கவிதை, யானை

